Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 122)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

போக்யங்களாகிறன விஷயங்கள்; போகோபகரணங்களாகிறன சக்ஷுராதி கரணங்கள்; போகஸ்த்தாநஙகளாகிறன சதுர்தச புவநமும் ஸமஸ்ததேஹமும்.

அந்த விபூதியில் போக்யங்களாவன அப்ராக்ருதமான சப்தாதிகள்; போகோபகரணங்களாவன திவ்யமால்யாதிகளும் சதத்சாமராதிகளும், கரணங்கள்தானும்; போகஸ்த்தானங்களாவன அப்ராக்ருத ரத்நமயமான மண்டபமென்ன, மாளிகையென்ன இத்யாதிகளும், பஞ்சோபநிஷந்மயமான திவ்யவிக்ரஹங்களும். இப்படி நித்யவிபூதி ப்ரக்ரியையும் இவ்விடத்திலே அருளிச்செய்ய வேண்டியிருக்க ஸங்கோசித்து லீலாவிபூதி ப்ரக்ரியா மாத்ரத்தை அருளிச்செய்கிறார் (போக்யங்களாகிறன) என்று தொடங்கி.

அந்தப் பரமபதத்தில் உள்ள இன்பங்கள் என்பவை இந்த உலகை காண இயலாத ஒலி போன்றவை; இன்பத்தை அனுபவிக்கப் பயன்படும் கருவிகள் என்பவை திவ்யமான மாலைகள், குடை, சாமரங்கள், இவற்றை உபயோகப்படுத்தவல்ல உறுப்புகள் போன்றவை; இன்பங்களை அனுபவிக்கத்தக்க இடங்கள் என்பவை இந்த உலகில் காண இயலாத இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மண்டபங்கள் மாளிகைகள், “பரமேஷ்டி, புமாந், விச்வம், நிவ்ருத்தி மற்றும் ஸர்வம்” என்பதான ஐந்து அம்சங்கள் சேர்ந்த திவ்ய விக்ரஹங்கள் போன்றவை ஆகும். இப்படியாக நித்யவிபூதியின் செயல்களையும் இந்த இடத்தில் அருளிச்செய்யவேண்டியதாக உள்ளபோது, அவற்றைச் சுருக்கி, லீலா விபூதியில் செய்யப்படும் செயல்கள் குறித்து மட்டுமே அருளிச்செய்கிறார்.

இதுதானே உபயவிபூதிக்குமானாலோ? என்னில், போகோபகரணங்களில் ப்ரதாநங்கள் சொல்லாமையாலும், போகஸ்த்தாநங்களில் வைஷம்யத்தாலும் சேராது. இங்கு, சேதநர்க்கு போகமாவது ஸுகதுக்கரூபமான அநுபவ ஜ்ஞாநம். அந்த ஜ்ஞாநத்துக்கு விஷயமாகையாலே சப்தாதி விஷயங்கள் போக்யங்கள். அந்த ஜ்ஞாநத்துக்கு உபகரணங்களாகையாலே இந்த்ரியங்கள் போகோபகரணங்கள். யாதொரு அதிகரணத்திலே நிற்கிற சேதநனுக்கு அந்த ஜ்ஞாநம் பிறக்கிறது, அது போகஸ்த்தாந சப்தத்துக்கு அர்த்தமாகையாலே, போகஸ்த்தாநங்களென்று லோகங்களையும் தேஹங்களையும் சொல்லுகிறது. லோகவிபாகம் கீழே சொல்லப்பட்டது. ஸமஸ்த தேஹங்களாவன ஸுர நர திர்யக் ஸ்த்தாவராத்மகமான சரீரங்கள். ஈச்வரனுக்கு இந்த விபூதியிலுண்டான போக்ய போகோபகரணாதிகளையும், அவதார கந்தமான க்ஷீரார்ணவ சயநத்திலும் அவதார விசேஷங்களிலும், அர்ச்சாவதாரங்களிலுமுண்டான விநியோக விசேஷங்களாலே கண்டு கொள்வது.

இந்த ஐந்தும், இரண்டு விபூதிகளுக்கும் உள்ளது என்று கூறலாம் அல்லவா என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். இன்பத்தை அனுபவிக்கும் கருவிகளில் முதன்மையானவற்றைக் கூறாமல் இருந்ததாலும், இன்பத்தை அனுபவிக்கும் இடங்களில் உள்ள ஏற்றத்தாழ்வின் காரணத்தாலும், இவை அனைத்தும், இரண்டு விபூதிகளுக்கும் சேராது. இந்த உலகில் உள்ளபோது சேதநர்களுக்கு இன்பம் என்பது, இன்பதுன்பங்கள் வடிவில் உள்ள அனுபவ ஞானம் ஆகும். அத்தகைய ஞானத்திற்கு விஷயமாக உள்ளதால், சப்தம் போன்றவை அந்த இன்பங்கள் ஆகும். அந்த ஞானத்திற்கு உதவியாக இந்த்ரியங்கள் உள்ளதால், அவை அனைத்தும் இன்பத்தை அனுபவிக்க உதவும் கருவிகள் ஆகும். எந்த ஒரு இடத்தில் சேதநன் நிற்கும்போது, அத்தகைய ஞானம் ஏற்படுகிறதோ, அந்த இடமே இன்பத்தை அனுபவிக்கும் இடம் என்பதால், “இன்பத்தை அனுபவிக்கும் இடங்கள்” என லோகங்களும், சரீரங்களும் கூறப்பட்டன. லோகத்தில் உள்ள வேறுபாடுகள் முன்பே கூறப்பட்டன. “ஸமஸ்த தேஹம்” என்றால் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் என்பதான சரீரங்கள் ஆகும். ஈச்வரனுக்கு இந்த உலகில் ஏற்படும் இன்பங்கள் மற்றும் அவற்றை அனுபவிக்கும் கருவிகளை, “அவதாரங்கள் எடுப்பதற்குக் காரணமாக உள்ள திருப்பாற்கடலில் சயனித்தல், அவதாரங்களில் உள்ள சிறப்புகள், அர்ச்சாவதாரத்தில் உள்ள ஸௌளப்யம் போன்றவை” முதலானவற்றில் அறிக.