Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 148)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
இவனுடைய ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணங்கள் நித்யங்களாய், நிஸ்ஸீமங்களாய், நிஸ்ஸங்க்யங்களாய், நிருபாதிகங்களாய், நிர்த்தோஷங்களாய், ஸமாநாதிக ரஹிதங்களாயிருக்கும்.
இப்படி, ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுபபாதித்த வநந்தரம், ஸ்வரூபாச்ரிதமான குணங்களினுடைய வைலக்ஷண்யத்தை யருளிச்செய்கிறார் “இவனுடைய ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணங்கள்” என்று தொடங்கி.
இப்படியாக ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப மேன்மையை விரிவாக அருளிச்செய்த பின்னர், அத்தகைய ஸ்வரூபத்தை அண்டி நிற்கும் குணங்களுடைய மேன்மையை அருளிச்செய்கிறார்.
– ஆதிசப்தத்தாலே, பல ஐச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்களும், வாத்ஸல்யாதிகளும், சௌர்யாதிகளுமாகிற குணவிசேஷங்களெல்லாவற்றையும் சொல்லுகிறது. (நித்யங்களாகையாவது) உத்பத்தி விநாச ரஹிதங்களாயிருக்கை. ஸ்வரூபாநுபந்திகளாகையாலே, யாவதாச்ரய பாவிகளாயிருக்குமிறே. “த இமே ஸத்யா: காமா:” என்று குணங்களினுடைய நித்யத்வம் ச்ருதிஸித்தம். “காம்யந்த இதி காமா: கல்யாணகுணா: த இமே ஸத்யா: நித்யா இத்யர்த்த:” என்றிறே இந்த ச்ருதிக்கர்த்தம். “ஈறில வண்புகழ்” என்றாரிறே ஆழ்வார். (நிஸ்ஸீமங்களாகையாவது) ஓரொன்றே அவதி காணவொண்ணா திருக்கை. “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்று, மீண்டுவிட்டதிறே ஆநந்தகுணத்தையெல்லை காணப்புக்க வேதம். இது, ஆநந்தகுண மொன்றிலுமன்றிறே; குணங்களெல்லாம் இப்படியேயிறே இருப்பது. “உபர்யுபர்யப்ஜபுவோபி பூருஷாந் ப்ரகல்ப்ய தே யே சதமித்யநுக்ரமாத், கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா ஸதா ஸ்த்திதா நோத்யமதோதிசேரதே” என்னக்கடவதிறே. “உயர் நலம்” என்றிறே ஆழ்வாரும் அருளிச்செய்தது. (நிஸ்ஸங்க்யங்களாகையாவது) இப்படிப்பட்ட குணங்கள்தான் எண்ணிறந்திருக்கை. “யதா ரத்நாநி ஜலதேர ஸங்க்யேயாநி புத்ரக, ததா குணா ஹ்யநந்தஸய அஸங்க்யேயா மஹாத்மந:”, “வர்ஷாயுதைர் யஸ்ய குணா நசக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வலோகை: மஹாத்மநச் சங்கசக்ராஸிபாணே: விஷ்ணோ ஜிஷ்ணோ வஸுதேவாத்மஜஸ்ய”, “சதுர்முகாயுர்யதி கோபிவக்தா பவேந் நர: க்வாபி விசுத்தசேதா: ஸதே குணா நாமயுதைகமம்சம் வதேந் ந வா தேவவர ப்ரஸீத”, “நஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநிகணைரபி, வக்தும் சக்யா வியுக்தஸ்ய ஸத்வாத்யைரகிலைர் குணை:” என்னக் கடவதிறே. “எண்ணில் தொல்புகழ்” என்றாரிறே ஆழ்வாரும். “யேஷ்வே கஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாச்ரயம் குர்யாத் தாத்ருச