Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 151)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

இப்படி ஈச்வரன் கல்யாணகுணங்களோடே கூடியிருக்கையாலே, பிறர் நோவு கண்டால், “ஐயோ!” என்றிரங்கி அவர்களுக் கெப்போதுமொக்க நன்மையைச் சிந்தித்து, தனக்கேயாயிருத்தல், தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருத்தல் செய்யாதே, நிலாத்தென்றல் சந்தநம் தண்ணீர்போலே பிறர்க்கேயாய், தன்னை ஆச்ரயித்தவர்கள்பக்கல் ஜன்ம ஜ்ஞாந வ்ருத்தங்களாலுண்டான நிகர்ஷம் பாராதே, தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய், ஸாந்தீபநி புத்ரனையும் வைதிகன் புத்ரர்களையும் மீட்டுக்கொண்டு வந்தாப்போலே அரியன செய்தும், அவர்களபேக்ஷதங்களைத் தலைக்கட்டியும், அவர்களுக்கு த்ருவபதம் போலே பண்டில்லாதவற்றையு முண்டாக்கியும், தந்தாம் ஸ்வம் தாந்தரம் விநியோகம் கொண்டாப்போலேயிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி, அவர்கள் கார்யம் தலைக்கட்டினால் தான் க்ருதக்ருத்யனாய், தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸுக்ருத லவத்தையே நினைத்து, அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி யெல்லா தசையிலும் இனியனாய், பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக்கும் புருஷனைப்போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தால் நினையாதே குற்றங்களைப் பெரியபிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறு தலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து, காமிநியுடைய அழுக்கு உகக்கும காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக்கொண்டு, அவர்கள் பக்கல கரணத்ரயத்தாலும் செவ்வியனாய், பிரிந்தால் அவர்கள் வ்யஸநம் குளப்படியென்னும்படி தான் ஈடுபட்டு, அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழவிட்டு, அவர்களுக்குக் கட்டவு மடிக்கவுமாம்படி யெளியனாய், அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமாபோலே பெரியபிராட்டியாரையும் ஸூரிகளையும விட்டு ஸ்நேஹித்துக்கொண்டு போரும்.

ஏவம்பூதகுண விசிஷ்டனாகையாலே, ஈச்வரன் ஆச்ரித விஷயத்தில் பரிமாறிப் போரும்படிகளை விஸ்தரேணவொரு சூர்ணையாலேயருளிச்செய்கிறார் மேல். – ஆக, “ஜ்ஞாந சக்தயாதி கல்யாண குணகண பூஷிதனாய்” என்றத்தை விஸ்தரேண உபபாதித்தாராய் நின்றார் கீழ்; அநந்தரம், “ஸகல ஜகத் ஸர்க்க ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய்” என்றத்தை விஸ்தரேண உபபாதிப்பதாக வுபக்ரமிக்கிறார் (இவனே ஸகல ஜகத்துக்கும் காரணபூதன்) என்று.

இப்படிப்பட்ட கல்யாணகுணங்களுடன் கூடியவனாக உள்ளதால், ஈச்வரன் தனது அடியார்கள் விஷயத்தில் செய்து வரும் உதவிகளை, விரிவாக ஒரு சூர்ணையில் அருளிச்செய்கிறார். ஆக, சூர்ணை (141) - ஜ்ஞாந சக்தயாதி கல்யாண குணகண பூஷிதனாய் - என்பதை இதுவரை விரிவாக விளக்கியபடி இருந்தார். அடுத்து, சூர்ணை (141) - ஸகல ஜகத் ஸர்க்க ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் - என்பதை விரிவாக விளக்குவதற்குத் தொடக்குகிறார்

