Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 136)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
தேஜஸ்ஸுக்கு நிறம் சிவப்பு, ஸ்பர்சம் ஒளஷ்ண்யம்.
– (தேஜஸ்ஸுக்கு நிறம் சிவப்பு) இத்தாலே, தேஜ: பததார்த்தங்களில் வர்ண பேதம் பதார்த்தாந்தர ஸம்ஸர்கஜம் என்கை. (ஸ்பர்சம் ஓளஷ்ண்யம்) இத்தால், உஷ்ண ஸ்பர்சம், சீத ஸ்பர்சம், அநுஷ்ண சீத ஸ்பர்சம் என்கிற த்ரிவித ஸ்பர்சத்திலும் இதுக்கு ஸ்பர்சம், ஒளஷ்ண்யமென்கை. இதுதான் தேஜ பதார்த்தங்களான ஸுவர்ணாதிகளில் பலவத் ஸஜாதீய த்ரவ்யங்களாலே அபிபூதமாகையாலே தோன்றாது.
(தேஜஸ்ஸுக்கு நிறம் சிவப்பு) – ஒளியை உண்டாக்கும் பதார்த்தங்களில் காணப்படும் நிற வேறுபாடுகள் போன்றவை, அந்தந்த பதார்த்தங்களில் சேர்ந்துள்ள மற்ற பொருள்களால் ஏற்படுபவை ஆகும் எனப்பட்டது. (ஸ்பர்சம் ஓளஷ்ண்யம்) - உஷ்ணமான தீண்டுதல், குளிர்ந்த தீண்டுதல் மற்றும் உஷ்ணமும் குளிரும் இல்லாத தீண்டுதல் ஆகிய மூன்றில், தேஜஸ்ஸுக்கு உஷ்ணமான தீண்டுதல் உள்ளது. ஆனால் இத்தகைய உஷ்ணமான தீண்டுதல் என்பது, ஒளிரும் பொருள்களான தங்கம் போன்றவற்றில், மற்ற பல பொருள்களுடைய சேர்த்தி காரணமாக வெளிப்படாமல் உள்ளது.