Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 127)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

பலரும் திக்கென்று தனியேயொரு த்ரவ்யமுண்டென்றார்கள்.

வைசேஷிகாதிகள், ப்ருதிவ்யாதிகளோபாதி திக்கென்றும் தனியேயொரு த்ரவ்யமுண்டென்று சொல்லுகையாலே (பலரும் திக்கென்று தனியேயொரு த்ரவ்யமுண் டென்றார்கள்) என்கிறார். “த்ரவ்யாணி ப்ருதிவ்யப் தேஜோ வாய்வாகாச காலதிகாத்ம மநாமஸி நவைவ” என்றிறே அவர்கள் சொல்லுவது. “பூராபோ ஜ்யோதிரநிலோ நப: காலஸ் ததா திச: ஆத்மா மந இதி ப்ராஹுர் த்ரவ்யாணி நவ தத்வித:” என்றானிறே வரதராஜன்.

வைசேஷிகங்கள் முதலான சிலர், ப்ருதிவி போன்று திக்குகள் என்பதான தனியான ஒரு த்ரவ்யம் உள்ளது என்று கூறுவதால், இந்தச் சூர்ணையை அருளிச் செய்கிறார். தர்க்க ஸங்க்ரஹத்தில் - த்ரவ்யாணி ப்ருதிவ்யப் தேஜோ வாய்வாகாச காலதிகாத்ம மநாமஸி நவைவ - த்ரவ்யங்கள் என்பவை ப்ருதிவி, நீர், அக்னி, வாயு, ஆகாசம், காலம், திசை, ஆத்மா, மனம் என்னும் ஒன்பது - என்று அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, “பூராபோ ஜ்யோதிரநிலோ நப: காலஸ் ததா திச: ஆத்மா மந இதி ப்ராஹுர் த்ரவ்யாணி நவ தத்வித: - பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாசம், காலம், அது போன்றே திசைகள், ஆத்மா மற்றும் மனம் என்பதாக ஒன்பது த்ரவ்யங்கள் உள்ளன என அவற்றைக் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள் – என்று அந்த மதத்தைச் சார்த்த வரதராஜன் கூறினார்.