Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 150)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஜ்ஞாநம் அஜ்ஞர்க்கு; சக்தி அசக்தர்க்கு; க்ஷமை ஸாபராதர்க்கு; க்ருபை துக்கிகளுக்கு; வாத்ஸல்யம் ஸதோஷர்க்கு; சீலம் மந்தர்க்கு; ஆர்ஜவம் குடிலர்க்கு; ஸௌஹார்த்தம் துஷ்டஹ்ருதயர்க்கு; மார்த்தவம் விச்லேஷ பீருக்களுக்கு; ஸௌலப்யம் காண ஆசைப்பட்டவர்களுக்கு. இப்படி எங்கும் கண்டுகொள்வது.
இப்படி குணங்களை மூன்றுவகையாக்கி, அவற்றுக்கு விஷயங்களை தர்சிப்பித்தவளவன்றிக்கே, குணங்களுக்கு ப்ரத்யேகம் விஷய நியமமுண்டாகையாலே, அத்தையும் தர்சிப்பிக்கவேணுமென்று திருவுள்ளம்பற்றி, கீழெடுத்த குணங்களிலே சிலவற்றுக்குத் தனித்தனியே விஷயங்களை தர்சிப்பிக்கிறார் (ஜ்ஞாநம் அஜ்ஞர்க்கு) என்று தொடங்கி.
இவ்விதம் குணங்களை மூன்றுவிதமாக உரைத்து, அந்தந்த குணங்களுக்கு இலக்காக உள்ள விஷயங்களை விளக்கிய பின்னர், “அந்தந்த குணங்கள் ஒவ்வொன்றுக்கும் இலக்காக இப்படிப்பட்ட விஷயம் உள்ளது” என்ற விதிமுறை உள்ளதால், அதனையும் விளக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றினார். ஆகவே இதுவரை கூறிய குணங்களில் சில குணங்களுக்கு இலக்காக உள்ள விஷயங்களைத் தனித்தனியே அருளிச்செய்கிறார்.
– ஜ்ஞாநமாவது சேதநருடைய ஹிதாஹித நிரூபணத்துக்கு உறுப்பான குணம்; ஆகையாலே, “க்வாஹமத்யந்த துர்புத்தி: க்வசாத்மஹித வீக்ஷணம், யத்திதம் மமதேவேச ததாஜ்ஞாபய மாதவ” என்கிறபடியே, ஸ்வஹிதாஹித நிரூபணாதிகளில் அஜ்ஞராயிருக்குமவர்களுக்குறுப்பா யிருக்குமென்கை. (சக்தி அசக்தர்க்கு) என்றது; சக்தியாவது அகடிதகடநா ஸாமர்த்த்யம்; ஆகையாலே ஸ்வ இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களில் அசக்தராயிருக்குமவர்களுடைய கார்யஸித்திக்கு உறுப்பாயிருக்கு மென்கை. (க்ஷமை ஸாபராதர்க்கு) என்றது; க்ஷமையாவது அபராத ஸஹத்வம்; ஆகையாலே “அஹமஸ்ம்யாபராதாநாமாலய:” என்கிறபடியே அபராத ஸஹிதராகத் தங்களையநுஸந்தித்திருப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை. “க்ஷமா ஸாபராதேநுதாபி ந்யுபேயா கதம் ஸாபராதேபி த்ருப்தே மயி ஸ்யாத்” என்றிறே பட்டரருளிச்செய்தது. (க்ருபை துக்கிகளுக்கு) என்றது; க்ருபையாவது பரதுக்கா ஸஹிஷ்ணுத்வம்; ஆகையாலே “ஆவாரார் துணை யென்றலை நீர்க்கடலுளழுந்தும் நாவாய்போல, பிறவிக்கடலுள் நின்று துளங்குகை” முதலான துக்கமுடையவர்களுக்கு உறுப்பாயிருக்குமென்கை. “தயா பரவ்யஸநஹரா பவவ்யதா ஸுகாயதே மம ததஹம் தயாதிக:” என்று அருளிச்செய்தாரிறே பட்டர். (வாத்ஸல்யம் ஸதோஷர்க்கு) என்றது; வாத்ஸல்யமாவது அன்றீன்ற கன்றினுடம்பின் வழுவையாதரித்து புஜிக்கும் தேநுவைப்போலே ஆச்ரிதருடைய தோஷங்களை போக்யமாகக் கொள்ளுவதொரு குணம்; ஆகையாலே, அவித்யாகாமாதி தோஷ ஸஹிதராகத் தங்களையநுஸந்திப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை. (சீலம் மந்தர்க்கு) என்றது; சீலமாவது, பெரியவன் தாழந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வாபாவம். ஆகையாலே, தங்களுடைய