Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 141)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஈச்வரன், அகிலஹேயப்ரதயநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணகண பூஷிதனாய், ஸகல ஜகத் ஸர்க்க ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய், “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தி ஜ்ஞாநி” என்கிற சதுர்விதே புருஷர்களுக்கும் ஆச்ரயணீயனாய், தர்மார்த்த காம மோக்ஷாக்ய சதுர்வித பலப்ரதனாய், விலஷண விக்ரஹ யுக்தனாய், லக்ஷ்மீ பூமி நீளா நாயகனாயிருக்கும்.

அதில் ப்ரதம சூர்ணையாலே, ஈச்வரத்வம் அஸாதாரண தர்மதயா வஸ்துவுக்கு நிரூபகமாயிருக்கையாலே, ஈச்வரன் என்றே வஸ்துவை நிர்தேசித்து, தத் ஸ்வரூபாதி வைலக்ஷண்யத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார். அதில், ப்ரதமத்திலே குணாதிகளுக்கும் ஆதார பூதமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யருளிச்செய்கிறார். இப்படி உக்தமான ஸ்வரூபாதிகளை விஸ்தரேண உபபாதித்தருளுகிறார் மேல். அதில் ப்ரதமத்திலே “அகில ஹேய ப்ரத்யநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய்” என்றவிதில், அகிலஹேய ப்ரத்யநீகத்வத்தை உபபாதிக்கிறார் (அகிலஹேய ப்ரத்யநீகனாகையாவது” என்று தொடங்கி.

ஈச்வர தத்வத்தை விளக்கத் தொடங்கி, அதில் முதல் சூர்ணையில் “ஈச்வரத்தன்மை” என்பது, வேறு யாருக்கும் பொதுவாக இல்லாத தர்மம் கொண்ட வஸ்துவை நிருபிக்கும் வகையில் உள்ளதால், “ஈச்வரன்” என்று அந்த வஸ்துவை உறுதியாக்கி, அதன் ஸ்வரூபம் போன்ற சிறப்புகளைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார். தொடக்கத்தில் அவனுடைய குணங்கள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக உள்ள ஸ்வரூபத்தின் சிறப்பை அருளிச்செய்கிறார். இவ்விதம் கூறப்பட்டதாகிய பகவத் ஸ்வரூபம் போன்றவற்றை விரிவாக அருளிச்செய்ய உள்ளார். அதில் முதலில், சூர்ணை (141) - அகில ஹேய ப்ரத்யநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய் - என்ற பகுதியில் உள்ள “அனைத்து தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாக உள்ள தன்மை” என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

(அகில ஹேய ப்ரதய நீக அநந்த ஜ்ஞாந ஆநந்த ஏக ஸ்வரூபனாய்) என்று. அதாவது, ஸமஸ்த ஹேய ப்ரதிபடமாய், த்ரிவித பரிச்சேத ரஹிதமாய், ஸ்வயம்ப்ரகாசத்வ ஸுகரூபத்வமே வடிவான ஸ்வரூபத்தையுடையவனாயென்கை. “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம”, “விஜ்ஞாநம் ப்ரஹ்ம”, “ஆநந்தோ ப்ரஹ்ம” என்னக்கடவதிறே. “அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதா நஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப” என்றிறே எம்பெருமானார் அருளிச்செய்தது. அப்படியே இவருமருளிச் செய்கிறார். ஆனால், கல்யாணைகதாநத்வமும், ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணத்வமும் இவரருளிச் செய்யாதொழிவானென்? என்னில், ஹேய ப்ரத்யநீகதை புக்கவிடத்தே கல்யாணைகதாநத்வம் வருமென்னுமத்தைப் பற்றவும், ஆநந்தரூபத்வம் சொல்லுகையாலே தன்னடையே ஸித்திக்குமென்னுமத்தைப் பற்றவும், கல்யாணைகதாநத்வம் அருளிச்செய்திலர். ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணத்வம் உபயலிங்க விசிஷ்டத்வ ப்ரயுக்தமாகையாலே, அர்த்தாதுக்தமென்று அருளிச்செய்திலர். (ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணகண பூஷிதனாய்) ஆதி சப்தத்தாலே குண சூர்ணையில் எம்பெருமானாரருளிச்செய்த குணங்களையெல்லாம் சொல்லுகிறது. குணங்களுக்கு கல்யாணத்வமாவது, ஆச்ரிதர்க்குப் பரமபோக்யமாயிருக்கை. கண சப்தம் ஸமூஹவாசி. பூஷிதனாகையாவது, இவற்றாலே அலங்க்ருதனாயிருக்கை. திவ்யமங்கள விக்ரஹத்துக்கு திவ்யாபரணங்கள்போலேயாயிற்று, திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு குணங்கள் ஔஜ்ஜ்வல்யகரமாயிக்கும்படி. இத்தால், “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்”, “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியாச்ச”, “ஸமஸ்த கல்யாணகுணாத்மகோஸௌ” என்கிற குணகண யோகத்தை அருளிச்செய்தாராயிற்று. (ஸகல ஜகத் ஸர்க்க ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய்) ஜகச் சப்தத்தாலே, கார்ய வஸ்துவைச் சொல்லுகிறது. ஸகல சப்தத்தாலே ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமான ஸமஸ்த பதார்த்தங்களையும் சொல்லுகிறது. ஸர்க்கமாவது ஸ்ருஷ்டி இதுதான் ஸத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதையாயிருக்கும். ஸ்திதியாவது ரக்ஷணம்; இதுவும் பாஹ்யாப்யந்தர ரூபேண த்விவிதமாயிருக்கும். ஸம்ஹாரமாவது அழிக்கை; இதுவும் ஸத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதமாயிருக்கும். இவையெல்லாம் மேல் இவர் உபபாதிக்கிறவிடத்திலே காணலாம். “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே | யேந ஜாதாநி ஜீவந்தி | யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி | தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம” இத்யாதி ச்ருதிகளாலே இவனுடைய ஸகல ஜகத் ஸர்காதிகள் சொல்லப்படா நின்றதிறே. இத்தால் கீழ்ச் சொன்ன குண விசிஷ்டனானவிவனுடைய வ்யாபார விசேஷங்களை அருளிச்செய்தாராயிற்று. (ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரயணீயனாய்) - ஆர்த்தனாவன், முன்புண்டான ஐச்வர்யத்தையிழந்து அது பெற வேணுமென்று ஆசைப்படுமவன்; ஜிஜ்ஞாஸுவாகிறான், ஜ்ஞாந ஸ்வரூபனான ஆத்மாவை அநுபவிக்க ஆசைப்படும் கேவலன்; அர்த்தார்த்தியாகிறான், அபூர்வமாக ஐச்வர்யத்தை ஆசைப்படுமவன்; ஜ்ஞாநியாகிறான், பரமபுருஷார்த்தமான பகவத் ப்ராப்தியை ஆசைப்படுமவன். “ஆர்த்த : ப்ரதிஷ்டாஹீந: ப்ரஷ்டைச்வர்ய புநஸ் தத் ப்ராப்தி காம:, அர்த்தார்த்தீ அப்ராப்தைச்வர்யதயா ஐச்வர்ய காம:, தயோர் முகபேத மாத்ரம், ஐச்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார:, ஜிஜ்ஞாஸு: ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு:, ஜ்ஞாநமேவாஸ்ய ஸ்வரூபமிதி ஜிஜ்ஞாஸுரித்யுக்தம், ஜ்ஞாநீ ச “இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்” இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூபவித், ப்ரக்ருதி வியுக்த கேவலாத்மந்ய பர்யவஸ்ய ந பகவந்தம் ப்ரேப்ஸுர் பகவந்தமேவ பரம ப்ராப்யம் மந்வாந:” என்று சதுர்விதாதிகார வேஷத்தையும், ஸ்ரீகீதாபாஷ்யத்திலே அருளிச்செய்தாரிறே. இந்த சதுர்வித புருஷ ஸமாச்ரயணீயத்வத்தை “சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுகருதிநோர்ஜுந! ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப” என்றும், “சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ச்ருதா: ! ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி ப்ருதக் ப்ருதக்” என்றும் தானே அருளிச் செய்தானிறே. இத்தால், ஜகத்காரணபூதனாகக் கீழ்ச் சொல்லப்பட்டவனுடைய ஸர்வஸமாச்ரயணீயத்வத்தை அருளிச்செய்தாராயிற்று. (தர்மார்த்த காம மோக்ஷாக்க்ய சதுர்வித பலப்ரதனாய்) “தர்மார்த்த காம மோக்ஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத:” என்று புருஷார்த்தம் சதுர்விதமாயிறே இருப்பது. தர்மமாவது இஷ்டாபூர்த்தங்கள்; இஷ்டமாவது யாகாதி; பூர்த்தமாவது வாதாடி; அர்த்தமாவது ஸுவர்ண ரஜதாதிகள்; காமமாவது ஐஹிக பாரலௌகிக போக்ய பதார்த்தாநுபவ ஸுகம்; மோக்ஷமாவது ஆத்மாநுபவ பகவதநுபவங்கள். இவற்றில், தர்மம், ஸாதநதயா புருஷார்த்தமாயிருக்கும்; அர்த்தம், ஸாதநதயாவும், ஸ்வயமாயும் புருஷார்த்தமாயிருக்கும்; காமமோக்ஷங்களிரண்டும், ஸ்வயம் புருஷார்த்தமாயிருக்கும். ஏவம்விதமான சதுர்வித பலங்களையும அதிகாராநுகுணமாகக் கொடுக்குமவனா யென்கை. இத்தால், ஸர்வ ஸமாச்ரயணீயனான இவனுடைய ஸகல பலப்ரதத்வத்தையும் அருளிச்செய்தாராயிற்று. “தேவேந்த்ரஸ் த்ரிபுவநமர்த்தமேகபிங்கஸ் ஸர்வர்த்திம் த்ரிபுவநபாஞ்ச கார்த்தவீர்ய:, வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம்ப்ராப்தஸ் ஸகலபல ப்ரோடிஹி விஷ்ணு:” என்னக்கடவதிறே. (விலக்ஷண விக்ரஹ யுக்தனாய்) அதாவது, “விக்ரஹந்தான், ஸ்வரூப குணங்களிலுங்காட்டில் அத்யந்த அபிமதமாய்” என்று தொடங்கி, மேலருளிச் செய்கிற வைலக்ஷண்யத்தையுடைய விக்ரஹத்தோடே கூடியிருக்குமவனாயென்கை. “நீலதோயத மத்யஸ்த்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா” இத்யாதியிலே, விக்ரஹ வைலக்ஷண்யம் ச்ருதி ப்ரஸித்தம். “ஸ்வாபிமதாநுரூபைகரூபாசிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய நிரதிசயௌஜ்ஜ்வல்ய ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்யநந்த குண நிதி திவ்யரூப!” என்று திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யத்தை அருளிச்செய்தாரிறே எம்பெருமானார். இத்தால, கீழ்ச்சொன்ன ஸ்வரூப குணங்களுக்கு ப்ரகாசகமாய், ஜகத்காரணத்வத்துக்கும் ஸர்வஸமாச்ரயணீயத்வத்துக்கும், ஸர்வ பலப்ரதத்வத்துக்கும் ஏகாத்தமான திவ்ய விக்ரஹ யோகத்தை யருளிச்செய்தாராயிற்று. (லக்ஷ்மீ பூமி நீளா நாயகனாயிருக்கும்) அதாவது, “உனக்கேற்கும்” எனனும்படியான வைலக்ஷண்யத்தையுடையளாய், சேதநர்க்கு புருஷகாரபூதையாயும், ப்ராப்யையாயுமிருக்கும் ப்ரதான மஹிஷியான பெரியபிராட்டியார்க்கும், அவளோடொக்கச் சொல்லலாம்படியிருக்கும் பூமி நீளைகளான மற்றையிரண்டு பிராட்டிமார்க்கும் அநுரூப நாயகனாயிருக்குமென்கை. “ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ” என்று லக்ஷ்மீ பூமிகளிருவரையும் வேதபுருஷன் சொன்னவிது, நீளைக்கும் உபலக்ஷணம். “வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜநார்த்தந:, உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித: பரமேச்வர:” என்னக்கடவதிறே. “ஸ்வாபிமத நித்ய நிரவத்யாநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்யநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாணகுணகண ஸ்ரீவல்லப! ஏவம்பூத பூமி நீளா நாயக!” என்றிறே எம்பெருமானார் அருளிச்செய்தது. இத்தால், கீழ்ச்சொன்ன விக்ரஹ வைலக்ஷண்யம், காட்டிலெரித்த நிலாவாகாதபடி அநுபவிக்கக் கடவரான பிராட்டிமாரோட்டைச் சேர்த்தியை யருளிச்செய்தாராயிற்று.

