Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 142)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
அகில ஹேய ப்ரத்யநீகனாகையாவது, தமஸ்ஸுக்குத் தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும், விகாராதி தோஷங்களுக்கு ப்ரதிபடனாயிருக்கை.
– ஹேயமாவது தோஷம். அகிலஹேயமென்கையாலே, த்ரிவித சேதநா சேதந தோஷங்களையும் சொல்லுகிறது. “த்ரிவித சேதநாசேதந தோஷமும் ஈச்வரனுக்கு வாராது” என்று இது தன்னை வ்யக்தமாக மேலே யருளிச்செய்கிறாரிறே. (தமஸ்ஸுக்கு தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும்) என்றது, தமஸ்ஸுக்கு தேஜஸ்ஸு ப்ரதிபடமாயிருக்குமாபோலேயும், ஸர்ப்பத்துக்கு கருடன் ப்ரதிபடனாயிருக்குமா போலேயும் என்கை. (விகாராதி தோஷங்கள்) என்கிறவிடத்தில் விகார சப்தத்தாலே, த்ரிவித அசித்தினுடையவும் பரிணாமத்தைச் சொல்லுகிறது. ஆதி சப்தத்தாலே பத்த சேதநருடைய அஜ்ஞா துக்கங்களையும், முக்தருடைய சேறு தோய்த்துக் கழுவினாரைப்போலே ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் விடுபட்டவாகாரத்தையும், நித்யருடைய பரிச்சிந்ந ஸ்வரூபத்வ பாரதந்த்ரியங்களையும் சொல்லுகிறது. பாரதந்த்ர்யம் தோஷமோ? என்னில், புருஷனுக்கு ஸ்தநோத்பேதம்போலே, ஸ்வதந்த்ரனுக்கு தோஷமென்கை. இத்தோஷங்களுக்கு ப்ரதிபடமாயிருக்கையாவது, தான் மாறாயிருக்கை. ப்ரதிபடமென்கையாலே “ஆத்மா ஜ்ஞாநமயோமல:” என்கிறபடியே ஸ்வரூப நிபந்தநமாக மல ஸம்பந்தமில்லையேயாகிலும், உபாதி நிபந்தநமான மல ஸம்பந்தத்துக்கு யோக்யமான ஆத்மஸ்வரூபத்திற்காட்டில் பகவத்ஸ்வரூபத்துக்கு வாசி தோற்றுகிறது. “தத் ப்ரஹ்ம பரமம் நித்யமஜமக்ஷயமவ்யயம் ஏக ஸ்வரூபந்து ஸதா ஹேயாபாவாச்ச நிர்மலம்”, “ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்க்யம் பரமம் பதம்”, “அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மநே” என்னக்கடவதிறே. – “ஹேய ப்ரத்யநீகத்வமாவது, ஆச்ரிதருடைய ஹேய நிராஸகத்வத்துக்கு அடியான ஹேய ப்ரதிபடத்வமென்னவுமாம்” என்னுமொரு யோஜனையுமுண்டிறே. கத்ய வ்யாக்க்யாநங்களிலே நஞ்சீயர், ஆச்சான்பிள்ளை முதலான ஆசார்யர்களருளிச் செய்தது. (ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும்) என்கிற த்ருஷடாந்தத்தாலே, அதுவும் இவ்விடத்துக்கு அர்த்தமானாலோ? என்னில், “விகாராதி தோஷங்களுக்கு ப்ரதிபடமாயிருக்கை” என்கையாலே, இவ்விடத்தில் இவர்க்கது விவக்ஷிதமன்று.
