Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 120)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இது, ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய், கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய், நித்யமாய், ஈச்வரனுக்கு க்ரீடாபரிகரமாய், சரீர பூதமாயிருக்கும்.

இதினுடைய ப்ரகாரம் ஏது என்னுமாகாங்க்ஷையிலே சொல்லப்படுகிறது மேல்.

ஸத்வ சூந்யத்தின் தன்மை என்ன என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.

(இது ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்) ப்ரக்ருதியென்கிறது அவ்யக்தத்தை. ப்ராக்ருதமென்கிறது வ்யக்தத்தை. ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு காலதத்வம் ஹேதுவாகையாவது, இவற்றை ஸ்வஸங்கல்பாதிகளாலே பரிணமிப்பிக்கிற ஸர்வேச்வரன், காலத்தினுடைய அவஸ்த்தா விசேஷங்களைப் பார்த்துக் கொண்டிருந்து, அவ்வவ காலங்கள் வந்தவாறே இவற்றை நிர்வஹிக்கையாலே, இவற்றினுடைய பரிணாமங்களுக்கு இது அவச்யாபேக்ஷிதமா யிருக்கை. – “ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிச்யாத்மேச்சயா ஹரி:, க்ஷோபயாமாஸ ஸம்ப்ராப்தே ஸர்க்ககாலே வ்யயாவயயௌ”, “காலே சம்ஸதி யோக்யதாம் சிதசிதோரந் யோந்யமாலிங்கதோ பூதாஹங்க்ருதி புத்திபஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தீந்த்ரியை:, அண்டாநாவரணைஸ் ஸஹஸ்ரமகரோத்” என்கிறபடியே ஜகத்ஸ்ருஷ்டி பண்ணுகிறபோது அக்காலம் வருமளவும் பார்த்துக் கொண்டிருந்திறே ஸ்ருஷ்டித்தது. இதுதான் ஸ்த்தித்யாதிகளுக்குமொக்குமிறே. இப்படி, கால ப்ரதாநமாக ஸர்வேச்வரன் நிர்வஹித்தருளுகையாலே, இவ்விபூதியில் ஸகல பதார்த்தமும் காலக்ருத பரிணாமமா யிருக்கும். இவற்றினுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேதுவென்னுமிடம், இதினுடைய அந்வய வ்யதிரேகங்களாலே லௌகிக பதார்த்தங்களிலே காணலாமிறே. ஆகையால், காலத்தினுடைய ப்ரக்ருதி ப்ராக்ருத பரிணாம ஹேதுத்வம், ஆகமத்தாலும் ப்ரத்யக்ஷத்தாலும் ஸித்தம். – அநந்தரம், கீழ்ச்சொன்னதுக்கு உபயோகியான இதின் பரிணாம விசேஷத்தைச் சொல்லுகிறது. (கலாகாஷ்ட்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்) “காஷ்ட்டா பஞ்சதச க்யாதா நிமேஷா முநிஸத்தம, காஷ்டா த்ரிம்சத் கலா த்ரிம்சத் கலா மௌஹூர்த்தி கோ விதி:, தாவத் ஸங்க்யைரஹோராத்ரம் முஹூர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம்; அஹோராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக:; தைஷ்ஷட்பிரயநம் வர்ஷம் த்வேயநே