தண்மையையநு ஸந்தித்திருப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை (ஆர்ஜவம் குடிலர்க்கு) என்றது; ஆர்ஜவமாவது கரணத்ரயத்தாலும் செவ்வியனாயிருக்கை; ஆகையாலே, தங்களுடைய கரணத்ரய கௌடில்யத்தை நினைத்திருப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை. (ஸௌஹார்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு) என்றது; ஸௌஹார்தமாவது, எப்போதும் நன்மையைச் சிந்தித்திருக்கும் ஸ்வபாவம்; ஆகையாலே, ஸர்வகாலமும் தீமையையே சிந்தித்திருக்கும் துஷ்டஹ்ருதயராகத் தங்களையநுஸந்தித்திருப்பார்க்கு உறுப்பாயிருக்குமென்கை. (மார்தவம் விச்லேஷ பீருக்களுக்கு) என்றது; மார்தவமாவது, ஆச்ரித விரஹம் பொறுக்கமாட்டாத மென்மையாகையாலே தன்னுடைய விச்லேஷத்தில் பயமுடையவர்களுக்கு உறுப்பாயிருக்குமென்கை. (ஸௌலப்யம் காணவாசைப்பட்டவர் களுக்கு) என்றது; ஸௌலப்யமாவது, அதீந்த்ரியமான விக்ரஹத்தைக் கண்ணுக் கிலக்காம்படி பண்ணுகை; ஆகையாலே, தன்னைக் காணவேணுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு உறுப்பாயிருக்குமென்கை. – இத்தால், இவனுடைய ஜ்ஞாநத்தில் அபேக்ஷையுள்ளது, தந்தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவில்லாதவர்களுக்காகையாலே, ஜ்ஞாநம் அஜ்ஞர்க்கா யிருக்கும். இவனுடைய சக்தியில் அபேக்ஷையுள்ளது, ஸ்வேஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் அசக்தராயிருப்பாருக்காகையாலே, சக்தி அசக்தர்க்காயிருக்கும். பொறையில்ல் அபேக்ஷையுள்ளது, அபராதமுடையார்க்காகையாலே, க்ஷமை ஸாபராதர்க்காயிருக்கும். ஐயோவென்று இரங்க வேண்டுவது, நோவு பட்டவர்க்காகையாலே, க்ருபை துக்கிகளுக்காயிருக்கும். தோஷத்தை போக்யமாகக் கொள்ள வேண்டுவது, தோஷவான்களுக்காகையாலே, வாத்ஸல்யம் ஸதோஷர்க்கா யிருக்கும். தண்மை பாராதே புரையறக் கலக்க வேணடுவது, தாழ்ந்தவர்கள் விஷயத்திலே யாகையாலே, சீலம் மந்தர்க்காயிருக்கும். கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்க் கொண்டு தன்னையமைத்துப் பரிமாற வேணடுவது, செவ்வைக்கேடர் விஷயத்திலாகையாலே, ஆர்ஜவம் குடிலர்க்கா யிருக்கும். தானெப்போதும் நன்மை சிந்திக்க வேண்டுவது, தந்தாமுக்குத் தீமைகளைச் சிந்திக்கும் தீமனத்தர் விஷயத்திலாகையாலே, ஸௌஹார்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கா யிருக்கும். விரஹம் பொறாத மென்மை வெண்டுவது, விரஹத்துக்கு அஞ்சுவார் திறத்திலாகையாலே, மார்தவம் விச்லேஷ பீருக்களுக்காயிருக்கும். அதீந்த்ரியமான விக்ரஹத்தைக் கண்ணுக்கு இலக்காக்க வேண்டுவது அவ்வடிவைக் காண்கையில் ஆசையுடையவர்களுக்காகையாலே, ஸௌலப்யம் காண வாசைப்படடவர்களுக்கா யிருக்கும் என்று குணங்களினுடைய விஷய ப்ரதி நியத்த்வத்தை தர்சிப்பித்தாராயிற்று. (இப்படியெங்கும் கண்டுகொள்வது) என்றது, கீழ்ச்சொன்ன ப்ரகாரத்திலே அநுக்தமான குணங்களெல்லாவற்றுக்கும் ப்ரதயேகம் விஷயங்களை தர்சித்துக்கொள்வது என்றபடி.
