Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 126)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ப்ரத்யக்ஷத்தாலும் ஆகமத்தாலும் ஸித்திக்கையாலே அது சொல்லவொண்ணாது.

அத்தை நிராகரிக்கிறார்.

அவர்களுடைய கருத்தைத் தள்ளுகிறார்.

(ப்ரத்யக்ஷத்தாலும்) இத்யாதியாலே. ப்ரத்யக்ஷமாவது, ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஸமஸ்த பதார்த்தமும் கால க்ருத பரிணாமமாகவே காணப்படுகிறவிது. ஆகமமாவது ச்ருத்யாதிகள். “கலா முஹூர்த்தா: காஷ்டாச்சாஹோராத்ராச்ச ஸர்வச:”, “மதுச்ச மாதவச்ச வாஸந்திகா வ்ருதூ, சுக்ரச்ச சுசிச்ச க்ரைஷ்மா வ்ருதூ” என்று காலபரிணாம விசேஷங்களான கலை காஷ்டை முஹூர்த்தம் அஹோராத்ரங்கள் ருது விசேஷங்களைச் சொல்லாநின்றதிறே ச்ருதி. “கால ஸ்வரூபம் விஷ்ணோச்ச யந்மயோக்தம் தவாநக:” இத்யாதியாலே ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே இதுதான் விஸ்தரேண சொல்லப்பட்டதிறே. புராணாந்தரங்களிலும் இதிஹாஸாதிகளிலும் இப்படி கண்டு கொள்வது. இதுக்கென்னவே நிர்மிதமாய், அத்யயநாதி காலநியமங்களை ப்ரதிபாதிக்கிற ஜ்யோதிச்சாஸ்த்ரத்தை வேதத்துக்கு த்ருஷ்டியாகச் சொல்லாநின்றதிறே. அந்த சாஸ்த்ரந்தன்னில், “இன்ன காலத்திலே யின்னதுண்டாம்” என்று சொன்னால் அது ப்ரத்யக்ஷிக்கலாயிரா நின்றதிறே. ஆகையால், ப்ரத்யக்ஷத்தாலும் ஆகமத்தாலும் இப்படி ஸித்திக்கையாலே கால அபாவம் சொல்லவொண்ணாதென்கை.

அவர்களுடைய கருத்தைத் தள்ளுகிறார். இங்கு ப்ரத்யக்ஷம் என்றால், “தாவரங்கள் மற்றும் அசையும் பொருள்கள் ஆகிய அனைத்தும், காலத்தால் ஏற்படும் மாற்றங்களை அடைவதாகவே காணப்படுகின்றன” என்பதைக் குறிப்பதாகும். ஆகமம் என்பது ச்ருதிகள் போன்றவை ஆகும். தை. (2-1-8) - கலா முஹூர்த்தா: காஷ்டாச்சாஹோராத்ராச்ச ஸர்வச: - கலை, முஹுர்த்தம், காஷ்டை, அஹோராத்ரம் போன்ற அனைத்தும் – என்றும், யஜுஷி (4) - மதுச்ச மாதவச்ச வாஸந்திகா வ்ருதூ, சுக்ரச்ச சுசிச்ச க்ரைஷ்மா வ்ருதூ – சித்திரையும் வைகாசியும் வஸந்த ருதுக்கள், ஆனியும் ஆடியும் க்ரீஷ்ம ருதுக்கள் - என்றும் உள்ள வாக்கியங்களில், காலத்தின் பரிணாமங்களாகிய கலை, காஷ்டை, முஹூர்த்தம், அஹோராத்ரங்கள், ருதுக்கள் ஆகியவற்றை ச்ருதி கூறியது காண்க. ஸ்ரீவிபு. (1-3-6) – கால ஸ்வரூபம் விஷ்ணோச்ச யந்மயோக்தம் தவாநக: - விஷ்ணுவின் கால ஸ்வரூபம் என்னால் விரிவாகக் கூறப்பட்டது – என்பது போன்ற பகுதியில், காலம் குறித்துக் கூறப்பட்டது. மற்ற புராணங்களிலும் இதிஹாஸங்களிலும் இது போன்றே கூறப்பட்டது. இத்தகைய காலம் குறித்து உரைப்பதற்காகவே ஏற்பட்டதும், அத்யயனம் போன்ற காலத்தின் முறைகளை வெளிப்படுத்துவதும் ஆகிய ஜோதிஷ சாஸ்த்ரமானது, வேதத்தைக் காண்பதற்கு உதவும் கண்கள் என்றே கூறுகிறார்கள். அத்தகைய ஜோதிஷ சாஸ்த்ரத்தில், “இன்ன காலத்தில் இது உண்டாகும்” என்று கூறப்பட்டால், அது கண்களால் காணலாம்படி அல்லவோ உள்ளது? எனவே ப்ரத்யக்ஷம் மற்றும் ஆகமம் ஆகியவற்றால் இவ்விதம் அறியப்படுவதால், காலத்தை “இல்லை” என்று கூற இயலாது.