தக்ஷிணோத்தரே; அயநம் தக்ஷிணம் ராத்ரி தேவாநாமுத்தரம் திநம்; திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ்து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞிதம்; சதுர்யுகம் த்வாதசபிஸ் தத் விபாகம் நிபோதமே சத்வாரி த்ரீணி த்வேசைகம் க்ருதாதிஷு யதாக்ரமம்; திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு: புராவித:; தத் ப்ரமாணைச்சதைஸ் ஸந்த்யா பூர்வா தத்ராபிதீயதே; ஸந்த்யாம்சகச்ச தத் துல்யோ யுகஸ்யாநந்தரோ ஹி ஸ:; ஸந்த்யா ஸந்த்யாமசயோரந்தர்ய: காலோ முநிஸத்தம; யுகாக்யஸ் ஸ து விஜ்ஞேய: க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞித:” என்று தொடங்கி, “ஏவந்து ப்ரஹ்மணோ வர்ஷமேவம் வர்ஷசதந்து தத், சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந:” என்னுமதளவாக காலத்தினுடைய பரிணாம விசேஷம் ஸ்ரீபராசரபகவானாலே கதிதமாயிற்று. – இது தன்னை நடுவில்திருவீதிப்பிள்ளைபட்டர், “நிமேஷம் பதினைந்து கொண்டது காஷ்டை. காஷ்டை முப்பது கொண்டது கலை. கலை முப்பது கொண்டது முஹூர்த்தம். முஹூர்த்தம் முப்பது கொண்டது திவஸம். திவஸம் முப்பது கொண்டது பக்ஷ த்வய ரூபமான மாஸம். மாஸமிரண்டு கொண்டது ருது. ருது மூன்று கொண்டது அயநம். அயநமிரண்டு கொண்டது ஸம்வத்ஸரம். இப்படி மாநுஷ ஸம்வத்ஸரம் முந்நூற் றறுபது கொண்டது ஒரு தேவ ஸம்வத்ஸரம். தேவ ஸம்வத்ஸரம் பன்னீராயிரங் கொண்டது சதுர்யுகம். அதில் க்ருதயுகம் நாலாயிரம், த்ரேதை மூவாயிரம், த்வாபரம் இரண்டாயிரம், கலியுகம் ஆயிரம். க்ருதயுகத்துக்கு பூர்வஸந்த்யை நானூறு, அபரஸந்த்யை நானூறு. த்ரேதைக்கு பூர்வஸந்த்யை முந்நூறு, அபர ஸந்த்யை முந்நூறு. த்வாபரத்துக்கு பூர்வஸந்த்யை இருநூறு, அபரஸந்த்யையிருநூறு. கலியுகத்துக்கு பூர்வஸந்த்யை நூறு, அபரஸந்த்யை நூறு. இப்படி எழுபத்தொன்று சென்ற சதுர்யுகம் ஒரு மந்வந்தரம். இப்படி பதினாலு மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம். இது ப்ரஹ்மாவுக்கு ஒரு பகல். ராத்ரியும் இத்தோடே ஸமமாயிருக்கும். இப்படி, அஹோராத்ரங்களும் மாஸ ஸம்வத்ஸரங்களுமாகப் பெருக்கி, சதாந்தமாக பரிகணிதமான ப்ரஹ்ம ஆயுஸ்ஸுக்கு பரமென்று பேராம்” என்று ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார். ஆக காலத்தினுடைய கலா காஷ்ட்டாதி ரூப பரிணாம ப்ரகாரம் சொல்லப்பட்டது. (நித்யமாய்) இவ்விடத்தில் நித்யத்வமாவது, “அநாதிர் பகவாந் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே” என்கிறபடியே