(ஜ்ஞாநம் அஜ்ஞர்க்கு) - சேதநர்களுக்கு ஏற்ற நன்மை மற்றும் தீமை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவதற்கு உறுப்பாக உள்ள குணமாக ஞானம் உள்ளது. ஜிதந்தே ஸ்தோத்ரம் – க்வாஹமத்யந்த துர்புத்தி: க்வசாத்மஹித வீக்ஷணம், யத்திதம் மமதேவேச ததாஜ்ஞாபய மாதவ - எத்தகைய ஞானமும் இல்லாத நான் எனது ஆத்மாவிற்கு ஏற்ற நன்மையை எவ்விதம் காண்பேன்? தேவர்களின் தலைவனே! மாதவனே! எனக்கு எது நன்மையோ அதனை நீயே கட்டளை இடவேண்டும் – என்பதற்கு ஏற்ப, தங்களுக்கு ஏற்ற நன்மை மற்றும் தீமை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் அறியாமை கொண்டவர்களுக்கு, ஞானமானது ஏற்ற குணமாக உள்ளது. (சக்தி அசக்தர்க்கு) - சக்தி என்பது “யாராலும் செய்ய இயலாத செயலைச் செய்யும் சாமர்த்யம்” ஆகும். எனவே தங்களுக்கு விருப்பமானது மற்றும் விருப்பம் அற்து ஆகியவற்றை அடைவதற்கும் விலக்குவதற்கும் ஏற்ற செயல்களைச் செய்வதற்குச் சக்தி அற்றவர்களாக உள்ளவர்களுக்குத் தகுந்த கார்யம் செய்து கொடுப்பதற்கான உறுப்பாக சக்தி உள்ளது. (க்ஷமை ஸாபராதர்க்கு) - க்ஷமை என்றால் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதாகும். எனவே அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் – அஹம் அஸ்மி அபராதாநம் ஆலய: - குற்றங்களுடைய இருப்பிடமாகவே நான் உள்ளேன் - என்பதற்கு ஏற்ப, “மன்னிக்க இயலாதபடியான குற்றங்களைச் செய்தவன்” என்று தங்களை எண்ணுபவர்களுக்கு ஏற்ற குணமாக இது உள்ளது. ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் (2-96) – க்ஷமா ஸாபராதே அநுதாபிநி உபேயா கதம் ஸாபராதே அபி த்ருப்தே மயி ஸ்யாத் - திருவரங்கா! உன்னுடைய பொறுமை என்னும் குணமானது எப்படிப்பட்ட தவறுகளைச் செய்தபோதிலும், “தவறு செய்துவிட்டோம்”, என்று வருந்தக் கூடியவனிடம் மட்டுமே செல்வதாகும். இவ்விதம் உள்ளபோது, பல குற்றங்களைச் செய்த பின்னரும், அதனைக் குறித்து வருந்தாமல் உள்ள என் போன்றவர்கள் குறித்து அந்தப் பொறுமை என்னும் குணமானது எப்படி ஏற்படும் - என்று அல்லவோ ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தார்? (க்ருபை துக்கிகளுக்கு) - க்ருபை என்பது, மற்றவர்களுடைய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத தன்மை ஆகும். எனவே, திருவாய்மொழி (5-1-9) - ஆவார் ஆர் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல், பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க - என்பது