இப்படியென்று, கீழுக்தமான குணயோக ப்ரகாரத்தைப் பராமாசிக்கிறது. (கல்யாண குணங்களோடே கூடியிருக்கையாலே) என்று குணயோகத்தை ஹேதுவாக வருளிச்செய்தது, மேற்சொல்லுகிற பரிமாற்றங்களெல்லாம் ஒரோ குணகார்யமென்று தோற்றுகைக்காக. (பிறர் நோவு கண்டால் “ஐயோ!” என்று இரங்கி) இது க்ருபா கார்யம். பிறர் நோவு கண்டால் “ஐயோ!” என்று ஈடுபடுகிறது, பர துக்காஸஹிஷ்ணுவாகை யாலேயிறே. (அவர்களுக்கு எப்போதுமொக்க நன்மையைச் சிந்தித்து) இது ஸௌஹார்த கார்யம். எப்போதுமொக்கவென்றது, இவர்கள் அறிந்த காலத்தோடு அறியாத காலத்தோடு வாசியற ஸர்வகாலத்திலுமென்றபடி. ஆச்ரித ஸர்வ மங்களாந்வேஷண பரனாயிருக்கிறது, ஸௌஹார்தத்தாலேயிறே. (தனக்கேயாயிருத்தல் தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருத்தல் செய்யாதே, நிலா தென்றல் சந்தநம் தண்ணீர்போலே பிறர்க்கேயாய்) இது, ஆச்ரித பாரதந்த்ரிய கார்யம். ஸ்வார்த்தபரனாயேயிருத்தல், ஸ்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும் பொதுவாயிருத்தல் செய்கையன்றிக்கே, சந்த்ரிகாதி பதார்த்தங்கள் போலே, பரார்த்ததைக வேஷனாயிருக்கிறது பாரதந்த்ரியத்தாலேயிறே. (தன்னையாச்ரயித்தவர்கள் பக்கல் ஜந்ம ஜ்ஞாந வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே) இது, ஸாம்ய குண கார்யம். ஆச்ரிதர்பக்கல் ஜந்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது, "ஸமோஹம் ஸர்வபூதேஷு" என்கிறபடியே ஜந்மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசியற ஆச்ரயணீயத்வே ஸமனாயிருக்கும் ஸ்வபாவத்தாலேயிறே. – (தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய்) இது அசரண்யசரண்யத்வ கார்யம். தாங்களும் தங்களுக்கு ரக்ஷகரன்று, பிறரும் தங்களுக்கு ரக்ஷகரன்று என்று கைவாங்கின தசையில், தான் ரக்ஷகனாகிறது “பற்றிலார் பற்ற நின்றானா”கையாலேயிறே. (ஸாந்தீபநி புத்ரனையும், வைதிகன் புத்ரர்களையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே அரியன செய்தும் அவர்களபேக்ஷிதங்களைத் தலைக்கட்டியும்) இது, ஸத்யகாமத்வ கார்யம். “மாதவத்தோன் புத்திரன்போய் மறி கடல்வாய் மாண்டானை” என்கிறபடியே நெடுங்காலத்திலே கடல் கொண்டு போன ஸாந்தீபநி புத்ரனையும், “பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்” என்கிறபடியே ஜநித்தபோதே, “என்னுடை மனைவி காதல்மக்களைப் பயத்தலும் காணாள்” என்கிறபடியே பெற்ற தாயும் தர்சிக்கப்பெறாதபடி நாய்ச்சிமார், தங்கள் ஸ்வாதந்த்ர்யத்தாலே யழைப்பிக்க, “தப்பின பிள்ளைகளை” என்கிறபடியே கைதப்பிப் போய் சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும், “உருவுருவே கொடுத்தான்” என்றும், “உடலொடுங் கொண்டு கொடுத்தவனை” என்றுஞ் சொல்லுகிறபடியே அவ்வவ ரூபங்களோடே மீட்டுக்கொடுவந்து கொடுத்தாப்போலே துஷ்கரங்களைச் செய்தும் ஆச்ரிதர் அபேக்ஷிதங்களைத் தலைக்கட்டுகிறது, “ஆச்ரித ரக்ஷண விஷயோ மநோரத: காம: ஸ: ப்ரதிஹதோ அபவதீதி ஸத்யகாம:” என்கிற ஸத்யகாமனாகையாலேயிறே. “ஸத்யகாமனாகையாவது, ஸாந்தீபநி புத்ரனைக் கொண்டு வந்தாப்போலே ஸகல அபேக்ஷிதங்களும் முடிக்கவல்லனாகை” என்றே