Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 128)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

பல ஹேதுக்களாலும், ஆகாசாதிகளிலே அந்தர்ப்பூதமாகையாலே அதுவுஞ்சேராது.

அத்தை நிராகரிக்கிறார்.

அவர்களுடைய கருத்தைத் தள்ளுகிறார்.

(பல ஹேதுக்களாலும்) இத்யாதியாலே. அதாவது நாலு பர் நாலு திக்கிலும் நின்றால், நால்வர்க்கும் நடுவான ப்ரதேசம் ஒருவனுக்குக் கிழக்காய், ஒருவனுக்கு மேற்காய், ஒருவனுக்கு வடக்காய், ஒருவனுக்குத் தெற்காய்த் தோற்றாநின்றதிறே. அதுக்கடி, த்ரவ்யமன்றிக்கே ப்ரதியோக்யாநுகுண கல்பநாகமாகை. நால்வர்க்கு நடுவேயிருக்கிற ப்ருதிவ்யாதிகள் த்ரவ்யமாகையாலே, இப்படி விப்ரதிபத்தி விஷயமாகிறதில்லையிறே. இனித்தான், ஆதித்யன் உதிக்கிறவிடம் கிழக்காகவும், அவன் அஸ்தமிக்கிறவிடம் மேற்காகவுமிறே கொள்ளுகிறது. அதுதான் மஹாமேருவுக்கு நாலு பார்ச்சவத்திலும் பேதித்திறே இருப்பது. ஆகையாலேயிறே நாலு பார்ச்வத்திலு முள்ளவர்களுக்கு மஹாமேரு வடக்காயிருக்கிறது. “நைவாஸ்தமயமரீக்கஸய நோதயஸ் ஸர்வதாஸத: உதயாஸ்தமயாக்க்யா ஹி தர்சநாதர்சநம் ரவே: ஸர்வேஷாம் த்வீப வர்ஷாணாம் மேருருத்தரதோ யத:” என்று இதுதான் ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே சொல்லப்பட்டது. இப்படி பல ஹேதுக்களாலும ஆகாசாதிகளிலே அந்தர்பூதமாய், தனக்கென்னவொரு த்ரவ்ய வ்யவஸ்தையில்லாமையாலே திக்கென்று ஒரு த்ரவ்யமுண்டென்கிறவதுவும் சேராதென்கை. “ஆகாசாதி” என்கிற ஆதி சப்தத்தாலே பூமியைச் சொல்லுகிறது. இவற்றிலே, திக்கு அந்தர்பூதமாகையாவது, ஸூர்யனுடைய உதயாதிகளுக்கு ஈடாக இவற்றுக்குள்ளே திக்விபாகத்தைக் கல்பித்துக் கொள்ளுகிற தொழியப் பிரித்துக் காணலாவதொரு வஸ்துவின்றிக்கேயிருக்கை. “அதுவும் சேரா”தென்றது, முன்பேயுமொரு பக்ஷத்தை நிஷேதிக்கையாலே ஸமுச்சயம்.

நான்கு நபர்கள் நான்கு திசைகளில் நிற்பதாக வைப்போம். அவர்களுக்கு நடுவில் உள்ள பகுதியானது ஒருவனுக்குக் கிழக்காகவும், ஒருவனுக்கு மேற்காகவும், ஒருவனுக்குத் தெற்காகவும், ஒருவனுக்கு வடக்காகவும் புலப்படும் அல்லவோ? இதன் காரணம் என்ன? அந்தந்த திசைகளானவை த்ரவ்யம் என்று இல்லாமல், அவரவர்களுக்கு ஏற்படும் கற்பனை மட்டுமே ஆகும். நான்கு நபர்களுக்கு நடுவில் உள்ள பகுதியான ப்ருத்வீ முதலானவை த்ரவ்யம் என்பதால், இவ்விதம் கற்பனையாக அறிவதற்கான விஷயமாக அவை இருப்பது கிடையாது. மேலும் சூரியன் எந்த இடத்தில் உதிக்கிறானோ அதுவே கிழக்கு என்றும், அவன் மறையும் இடமானது மேற்கு என்றும் அல்லவோ கொள்ளப்படுகிறது? அத்தகைய கிழக்கு மற்றும் மேற்கு என்பதான திசைகள், மஹா மேருவிற்கு நான்கு புறத்திலும் சூழ்ந்துள்ளன. எனவேதான் நான்கு புறத்திலும் உள்ளவர்களுக்கு மேருவானது வடக்காக உள்ளது. ஸ்ரீவிபு - நைவாஸ்தமயமரீக்கஸய நோதயஸ் ஸர்வதாஸத: உதயாஸ்தமயாக்க்யா ஹி தர்சநாதர்சநம் ரவே: ஸர்வேஷாம் த்வீப வர்ஷாணாம் மேருருத்தரதோ யத: - எப்போதும் உள்ளதான சூரியனுக்கு உதயம் மற்றும் அஸ்தமனம் இல்லை. சூரியனைக் காண்பது மற்றும் காண இயலாமல் போவது என்னும் விளைவாக மட்டுமே உதயம், அஸ்தமனம் என்று காண்கிறார்கள். அனைத்து த்வீபங்களுக்கும் மேருவானது வடக்காக உள்ளது - என்று கூறப்பட்டது. இப்படியாக பல காரணங்களாலும், ஆகாசம் போன்றவற்றில் திசைகள் அடங்கிவிடுவதால், தங்களுக்கு என எந்த ஒரு த்ரவ்ய நிலையும் அவற்றுக்கு இல்லை என்பதால், திசைகள் என்பதான ஒரு த்ரவ்யம் உள்ளது என்று கூற இயலாது. “ஆசாசாதி” என்பதில் உள்ள “ஆதி” என்பதன் மூலம் பூமியானது கூறப்படுகிறது. இவற்றில் திசைகள் உள்ளடங்கி இருப்பது எப்படி? சூரியனுடைய உதயம் மற்றும் அஸ்தனம் என்பவற்றுக்கு ஈடாக, இந்தத் திசைகளுக்குள் வேறுபாடுகளைக் கற்பனையாகக் கொள்ளுகிற நிலை மட்டுமே உள்ளது அல்லாமல், இவற்றைப் பிரித்துக் காண்பிக்கும் வஸ்து ஏதும் இல்லை. சூர்ணையில் உள்ள “அதுவும் சேராது” என்பதன் பொருள், “முன்பே ஒரு கருத்தைத் தள்ளிய காரணத்தால், அதனையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்பதாகும்.