ஆதி அந்தரஹிதமாகை. (ஈச்வரனுக்கு க்ரீடாபரிகரமாய்) அதாவது நிகில ஜகதுதய விபவ லய லீலனான ஸர்வேச்வரனுக்கு தத்தல்லீலோலாப கரணமாகை. ப்ரக்ருதி புருஷ காலங்கள் மூன்றும் லீலோப கரணமாயிறே இருப்பது. அதில், ப்ரக்ருதி புருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கர்மீபவித்து லீலோப கரணமாவர்கள். இது, ஸஹகாரித்வேந லீலோப கரணமாயிருக்கும்; ஈச்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர்வஹிக்குமிடத்தில், ஸத்ய ஸங்கல்பனான தான் அடியில் பண்ணி வைத்த காலநியமம் தப்பாதபடி அவ்வவ காலா கமநம் பார்த்திருந்தே நிர்வஹிக்கையாலே இதுதன்னை நிமேஷ காஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே, இதுதான் ஸ்ருஷ்டி விஷயமுமாயிறே இருப்பது. ஆக இப்படிகளாலே, ஈச்வரனுக்கு க்ரீடா பரிகரமாயிருக்கும். இத்தை க்ரீடா பரிகரமென்றே சொல்லுகையாலே, கால க்ருத பரிணாமமேயாய்ச் செல்லுகிற லீலாவிபூதியிலே இதுக்கு விநியோகம். “ந காலஸ் தத்ர வை ப்ரபு:” என்கிற போகவிபூதியில் இது கொண்டு அபேக்ஷையில்லை என்றதாயிற்று. – அநந்தரம், ஏவம்பூதமான காலதத்வம் ஈச்வரனுக்கு அப்ருதக் ஸித்த விசேஷணமாயிருக்கும்படியை அருளிச்செய்கிறார், (சரீர பூதமாயிருக்கும்) என்று. “பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ: பரமம் த்விஜ, வ்யக்தாவ்யக்தே ததைவாந்யே ரூபே காலஸ் ததா பரம்”, “ப்ரதாந புருஷா வ்யக்த காலாஸ்து ப்ரவிபாகச:, ரூபாணி ஸ்திதி ஸர்காந்த வ்யக்தி ஸத்பாவ ஹேதவ:”, “விஷ்ணோ: ஸ்வரூபாத் பரதோதிதே த்வே ரூபே ப்ரதாநம் புருஷச்ச விப்ர, தஸ்யைவதேந்யேந த்ருதே வியுக்தே ரூபாந்தரம் தத் த்விஜ காலஸம்ஜ்ஞம்” என்னக்கடவதிறே. ஒரு சேதநனோடு ஒரு த்ரவ்யத்துக்குண்டான ப்ருதக்ஸித்த்யநர்ஹ ஆதார ஆதேய பாவமும், நியந்த்ரு நியாம்ய பாவமும், சேஷசேஷி பாவமும் ஓரொன்றே சரீரலக்ஷணமாயிறே இருப்பது. கால ஸம்ஜ்ஞக அசித் த்ரவயத்துக்கு ஏதத் ஸம்பந்த த்ரயமும் ஈச்வரனோடே உண்டாகையாலே, இது அவனுக்கு சரீரமாயிருக்குமென்றதாயிற்று. – இப்படி, ப்ரக்ருத்யாதி பரிணாம ஸஹகாரியான காலம், ஈச்வரனுக்கு சரீரமாயிருக்கும் என்கையாலே, ஸஹகாரிகாரணமும ஈச்வரனே என்னுமதுக்கு விரோதமில்லை. ஆக, ஸத்வசூந்யமாகிறது இன்னதென்றும், அது செய்யும் கார்யமும், அதுக்குறுப்பான அதினுடைய பரிணாமமும், அதினுடைய அநாதிநிதநத்வமும், அதுதான் ஈச்வரனுக்கு இன்னதுக்கு பரிகரமாயிருக்குமென்றும், அதுதான் அவனுக்கு சரீரமா யிருக்குமென்றும் சொல்லி நின்றது.

