Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 123)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இதில், முற்பட்ட அசித்துக்குக் கீழெல்லையுண்டாய் சுற்றும் மேலுமெல்லை யின்றிக்கேயிருக்கும்; நடுவில் அசித்துக்குச் சுற்றுங் கீழுமெல்லையின்றிக்கே, மேலெல்லையுண்டாயிருக்கும்; காலம் எங்குமொக்கவுண்டாயிருக்கும்.
அநந்தரம், த்ரிவித அசித்தினுடையவும் பரிணாமங்களை அருளிச்செய்கிறார் (இதில் முற்பட்ட அசித்துக்கு) என்று தொடங்கி.
அடுத்து, மூன்றுவிதமான அசித் வஸ்துக்களுடைய வளர்ச்சி மாற்றங்களை அருளிச்செய்கிறார்.
பூர்வ அசித்துக்குக் கீழெல்லையுண்டு என்கிறது, மிச்ர ஸத்வாவதியாகையாலே. நடுவில் அசித்துக்கு மேலெல்லையுண்டென்கிறது, சுத்த ஸத்வாவதியாகையாலே. காலத்துக்கு அங்ஙனொரு அவச்சேதமில்லாமையாலே, எங்குமொக்கவுண்டாயிருக்கும் என்கிறது. இப்படி, ஸார்வத்ரிகமான காலந்தான், உபயவிபூதியிலும் நித்யமென்றிறே தமக்குத் திருவுள்ளம்.
(முன்பு கூறப்பட்டதான சுத்தஸத்வமானது, மிச்ரஸத்வத்தின் மேலே உள்ளதாகக் கொண்டு படிக்கவும்) மிச்ரஸத்வத்துக்கு மேல் எல்லை என்பது முடிவாக உள்ளதால், முதலில் கூறப்பட்டதான சுத்த ஸத்வத்திற்கு கீழ் எல்லை உண்டு என்றாகிறது. நடுவில் உள்ளதான மிச்ரஸத்வத்திற்கு மேல் எல்லை உண்டு என்றாகிறது; ஏனெனில், அதன் மேல் எல்லை என்பது சுத்தஸத்வத்தின் முடிவாக உள்ளதால் ஆகும். காலம் என்பதற்கு எவ்விதமான எல்லையும் இல்லை. ஆகவே அது எங்கும் ஒரே போன்று, எப்போதும் உள்ளது. இப்படியாக எங்கும் உள்ள காலமானது, இரண்டு விபூதிகளிலும் எப்போதும் இருக்கிறது என்பதே இவருடைய திருவுள்ளமாகும்.