Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 124)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
காலந்தான் பரமபதத்தில் நித்யம், இங்கு அநித்யமென்றுஞ் சொல்லுவர்கள்.
இங்ஙனன்றிக்கே, இதுக்கு விபூதி விபாகத்தையிட்டு ஒரு பேதம் சொல்லு வாருமுண்டு என்கிறார்.
இவ்விதம் காலமானது ஒரே போன்று உள்ளது என்பதை ஏற்காமல் ஒரு சிலர், காலத்திற்கு “இந்த உலகம், அந்த உலகம்” என்பதான பிரிவு உள்ளதாகக் கூறி, வேறுபாடு உரைப்பார்கள்.
இப்படிச் சொல்லுகைக்கடி பரமபதத்தில் இதுக்கு உத்பத்த்யாதிக ளுண்டாக சாஸ்த்ரங்கள் சொல்லாமையாலும், இந்த விபூதியிலே இதுக்கு உத்பத்த்யாதிகளைச் சொல்லுகையாலும். வ்யூஹ க்ருத்யங்களைச் சொல்லுமிடத்திலே கால ஸ்ருஷ்டியை அநிருத்த க்ருத்யமாகச் சொல்லாநின்றதிறே. ப்ரக்ருதியை ஸ்ருஷ்டிக்கையாவது, மஹதாதி ரூபேண பரிணமிப்பிக்கையானாப்போலே. காலத்தை ஸ்ருஷ்டிக்கையாவது, நிமேஷகாஷ்டாதி ரூபேண பரிணமிப்பிக்கை. ஸதத பரிணாமிநியான ப்ரக்ருதிக்கு மஹதாதி ரூபமான ஸ்த்தூல பரிணாமம் போலேயிறே, ஸதத பரிணமியானவிதுக்கும் நிமேஷாதி ரூபேண பரிணாமம். அந்த மஹதாதியோபாதி நிமேஷாதியானவிதுவும் விநாசவத்தாகையாலே, இவ்வளவைக் கொண்டு, “காலம் இங்கு அநித்யமாயிருக்கும்” என்கிறது. பரமபதத்தில் ஈத்ருச பரிணாம விசேஷ ப்ரயுக்தோத்பத்த்யாதி வ்யவஹார ராஹித்யத்தாலே நித்யமாயிருக்கும் என்கிறது. இப்படி காலத்துக்கு பரிணாமங்கொள்ளாதே ஏகரூபத்வத்தைக் கொண்டு, இப்படியிருந்துள்ள காலந்தான் தன்னுடைய நிமேஷம், காஷ்ட்டை, முஹூர்த்தம், அஹோராத்ரம் தொடக்கமாக, பரார்த்தமீறாகவுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான நிமேஷோந்மேஷங்கள், ஆதித்யகதி தொடக்கமான அவச்சேதங்களோடே ஸம்பந்தித்திருக்கும். ஆகையாலே க்ஷணலவாதிபேத வ்யவஹாரமுண்டாகிறதென்று சொல்லுவதும் ஒரு பக்ஷமுண்டிறே. இதுவிறே தத்வத்ரய விவரணத்தில் ஆச்சான்பிள்ளை ப்ராதாந்யேந அருளிச்செய்தது. அந்த பக்ஷத்தில் உபய விபூதியிலும் காலஸ்வரூபம் ஏகரூபமாயிருக்குமாகையாலே, “பரமபதத்தில் நித்யம், இங்கு அநித்யம்” என்கிறவிது சொல்லப்போகாது. ஆகையால் இது பரிணாம பக்ஷத்தை அவலம்பித்துச் சிலர் சொன்னதென்று கொள்ளவேணும். நம்முடைய தர்சந ஸ்த்தாநங்களிலே இங்ஙனேயும் சிலரருளிச் செய்கையாலே அத்தையும் தர்சிப்பித்தருளினாராயிற்று.
“காலமானது பரமபதத்தில் எப்போதும் உள்ளது, இந்த விபூதியில் அநித்யமானது” என்று சிலர் கூறுவர். இவ்விதம் கூறுவதற்கான அடிப்படை என்ன? பரமபதத்தில் இதற்கு உற்பத்தி உள்ளதாகக் சாஸ்த்ரங்கள் கூறுவதில்லை; இந்த லோகத்தில் இதற்கு உற்பத்தி உள்ளதாகக் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. வ்யூஹங்களுடைய செயல்பாடுகள் குறித்து உரைக்கும் இடங்களில், காலத்தில் ஸ்ருஷ்டியை அநிருத்தனுடைய செயலாகக் கூறுவதாலும் ஆகும். ப்ரக்ருதியைப் படைத்தல் என்பது, மஹத் முதலானவற்றை மாற்றம் அடையச்செய்தல் மூலம் ஆகும்; அதே போன்று காலத்தைப் படைத்தல் என்றால், நிமேஷம் மற்றும் காஷ்டை முதலானவையாக மாறும்படிச் செய்தல் ஆகும். எப்போதும் மாறுபாடு அடைந்தபடியாக உள்ள ப்ரக்ருதிக்கு, மஹத் போன்றவை ஸ்தூல பரிணாமங்களாக உள்ளது போன்று, எப்போதும் மாறியபடி உள்ள காலத்திற்கு, நிமேஷம் போன்றவை ஆகின்றன. மஹத் முதலான தத்வங்கள் போன்று, நிமேஷம் முதலானவையும் அழிவு முதலானவற்றைக் கொண்டுள்ளன. இப்படியாக உள்ள பலவற்றின் விளைவாக, காலமானது இங்கு அநித்யமாக உள்ளது என்றாகிறது. பரமபதத்தில் காலமானது, இப்படிப்பட்டதான மாற்றங்களின் சிறப்பாக உள்ள உற்பத்தி போன்ற ஏதும் இன்றி உள்ளதால், நித்யமாக உள்ளது என்றாகிறது. இப்படி காலத்திற்கு மாறுபாடு கொள்ளாமல், ஒரே போன்றுள்ள தன்மையைக் கொண்டு, இவ்விதமாக உள்ள காலமானது தனது நிமேஷம், காஷ்டை, முகூர்த்தம், அஹோராத்ரம் என்பது தொடக்கமாக பரார்த்தம் முடிய உள்ளதான சிறப்பான விவகாரங்களுக்குக் காரணமாக உள்ள நிமேஷங்கள், சூரியனின் பாதை போன்றுவற்றுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. எனவே “சிறிய காலம், பெரிய காலம்” என்பது போன்ற வேறுபாடுகள் உள்ளதாகச் சிலர் கூறுவர். இதனையே தத்வத்ரய விவரணத்தில் ஸ்வாமி ஆச்சான்பிள்ளை முதலில் அருளிச்செய்தார். அந்தக் கருத்தில், இரண்டு விபூதிகளிலும் காலமானது ஒரே போன்று காணப்படும் என்பதால், “பரமபதத்தில் நித்யம், இந்த உலகத்தில் அநித்யம்” என்று கூற இயலாமல் போகும். எனவே இந்த க்கருத்தானது, மாற்றம் அடையும் தன்மைகள் காரணமாக ஒரு சிலர் கூறியதாகக் கொள்ளவேண்டும். நம்முடைய தர்சனத்தில் உள்ளவர்களில் சிலர் இவ்விதம் கூறியதால், அதனையும் எடுத்துக் கொண்டு இங்கு உரைத்தார் என்று கருத்து.