நடுவிற்றிருவீதிப் பிள்ளை பட்டர் தத்வத்ரயத்திலே யருளிச்செய்தது. (அவர்களுக்கு த்ருவபதம்போலே பண்டில்லாதவற்றையு முண்டாக்கியும்) இது, ஸத்யஸங்கலபத்வ கார்யம். உதாநபாத புரனான த்ருவனுக்கு, ஸ்வர்கத்தினுடைய ஊர்த்வாவதியிலே அபூர்வமாயிருப்பதொரு பதம் கல்பித்துக் கொடுத்தாப்போலே ஆச்ரிதர்க்குப் பண்டில்லாதவற்றையு முண்டாக்குகிறது, அபூர்வ போக்யங்களை ஸ்ருஷ்டிக்கவல்ல அமோக ஸங்கலபனாகையாலேயிறே. “ஸத்யஸங்கல்பனாகையாவது, த்ருவ பதம்போலே பண்டில்லாதவற்றையு முண்டாக்கவல்லனாகை” என்று இதுவும் பட்டர் தாமே யருளிச்செய்தாரிறே. (தம் தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகங் கொண்டாப் போலேயிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி) இது, ஔதார்ய கார்யம். “வரத ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த” என்கிறபடியே தங்களுடைமையைத் தாங்கள் விநியோகங் கொளளுமாபோலே விநியோகங் கொள்ளலாம்படி. ஆத்ம ஆத்மீயங்களை ஆச்ரிதர்க்குக் கொடுக்கிறது, கொடுத்தோம் என்னுமபிமாநம் தன்னெஞ்சில் இல்லாதபடியாகவும் கொள்ளுமவர்களுக்கு ப்ரத்யுபகாரந் தேடி நெஞ்சாறல்பட வேண்டாதபடியாகவும் கொடுக்கும் பரம உதாரனாகையாலேயிறே. (அவர்கள் கார்யம் தலைக்கட்டினால், தான் க்ருதக்ருத்யனாய்) இது, க்ருதிதவ கார்யம். ஆச்ரிதர் கார்யம் தலைக்கட்டினால், அவர்கள் க்ருதக்ருத்யராகை யன்றிக்கே, “அபிஷிச்ய ச லங்காயாம்” இத்யாதிப்படியே தான் க்ருதக்ருத்யனாகிறது, ஆச்ரித ரக்ஷணம் பெற்றால் பேறு தன்னதாயிருக்கும் ஸ்வபாவத்தாலேயிறே. “க்ருதியாகையாவது ஆச்ரிதருடையவபேக்ஷிதம் பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை” என்றிறே பட்டரும் அருளிச்செய்தது. (தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸுக்ருதலவத்தையே நினைத்து) இது, க்ருதஜ்ஞதா கார்யம். தன் திறத்திலேயொரு சரணோக்தி முதலான ஸுக்ருத லேசத்தைப பண்ணினால் அவர்களுக்குத் தான் எல்லா நன்மைகளுஞ் செய்தாலும் அவற்றையொன்றையும் நினையாதே, அவர்கள் செய்த ஸுக்ருதலவத்தையே நினைத்திருக்கிறது, செய்த நன்றி அறியுமவனாகையாலேயிறே. “க்ருதஜ்ஞனாகையாவது, ஆச்ரிதருடைய ஸுக்ருதலவத்தை யொன்றையுமே நினைத்து தான் செய்த நன்மைகளொன்றும் பாராதேயிருக்கை” என்று இதுவும் பட்டரருளிச் செய்தார். – (அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி யெல்லா தசையிலும் இனியனாய்) இது மாதுர்ய கார்யம். அநாதிகாலமே பிடித்துக் கொளுந்திக் கிடக்கிற ப்ராக்ருத விஷய ரஸங்களை விஸ்மரிக்கும்படி ஸர்வாவஸ்தையிலும் இனியனாகிறது, “ஸர்வரஸ:” என்கிறபடியே, நிரதிசய போக்யனாயிருக்கையாலேயிறே. (பார்யா புத்ராதிகள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தாலே நினையாதே) இது, சாதுர்ய கார்யம். பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பானொரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டிருக்கச் செய்தேயும் காணாதாரைப் போலே யிருக்குமாப்போலே, ஆச்ரிதர் செய்த குற்றங்களைக் கண்டிருக்கச் செய்தேயும் திருவுள்ளத்தால் நினையாதிருக்கிறது, ஆச்ரித