(அகில ஹேய ப்ரதய நீக அநந்த ஜ்ஞாந ஆநந்த ஏக ஸ்வரூபனாய்) - அனைத்து தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாகவும், மூன்றுவிதமான எல்லைகளும் அற்றவனாகவும் [இடம், பொருள், காலம்], தானாகவே தன்னை வெளிப்படுத்த வல்லவனாகவும், ஆனந்தரூப ஸ்வரூபம் கொண்டவனாகவும் உள்ளான். தை. (2-1-1) - ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம - ப்ரஹ்மமனது மாற்றம் அற்றது, தானே வெளிப்பட வல்லது, எல்லை அற்றது - என்றும், தை. (3-5) – விஜ்ஞானம் ப்ரஹ்ம - விஜ்ஞானத்தை ப்ரஹ்மம் என்று அறியவேண்டும் – என்றும், தை. (3-6-1) – ஆநந்தோ ப்ரஹ்ம: - ப்ரஹ்மம் ஆனந்தமயமானது - என்றும் கூறப்பட்டது அல்லவோ? சரணாகதி கத்யத்தில் - அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதா நஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப - அனைத்துவிதமான தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாகவும், அனைத்து கல்யாணகுணங்களுக்கும் இருப்பிடமாகவும், தன்னைத் தவிர்த்து உள்ள மற்ற அனைத்து வஸ்துக்களையும் விட வேறுபட்ட எல்லையற்ற ஞானமும் ஆனந்தமும் ஸ்வரூபமாகக் கொண்டவன் - என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். அது போன்று இங்கு ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரும் அருளிச்செய்கிறார். ஆனால் இங்கு, “கல்யாண குணங்களின் இருப்பிடம், மற்ற அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் மேன்மையான சிறப்பு” ஆகியவற்றை இவர் அருளிச்செய்யாமல் விடுத்தது ஏன்? “அனைத்து தாழ்வுகளுக்கும் எதிர்தட்டாக உள்ள தன்மை” என்பது உள்ளபோது, “அனைத்து கல்யாண குணங்களுடைய இருப்பிடம்” என்பது தானாகவே வெளிப்படும்;மேலும், “ஆனந்தம்” என்பதைக் கூறுவதால், “கல்யாண குணங்களுக்கு இருப்பிடம்” என்பதைத் தனியே இங்கு கூறவில்லை. “அனைத்து தாழ்வுகளுக்கும் எதிர்தட்டாக உள்ள தன்மை, அனைத்து கல்யாண குணங்களுடைய இருப்பிடம்” ஆகிய இரண்டு அடையாளங்களும், “மற்ற அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் மேன்மையான சிறப்பு” என்னும் கருத்தை வெளிப்படுத்தவல்லது என்பதால் அதனைத் தனித்துக் கூறவில்லை. (ஜ்ஞாந சக்த்யாதி கல்யாணகுணகண பூஷிதனாய்) – ”சக்த்யாதி” என்பதில் உள்ள “ஆதி” என்பதன் மூலம், கத்யத்தில் உள்ள குணங்கள் குறித்த சூர்ணையில், காணப்படுவதான எம்பெருமானார் அருளிச்செய்த, அனைத்து குணங்களும் கூறப்பட்டன. குணங்களுக்குக் கல்யாணத்தன்மை என்பது, அடியார்களுக்கு மிகவும் இனிமையாக இருத்தல் ஆகிறது. “கண” என்பது கூட்டமாக இருப்பதைக் கூறுகிறது. “பூஷிதன்” என்பது, இந்த குணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாக இருத்தல். திவ்யமங்கள விக்ரஹத்திற்கு திவ்யமான ஆபரணங்கள் எவ்விதம் உள்ளனவோ அதே போன்று, திவ்ய ஆத்ம ஸ்வரூபத்திற்கு