Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 130)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
பாவரூபேண தோற்றுகையாலே அதுவுஞ்சேராது.
அத்தை நிராகரிக்கிறார்.
கடந்த சூர்ணையில் காண்பிக்கப்பட்ட பௌத்த மத கருத்தைத் தள்ளுகிறார்.
(பாவரூபேண) இத்யாதியாலே. அதாவது பாவ ரூபத்வேந அங்கீகரிக்கப்பட்ட ப்ருதிவ்யாதிகளோபாதி “அத்ர சயேந பததி, அத்ர க்ருத்ர: பததி” என்று ச்யேநாதிகளுடைய பதநத்துக்கு தேசமாய்க் கொண்டு, ஆகாசமும் பாவ ரூபேண தோற்றுகையாலே, இத்தை ஆவரணாபாவ ரூபமாகச் சொல்லுகிற அது சேராதென்கை. “அதுவும்” என்று நிஷித்த ஸமுச்சயம். இதுதன்னை, “ஆகாசே சாவிசேஷாத்” என்கிற ஸூத்ரத்திலே, “ஆகாசே ச நிருபாக்க்யதா ந யுக்தா, பாவ ரூபத்வே நாப்யுபகத ப்ருதிவ்யாதிவத் ஆகாசஸ்யாப்யபாதித ப்ரதீதி ஸித்தத்வாவிசேஷாத்; ப்ரதீயதே ஹ்யாகாசோத்ர ச்யேந: பதத்யத்ர க்ருத்ர: பத்தி இதி ச்யேநாதிபதந்தே சத்வேந” என்று தொடங்கி பாஷ்யகாரர் விஸ்தரேண அருளிச் செய்தார்.
இருக்கின்ற பொருள்களாக ஏற்கப்பட்ட பூமி முதலானவை போன்று, “அத்ர சயேந பததி, அத்ர க்ருத்ர: பததி - இந்த ஆகாசத்தில் பறவை பறக்கின்றது, இங்கு கழுகு பறக்கின்றது” என்பதாக, பறவைகள் போன்றவை பறப்பதற்கு இடமாகக் கொண்டு, ஆகாசமும் இருக்கின்ற ஒரு பொருளாகவே புலப்படுகிறது. ஆகவே இப்படிப்பட்ட ஆகாசத்தை, இல்லாத ஒரு பொருளாகக் கூறுவது பொருத்தம் இல்லை. சூர்ணையில் உள்ள “அதுவும்” என்பது, இந்தப் பொருளிலும் இவ்விதம் கூறுவது சேராது என்று உணர்த்த வந்தது ஆகும். இதனை ப்ர. ஸூ. (2-2-33) - ஆகாசே சாவிசேஷாத் - ஆகாச விஷயத்திலும் (பௌத்தர்களின் வாதம்) பொருந்தாது, அங்கும் வேற்றுமை இல்லை என்பதால் - என்ற ஸூத்ரத்தில், “ஆகாசே ச நிருபாக்க்யதா ந யுக்தா, பாவ ரூபத்வே நாப்யுபகத ப்ருதிவ்யாதிவத் ஆகாசஸ்யாப்யபாதித ப்ரதீதி ஸித்தத்வாவிசேஷாத்; ப்ரதீயதே ஹ்யாகாசோத்ர ச்யேந: பதத்யத்ர க்ருத்ர: பத்தி இதி ச்யேநாதிபதந்தே சத்வேந - பூமி முதலானவை போல ஆகாசமும் இருக்கின்ற பொருளாக நீங்கள் ஒப்புக்கொள்வதால், பூமி போன்றவை எவ்விதம் ப்ரத்யக்ஷத்தால் உணரப்படுவதன் காரணமாக வேறு எதனாலும் மறுக்கப்பட இயலாமல் உள்ளதோ, அதே போன்று எந்த வேறுபாடும் இன்றி ஆகாசமும் எதனாலும் மறுக்கப்படாமல் உள்ளது. அத்ர ச்யேந: பததி, அத்ர க்ருத்ர: - அங்கு கழுகு பறக்கிறது, அங்கு பருந்து - என்று கூறுவதற்கு ஏற்ப, கழுகு முதலானவை பறக்கும் இடமாக ஆகாசம் உள்ளது” என்பது தொடக்கமாக பாஷ்யகாரர் விரிவாக அருளிச்செய்தார்.