Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 132)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

பூதாதியிலே பிறக்கையாலும், அஹங்காராதிகளிலில்லாமையாலும், கண்ணுக்கு விஷயமாகையாலும் அவை நாலுஞ் சேராது.

அது தன்னை நிராகரிக்கிறார்.

கடந்த சூர்ணையில் காண்பிக்கப்பட்ட கருத்தைத் தள்ளுகிறார்.

(பூதாதியிலே பிறக்கையாலும்) இத்யாதியாலே. அதாவது பூதாதி ஸம்ஜ்ஞகமான தாமஸ அஹங்காரத்திலே உத்பந்நமாகையாலும், ஒன்றிலே நின்றும் உத்பந்நமானதொன்றுக்கு ஸாவயவத்வம ஸித்தமாகையாலும், நித்யம் நிரவயவமென்கிற விரண்டுஞ் சேராது. (பூதாதியிலே பிறக்கையாலும்) என்றது, சப்த தந்மாத்ரத்தினுடைய ஸ்தூலாவஸ்தையாகையாலே அதுக்கும் இதுக்குமுண்டான ஐக்யத்தைப் பற்ற. இனி, விபுவாகில் ஸஸ்வகதமாக வேணுமிறே. ஸ்வகாரணமான அஹங்காராதிகளில் இதுக்கு வ்யாப்தியில்லாமையாலே அதுவும் சேராது. பஞ்சீகரண ப்ரயுக்தமான ரூபவத்த்வத்தாலே கண்ணுக்கு விஷயமாகையாலே அப்ரத்யக்ஷமென்கையும் சேராது. “ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே” என்றாரிறே கீழே; இது தன்னை “அண்டாந்தர் வர்த்திநச் சாகாசஸ்ய த்ரிவருத் கரணோபதேச ப்ரதர்சித பஞ்சீகரணேந ரூபவத்தவாச் சாக்ஷஷத்வேப்யவிரோத:” என்று பாஷ்யகாரருமருளிச் செய்தார்.

ஆகாசமானது பூதாதி என அறியப்படுவதாகிய தாமஸ அஹங்காரத்திலிருந்து உற்பத்தி ஆவதாலும், ஒன்றுலிருந்து உற்பத்தி ஆகும் மற்றொரு பொருளுக்கு உறுப்புகள் என்பது உண்டாவதாலும், “ஆகாசமானது நித்யமானது, அவயவம் அற்றது” என்று கூற இயலாது. “பூதாதியில் பிறக்கையாலும்” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்; ஆகாசமானது சப்த தந்மாத்ரையின் ஸ்தூலமான வடிவமாக உள்ளதால், பூதாதிக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை காரணமாக உரைத்தார். அடுத்து, எங்கும் நிறைந்த பொருள் என்றால், அனைத்து இடங்களில் பரவி நிற்கவேண்டும் அல்லவோ? ஆனால் ஆகாசமானது தன்னை உற்பத்தி செய்த அஹங்காரம் போன்ற வஸ்துக்களில் நிறைந்திருப்பதில்லை என்பதால், “எங்கும் நிறைந்த தன்மை” என்பது ஆகாசத்திற்குச் சேராது. பஞ்சீகரணம் என்பதன் விளைவாக, அனைத்து பூதங்களிலும் ஆகாசம் கலந்துள்ளதால், கண்களுக்குப் புலப்படும்படியாகவே உள்ளது; ஆகவே “ஆகாசமானது கண்களுக்குப் புலப்படாதது” என்பதும் பொருந்தது. சூர்ணை (117) - ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே - என்று இவரே கூறினார் அல்லவோ? இதனை ஸ்ரீபாஷ்யம் (2-2-23) – அண்டாந்தர் வர்த்திநச் சாகாசஸ்ய த்ரிவருத் கரணோபதேச ப்ரதர்சித பஞ்சீகரணேந ரூபவத்தவாச் சாக்ஷஷத்வேப்யவிரோத: - அண்டத்திற்குள் உள்ள ஆகாசத்திற்கு த்ரிவ்ருத்கரணம் கூறப்பட்டு, தொடர்ந்து பஞ்சீகரணம் மூலம் ரூபம் உள்ளதாக உபதேசிக்கப்படுவதால், அதனைக் கண்களால் காண இயலும் என்று கூறுவதில் விரோதம் இல்லை - என்பதாக பாஷ்யகாரரும் அருளிச்செய்தார்.