Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 121)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
மற்றையிரண்டசித்தும், ஈச்வரனுக்கும் ஆத்மாவுக்கும் போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களாயிருக்கும்.
த்ரிவித அசித்தையும் அருளிச்செய்கிறவிடத்தில் அவனுக்கு போக உபகரணமான கௌரவத்தைப் பற்ற சுத்த ஸத்வத்தை ப்ரதமமருளிச்செய்தார். அநந்தரம், அவனுடைய லீலைக்கு ப்ரதாந உபகரணமாய்க் கொண்டு ப்ரதாந சப்தவாச்யமான மிச்ரஸத்வத்தை அருளிச்செய்தார். அநந்தரம், அந்த ப்ரதாந பரிணாமத்துக்கு ஸஹகாரியாய்க் கொண்டு லீலோபகரணமாயிருக்கும் ஸத்வ சூந்யத்தை அருளிச் செய்தார். இப்படி அசித் த்ரயத்தையும் சொல்லுகிறவிடத்தில், “ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்” என்று, காலதத்துவத்துக்கு விநியோகம் சொன்னவோபாதி பூர்வ அசித் த்வயத்துக்கும் விநியோகம் சொல்லப் பட்டதில்லையிறே; அத்தை அருளிச்செய்கிறார் மேல்.
மூன்றுவிதமான அசித் வஸ்துக்களைக் குறித்து அருளிச்செய்யும்போது, ஸர்வேச்வரனுக்கு இன்பங்களை அனுபவிக்கத் துணையாக உள்ளதான பெருமையை உணர்த்த, முதலில் சுத்தஸத்வம் குறித்து அருளிச்செய்தார். அடுத்து, அவனுடைய லீலைகளுக்கு முதன்மையான உபகரணமாக உள்ளதன் காரணமாக, ப்ரதானம் என்ற சொல்லின் பொருளாக உள்ள மிச்ரஸத்வம் குறித்து அருளிச்செய்தார். அடுத்து, அந்த ப்ரதானம் என்பது மாற்றங்கள் அடைவதற்குத் துணையாக உள்ள காரணத்தால், லீலைக்கு உபகரணமாக உள்ளதான ஸத்வசூந்யம் குறித்து அருளிச்செய்தார். இப்படியாக மூன்று அசித்துக்கள் குறித்து அருளிச்செய்யும் இந்த இடத்தில், சூர்ணை (120) – ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய் - என்பதாக, காலத்திற்கு ஏற்ற பயன் கூறியது போன்று, முதலில் உள்ள இரண்டு அசித் வஸ்துக்களுக்குப் பயன் கூறப்படவில்லை அல்லவோ? அதனை இப்போது அருளிச்செய்கிறார்.
(மற்றையிரண்டு அசித்தும்) என்று தொடங்கி. ஈச்வரனுக்கும் ஆத்மாவுக்கும் என்றது, சேதநரிறே அசேதநத்துக்கு போக்தாக்கள்; சேதநராகவுள்ளது ஈச்வரனும் ஆத்மாவுமிறே; ஆனபின்பு, உபயர்க்கும் போக்யாதிகளாயிருக்குமென்றபடி. “ஆத்மாவுக்கும்” என்ற ஏகவசநம், ஜாத்யபிப்ராயமாகையாலே த்ரிவித சேதநரையும் சொல்லுகிறது. இப்படி, உபய அசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளாயிருந்ததேயாகிலும், கேவல பகவதிச்சையாலே தத் போகார்த்தமாக பரிணமிக்கையாலும், அநவரத அபரோக்ஷித ஸ்வ பர ஸ்வரூபரான நித்யமுக்தரில், “திருமகளும் நீயும்” என்கிறபடியே அம்மிதுநத்தினுடைய போகத்துக்குக கைதொடுமானமா யிருக்குமதொழிய, “அஹம் மம” என்றிருப்பாரில்லாமையாலும், சுத்தஸத்வத்தினுடைய விநியோகம் ஈச்வர ப்ரதாநமா யிருக்கும். அங்ஙனன்றிக்கே, சேதந கர்மாநுகுணமாக பகவத் ஸங்கல்பத்தாலே பரிணமிக்கையாலும், சேதநரெல்லாரும் தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியைப் பண்ணி ஸ்வதந்த்ர போக்தாக்களாயிருக்கையாலும், ஈச்வரனுக்கு இந்த விபூதியில் லீலாரஸமே ப்ரசுரமாய் போக ரஸம் அத்யல்பமாகையாலும், மிச்ரஸத்வத்தினுடைய விநியோகம் பத்தசேதந ப்ரதானமாயிருக்கும்.
“ஈச்வரனுக்கும் ஆத்மாவிற்கும்” என்று ஏன் கூறினார்? அசேதநத்தை அனுபவிப்பது சேதநர்கள் என்பதால் ஆகும். சேதநர்களாக உள்ளவர்கள், ஈச்வரனும் ஆத்மாவும் ஆவர். ஆகவே அசித் வஸ்துக்கள், இந்த இருவருக்கும் இன்பம் அளிக்கவல்லவையாக இருக்கும் என்று கருத்து. “ஆத்மாவுக்கு” என்று ஒருமையில் கூறப்பட்டது, “ஆத்ம ஜாதி” என்ற ஒன்றை உணர்த்தவே ஆகும்; இது மூன்றுவிதமான உள்ள சேதநர்களைக் குறிப்பதாகும். இவ்விதம் இரண்டு அசித்துக்களும், இந்த இருவருக்கும் இன்பம் அளிக்கக்கூடியதாக உள்ளபோதிலும், பகவானின் விருப்பம் காரணமாக மட்டுமே இவ்விதம் இன்பம் அளிக்கவல்லதாக அவை மாறுகின்றன என்பதாலும்; அனைத்து காலங்களிலும் தங்களையும் பகவானையும் நேரில் காணக்கூடிய ஸ்வரூபம் கொண்ட நித்யமுக்தர்களில், திருவாய்மொழி (4-9-10) – திருமகளும் நீயும் - என்பதற்கு ஏற்ப எம்பெருமான் மற்றும் பெரியபிராட்டியார் ஆகிய இருவருடைய இன்பத்திற்குக் கருவியாக இருப்பது அல்லாமல், “நான், என்னுடையது” என்று இவற்றை உரிமை கொள்ள யாரும் இல்லை என்பதாலும் சுத்தஸத்வத்தின் பயன் என்பது, ஈச்வரனுக்கு மட்டுமே முதன்மையானதாக இருக்கும். மிச்ர ஸத்வமானது இது போன்று அல்லாமல், சேதநர்களுடைய வினையில் காரணமாக பகவத் ஸங்கல்பத்தால் மாற்றங்கள் அடைகிறது என்பதாலும்; சேதநர்கள் அனைவரும் தாங்கள் எடுக்கின்ற தேவர்கள் முதலான சரீரங்களில் “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் சுதந்திரமானவர்கள் என்று எண்ணி அனுபவித்தபடி உள்ளதாலும்; ஈச்வரனுக்கு இந்த உலகில் லீலையை அனுபவித்தல் என்பதே முதன்மையானதாக, இன்பத்தின் அனுபவம் குறைவாக இருப்பதாலும், மிச்ரஸத்வத்தின் பயன் என்பது பந்தப்பட்ட சேதநர்களுக்கு மட்டுமே முதன்மையானதாக உள்ளது.