தோஷங்களைத் தெரியாதபடி மறைக்கவலல சதுரனாகையாலேயிறே. (குற்றங்களைப் பெரியபிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து) இது, ஸ்த்தைர்ய கார்யம். சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய், சேதநர் குற்றங்களைப் பொறுப்பித்துச் சேரவிடும் பெரியபிராட்டியார், “தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்” என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும், “என்னடியாரது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்” என்று, அவளோடே மறுதலைத்து நிச்சலனாய் நின்று ரக்ஷிக்கிறது ஸ்த்திர ஸ்வபாவனாகையாலேயிறே. (காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப்போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு) இது ப்ரணயித்வ கார்யம். காமிநி விஷயத்தில் ப்ராவண்யத்தாலே யவளுடம்பிலழுக்கை விரும்பும் காமுகனைப்போலே, ஆச்ரிதரானவர்களுடைய ப்ரக்ருதி ஸம்பந்ததாதி தோஷங்களை போக்யமாகக் கொள்ளுகிறது பரமப்ரணயியாகையாலேயிறே. (அவர்கள்பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்) இது, ஆர்ஜவ கார்யம். மநோவாக்காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராயிருக்குமவர்கள் பக்கலிலே, நீரேறாமேடுகளிலே விரகாலே நீரேற்றுவாரைபபோலே தன்னையமைத்து த்ரிவித கரணங்களாலும் செவ்வியனாய்ப் போருகிறது, ருஜு ஸ்பாவனாகையாலேயிறே. (பிரிந்தால் அவர்கள் வ்யஸநம் குளப்படியென்னும்படி தான் ஈடுபட்டு) இது மார்தவ கார்யம். “ஊர்த்வம் மாஸாந் ந ஜீவிஷ்யே” என்றால், “ந ஜீவேயம் க்ஷணமபி” எனகிறபடியே தன்னைப் பிரிந்தால் ஆச்ரிதர்படும் வ்யஸநம், கடல் போன்ற தன் வ்யஸநத்துக்கு ஒரு குளப்படி மாத்ரமென்னும்படி தான்  க்லேசப்படுகிறது, ஆச்ரித விரஹம் பொறுக்கமாட்டாத மென்மையாலேயிறே. (அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழவிட்டு) இது, ஸௌசீல்ய கார்யம். ஜந்மாதிகளால் தண்ணியராயிருக்குமவர்களுக்கு அநுகூலமாக ஸர்வேச்வரன், ஸர்வோத்க்ருஷ்டனான தன்னைத் தாழவிடுகிறது சீலவத்தையாலேயிறே. (அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி யெளியனாய்) இது, ஸௌலப்ய கார்யம். அவதார தசையிலே நவநீத சௌர்ய வ்யாஜத்தாலே “சிக்கென வார்த்தடிப்ப” என்கிறபடியே, யசோதாதிகளுக்குக் கட்டவும் அடிக்கவும் ஆம்படி யெளியனாயிற்றது, “எளிவரு மியல்வின” னாகையாலேயிறே. (அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலுமேற்குமா போலே, பெரியபிராட்டியாரையும் ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும்) இது, வாத்ஸல்ய கார்யம். அன்று தான் பெற்ற கன்றுக்குத் தாயான பசுவிரங்கி முன்பு தான் ஸ்நேஹித்துக் கொண்டு போந்த முன்னணைக் கன்றையும் தனக்கு போக்யமான புல்லிட வந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது குளம்பாலே மிதிப்பதாமாப்போலே, பரிரம்பணாதி போகோபகாரிகையான பெரியபிராட்டியாரையும் முன்பு ஸ்நேஹ விஷயமாய்ப் போந்த நித்யஸூரிகளையும் தள்ளிவிட்டு, இன்று ஆச்ரயித்தவர்களை ஸ்நேஹித்துக் கொண்டு போருகிறது, வத்ஸலனாகையாலேயிறே.

