Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 140)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இப்படி அசித்து மூன்றுபடிப்பட்டிருக்கும்.

இப்படியென்று ஸிம்ஹாவ லோகந ந்யாயத்தாலே, முன்பு அருளிச்செய்தவற்றையெல்லாம் கடாக்ஷித்து அநுபாஷித்துக் கொண்டு, அசித் தத்வோபந்யாஸத்தை நிகமித்தாராயிற்று. – ஆக, ப்ரதமத்திலே “அசித்து ஜ்ஞாந சூந்யமாய் விகாராஸ்பதமாயிருக்கும்” என்று அசித்தினுடைய லக்ஷணத்தைச் சொல்லி; அநந்தரம், அதுதான் சுத்தஸத்வயாதி பேதேந த்ரிவிதமாயிருக்கும்படியைச் சொல்லி; உத்தேச க்ரமத்திலே ப்ரதமம் சுத்த ஸத்வமாகிற அசித்தினுடைய ப்ரகாரத்தைச் சொல்லி; ததநந்தரம், மிச்ரஸத்வமாகிற அசித் விசேஷம் இன்னதென்றும், அதுதான் சதுர்விம்சதி தத்வமாயிருக்குமென்றும், அதில் ப்ரதம தத்வம் இன்னதென்றும், அந்த தத்வத்தினுடைய அவஸ்த்தா விசேஷங்க ளிருக்கும்படியையும், அதில் நின்றும் தத்வாந்தரங்கள் உத்பந்நமாகைக்கு ஹேது அதினுடைய குணவைஷம்யமென்றும், அந்த குணங்கள் தான் இன்னதென்றும், அவை தானதுக்கு அவிநாபூதங்களாய், அதினுடைய அவஸ்த்தா பேதங்களாலே அநுத்பூதங் களாயும் உத்பூதங்களாயுமிருக்குமென்றும், அவைதான கார்யானுமேயங்களென்றும், அவற்றினுடைய வைஷம்ய ப்ரயுக்தமான மஹதாதி தத்வோத்பத்தி க்ரமத்தையுஞ் சொல்லி, – அநந்தரம், இப்படி யுத்பந்நங்களான தத்வங்களினுடைய ஸமுதாய கார்யமான அண்டோத்பத்தியையும், அந்தவண்டத்துக்குள்ளில் ஸமஷ்டி புருஷ சதுர்முகோத்பத்தியையும், ஈச்வரன் ஸமஷ்டி வ்யஷ்டி பதார்த்தங்களை அத்வாரகமாகவும் ஸத்வாரகமாகவும் நின்று ஸ்ருஷ்டிக்கும்படியையுஞ் சொல்லி, அநந்தரம் அண்டங்களினுடைய பஹுத்வத்தையும், அவற்றினுடைய கட்டளையையும், அவைதான் ஈச்வரனுக்கு லீலோபகரணங்களென்னுமத்தையும், அவற்றினுடையவுத்பத்தி ப்ரகாரத் தையுஞ் சொல்லி, – அநந்தரம், ஆகாசாதி பூதங்களுக்குத் தனித்தனியேயுண்டான விநியோகத்தையும், ஜ்ஞாந கர்மேந்த்ரியங்களுக்கும் உபயாத்மகமான மநஸ்ஸுக்கு முண்டான வ்ருத்தி பேதத்தையும், ஆகாசாதிகளுக்கு சப்தாதிகள் ப்ரதிநியத குணங்களா யிருக்கும்படியையும், அவற்றுக்கு குணவிநிமயம் வருகைக்கு ஹேதுவையும், குணாதிக்யத்துக்கு ஹேதுவையுஞ் சொல்லி; இப்படி மிச்ர ஸதத்தினுடைய ப்ரகாரத்தை விஸ்தரேண உபபாதித்து, – அநந்தரம், இதினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாயிருந்துள்ள ஸத்வசூந்யமாகிற அசித் விசேஷத்தையும் ஸங்க்ரஹேண சொல்லி; அநந்தரம், ஏதத் பூர்வோக்தமான அசித் த்வயத்தினுடைய விநியோக ப்ரகாரத்தையும், அசித த்ரயத்தினுடைய பரிணாமங்களையுஞ் சொல்லி; ஏதத் தர்சநைக தேசிகர்களுடைய கால விஷய ப்ரதிபத்தி பேதத்தையும் காட்டி; அநந்தரம், கீழ்ச் சொல்லப்பட்டவற்றில் பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய விப்ரதிபத்தி ப்ரகாரங்களையும், அவைதான் அயுக்தமென்னு மிடத்தையுஞ் சொல்லி; அநந்தரம், பரஸ்பர விலக்ஷணமான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்யாம்சங்களையும் தர்சிப்பித்து; இப்படி, அசித் த்ரயத்தினுடைய ப்ரகாரத்தையு மருளிச்செய்து தலைக்கட்டினார்.