இந்தக் குணங்கள் அனைத்தும் ஒளி வீசும்படியாக உள்ளன. இதன் மூலம் முண். (1-1-9) – ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் - அனைத்தையும் அறிந்தவன், அனைத்தையும் உணர்ந்தவன் – என்றும், ச்வே. (6-8) - பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பலக்ரியா ச – அவனுடைய சக்தியானது பலவிதமாகவும், ஞானம் பலம் மற்றும் செய்கைகளை இயல்பாகவே கொண்டதாகவும் உள்ளது – என்றும், ஸ்ரீவிபு. (6-5-84) - ஸமஸ்த கல்யாணகுணாத்மகோஸௌ - அனைத்து கல்யாணகுணங்களும் பொருந்தியவன் - என்றும் உள்ளதற்கு ஏற்ப, குணங்களுடைய சேர்க்கையை அருளிச்செய்தார். (ஸகல ஜகத் ஸர்க்க ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய்) - “ஜகத்” என்பதன் மூலம் அனைத்து கார்யப்பொருள்களும் கூறப்பட்டன. “ஸகல” என்பதால், தொகுத்ததாகவும் தனித்தனியே உள்ளதாகவும் காணப்படும் அனைத்து பதார்த்தங்களும் கூறப்பட்டன. “ஸர்க்கம்” என்றால் ஸ்ருஷ்டி; ஸ்ருஷ்டியானது தன் மூலம் நேரடியாகவோ அல்லது நான்முகன் முதலானோர் மூலமாகவோ என இரண்டுவிதமாக உள்ளதாகும். “ஸ்திதி” என்பது காத்தல்; இது வெளிப்படையாக நின்றும், அந்தர்யாமியாக நின்றும் என்பதாக இரண்டுவிதமாக உள்ளது. “ஸம்ஹாரம்” என்பது அழித்தல்; இதுவும், தன் மூலமாகவோ அல்லது ருத்ரன் போன்றவர்கள் மூலமாகவோ என இரண்டுவிதமாக உள்ளது. இவை அனைத்தும் இவர் இனி அருளிச்செய்ய இருக்கின்ற சூர்ணைகளில் காணப்பட உள்ளன. தை. (3-1-1) - யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே | யேந ஜாதாநி ஜீவந்தி | யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி | தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம - யாரிடமிருந்து அனைத்தும் பிறந்தனவோ, பிறந்த பின்னர் யாரிடம் வசிக்கின்றனவோ, யாரிடம் சென்று லயிக்கின்றனவோ, அதனையே அறிய விரும்புவாயாக; அதுவே ப்ரஹ்மம் – என்பது போன்ற ச்ருதி வாக்கியங்கள் மூலம் இவன் அனைத்து ஜகத்தையும் படைத்தல் போன்றவை கூறப்பட்டன. இதன் மூலம் முன்பு கூறப்பட்டதாகிய, குணங்களுடன் கூடிய ஸர்வேச்வரனுடைய செயல்களின் சிறப்புகளை அருளிச்செய்தார். (ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரயணீயனாய்) - ஆர்த்தன் என்பவன், முன்பு தனக்கு இருந்த ஐச்வர்யத்தை இழந்து, அதனை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆசை கொண்டவன் ஆவான். ஜிஜ்ஞாஸு என்பவன், ஞான ஸ்வரூபனாக உள்ள ஆத்மாவை அனுபவிக்கவேண்டும் என்று மட்டுமே ஆசை கொண்டவன் ஆவான். அர்த்தார்த்தி என்பவன், இதுவரை தன்னிடம் இல்லாத ஐச்வர்யத்தை விரும்புபவன் ஆவான். ஞானி என்பவன், உயர்ந்த புருஷார்த்தமாகிய “பகவானை அடைதல்” என்பதை விரும்புபவன் ஆவான். கீதாபாஷ்யத்தில் (7-16) – ஆர்த்த : ப்ரதிஷ்டாஹீந: ப்ரஷ்டைச்வர்ய புநஸ் தத் ப்ராப்தி காம:, அர்த்தார்த்தீ அப்ராப்தைச்வர்யதயா ஐச்வர்ய காம:, தயோர் முகபேத