ப்ரக்ருதி என்பது அவ்யக்தத்தைக் குறிப்பதாகும். ப்ராக்ருதம் என்பது கண்களுக்குப் புலப்படும் தத்வம். ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதம் ஆகியவற்றின் மாற்றங்களுக்குக் காலம் எவ்விதம் காரணமாக உள்ளது? இதற்கு விடை அருளிச் செய்கிறார். இவற்றைத் தனது ஸங்கல்பம் மூலம் மட்டுமே மாற்றம் அடையச் செய்யும் ஸர்வேச்வரன், காலத்தின் செயல் நிலை சிறப்புகளை நோக்கிக் கொண்டிருப்பவனாக, அந்தந்த காலங்கள் வந்தவுடன் இவற்றை நிர்வாகம் செய்வதால், இவை மாற்றம் அடைவதற்குக் காலமானது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஸ்ரீவிபு. (1-2-35) – ப்ரக்ருதிம் புருஷம் ச ஏவ ப்ரவிச்யாத்மேச்சயா ஹரி: க்ஷோபயாமாஸ ஸம்ப்ராப்தே ஸர்க்ககாலே வ்யயாவயயௌ – ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன், மாற்றம் அடைந்தும் மாற்றம் அடையாமலும் உள்ள ப்ரக்ருதி மற்றும் புருஷன் என்ற ஆத்மா ஆகியவற்றில் ஸ்ரீஹரி உட்புகுந்து, தனது ஸங்கல்பத்தால் கலக்கினான் - என்றும், ஸ்ரீகுணரத்னகோசம் (19) – காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ: பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை: அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத: ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய: - ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும் ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன. அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகியமணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான். அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, இந்த ஜகத்தை ஸ்ருஷ்டி செய்யும் ஸர்வேச்வரன், அவ்விதம் ஸ்ருஷ்டிக்கும் காலம் வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தான், அதன் பின்னர் ஸ்ருஷ்டித்தான். இந்தக் கருத்தானது, இருப்பு போன்றவற்றுக்கும் பொருந்தும். இவ்விதம் காலத்தை முக்கியமான தத்வமாகக் கொண்டு ஸர்வேர்வரன் அனைத்தையும் நிர்வகித்து அருள்வதால், இந்த லீலாவிபூதியில் உள்ள அனைத்து வஸ்துக்களும் காலத்தால் மாற்றம் அடைவதாக இருக்கும். இவற்றின் மாற்றங்களுக்குக் காலமானது காரணமாக உள்ளது என்ற கருத்தானது, இதன் உடன்பாடு மற்றும் எதிர்மறை மூலமாக, அனைத்து வஸ்துக்களிலும் காணலாம் அல்லவோ? எனவே காலத்தின் ப்ரக்ருதியாகிய மூலப்பகுதியும், ப்ராக்ருதம் என்பதான மஹத் தத்வம் போன்ற தத்வங்களுடைய மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது என்னும் கருத்தானது, வேதங்களாலும் நேரடியாக அறிதல் மூலமும் தெளிவாகிறது. அடுத்து இதுவரை கூறப்பட்டவற்றுக்குப் பயனாக உள்ள காலத்தின் சிறப்பு குறித்துக் கூறப்படுகிறது. (கலாகாஷ்ட்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்) - ஸ்ரீவிபு. (1-3) - காஷ்ட்டா பஞ்சதச க்யாதா நிமேஷா முநிஸத்தம, காஷ்டா த்ரிம்சத் கலா த்ரிம்சத் கலா மௌஹூர்த்தி கோ விதி:, தாவத் ஸங்க்யைரஹோராத்ரம் முஹூர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம்; அஹோராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக:; தைஷ்ஷட்பிரயநம் வர்ஷம் த்வேயநே