(இப்படி) - இதுவரை கூறப்பட்டதான “ஸர்வேச்வரனுடன் அவனுடைய கல்யாண குணங்கள் சேர்ந்துள்ள விதம்” என்பதைக் கூறுகிறார். (கல்யாண குணங்களோடே கூடியிருக்கையாலே) – இப்படிப்பட்ட குணங்கள் சேர்ந்தபடி உள்ளதற்கான காரணத்தை ஏன் அருளிச்செய்தார் என்றால், இனி கூறப்போகின்ற விஷயங்களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தின் கார்யம் என்று உணர்த்தவே ஆகும். (பிறர் நோவு கண்டால் “ஐயோ!” என்று இரங்கி) - இது க்ருபையின் செயலாகும். மற்றவர்களுடைய துன்பத்தைக் காணும்போது அவர்களிடம் ஆழ்ந்த இரக்கம் கொள்ளும் ஈடுபாடு என்பது, மற்றவர்கள் துக்கத்தை பொறுத்துக் கொள்ள இயலாத தன்மையால் அல்லவோ? (அவர்களுக்கு எப்போதுமொக்க நன்மையைச் சிந்தித்து) - இது நன்மையின் செயலாகும்; அதாவது ஸௌஹார்த குணத்தின் செயலாகும். (எப்போதும் ஒக்க) - இவர்கள் தன்னைக் குறித்து நன்றாக அறிந்த காலம், ஏதும் அறியாத காலம் என்பதான வேறுபாடு இன்றி, அனைத்து காலங்களிலும் என்று கருத்து. தனது அடியர்களுக்கு அனைத்துவிதமான மங்களங்களும் உண்டாகவேண்டும் என்று எண்ணியபடி உள்ள தன்மையானது, ஸௌஹார்தம் காரணமாகவே ஆகும். (தனக்கேயாயிருத்தல் தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருத்தல் செய்யாதே, நிலா தென்றல் சந்தநம் தண்ணீர்போலே பிறர்க்கேயாய்) - இது அடியார்களுக்கு வசப்பட்டிருக்கும் தன்மையின் செயல்கள் ஆகும். சுயநலமாக இருத்தல், சுயநலம் மற்றும் பொதுநலம் என்றிருத்தல் என்பதாக இரண்டிற்கும் பொதுவாக இருத்தல் என இல்லாமல், தென்றல் காற்று முதலானவை போன்று, மற்றவர்களுக்காகவே இருத்தல் என்பது மற்றவர்களுள் வசப்பட்டுள்ள தன்மை காரணமாகவே ஆகும். (தன்னையாச்ரயித்தவர்கள் பக்கல் ஜந்ம ஜ்ஞாந வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே) - அடியார்களிடம் காணப்படும் பிறவி ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆராயாமல் உதவுதல் என்பது, கீதை (9-29) - ஸமோஹம் ஸர்வபூதேஷு – அனைத்து உயிர்களிடத்தும் நான் சமமாகவே உள்ளேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, பிறவிகளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதான வேறுபாடு இன்றி, அடைவதற்குச் சமமாக இருத்தல் என்பது இந்தத் தன்மையால் ஆகும். (தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய்) இது தஞ்சம் புகுவதற்கு ஏற்ற இடம் அல்லாத அனைவருக்கும் சரணம் புகத்தக்க இடமாக உள்ள தன்மை. தாங்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது, மற்றவர்களாலும் தங்களைக் காப்பாற்ற இயலாது என்று கைவிட்ட நிலையில், தான் ரக்ஷகனாக நிற்கும் தன்மை என்பது, திருவாய்மொழி (7-2-2) – பற்றிலார் பற்ற நின்றான் – என்பதால் அல்லவோ? (ஸாந்தீபநி புத்ரனையும், வைதிகன் புத்ரர்களையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே அரியன செய்தும் அவர்களபேக்ஷிதங்களைத் தலைக்கட்டியும்) - இது விருப்பங்கள் நிச்சயமாக நிறைவே(ற்)றும் தன்மை, அதாவது ஸத்யகாம தன்மை. பெரியாழ்வார் திருமொழி (4-8-1) - மாதவத்தோன் புத்திரன்போய் மறி கடல்வாய் மாண்டானை - என்பதற்கு ஏற்ப முன்பு ஸமுத்ரத்தால் கொண்டு செல்லப்பட்ட ஸாந்தீபநி முனிவரின் புத்ரனையும், பெரியாழ்வார் திருமொழி (4-8-2) – பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் - என்பதற்கு ஏற்ப பிறந்த உடனேயே பெரியாழ்வார் திருமொழி (5-8-8) - என்னுடை மனைவி காதல்மக்களைப் பயத்தலும் காணாள் - என்பதற்கு