மாத்ரம், ஐச்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார:, ஜிஜ்ஞாஸு: ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு:, ஜ்ஞாநமேவாஸ்ய ஸ்வரூபமிதி ஜிஜ்ஞாஸுரித்யுக்தம், ஜ்ஞாநீ ச “இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்” இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூபவித், ப்ரக்ருதி வியுக்த கேவலாத்மந்ய பர்யவஸ்ய ந பகவந்தம் ப்ரேப்ஸுர் பகவந்தமேவ பரம ப்ராப்யம் மந்வாந: - ஆர்த்த என்பது வாழ்க்கையில் தனது நிலையை இழந்து, செவ்ல்வம் இழந்து, அதனை மீண்டும் பெற எண்ணுபவர்களைக் குறிக்கும். அர்த்தார்த்தீ என்பவன் புதியதாக மேலும் செல்வம் பெற விரும்புபவன் ஆவான். இவனும் கடந்த பிரிவினனும், செல்வத்தை மட்டுமே அடிப்படையான எண்ணமாகக் கொண்டுள்ளதால், இவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. ஜிஜ்ஞாஸு என்பவன், ஆத்மாவின் உண்மையான தன்மையை அறிய விரும்புவன்; அதனை ப்ரக்ருதியை விட மாறுபட்ட ஒன்று என்பதாக அறிந்து மேலும் ஞானம் பெற விருப்பம் கொண்டவன் ஆவான். இவன் ஞானத்தை விரும்புபவன் என்று ஏன் கூறப்படுகிறான் என்றால், இவன் அறிய விரும்பும் ஆத்மாவின் ஸ்வரூபம் ஞானமாக உள்ளதால் ஆகும். ஞானி என்பவன், ஆத்மாவைப் பற்றி உணர்ந்ததால், ஆத்மாவின் மகிழ்வு என்பது பரம்பொருளுக்கு அடிமையாக உள்ளதன் மூலம் மட்டுமே உண்டாகும் என்று உணர்ந்தவன் ஆவான். இவன், முன்பு கூறப்பட்ட கீதை (7-5) – இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் – அசேதந ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானது எனது சேதந ப்ரக்ருதி - என்று கூறப்பட்ட ஞானம் கொண்டவன் ஆவான். இவன், “ஆத்மா வேறு, ப்ரக்ருதி வேறு” என்று அறிவதுடன் மட்டுமே அல்லாமல், பகவானையே பெற விரும்புகிறான். அவன் உணர்வது, “பரம்பொருளை அடைதலே உயர்ந்த இலக்கு” என்பதாகும் - என்று நான்குவிதமானவர்கள் குறித்து அருளிச்செய்தார் அல்லவோ? இந்த நான்கு விதமானவர்களும் பகவானை அடைதல் குறித்து கீதை (7-16) - சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுகருதிநோர்ஜுந! ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப – அர்ஜுனா! எனது பக்தர்கள் நான்குவிதமானவர்கள்; அவர்கள் ஆர்த்தர்கள், ஜிஜ்நாஸு, அர்த்தார்த்தீ மற்றும் ஞானி என்பவர்கள் ஆவர் – என்றும், என்றும், மஹாபாரதம் மோக்ஷதர்மத்தில் – சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ச்ருதா: ! ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி ப்ருதக் ப்ருதக் - அர்ஜுனா! எனது பக்தர்கள் நான்குவிதமானவர்கள்; அவர்கள் ஆர்த்தர்கள், ஜிஜ்நாஸு, அர்த்தார்த்தீ மற்றும் ஞானி என தனித்தனியாக உரைக்கப்படுகிறார்கள் - என்றும் தானே அருளிச்செய்தான் அல்லவோ? இதன் மூலம், இந்த ஜகத்தின் காரணமாகக் கூறப்பட்ட ஸர்வேச்வரனுடைய “அனைவராலும் அடையப்படும் தன்மை” என்பதை அருளிச்செய்தார் என்றானது. (தர்மார்த்த காம மோக்ஷாக்க்ய சதுர்வித பலப்ரதனாய்) - மஹாபாரதம் மோக்ஷபர்வம் - தர்மார்த்த காம மோக்ஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத: – தர்மம், பொருள், இன்பம் மற்றும் மோக்ஷம் எனபதாக உள்ள புருஷார்த்தங்கள் – என்பதற்கு ஏற்ப, புருஷார்த்தங்கள் நான்குவிதமாக உள்ளன. தர்மம் என்றால் இஷ்டாபூர்த்தங்கள் ஆகும்; இஷ்டம் என்பது யாகம் போன்றவை, பூர்த்தம் என்பது குளங்கள் வெட்டுதல் போன்றவை ஆகும்; அர்த்தம் என்றால் ஸ்வர்ணம், வெள்ளி போன்றவை; காமம் என்பது இந்த லோகத்திலும் அந்த லோகத்திலும் உள்ள இன்பம் தரும் பொருள்களை அனுபவிக்கும்போது ஏற்படும் சுக அனுபவம்; மோக்ஷம் என்றால் ஆத்ம அனுபவம் மற்றும் பகவத் அனுபவம் ஆகும். இவற்றில் தர்மம் என்பது ஒரு வஸ்துவைப் பெறுவதற்கான சாதனமாக உள்ளதால் புருஷார்த்தமாக இருக்கிறது. அர்த்தம் என்பது ஒரு வஸ்துவைப் பெறுவதற்கான சாதனமாக உள்ளதாலும், தானாகவே பயன் அளிப்பதாலும் புருஷார்த்தமாக இருக்கிறது. காமம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டும், தங்களுக்குத் தாங்களே புருஷார்த்தங்களாக உள்ளன. இப்படிப்பட்ட நான்குவிதமான பலன்களையும், அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அளிப்பவன் அவனே ஆகிறான். இதன் மூலம், அனைத்தும் அண்டக்கூடியபடி உள்ள அவனுடைய, “அனைத்து பலன்களையும் அளிக்கவல்ல தன்மை” என்பதை அருளிச்செய்தார். மாங்கல்ய ஸ்தவத்தில் - தேவேந்த்ரஸ் த்ரிபுவநமர்த்தமேகபிங்கஸ் ஸர்வர்த்திம் த்ரிபுவநபாஞ்ச கார்த்தவீர்ய:, வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம்ப்ராப்தஸ் ஸகலபல ப்ரோடிஹி விஷ்ணு - தேவேந்த்ரன் மூன்று புவநங்களையும், கார்த்தவீர்யன் மூன்று லோகங்களில் உள்ள அனைத்தையும், வைதேஹ அரசன் பரமபதத்தையும் அடைந்தனர்; இப்படியாக இவர்கள் விஷ்ணுவை அடைந்தனர்; அனைத்தையும் அளிக்கவல்லவன் அவனே என்பதால் ஆகும் - என்பது காண்க. (விலக்ஷண விக்ரஹ யுக்தனாய்) – சூர்ணை (181) – விக்ரஹந்தான், ஸ்வரூப குணங்களிலுங்காட்டில் அத்யந்த அபிமதமாய் - என்பது தொடங்கி இவர் அருளிச்செய்ய உள்ள மிகுந்த சிறப்புடன் கூடிய திருமேனியைக் கொண்டவன் என்று கருத்து. தைத். ( 2-11) - நீலதோயத மத்யஸ்த்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா - கருமையான மேகத்தின் நடுவில் உள்ள மின்னல் போன்ற ஒளியுடன் கூடியது – என்பதற்கு ஏற்ப இவனுடைய திருமேனியின் மிகுந்த சிறப்பானது ச்ருதியில் வெளிப்படுகிறது. இவனுடைய திருமேனியின் மிகுந்த சிறப்பை கத்யத்தில், “ஸ்வ அபிமத அநுருபைகரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய ஔஜ்ஜ்வல்ய ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாதி அநந்த குண நிதி திவ்யரூப - தனக்கு