தக்ஷிணோத்தரே; அயநம் தக்ஷிணம் ராத்ரி தேவாநாமுத்தரம் திநம்; திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ்து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞிதம்; சதுர்யுகம் த்வாதசபிஸ் தத் விபாகம் நிபோதமே சத்வாரி த்ரீணி த்வேசைகம் க்ருதாதிஷு யதாக்ரமம்; திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு: புராவித:; தத் ப்ரமாணைச்சதைஸ் ஸந்த்யா பூர்வா தத்ராபிதீயதே; ஸந்த்யாம்சகச்ச தத் துல்யோ யுகஸ்யாநந்தரோ ஹி ஸ:; ஸந்த்யா ஸந்த்யாமசயோரந்தர்ய: காலோ முநிஸத்தம; யுகாக்யஸ் ஸ து விஜ்ஞேய: க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞித: - முனிவர்களில் சிறந்தவரே! பதினைந்து நிமேஷங்கள் கொண்டது ஒரு காஷ்டை ஆகும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலையாகும். முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம் ஆகும். இப்படிப்பட்ட முகூர்த்தங்கள் மூலம், பகல் மற்றும் இரவு என்பதாகிய ஒரு மனித நாள் உள்ளது. பகல் மற்றும் இரவு என்னும் முப்பது நாள்கள் கொண்டதாக, இரண்டு பக்ஷங்கள் கொண்ட ஒரு மாதம் உள்ளது. இப்படிப்பட்ட ஆறு மாதங்கள் கொண்டதாக உள்ள இரண்டு அயனங்களுடன் கூடிய வருடம் உள்ளது. தேவர்களுக்கு உத்தராயனம் என்பது பகல், தக்ஷிணாயனம் என்பது இரவு ஆகும். இந்த இரண்டும் சேர்ந்து தேவர்களுக்கு ஒருநாள் ஆகிறது. பன்னிரண்டு ஆயிரம் தேவ வருடங்கள் கொண்டதாகவும், க்ருத த்ரேதா த்வாபர கலி என்பதான பெயர்கள் கொண்டதாகவும் நான்கு யுகங்கள் உள்ளன. நான்கு யுகங்கள் குறித்துக் கூறுகிறேன். க்ருதயுகம் போன்றவற்றில் தேவ வருடங்கள் முறையே நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று என உள்ளதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். யுகங்களில் ஒவ்வொரு யுகத்தின் முந்தினது, நூறான அளவைக் கொண்டதாக உள்ளது. யுகத்தின் பின்னே வருகின்ற ஸந்தியானது, முன்பு கூறப்பட்ட எண்ணிக்கைகளுடன் சமாமாக உள்ளது. பிற்சந்தி மற்றும் முற்சந்தி ஆகியவற்றின் சமமான காலம் எதுவோ, அதுவே “க்ருத, த்ரேதா, த்வாபர, கலி” என்பதான பெயர் கொண்ட யுகங்களாகக் கூறப்படுகிறது - என்று தொடங்கி, ஸ்ரீவிபு - ஏவந்து ப்ரஹ்மணோ வர்ஷமேவம் வர்ஷசதந்து தத், சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந: - இப்படியாக உள்ள நான்முகனுடைய ஒரு வருடம் உள்ளது. இவ்விதமாக நான்முகனுக்கு நூறு வருடங்கள் உள்ளன. இதுவே நான்முகனுடைய ஆயுள் காலம் ஆகும் - என்று காலத்தின் மாற்றங்களின் சிறப்பானது ஸ்ரீபராசரபகவானால் கூறப்பட்டது. இதனையே நடுவில்திருவீதிப்பிள்ளைபட்டர், “பதினைந்து நிமேஷங்கள் கொண்டது ஒரு காஷ்டை ஆகும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை ஆகும். முப்பது கலைகள் கொண்டது ஒரு முஹூர்த்தம் ஆகும். முப்பது முஹூர்த்தங்கள் கொண்டது ஒரு நாள் ஆகும். முப்பது நாள்கள் கொண்டது, இரண்டு பக்ஷங்களை உள்ளடக்கிய வடிவான ஒரு மாதம் ஆகும். இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது ஆகும். மூன்று ருதுக்கள் கொண்டது ஒரு அயநம் ஆகும். இரண்டு