ஏற்ப குழந்தை பிறந்த உடனேயே அதன் தாய் காண இயலாதபடி, பரமபதத்தில் உள்ள நாச்சிமார்கள் தங்களுடைய சுதந்திரத்தால் அவைகளை தங்களிடம் அழைத்துச் செல்ல, பெரியதிருமொழி (1-6-7) - தப்பின பிள்ளைகளை – என்பதற்கு ஏற்ப கைதப்பிச் சென்று சுடரொளியாய் நின்ற தன்னுடைய ஜோதியான பரமபதத்தில் இருந்த வைதிகனுடைய புத்திரர்களையும்; பெரியாழ்வார் திருமொழி (4-8-1) - உருவுருவே கொடுத்தான் – என்றும், திருவாய்மொழி (3-10-5) - உடலொடும் கொண்டு கொடுத்தவனை – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவரவர்களுடைய ரூபங்களுடன் மீட்டுக் கொண்டு வந்து அளித்தது போன்று, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து அடியார்களுடைய விருப்பங்களை முடித்து வைக்கிறான். இது, “ஆச்ரித ரக்ஷண விஷயோ மநோரத: காம: ஸ: ப்ரதிஹதோ அபவதீதி ஸத்யகாம: - அடியார்களைக் காப்பாற்றுதல் என்னும் எண்ணமானது காமம் எனப்படும்; அத்தகைய காமம் என்பது தடையின்றி உள்ளது என்பதால், ஸத்யகாமன் எனப்படுகிறான்” என்பதற்கு ஏற்ப ஸத்யகாமனாக உள்ளதால் ஆகும். நடுவில்திருவீதிப்பிள்ளை பட்டர் தத்வத்ரயத்தில், “ஸத்யகாமனாகையாவது, ஸாந்தீபநி புத்ரனைக் கொண்டு வந்தாப்போலே ஸகல அபேக்ஷிதங்களும் முடிக்கவல்லனாகை – ஸாந்தீபநியின் புத்திரனை மீண்டும் கொண்டு வந்தது போன்று அனைத்து விருப்பங்களையும் முடிக்கவல்லவன் என்பதே ஸத்யகாமனா இருத்தல் ஆகும்” என்று அருளிச்செய்தார். (அவர்களுக்கு த்ருவபதம்போலே பண்டில்லாதவற்றையுமுண்டாக்கியும்) - இது, தனது எண்ணங்கள் அனைத்தும் எந்தத் தடையும் இன்றி முடியும் தன்மையாகும்; அதாவது ஸத்யஸங்கல்பத்வம் ஆகும். உத்தாநபாதன் என்பவனுடைய புத்திரனாகிய துருவனுக்கு, ஸ்வர்க்கத்தின் மேல் எல்லையில், இதுவரை படைக்கப்படாத ஒரு அற்புதமான இடம் அமைத்துக் கொடுத்தது போன்று, இதுவரை இல்லாத ஒன்றை அடியார்களுக்காக உண்டாக்கித் தருதல் என்பது, இதுவரை காணாத இன்பங்களைப் படைக்கவல்ல மிகப் பெரிய ஸங்கல்பம் கொண்டவன் என்பதால் ஆகும். இதனை நடுவில்திருவீதிப்பிள்ளைபட்டர், “ஸத்யஸங்கல்பனாகையாவது, த்ருவ பதம் போலே பண்டில்லாதவற்றையு முண்டாக்கவல்லனாகை - ஸத்யஸங்கல்ப தன்மை என்பது, துருவ இடம் போன்று, முன்பு இல்லாதவற்றை உண்டாக்கவல்லவன் ஆகும்” என்றார். (தம் தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகங் கொண்டாப் போலேயிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி) - இது வள்ளல் தன்மை; அதாவது ஔதார்யம் ஆகும். ஸ்ரீவரதராஜஸ்தவம் (63) - வரத ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த – வரதா! இங்கு உள்ள அனைத்து இனிமையான பொருள்களையும் உனது அடியார்களுக்காக உண்டாக்கினாய் - என்பதற்கு ஏறப, தங்களுக்கு உரிமையான பொருள்களைத் தாங்கள் எவ்விதம் வேண்டுமானாலும் பயன்படுத்துவது போன்று, ஆத்மாவையும் அதனைச் சார்ந்தவற்றையும் அடியார்களுக்கு அளிக்கிறான்; இந்தத் தன்மையானது, இவ்விதம் அளிக்கும்போது, “இதனை அளித்தோம்” என்று எண்ணாமலும், அதனைப் பெற்றவர்களுக்கும் “இதனைப் பெறுவதற்கு நமக்கு எந்தவிதமான கைம்மாறும் இல்லையே” என வருந்தாதபடியாகவும் அளிப்பது, அவனுடைய வாத்ஸல்ய தன்மை காரணமாகவே ஆகும். (அவர்கள் கார்யம் தலைக்கட்டினால், தான் க்ருதக்ருத்யனாய்) - இது செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்கும் தன்மை ஆகும். அடியார்களுடைய செயல்கள் நிறைவேறப் பெற்றால், அவர்கள் தங்களுடைய “செய்யவேண்டிய