வைபவைரகணிதைர் நிஸ்ஸீம பூமாந்விதை: நித்யைர் திவ்யகுணைஸ் ததோதிக சுபத்வை காஸ்பத ஆத்மாச்ரயை: இத்தம் ஸுந்தரபாஹும் அஸ்மி சரணம் யாதோ வநாதரீச்வரம்” என்கிற ச்லோகத்திலே குணங்களினுடைய நித்ய நிஸ்ஸீம நிஸ்ஸங்க்யத்வங்களை யருளிச் செய்தாரிறே ஆழ்வான். – (நிருபாதிகங்களாகையாவது) பரதந்த்ர வஸ்து கதங்களாகையாலே, ஸ்வோதயாதிகளிலே ஈச்வர இச்சையாகிற உபாதியையபேக்ஷித்திருக்கும் சேதந குணங்கள் போலன்றிக்கே, ஸ்வாபாவிகங்களாயிருக்கை. ஸ்ரீபாஷ்யத்தில், “ஸ்வபாவதோ நிரஸ்த நிகிலதோஷாநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாணகுணகண புருஷோத்தமோபி கீயதே” என்கிறவிடத்துக்கு வ்யாக்க்யாநம் பண்ணுகிற ச்ருதப்ரகாசிகாகாரர், அநவதிகாதிசய பதத்தாலே நித்யஸித்தரை வ்யாவர்த்திக்கிறதென்று முந்துறவொரு யோஜநை பண்ணி, “அநுஷக்தேந ஸ்வபாவத இதி பதேநவா நித்யஸித்த்வ்யாவ்ருத்தி: தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவந் நித்யேச்சாதீநம்” எனறு அநந்தர யோஜநையிலே யிவ்வர்த்தத்தை யருளிச் செய்தாரிறே. “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியாச” என்று குணங்களினுடைய ஸ்வாபாவிகத்வத்தை ச்ருதி சொல்லா நின்றதிறே. இந்த ச்ருதியில் க்ரியையென்கிறது நியமநத்தை. “பராஸ்யேதி ஜ்ஞாந சக்த்யாதீநாம் ஸ்வாபாவிகத்வ முக்தம், க்ரியா நியமநம்” என்றே இதுக்கும் ச்ருதப்ரகாசிகாகாரர் வ்யாக்க்யாநம் பண்ணிற்று. – நிர்தோஷங்களாகையாவது, ஹேய குண ஸமஸர்கமாகிற தோஷமின்றிக்கேயிருக்கை. “அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யும் விசோக: விஜிகத்ஸ: அபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப:”, “ஸத்வாதயோ ந ஸந்தீசே யத்ர ச ப்ராக்ருதா குணா:”, “ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்யசேஷத | பகவச் சப்தவாச்யாநி விநா ஹேயை: குணாதிபி:”, “தேஜோ பலைச்வர்யமஹாவபோதஸு வீர்ய சக்த்யாதி குணைகராசி | பர: பராணாம் ஸகலா நயத்ர க்லேசாதயஸ்ஸந்தி பராவரேசே” என்கிறபடியே, ஆச்ரயம் ஹேயப்ரத்யநீகமாகையாலே, இவற்றுக்கு ஹேய குண ஸம்ஸர்க தோஷாபததிக்கு யோக்யதையில்லையிறே. – ஸமாநாதிக ரஹிதங்களாகையாவது, சேதநாந்தர குணங்களை ஸமமாகவும், ஈச்வர குணங்களை அதிகமாகவுமுடைத்தாயிருக்கும் சேதந குணங்கள் போலன்றிக்கே, தனக்கொத்ததும் மிக்கதுமின்றிக்கேயிருக்கை. “ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்கிற ஸமாதிகதரித்ர வஸதுவை ஆச்ரயமாகவுடையவையாகையாலே, இவையும் ஸமாநாதிக ரஹிதங்களாயிருக்குமிறே. “தோஷ உபதா அவதி ஸம அதிசயாந ஸங்க்யா நிர்லேப மங்கலகுண ஓக துகா: ஷட் ஏதா: ஜ்ஞான ஐச்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ த்வாம் ரங்கேச பாஸ: இவ ரத்நம் அநர்க்கயந்தி” என்கிற ச்லோகத்திலே இவையித்தனையும் பட்டரருளிச்செய்தாரிறே.