சிங்கம் ஒன்று நடக்கும்போது திரும்பிப் பார்ப்பது போன்று, முன்பு தாம் அருளிச்செய்த அனைத்தையும் மீண்டும் நோக்குபவராக, அவற்றை மீண்டும் உரைத்து, அசித் தத்வம் குறித்த விளக்கங்களை நிறைவு செய்கிறார். முதலில், சூர்ணை (77) – அசித்து ஜ்ஞாந சூந்யமாய் விகாராஸ்பதமாயிருக்கும் - என்பது தொடங்கி அசித்தின் லக்ஷணங்களைக் கூறினார். அடுத்து, அசித்தானது சுத்தஸத்வம் போன்ற வேறுபாடுகள் காரணமாக மூன்றாக உள்ளதைக் கூறினார்; தாம் உரைக்க வந்த வரிசையில் முதலில் சுத்தஸத்வமாக உள்ள அசித்தின் விதத்தை உரைத்தார். அதன் பின்னர், மிச்ரஸத்வமாக உள்ள அசித்தின் சிறப்பு இன்னது என்றும், அது இருபத்துநான்கு விதமாக உள்ள தத்வமாக உள்ளது என்றும், அதில் முதல் தத்வம் இன்னது என்றும், அந்த முதல் தத்வத்தின் நிலைகளுடைய சிறப்புகள் உள்ள விதங்கள் குறித்தும், அந்த முதல் தத்வத்திலிருந்து மற்ற தத்வங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவதற்குக் காரணம் அதன் குணங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே ஆகும் என்றும், அந்தக் குணங்கள் இன்னது என்றும், அவை ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் உள்ளன என்றும், அதனுடைய நிலை மாறுதல்கள் காரணமாகக் கண்களுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் உள்ளன என்றும், அவை கார்யங்களாக ஆவதற்கு ஏற்றவை என்றும், அவற்றின் ஏற்றத்தாழ்வால் உண்டாகின்ற மஹத் போன்ற தத்வங்களுடைய வரிசையையும் கூறினார். அதன் பின்னர் இவ்விதம் உற்பத்தி ஆகிய தத்வங்களுடைய கூட்டு கார்யமாக உள்ள அண்டத்தின் உற்பத்தியையும், அந்த அண்டத்திற்குள் அனைத்து புருஷர்களுடைய தொகுத்த வடிவமான நான்முகனுடைய உற்பத்தியையும், ஈச்வரன் அனைத்து பொருள்களையும் நான்முகன் மூலமாகப் படைத்தல் மற்றும் தானே படைத்தல் ஆகியவை குறித்தும் உரைத்தார். அடுத்து அண்டங்கள் பலவாக உள்ளதையும், அவற்றினுடைய அளவுகளையும், அவை ஈச்வரனுக்கு விளையாட்டுக் கருவிகளாக உள்ளதையும், அவற்றின் உற்பத்தி விதங்களையும் கூறினார். அடுத்து ஆகாசம் முதலான பூதங்களுடைய தனித்தனியான பயன்களையும், ஞானேந்த்ரியங்கள் மற்றும் கர்மேந்த்ரியங்கள் ஆகிய இரண்டிற்கும் பொதுவாக உள்ள மனதிற்கு உள்ளதான செயல்பாட்டு வேறுபாடுகளையும் கூறினார். அடுத்து ஆகாசம் போன்ற பூதங்களுக்கு சப்தம் போன்றதான தனித்தனி குணங்கள் உள்ளதையும், அவற்றுக்கு மற்றவற்றின் குணச்சேர்க்கை ஏற்படுவதன் காரணத்தையும், அந்தந்த பூதங்களுக்கு அந்தந்த குணங்கள் ஓங்கி இருப்பதற்கான காரணத்தையும் அருளிச் செய்தார். இவ்விதம் மிச்ரஸத்வத்தின் விதங்களை மிகவும் விரிவாக அருளிச்செய்தார். அடுத்து, மிச்ரஸத்வத்தின் மாற்றங்களுக்குக் காரணமாக உள்ள ஸத்வசூந்யம் என்னும் அசித் வகை குறித்து சுருக்கமாக அருளிச்செய்தார். இவ்விதம் முன்பு கூறப்பட்ட இரண்டு அசித்துக்கள் எவ்விதம் உபயோகம் ஆகின்றன என்பதையும், மூன்றுவிதமான அசித்துக்களுடைய மாற்றங்கள் குறித்தும் உரைத்தார். இவ்விதமாக உள்ள நம்முடைய தர்சனத்தில் உள்ள சில ஆசார்யர்கள், காலத்வம் குறித்து கருத்து வேறுபாடு கொண்டதை உரைத்தார். அடுத்து, கீழே கூறப்பட்டவற்றில், வேதங்களுக்கு விரோதமாகக் கருத்து உரைப்பவர்களுடைய முரண்பட்ட வாதங்களைக் கூறினார்; அவை யுக்திக்குப் பொருந்தாது என்பதையும் கூறினார். அடுத்து, ஒன்றுக்கொன்று சிறப்பாகக் காணப்படும் பூதங்களில் உள்ள அறியப்படவேண்டிய அம்சங்களை உரைத்தார். இப்படியாக மூன்று வகையான அசித் தத்வங்களுடைய தன்மைகளை உரைத்து, இந்தப் பகுதியை நிறைவு செய்தார்.