செயல் செய்யப்பட்டதாயிற்று” என்று எண்ணுவதற்குப் பதிலாக, பாலகாண்டம் - அபிஷிச்ய ச லங்காயாம் - அரக்கர்களுக்கு அரசனாக இலங்கையில் - என்பதற்கு ஏற்ப, தான் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடித்த நிலையில் உள்ளான்; இத்தகைய எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்றால், அடியார்கள் காப்பாற்றப் பெற்றால், அந்தப் பேறானது தன்னுடையதாக இருக்கும் என்று எண்ணும் இயல்பால் ஆகும். நடுவில்திருவீதிப்பிள்ளைபட்டர், “க்ருதியாகையாவது ஆச்ரிதருடைய அபேக்ஷிதம் பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை – அடியார்களுடைய விருப்பமானது நிறைவேறினால் மட்டுமே தனது செய்யவேண்டிய செயல் நிறைவேறியதாக எண்ணுதல் இந்தக் குணம் ஆகும்”, என்று அருளிச்செய்தார். (தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸுக்ருதலவத்தையே நினைத்து) – இது, செய்த நன்றியை எண்ணியபடி உள்ள தன்மை ஆகும். தன்னிடம் வந்து “சரணம் புகுந்தேன்” என்பது முதலான புண்ணிய செயல்களைச் செய்தால், அவர்களுக்கு ஏற்ற அனைத்து நன்மைகளையும் செய்து கொடுத்து, ஆயினும் அவற்றை எண்ணிப் பார்க்காமல், அவர்கள் செய்த அந்த புண்ணியத்தை மட்டுமே எண்ணியபடி இருத்தல் என்பது செய்ந்நன்றி அறியும் தன்மை கொண்டவன் என்பதால் ஆகும். நடுவில்திருவீதிப்பிள்ளைபட்டர், “க்ருதஜ்ஞனாகையாவது, ஆச்ரிதருடைய ஸுக்ருதலவத்தை யொன்றையுமே நினைத்து தான் செய்த நன்மைகளொன்றும் பாராதேயிருக்கை – அடியார்கள் செய்த புண்ணிய செயலை மட்டுமே நினைத்து, தான் அவர்களுக்குச் செய்த நன்மையை ஆராயாமல் இருத்தல்” என்று அருளிச்செய்தார். (அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி யெல்லா தசையிலும் இனியனாய்) - இது இனிமையின் செயலாகும். எல்லையற்ற காலமாக ஆத்மாவைப் பற்றியபடி உள்ள புலன் விஷயங்களின் சுவையை மறந்து போகும்படியாக, அனைத்து நிலைகளிலும் இனிமையானவனாக உள்ளான்; இது, சாந்தோக்யத்தில் - ஸர்வரஸ: - அனைத்து சுவைகளும் ப்ரஹ்மமே – என்பதற்கு ஏற்ப, எல்லையற்ற இன்பம் உள்ளவனாக இருப்பதால் ஆகும். (பார்யா புத்ராதிகள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தாலே நினையாதே) - இது சாதுர்ய குணத்தின் செயலாகும். மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும் ஒருவன், அவர்கள் செய்யும் குற்றங்களை நோக்கினாலும், அவற்றைக் காணாமல் இருப்பது போன்று, அடியார்கள் செய்யும் குற்றங்களைக் காணநேரிட்டாலும், அவற்றைத் தனது திருவுள்ளத்தால் சிந்திக்காமல் உள்ளான்; இது அடியார்களுடைய குற்றங்களை வெளியில் தெரியாதபடி மறைக்கவல்ல திறன் கொண்டவன் என்பதால் ஆகும். (குற்றங்களைப் பெரியபிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து) - இது தைர்யத்தின் செயலாகும். “அவள் கூறுவதைச் செய்யவேண்டும்” என்பதற்கு ஏற்றபடி தனக்கு மிகவும் ப்ரியமானவளாக, சேதநர்களுடைய குற்றங்களை மன்னித்து, தன்னிடம் சேரும்படியாகச் செய்யும் பெரியபிராட்டியார், பெரியாழ்வார் திருமொழி (4-9-2) – தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் - என்பதற்கு ஏற்ப சேதநர்களுடைய தோஷங்களைச் சுட்டிக் காண்பித்தாலும் கூட, பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - என்னடியாரது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார் - என்பதற்கு ஏற்ப அவளுடைய கூற்றையும் மறுத்து, உறுதியாக நின்று, அடியார்களைக் காப்பாறுதல் என்பது, இத்தகைய