விருப்பமாகவும், தனது அனுபவத்திற்கு ஏற்றதாகவும், சிந்தனைக்கு எட்டாதபடியும், திவ்யமானதும், வியக்க வைப்பதும், எப்போதும் உள்ளதும், தோஷம் அற்றதும், எல்லையற்ற ஒளி பொருந்தியதும், அழகாகவும், நறுமணம் கொண்டதும், மென்மையானதும், லாவண்யம் கொண்டதும், இளமையுடன் கூடியதும், இப்படியாக எண்ணற்ற குணங்களின் புதையலாக உள்ள திவ்யமான ரூபம்” என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். இதன் மூலமாக, இதுவரை கூறப்பட்ட ஸ்வரூப குணங்களை வெளிப்படுத்துவதும், இந்த ஜகத்திற்குக் காரணமாக உள்ளதும், அனைத்தும் அண்டுவதற்கு ஏற்றபடியாக உள்ளதும், அனைத்து பலன்களையும் அளிக்கவல்ல தன்மை கொண்டதும் ஆகிய ஒரே வஸ்துவாகிய திவ்யமங்கள திருமேனியுடன் அவனுக்கு உள்ள சேர்க்கை கூறப்பட்டது. (லக்ஷ்மீ பூமி நீளா நாயகனாயிருக்கும்) - அதாவது திருவாய்மொழி (10-10-6) – உனக்கு ஏற்கும் - என்பதற்கு ஏற்ப மிகுந்த சிறப்பைக் கொண்டவளாகவும், சேதநர்களுக்காக எம்பெருமானிடம் சிபாரிசு செய்பவளாகவும், அடையப்பட வேண்டியவளாக உள்ளவளும், முதன்மையான பிராட்டியாக இருப்பவளும் ஆகிய பெரியபிராட்டியாருக்கும்; அவளுடன் சேர்த்துக் கூறலாம்படியாக உள்ள பூமாதேவி மற்றும் நீளாதேவி என்பவர்களாகிய மற்ற இரண்டும் பிராட்டிமார்களுக்கும் ஏற்றவனாக அவன் உள்ளான். யஜுஷு - ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ - உனக்கு பூமியும் திருமகளும் பத்னிகள் – என்று கூறப்பட்ட வேதவாக்கியமானது, மஹாலக்ஷ்மி மற்றும் பூமாதேவி ஆகிய இவருடன் நீளாதேவியையும் சேர்த்தே கூறப்பட்டதாகிறது. வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜநார்த்தந:, உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித: பரமேச்வர: – ஸ்ரீவைகுண்டம் என்ற உயர்ந்த இடத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடியவனாக உள்ளான்; இங்கு பூமாதேவி மற்றும் நீளாதேவியுடன் சேர்ந்தபடி உள்ள அந்த பரமேச்வரன் வணங்கப்படுகிறான் - என்பது காண்க. கத்யத்தில், “ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐச்வர்ய சீலாதி அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஸ்ரீவல்லப! ஏவம்பூத பூமி நீளா நாயக! - உனக்கு ஏற்றபடியான ஸ்வரூபம், நித்யமாக உள்ள நிலை, தோஷம் ஏதும் இல்லாத நிலை, உனக்கு ஏற்ற ரூபம், குணம், செல்வம், ஐச்வர்யம், சீலம் போன்றதான எண்ணற்ற எல்லையற்ற கல்யாணகுணங்களைக் கொண்ட மஹாலக்ஷ்மியின் நாயகனே! இப்படியாக உள்ள பூமாதேவி மற்றும் நீளாதேவியின் நாயகனே”, என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். இதன் மூலம் இதுவரை கூறப்பட்ட திவ்யமங்கள திருமேனியின் மிகுந்த சிறப்பானது காட்டில் வீசுகின்ற நிலவின் ஒளி போன்று வீணாகப் போகாமல், சேர்ந்து நின்று அனுபவிக்கத்தக்கபடி உள்ள பிராட்டிகளின் சேர்த்தியைக் கூறினார் என்றாயிற்று.