போன்ற துக்கம் உடையவர்களுக்கு உதவும் குணமாக க்ருபையானது உள்ளது. ஸ்ரீரங்கராஜ ஸ்த்வத்தில் (2-98) - தயா பர வ்யஸந ஹரா பவவ்யதா ஸுகாயதே மம தத் அஹம் தயாதிக: – திருக்கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ள பெரியபெருமாளே! உன்னுடைய தயை என்னும் குணம் அனைவரது துன்பங்களையும் நீக்கவல்லதாக உள்ளது – என்று பட்டர் அருளிச்செய்தார் அல்லவோ? (வாத்ஸல்யம் ஸதோஷர்க்கு) - வாத்ஸல்யம் என்பது “அன்று பிறந்த கன்றுக்குட்டியின் உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் தான் உண்ணும் பசு போன்று, அடியார்களுடைய குற்றங்களை இனிமையாகவே ஏற்றுக்கொள்ளுதல்” என்ற குணம் ஆகும். எனவே “அறியாமை, கர்மங்களால் சூழப்பட்டவன்” என்று தங்களை எண்ணிக் கொள்பவர்களுக்கு இந்தக் குணம் உதவுவதாக இருக்கிறது. (சீலம் மந்தர்க்கு) - சீலம் என்றால் உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தாழ்ந்தவர்களிடம் சரிசமமாகக் கலந்து பழகும் குணம் ஆகும். எனவே தங்களுடைய தாழ்வையே எண்ணியபடி உள்ளவர்களுக்கு இந்தக் குணம் உதவுகிறது. (ஆர்ஜவம் குடிலர்க்கு) - ஆர்ஜவம் என்றால் “மனம், சொல், செயல்” என்பதான மூன்று கரணங்களால் செய்யப்படும் அனைத்தும் ஒரே போன்று இருத்தல் ஆகும். எனவே தங்களுடைய இந்த மூன்றிலும் ஒரே போன்ற நிலையில் இல்லாமல் உள்ளோம் என்று எண்ணுபவர்களுக்கு உதவும் குணமாக இது உள்ளது. (ஸௌஹார்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு) ஸௌஹார்த்தம் என்றால் எப்போதும் நன்மையைச் சிந்தித்தபடி உள்ள இயல்பாகும். ஆகவே, எப்போதும் தீமையை மட்டுமே எண்ணியபடி இருந்து, துஷ்ட இதயம் கொண்டவராகத் தங்களை எண்ணுபவர்களுக்கு இந்தக் குணம் உதவுகிறது. (மார்தவம் விச்லேஷ பீருக்களுக்கு) - மார்தவம் என்றால், தன்னை அடைந்த அடியார்களுடைய பிரிவைப் பொறுக்க இயலாத மேன்மைக்குணம் ஆகும். ஆகவே ஸர்வேச்வரனாகிய தன்னைப் பிரிந்திருப்பது குறித்து அச்சம் அடைபவர்களுக்கு இந்தக் குணம் உதவுகிறது. (ஸௌலப்யம் காணவாசைப்பட்டவர் களுக்கு) - இந்த்ரியங்களுக்குப் புலப்படாத ஸர்வேச்வரனுடைய திருமேனியை இந்த்ரியங்களால் உணரும்படியாகச் செய்யவல்ல குணம் ஆகும். எனவே, தன்னைக் காணவேண்டும் என்று ஆசை கொள்பவர்களுக்கு உதவும் குணமாக இது உள்ளது. ஆகவே, தங்கள் தங்கள் நன்மை மற்றும் தீமை குறித்துச் சரிவர அறிய இயலாதவர்களுக்கு இவனுடைய ஞானம் என்ற குணத்தில் விருப்பம் உள்ளதால், ஞானமானது அறியாமை நிரம்பியவர்களுக்காக