உறுதியான இயல்பு கொண்டதால் ஆகும். (காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப்போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு) - இது காதலுடைய செயலாகும். தான் விரும்பும் ஒரு பெண்ணின் சரீரத்தில் உள்ள அழுக்கையும் விரும்பும் காமுகன் போன்று, அடியார்களுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தம் காரணமாக ஏற்படும் தோஷங்களையும் கூட இனிமையாக கொள்ளும் நிலையானது, அவர்களிடம் உள்ள மிகுந்த அன்பு காரணமாக அல்லவோ? (அவர்கள்பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்) - இது நேர்மை குணத்தின் செயல் ஆகும். மனம், வாக்கு, சரீர செயல் ஆகிய மூன்றிலும் ஒழுக்கக் கேடு கொண்டபடி உள்ளவர்களிடம், நீரை ஏற்ற முடியாத மேட்டுப்பாங்கான பகுதிகளில் தகுந்த வழிகளைக் கொண்டு நீரை ஏற்றுவது போன்று தன்னை அமைத்துக்கொண்டு, மூன்றுவிதமான கரணங்களாலும் சீராக உள்ளான் என்பது நேர்மையான இயல்பால் அல்லவோ? (பிரிந்தால் அவர்கள் வ்யஸநம் குளப்படியென்னும்படி தான் ஈடுபட்டு) - இது மென்மை குணத்தின் செயல்பாடு ஆகும். ஸுந்தரகாண்டம் (38-10) - ஊர்த்வம் மாஸாந் ந ஜீவிஷ்யே – இராமனைப் பிரிந்து நான் ஒரு மாதத்திற்கு மேல் வாழ மாட்டேன் – என்று அவள் கூறினால், ஸுந்தரகாண்டத்தில் - ந ஜீவேயம் க்ஷணமபி – அவளைப் பிரிந்து நான் ஒரு நொடியும் இருக்கமாட்டேன் – என்று இராமன் கூறுவதற்கு ஏற்ப, தன்னை விட்டு அடியார்கள் பிரிய நேரிட்டால் அவர்களுக்கு ஏற்படும் துன்பமானது, அவர்களைப் பிரிய நேர்ந்தால் தனக்கு ஏற்படும் துன்பக்கடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதற்கு அவன் துயரம் அடைகிறான்; இது, தனது அடியார்களுடைய பிரிவைப் பொறுக்க இயலாத மென்மையான இயல்பால் அல்லவோ? (அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழவிட்டு) – இது, உயர்வு தாழ்வு ஆராயாமல் பழகும் குணத்தின் செயலாகும். பிறப்பு போன்ற பலவற்றாலும் தாழ்வாக உள்ளவர்கள் விஷயத்தில், தான் மிகவும் உயர்ந்தவன் என்றபோதிலும், தாழ்வாக இறங்கி வந்து நிற்பது என்பது இத்தகைய சீல குணத்தால் அல்லவோ? (அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி யெளியனாய்) – இது எளிமைக் குணத்தின் செயலாகும். க்ருஷ்ணனாக அவதாரம் செய்தபோது வெண்ணெய் களவு செய்து, சிறிய திருமடலில் - சிக்கென வார்த்தடிப்ப – என்று கூறுவதற்கு ஏற்ப, யசோதை முதலானவர்கள் கட்டுவதற்கும், அடிப்பதற்கும் ஏற்றபடி எளியவனாக நின்றான்; இது திருவாய்மொழி (1-3-2) – எளிவரும் இயல்வினன் – என்பதால் ஆகும். (அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலுமேற்குமா போலே, பெரியபிராட்டியாரையும் ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும்) - இது கன்றிடம் பசுமாடு காண்பிக்கும் தாய்ப்பாச குணம் காரணமாக ஆகும். அப்போது ஈந்த கன்றிடம் இரக்கம் கொள்ளும் தாய்ப்பசு, முன்பு தான் ஈன்ற முதல் கன்றையும், தனக்கு உணவு அளிக்க வந்தவர்களையும் கூட கொம்பால் முட்ட முயல்வது, தனது குளம்பால் மிதிப்பது போன்ற செயல்களைச் செய்கிறது; இது போன்று, தன்னை தழுவிக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்யும் பெரியபிராட்டியார், முன்பு மிகுந்த நட்புடன் நின்ற நித்யஸூரிகள் போன்றவர்களையும் கூடத் தள்ளி, இப்போது தன்னிடம் வந்து சரணம் புகுந்தவர்களைச் சிநேகித்தபடி இருத்தல் என்பது, வாத்ஸல்ய குணம் கொண்டவனாக உள்ளதால் ஆகும்.