“சக்த்யாதி” என்பதில் உள்ள “ஆதி” என்பதன் மூலம் பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் போன்றவையும், வாத்ஸல்யம் போன்றவையும், சௌர்யம் போன்றவையும் என பல குணங்களுடைய சிறப்புகள் அனைத்தும் கூறப்பட்டன. (நித்யங்களாய்) – நித்யங்கள் என்றால், உற்பத்தி மற்றும் அழிவு அற்ற தன்மை. இத்தகைய குணங்கள் அனைத்தும் அவனுடைய ஸ்வரூபத்தை அண்டியபடி உள்ளதால், எப்போதும் உள்ளவை என்றாகின்றன. சாந்தோக்ய உபநிஷத் - த இமே ஸத்யா: காமா: - அவை ஸத்யமாகவும், எப்போதும் விரும்பப்படுபவையாகவும் உள்ளவை ஆகும் – என்பதாக, ச்ருதிகளில் குணங்களுடைய நித்யமான தன்மை கூறப்பட்டது. “காம்யந்த இதி காமா: கல்யாணகுணா: த இமே ஸத்யா: நித்யா இத்யர்த்த: - விரும்பப்படுவதால் காமம் என்று அந்தக் குணங்கள் கூறப்பட்டன. அவை ஸத்யம் என்பதன் மூலம், எப்போதும் உள்ளவை என்று கூறப்பட்டது – என்பதாகவே இந்த ச்ருதிக்குப் பொருள் கொள்ளவேண்டும். திருவாய்மொழி (1-2-10) – ஈறில வண்புகழ் - என்று ஆழ்வார் அருளிச்செய்தார். (நிஸ்ஸீமங்களாய்) - அந்த ஒவ்வொரு குணமும் எல்லையற்றதாகவே உள்ளது. தை. (2-8) – யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ – அவனுடைய ஆனந்தத்தை அளவிட இயலாதபடி வாக்கும் மனமும் திரும்பின – என்பதாக அவை திரும்பின அல்லவோ? ஆனந்த குணத்தின் எல்லை காணச் சென்ற வேதத்தின் நிலை இதுவாகும். ஆனால் இத்தகைய நிலையானது, ஆனந்த குணம் ஒன்றில் மட்டுமே அல்ல; அனைத்து குணங்களும் இவ்விதமாகவே உள்ளன. ஸ்தோத்ரரத்னம் (19) – உபரி உபரி அப்ஜபுவி: அபி பூருஷாந் ப்ரகல்ப்ய தே யே சதம் இதி அநுக்ரமாத் கிரஸ் த்வத் ஏகைக குண அவதி ஈப்ஸயா ஸதா ஸ்த்திதா: ந உந்யமத: அதிசேரதே – வேத வாக்கியங்கள் மேலும் மேலும் நான்முகன் போன்றவர்களை மனிதர்களாகக் கற்பனை செய்து, “இதை விட நூறு மடங்கு, இதை விட நூறு மடங்கு” என்று அடுக்கிக் கொண்டே செல்கின்றன; அவை உனது ஒவ்வொரு குணத்தின் எல்லையைக் காண்வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளன. எனவே அவை தொடக்க எல்லையைக் கடந்து அப்பால் செல்வதில்லை - என்பது காண்க. திருவாய்மொழி (1-1-1) – உயர் நலம் - என்பதாக ஆழ்வார் அருளிச்செய்தார். (நிஸ்ஸங்க்யங்களாய்) - இப்படிப்பட்ட குணங்கள், எண்ணற்றவையாக உள்ளன. யதா ரத்நாநி ஜலதேர ஸங்க்யேயாநி புத்ரக, ததா குணா ஹ்யநந்தஸய அஸங்க்யேயா மஹாத்மந: – ஸமுத்ரத்தில் உள்ள இரத்தினங்களுடைய எண்ணிக்கை எவ்விதம் எண்ண இயலாதபடி உள்ளனவோ அதே போன்று மஹாத்மாவாகிய அவனுடைய குணங்களும் எண்ணற்றவையாக உள்ளன – என்றும், மஹாபாரதம் - வர்ஷாயுதைர் யஸ்ய குணா நசக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வலோகை: மஹாத்மநச் சங்கசக்ராஸிபாணே: விஷ்ணோ ஜிஷ்ணோ வஸுதேவாத்மஜஸ்ய - பரமாத்மாவும், சங்கு சக்கரம் வாள் போன்றவற்றைத் தனது திருக்கரங்களில் கொண்டவனும், வெற்றி நிறைந்தவனும், வஸுதேவருடைய புத்ரனும், எங்கும் நிறைந்துள்ளவனும் ஆகிய விஷ்ணுவின் கல்யாணகுணங்களை, அனைத்து லோகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து நின்று துதித்தாலும், பதினாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் துதிப்பதற்கு இயலாது - என்றும், வராஹபுராணம் - சதுர்முகாயுர்யதி கோபிவக்தா பவேந் நர: க்வாபி விசுத்தசேதா: ஸதே குணா நாமயுதைகமம்சம் வதேந் ந வா தேவவர ப்ரஸீத - நான்முகனுடைய ஆயுள் கொண்டவனும், கோடிக்கணக்கான நாக்குகள் கொண்டவனும், மிகுந்த தூய்மையாக உள்ளவனும் ஆகிய ஒருவன், உமது குணங்களில் பதினாயிரத்தில் ஒரு பகுதியையாவது கூறி முடிப்பானோ என்று அறியமாட்டான் – என்றும், நஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநிகணைரபி, வக்தும் சக்யா வியுக்தஸ்ய ஸத்வாத்யைரகிலைர் குணை: - அனைத்து குணங்களால் நிறைந்து விளங்கும் பரமாத்மாவின் அனைத்து குணங்களையும் முனிவர்கள் கூட்டத்தாலும் முழுமையாகக் கூற இயலாது - என்றும் கூறப்பட்டது அலல்வோ? திருவாய்மொழி (3-3-5) – எண்ணில் தொல்புகழ் – என்று ஆழ்வார் அருளிச்செய்தார். ஸ்வாமி கூரத்தாழ்வன் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் (26) - யேஷ்வே கஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாச்ரயம் குர்யாத் தாத்ருச வைபவைரகணிதைர் நிஸ்ஸீம பூமாந்விதை: நித்யைர் திவ்யகுணைஸ் ததோதிக சுபத்வை காஸ்பத ஆத்மாச்ரயை: இத்தம் ஸுந்தரபாஹும் அஸ்மி சரணம் யாதோ வநாதரீச்வரம் – ஸர்வேச்வரனுடைய குணங்களில் ஒவ்வொரு குணத்தின் ஒரு சிறிய பாகம் கூட, வாக்கால் முழுமையாக உரைக்க இயலாதபடி உள்ளதாகும்; அந்தக் குணங்கள் தங்களுடைய பகுதியின் ஒரு சிறிய அளவில் மட்டுமே அவனுடன் ஸம்பந்தம் கொண்டதாக இருந்தாலும், தங்களுடைய இருப்பிடமான அவனை வெளிப்படுத்தவல்ல திறன் கொண்டதாகவே உள்ளன; இப்படிப்பட்ட குணங்கள் எண்ணற்றவை ஆகும்; அவை நித்யமாகவும் உள்ளன; இப்படிப்பட்டவனும், திருமாலிருஞ்சோலையில் அழகான திருத்தோள்கள் கொண்டவனும் ஆகிய கள்ளழகரை நான் சரணம் அழைகிறேன் - என்றார்; இந்த ச்லோகத்தில் அவனுடைய குணங்களின் நித்யமாக உள்ள தன்மை, எல்லையற்ற தன்மை மற்றும் எண்ணற்ற தன்மை ஆகிய பலவற்றையும் அருளிச்செய்தார். (நிருபாதிகங்களாய்) – ஸர்வேச்வரனுக்கு பரவசப்பட்ட வஸ்துக்கள் என்பதால், நம்முடைய பிறப்பு இருப்பு போன்றவற்றில் நாம் ஸர்வேச்வரனுடைய இச்சையை எப்போதும் எதிர்பார்த்தபடி உள்ளோம். இப்படிப்பட்ட சேதந குணங்கள் போன்று அல்லாமல், இந்தக் குணங்கள் இவனிடம் இயல்பாகவே உள்ளவை ஆகும். ஸ்ரீபாஷ்யத்தில் உள்ள, “ஸ்வபாவதோ நிரஸ்த நிகிலதோஷ: அநவதிகாதிசய அஸங்க்யேய கல்யாணகுணகண: புருஷோத்தம: அபி கீயதே – இயல்பாகவே தோஷங்கள் ஏதும் அற்றவனும், அளவிட இயலாத உயர்ந்த எண்ணற்ற இனிமையான மங்களகரமான குணங்களைக் கூட்டமாக உடையவனும் ஆகிய புருஷோத்தமனே ப்ரஹ்மம் என்ற பதத்தால் கூறப்படுகிறான்”, என்ற இடத்திற்கு பாஷ்யம் இட்ட ச்ருதிப்ரகாசிகாசார்யர், ‘அநவதிக அதிசய - எல்லையற்ற வியப்பு” என்பதன் மூலம், நித்யஸூரிகள் வேறுபடுத்தப்படுகின்றனர் என்று முதலில் உரைத்து, பின்னர் ச்ருதப்ரகாசிகையில் “அநுஷக்தேந ஸ்வபாவத இதி பதேநவா நித்யஸித்த்வ்யாவ்ருத்தி: தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவந் நித்யேச்சாதீநம் - பின்னர் இணைக்கப்பட்ட ஸ்வபாவத என்ற பதம் மூலம் நித்யஸூரிகள் வேறுபடுத்தப்பட்டு கூறப்படுகின்றனர்; அவர்களுக்கு அத்தகைய குணங்கள் உள்ளதற்கு பகவானுடைய விருப்பமே காரணமாக உள்ளது” என்று வேறு ஒரு விதத்தில் இத்தகைய வேறுபாட்டை விளக்கினார். ச்வேதாஸ்வதரத்தில் – ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச - ப்ரஹ்மத்திற்கு ஞானம், பலம் மற்றும் செய்கை ஆகியவை இயல்பாகவே உள்ளது – எனப்பட்டது; இந்த ச்ருதியில் உள்ள “க்ரியா” என்பது செய்தலைக் குறிக்கும் - என்றது காண்க. இதனையும் ச்ருதிப்ப்ரகாசிகையில், “பராஸ்யேதி ஜ்ஞாந சக்த்யாதீநாம் ஸ்வாபாவிகத்வ முக்தம், க்ரியா நியமநம் – ஞானம், சக்தி போன்ற பலவும் இயல்பாகவே உள்ளது; க்ரியை என்பது நியமித்தல்” என்பதாக ச்ருதிப்ரகாசிகாகாரர் வ்யாக்யானம் செய்தருளினார். (நிர்தோஷங்களாய்) - தாழ்ந்த குணங்களுடைய சேர்க்கை என்பதான குற்றம் இன்றி இருத்தல். சாந். (8-1-5) – அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யும் விசோக: விஜிகத்ஸ: அபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: - பாபங்கள் அற்றவன், வயோதிகம் அற்றவன், மரணம் அற்றவன், சோகம் அற்றவன், பசி மற்றும் தாகம் அற்றவன், விருப்பங்களை அடையப்பெற்றவன், ஸத்யஸங்கல்பன் – என்றும், ஸத்வாதயோ ந ஸந்தீசே யத்ர ச ப்ராக்ருதா குணா: - அனைவரையும் நியமிக்கின்ற பகவானிடம், ஸத்வம் போன்ற ப்ரக்ருதி குணங்கள் இல்லை - என்றும், ஸ்ரீவிபு. (6-5-79) - ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்யசேஷத | பகவச் சப்தவாச்யாநி விநா ஹேயை: குணாதிபி: - ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் போன்ற குணங்கள் அனைத்தும் பகவான் என்ற சொல்லால் கூறப்படுகிறது; இதில் தாழ்ந்தது ஏதும் இல்லை – என்றும், ஸ்ரீவிபு. (6-5-85) - தேஜோ பலைச்வர்யமஹாவபோதஸு வீர்ய சக்த்யாதி குணைகராசி | பர: பராணாம் ஸகலா நயத்ர க்லேசாதயஸ்ஸந்தி பராவரேசே - தேஜஸ், பலம், ஐச்வர்யம், ஞானம், வீர்யம், சக்தி என்பதான அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமாகவும், நான்முகன் போன்ற அனைவரையும் விட உயர்ந்தவனாகவும் உள்ள அவனிடம், துன்பம் போன்ற எந்தத் தாழ்வும் இல்லை - என்றும் கூறப்பட்டதற்கு ஏற்ப, “ஆச்ரயம்” என்பது தாழ்வுக்கு எதிர்தட்டாகவும் உள்ளதால், இந்தக் குணங்களுக்கு எந்தவிதமான தாழ்வுடனும் ஸம்பந்தம் என்பது இல்லை. (ஸமாநாதிக ரஹிதங்களாயிருக்கும்) – மற்ற சேதநர்களுடைய அனைத்து குணங்களும் சமமாகவும், ஈச்வரனுடைய குணங்கள் அதிகமாகவும் உள்ளது போன்ற சேதநர்களுடைய குணங்கள் போன்று அல்லாமல், தனக்கு நிகரானதும் அதிகமானதும் என ஏதும் இல்லாமல் உள்ள நிலை. ச்வேதாஸ்வதரத்தில் - ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே - அவனுக்குச் சமமாகவும் அதிகமாகவும் ஏதும் காணப்படவில்லை – என்பதான நிகரும் அதிகமாகவும் உள்ள வஸ்துவை இருப்பிடமாகக் கொண்டதால், இந்த குணங்களும் தங்களுக்கு நிகரானவையும் அதிகமானதும் ஏதும் இல்லாதவையாக உள்ளன. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ( 2-27) - தோஷ உபதா அவதி ஸம அதிசயாந ஸங்க்யா நிர்லேப மங்கலகுண ஓக துகா: ஷட் ஏதா: ஜ்ஞான ஐச்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ த்வாம் ரங்கேச பாஸ: இவ ரத்நம் அநர்க்கயந்தி - திருவரங்கனே! உன்னுடைய குணங்களான ஞானம், ஐச்வர்யம், சக்தி, வீர்யம், பலம் மற்றும் தேஜஸ் ஆகியவை செய்வது என்னவென்றால் – குற்றம் அற்றவையும், குறைபாடுகள் அற்றவையும், எல்லை இல்லாதவையும், ஒப்பு இல்லாதவையும், இதனைவிட உயர்ந்தது வேறு இல்லாதவையும், எண்ணிக்கை அற்றவையும் ஆகிய எண்ணற்ற பல திருக்கல்யாண குணங்களின் கூட்டத்தை எப்போதும் சுரந்தபடி உள்ளன. ஒரு இரத்தினக் கல்லை அதன் ஒளியானது எவ்விதம் அனைவருக்கும் காட்டித் தந்து, அதனை மேன்மை அடையச் செய்யுமோ அது போன்று இந்தக் குணங்கள் உன்னை அனைவருக்கும் காட்டித் தருகின்றன - என்பதாக உள்ள ச்லோகத்தில் இவை அனைத்தையும் ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்தார் அல்லவோ?