Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 143)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அநந்தனாகையாவது நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாயிருக்கை.

– அநந்தரம், அநந்தத்வத்தை யுபபாதிக்கிறார் (அநந்தனாகையாவது) என்று தொடங்கி.

அடுத்ததாக, எல்லையற்ற அல்லது அளவிட இயலாத தன்மையை விளக்குகிறர்.

அநந்தத்வமாவது தேசத: காலதோ வஸ்துதச்ச அபரிச்சேத்யத்வம்; விபுத்வாத் தேச பரிச்சேத ராஹித்யம்; நித்யத்வாத் கால பரிச்சேத ராஹித்யம், ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களுக்கும ப்ரகாரியாயிருக்கையாலும், தனக்கு ப்ரகார்யந் தரமில்லாதபடி நிற்கையாலும், ஸத்ருச வஸ்து அபாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்; அத்தை அருளிச்செய்கிறார் “நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாயிருக்கை” என்று. இத்தால், நித்யனாகையாலே “இன்ன காலத்திலுள்ளான், காலந்தரத்தில் இல்லை”யென்கிற கால பரிச்சேதமின்றியிலே; ஸகல சேதநாசேதநங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு விபுவாயிருக்கையாலே, “இன்ன தேசத்திலுள்ளான், தேசாந்தரத்திலில்லை”யென்கிற தேச பரிச்சேதமின்றியிலே; ஸர்வாந்தர்யாமியாகையாலே ஸர்வத்துக்கும் தான் ப்ரகாரியாய், தனக்கு ப்ரகார்யந்தரமில்லாதபடியிருக்கையாலே, இன்ன வஸ்து போலேயென்கிற வஸ்து பரிச்சேதமுமின்றியிலே யிருக்கையென்றதாயிற்று. “நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்”, “அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா”, “யஸ்யாத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம்”, “ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்னக்கடவதிறே.

“அநந்தமாக உள்ள தன்மை” என்பதால் “இடம், காலம் மற்றும் பொருள்” ஆகியவற்றால் அளவுபடுத்தப்படாமல் உள்ள நிலை கூறப்பட்டது. “எங்கும் உள்ள தன்மை” என்பதன் மூலம், இடம் என்பதால் அளவுபடுத்தப்படாமலும்; “எப்போதும் உள்ள தன்மை” என்பதன் மூலம், காலத்தால் அளவுபடுத்தப்படாமலும்; தன்னைத் தவிர உள்ள மற்ற அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளதாலும், தனக்கு ஓர் ஆத்மா என மற்றொரு வஸ்து இல்லாததாலும், தனக்கு நிகரான வஸ்து இன்றி உள்ளதாலும், வஸ்துவைக் கொண்டு அளவுபடுத்தப்படாமலும் உள்ள தன்மைகள் வெளிப்படுகின்றன. இதனையே “நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாயிருக்கை” என்று அருளிச்செய்கிறார். நித்யமாக உள்ளதால், “இன்ன காலத்தில் உள்ளான், வேறு ஒரு காலத்தில் இல்லை” என்பதான காலத்தால் அளவுபடுதல் இல்லை என்றாயிற்று. அனைத்து சேதந அதேநங்களிலும் இவன் நிறைந்துள்ளதால், “எங்கும் உள்ளவன்” என்ற நிலை காரன்ணமாக, “இன்ன இடத்தில் உள்ளான், வேறு ஓர் இடத்தில் இல்லை” என்பதான இடத்தால் அளவுபடுதல் இல்லை என்றாயிற்று. அனைத்திற்கும் அந்தர்யாமியாக உள்ளதால், அனைத்திற்கும் தான் ஆத்மாவாகவும், தனக்கென்று எந்த ஒரு நியமிப்பவனும் இல்லை என்பவனாகவும் உள்ளதால் “இன்ன பொருள் போன்று உள்ளான்” என்பதான பொருள் மூலம் அளவுபடுதல் இல்லை என்றாயிற்று. முண். (1-1-6) – நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம் - நித்யமாகவும், எங்கும் உள்ளவனாகவும், எப்போதும் உள்ளவனாகவும் – என்றும், தை. ஆர. (3-11) - அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம் – அனைவருக்கும் உள்ளே புகுந்து, அனைத்தையும் நியமித்தபடி – என்றும், ப்ரு. (3-7-22) - யஸ்யாத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம் – யாருக்கு இந்த ஆத்மா சரீரமோ, யாருக்கு இந்த ப்ருதிவீ சரீரமோ – என்றும், ச்வே. (6-8) - ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே - அவனுக்குச் சமமாகவோ விஞ்சியதாகவோ எதுவும் காணப்படவில்லை – என்றும் கூறப்பட்டது.