உள்ளது. தங்களுடைய விருப்பம் நிறைவேறுதல் மற்றும் விருப்பம் இன்மை விலகுதல் ஆகியவை குறித்து சக்தி இன்றி உள்ளவர்களுக்கு, இவனுடைய சக்தியில் விருப்பம் உள்ளதால், இத்தகைய சக்தி என்ற குணமானது, சக்தி அற்றவர்களுக்காக உள்ளது என்றாகிறது. குற்றம் நிறைந்தவர்களுக்கு, ஸர்வேச்வரனுடைய பொறுத்துக் கொள்ளும் தன்மையில் விருப்பம் உள்ளதால், க்ஷமை என்ற குணமானது, குற்றம் செய்தவர்களுக்காகவே உள்ளது. மிகுந்த துன்பத்தில் உள்ளவர்களுக்கு, அவன் இரக்கம் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் உள்ளதால், க்ருபையானது, துக்கம் கொண்டவர்களுக்காகவே உள்ளது. தோஷம் நிறைந்தவர்களுக்கு, அத்தகைய தோஷத்தையும் அவன் இனிமையாகக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் உள்ளதால், வாத்ஸல்யமானது, தோஷம் நிறைந்தவர்களுக்காக உள்ளது. அறிவில் தாழ்ந்தவர்களுக்கு, ஸர்வேச்வரன் தங்களுடைய தாழ்வை நோக்காமல் தங்களுடன் சரிசமமாகக் கலந்து பழகவேண்டும் என்ற விருப்பம் உள்ளதால், சீலமானது அறிவில் தாழ்ந்தவர்களுக்காக உள்ளது. மனம், சொல் மற்றும் செயல் ஆகிய மூன்றாலும் ஒரே போன்று, சிறந்தவனாகத் தன்னை அனைவரிடமும் பரிமாறுதல் என்பது, இத்தகைய சிறந்த தன்மை இல்லாதவர்களுக்காக உள்ளதால், ஆர்ஜவம் என்ற இந்தக் குணமானது, அத்தகைய தன்மை இல்லாதவர்களுக்காக உள்ளது. ஸர்வேச்வரனாகிய தான் எப்போதும் நன்மையை மட்டுமே எண்ணியபடி இருத்தல் என்பது, எப்போதும் அவரவர்கள் தங்களுக்குத் தீமையை மட்டுமே சிந்தித்தபடி உள்ள மனம் கொண்டவர்களுக்காக உள்ளதால், ஸௌஹார்த்தம் என்ற குணமானது, தீயமனம் கொண்டவர்களுக்காக உள்ளது. பிரிவைப் பொறுத்துக் கொள்ளாத மென்மை என்பது, எம்பெருமானை விட்டுப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம் கொள்பவர்களுக்காக உள்ளதால், மார்தவம் என்ற குணமானது, பிரிவில் அச்சம் கொள்பவர்களுக்காக உள்ளது. இந்த்ரியங்களால் அறிய இயலாத திருமேனியைக் கண்களால் காண இயலும்படிச் செய்தல் என்பது, அப்படிப்பட்ட திருமேனியைக் காணவேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்காக என்பதால், ஸௌலப்யம் என்று குணமானது, காண ஆசை கொண்டவர்களுக்காக உள்ளது. இபடியாக ஸர்வேச்வரனுடைய குணங்களின் தன்மையை அருளிச்செய்தார் என்றாகிறது. (இப்படி எங்கும் கண்டு கொள்வது) - இதுவரை கூறப்பட்ட விதத்தில், இதுவரை கூறப்படாத குணங்களுக்கு, அவற்றுக்கான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதாகிறது.