Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 145)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

சரீரகதங்களான பால்யாதிகள் ஜீவாத்மாவுக்கு வாராதாப்போலே, த்ரிவித சேதநாசேதந தோஷமும் ஈச்வரனுக்கு வாராது.

அத்தைப் பரிஹரிக்கிறார் “சரீரகதங்களான” என்று தொடங்கி.

அந்தச் சந்தேகத்தை விலக்குகிறார்.

– அதாவது, இந்த சரீரத்தை அதிஷ்ட்டித்து ஸ்வாதீநமாக நிர்வஹித்துக் கொண்டிரா நிற்கச் செய்தேயும, தத்கதமான பால்ய யௌவநாதி விகாரங்கள் ததந்தர் வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே, த்ரிவித சேதநாசேதநங்களுக்கும் அந்தர்யாமியாய், இவற்றை சரீரமாகக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும், தத்கத தோஷம் ஈச்வரனுக்கு வாராது என்கை. “ஆவி சேருயிரினுள்ளாலாதுமோர் பற்றிலாத பாவனையதனைக் கூடிலவனையுங் கூடலாமே” என்றிறே ஆழ்வாருமருளிச்செய்தது. சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீரகதங்களான பால்யாதிகள் வந்ததில்லையேயாகிலும், சரீர ஸம்பந்த நிபந்தநமாக துக்க அஜ்ஞாநாதிகள் வருகிறவோபாதி, சரீர பூதமான விவற்றோட்டை ஸம்பநதத்தாலே இவனுக்குமிங்ஙனே சில தோஷங்கள் வாராதோ? என்னில்; வாராது, அதுக்கடி ப்ரவேச ஹேது விசேஷம்; இவனைப் போலே கர்மமடியாகவன்றிக்கே, அநுக்ரஹமடியாகவிறே அவனுக்கு இவற்றில் ப்ரவேசமிருப்பது. “அநச்நந்நந்ய:”, “ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹதபாப்மா”, “விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே” என்னா நின்றதிறே.

ஒரு ஜீவாத்மா இந்த உடலைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு தனது உடைமையாக வைத்து நியமித்தபடி உள்ளான். ஆயினும் சரீரத்திற்கு ஏற்படுகின்ற குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் போன்ற பலவிதமான மாற்றங்கள், அதன் உள்ளே இருக்கின்ற ஜீவாத்மாவிற்கு ஏற்படுவதில்லை. இதனைப் போன்றே, மூன்றுவிதமான சேதந அசேதங்களுக்கு அந்தர்யாமியாக ஸர்வேச்ரன் உள்ளபோதிலும், அவற்றைத் தனது சரீரமாகக் கொண்டுள்ளபோதிலும், அந்தந்த வஸ்துக்களுடைய தோஷங்கள், அவனைப் பற்றாது என்று கருத்து. திருவாய்மொழி (3-4-10) – ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையுங் கூடலாமே - என்று அல்லவோ ஆழ்வார் அருளிச்செய்தார்? “சரீரத்தைக் கொண்டவனாகிய ஜீவாத்மாவிற்கு, அந்தச் சரீரத்தில் ஏற்படுகின்ற குழந்தைப்பருவம் போன்ற மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை; ஆயினும், சரீரத்தின் ஸம்பந்தம் காரணமாக, துக்கம் மற்றும் அஜ்ஞானம் போன்றவை ஏற்படுகின்றன; இதே போன்று தனது சரீரங்களான இவற்றுடன் கொண்ட ஸம்பந்தம் காரணமாக, இத்தகைய தோஷங்கள் ஸர்வேச்வரனுக்கு ஏற்படாதோ?”, என்று கேட்கலாம்; இதற்கு விடை அளிக்கிறார். உண்டாகாது; இதன் காரணம், அந்தந்த சரீரங்களில் இவன் புகுந்து நிற்பதன் காரணத்தில் உள்ள சிறப்பே ஆகும். ஜீவாத்மாவைப் போன்று கர்மம் காரணமாக இவன் இவற்றில் புகுந்து நிற்பதில்லை. தனது கருனை காரணமாகவே இவன் இவ்விதம் உள்ளான். ச்வே. (4-6) - அநச்நந்நந்யோ - பிரிக்க முடியாத இரண்டு பறவைகள் - என்றும், ஸுபால. (7-1) - ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபஹதபாப்மா -அவன் அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்; பாபங்கள் ஏதும் அற்றவனான் - என்றும், ஸ்ரீவிபு. (1-2-1) – விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே - அனைவரையும் வெல்பவன் விஷ்ணு - என்றும் கூறியது காண்க.