ஹேயம் என்றால் தோஷம் அல்லது தாழ்வுகள் அல்லது குற்றம். “அகிலஹேயம்” என்பதன் மூலம் மூன்றுவிதமான சேதந தோஷங்களும், மூன்றுவிதமான அசேதந தோஷங்களும் கூறப்பட்டன. சூர்ணை (145) - த்ரிவித சேதநாசேதந தோஷமும் ஈச்வரனுக்கு வாராது - என்று இதனை தெளிவாக அருளிச்செய்ய உள்ளார். (தமஸ்ஸுக்கு தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும்) – தமஸ் என்பதான இருளுக்கு ஒளியானது விரோதமாக உள்ளது போன்றும், ஸர்ப்பத்திற்குக் கருடன் விரோதமாக உள்ல்ளது போன்றும். (விகாராதி தோஷங்கள்) - இதில் உள்ள “விகாரம்” என்பதன் மூலம், மூன்றுவிதமான அசித் வஸ்துக்களுடைய மாற்றங்கள் கூறப்பட்டன; இதில் உள்ல “ஆதி” என்பதன் மூலம், “ஸம்ஸாரத்தில் உள்ள பத்த சேதநர்களுடைய அறியாமை துன்பங்கள், சேற்றிலிருந்து கழுவப்பட்டது போன்றுள்ள முக்தர்களுடைய ப்ரக்ருதி ஸம்பந்தத்திலிருந்து விடுபட்ட நிலை, நித்யர்களுடைய அளவுடன் கூடிய ஸ்வரூபம் மற்றும் அவர்கள் ஸர்வேச்ரனிடம் வசப்பட்டுள்ள நிலை” ஆகியவை கூறப்பட்டன. ஆனால் “வசப்படுதல்” என்பது தோஷம் ஆகுமோ என்றால், புருஷனுக்கு ஸ்தனங்கள் ஏற்படுவது போன்று, சுதந்திரமான ஒருவனுக்குத் தோஷமே ஆகும். அத்தகைய தோஷங்களுக்கு எதிர்தட்டாக இருத்தல் என்பது, மாறாமல் உள்ல நிலையாகும். “தோஷங்களுக்கு எதிர்த்தட்டாக உள்ள தன்மை” என்பதன் மூலம் உணர்த்தப்படுவது என்ன? ஸ்ரீவிபு. (6-7-22) – ஆத்மா ஜ்ஞாநமயோமல: - ஆத்மா ஞான ஸ்வரூபன், தோஷம் அற்றவன் - என்தற்கு ஏற்ப ஆத்மாவிற்கு ஸ்வரூபத்தின் விளைவாக ஏற்படக்கூடிய தோஷம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில காரணங்களால் உண்டாகவல்ல தோஷ ஸம்பந்தம் ஏற்படக்கூடும்; ஆனால் இத்தகைய நிலையானது பகவத் ஸ்வரூபத்திற்கு இல்லை என்ற வேறுபாடு இங்கு உணர்த்தப்படுகிறது. ஸ்ரீவிபு. (1-2-15) – தத் ப்ரஹ்ம பரமம் நித்யம் அஜம் அக்ஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் து ஸதா ஹே அபாவாத் ச நிர்மலம் - எந்த ஒன்று எப்போதும் உள்ளதாகவும், பிறப்பற்றதாகவும், அழிவற்றதாகவும், மாற்றம் அற்றதாகவும், ஒரே போன்று உள்ளதாகவும், எந்த ஒரு நிலையிலும் தாழ்வு இன்றி உள்ளதாகவும், தோஷம் இல்லாததாகவும் உள்ளதோ அதுவே ப்ரஹ்மம் - என்றும், ஸ்ரீவிபு - ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்க்யம் பரமம் பதம் - விஷ்ணு என்ற பெயர் கொண்ட உயர்ந்த இடமானது எந்தவிதமான தாழ்வுகளும் அற்றது - என்றும், ஸ்ரீவிபு – அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மநே – குற்றம் அற்றவனாகவும், தூய்மையானவனாகவும், எப்போதும் உள்ளவனாகவும் இருக்கின்ற பரமாத்மா - என்றும் கூறப்பட்டது காண்க. “ஹேயப்ரத்யநீகத்வம்” என்பதற்கு “அடியார்களுடைய தாழ்வுகளைப் போக்குவதற்குக் காரணமாக உள்ளதான, தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக உள்ள தன்மை” என்றும் பொருள் கொள்ளலாம்; இப்படியாக அல்லவோ கத்ய வ்யாக்யானத்தில் ஸ்வாமி நஞ்ஜீயரும் ஆச்சான்பிள்ளையும் அருளிச்செய்தனர் என்று கேட்கலாம். “ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும்” என்ற உதாரணம் மூலம் அத்தகைய கருத்தை இங்கும் ஏற்கலாம் அல்லவோ என்று கேட்கலாம். ஆனால் மாற்றங்கள் என்பது போன்ற தோஷங்களுக்கு எதிர்த்தட்டாக உள்ள தன்மை என்பதே இங்கு கூறப்படுவதால்,இவர்க்கு இந்தக் கருத்து இல்லை என்றாகிறது.