Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 146)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாகையாவது, ஆநந்தரூப ஜ்ஞாநனாயிருக்கை.

அநந்தரம், ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபத்வத்தை உபபாதிக்கிறார் “ஜ்ஞாநாநந்த” இத்யாதியாலே.

அடுத்து, ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை ஸ்வரூபமாகக் கொண்ட தன்மையைஅருளிச்செய்கிறார்.

ஜ்ஞாநாநந்தங்களையே ஸ்வரூபமாகவுடையனாயிருக்கை என்று, சப்தத்துக்கு அர்த்தம் சொல்லவேண்டியிருக்க, ஜ்ஞாநமென்றும் ஆநந்தமென்றும் பிரித்துச் சொல்ல, இரண்டவஸ்த்தையின்றிக்கே ஜ்ஞாநமே ஸ்வரூபமாய், அதுதான் அநுகூலமா யிருக்கை ஆனந்தமாகையாலே, ஆநந்தரூப ஜ்ஞாநனாயிருக்கை என்றருளிச் செய்கிறார். “அநுகூல ஜ்ஞாநமே ஸ்வரூபமாயிருக்க ஜ்ஞாநாநந்தங்களென்று பிரித்துச் சொல்லுகிறது, இரண்டுமுண்டாகைக்காக”, என்றிறே இவர்தாமிட்டருளின கத்யவ்யாக்க்யாநத்திலே யருளிச்செய்தது.

ஞான ஆனந்தங்களையே தனது ஸ்வரூபமாக்கிக் கொண்டவன் என்பதாக இதனை ஒரு சொல்லாகவே கொண்டு பொருள் உரைக்கவேண்டும்; அதாவது “ஞானம் மற்றும் ஆனந்தம்” என்று இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டிய நிலை இன்றி, ஞானமே ஸ்வரூபமாக, அத்தகைய ஞானமானது ஏற்புடையதாக உள்ளதால் ஆனந்தமாகவும் உள்ளதால், “ஆனந்தரூப ஞானம் கொண்டவனாக உள்ளான்” என்று அருளிச்செய்கிறார். இவர் கத்ய வ்யாக்யானத்தில், “அநுகூல ஜ்ஞாநமே ஸ்வரூபமாயிருக்க ஜ்ஞாநாநந்தங்களென்று பிரித்துச் சொல்லுகிறது, இரண்டும் உண்டாகைக்காக - அநுகூலஞானம் என்பதே ஸ்வரூபமாக உள்ளது; ஆயினும் ஞானம் மற்றும் ஆனந்தம் என்று ஏன் பிரித்துக் கூறப்பட்டது என்றால், இரண்டும் உள்ளது என்று உணர்த்தவே ஆகும்”, என்று அருளிச்செய்தது காணலாம்.