அயநங்கள் கொண்டது ஒரு வருடம் ஆகும். இப்படி உள்ள முந்நூற்று அறுபது மனித வருடங்கள் கொண்டதாக ஒரு தேவ வருடம் உள்ளது. பன்னீராயிரம் தேவ வருடங்கள் கொண்டது ஒரு சதுர்யுகம் ஆகும். ஒரு சதுர்யுகத்தி, நாலாயிரம் க்ருதயுகங்கள், மூவாயிரம் த்ரேதா யுகங்கள், இரண்டாயிரம் த்வாபர யுகங்கள் மற்றும் ஆயிரம் கலியுகங்கள் உள்ளன. க்ருதயுகத்துக்கு பூர்வஸந்த்யை நானூறு, அபரஸந்த்யை நானூறு ஆகும் த்ரேதா யுகத்திற்கு பூர்வஸந்த்யை முந்நூறு, அபர ஸந்த்யை முந்நூறு ஆகும். த்வாபர யுகத்துக்கு பூர்வஸந்த்யை இருநூறு, அபரஸந்த்யை இருநூறு ஆகும். கலியுகத்துக்கு பூர்வஸந்த்யை நூறு, அபரஸந்த்யை நூறு ஆகும். இவ்விதம் எழுபத்தொன்று சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மந்வந்தரம் ஆகும். இவ்விதம் பதினான்கு மந்வந்தரங்கள் கொண்டதாக ஆயிரம் சதுர்யுகம் உள்ளது. இது நான்முகனுக்கு ஒரு பகல் ஆகும். அவனுடைய ஒரு இரவும் இதே போன்று ஆகும். இப்படி, அஹோராத்ரங்களும் மாத வருடங்களுமாகப் பெருக்கி, வருகின்ற நான்முகனுடைய ஆயுள் காலத்திற்கு பரம் என்று பெயர்”, என்று அருளிச்செய்தார். (நித்யமாய்) - இங்கு “நித்யம்” என்பது, ஸ்ரீவிபு. (1-2-20) - அநாதிர் பகவாந் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே - காலமானது மிகவும் பழமையானதாகவே உள்ளது, இதற்கு இறுதியும் இல்லை - என்பதாக, தொடக்கம் மற்றும் முடிவு இன்றி உள்ளதைக் குறிப்பதாகும். (ஈச்வரனுக்கு க்ரீடாபரிகரமாய்) - அதாவது, அனைத்து ஜகத்தின் ஸ்ருஷ்டி, காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை லீலையாகக் கொள்ளும் ஸர்வேச்வரனுக்கு, காலமானது, அத்தகைய லீலைக்கு ஏற்ற கருவியாக உள்ளது, ப்ரக்ருதி, புருஷன் மற்றும் காலம் ஆகிய மூன்றுமே, லீலைக்கு ஏற்ற கருவிகளாக உள்ளன அல்லவோ? இவற்றில், ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா ஆகியவர்கள், ஜீவாத்மாவின் கர்மங்களுக்கு ஏற்ப விளையாட்டுக் கருவியாக உள்ளனர். ஸர்வேச்வரன், ஸ்ருஷ்டி முதலானவற்றை நிர்வாகம் செய்யும்போது, ஸத்யஸங்கல்பனாக உள்ள தான், தொடக்கத்தில் ஏற்படுத்திய கால நியமம் மாறி விடாதபடி, அந்தந்த காலம் வரும்வரை பார்த்து நின்று, நிர்வாகம் செய்கிறான். மேலும் இதனை, நிமேஷம் மற்றும் காஷ்டை என்பதான வடிவங்களில் மாறும்படிச் செய்கிறான். ஆகவே, காலமானது லீலைக்கான கருவியாக உள்ளது என்றாகிறது. காலத்தை லீலைக்குக் கருவியாகக் கூறுவதால், காலத்தின் மாறுதல்களால் ஏற்படுகின்ற மாற்றம் என்பதாகக் கூறப்படும் லீலாவிபூதியில், காலத்தின் உபயோகமானது, மஹாபாரதம் - ந காலஸ் தத்ர வை ப்ரபு: - பரமபதத்தில் காலம் உபயோகப்படுவதில்லை - என்பதற்கு ஏற்ப, பரமபதத்தில் இதன் மூலம் உபயோகம் இல்லை என்பதால் கூறப்பட்டதாகிறது. அடுத்து, இப்படியாக உள்ள காலதத்வமானது ஈச்வரனை விட்டு அகலாதபடி உள்ள சேர்க்கையை அருளிச்செய்கிறார். ஸ்ரீவிபு. (1-2-17) - பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷ: பரமம் த்விஜ, வ்யக்தாவ்யக்தே ததைவாந்யே ரூபே காலஸ் ததா பரம் - மிகவும் உயர்ந்த ப்ரஹ்மத்தின் சரீரமாக ஆத்மா உள்ளான்; ப்ரக்ருதியும் சரீரமாக உள்ளது; காலமும் சரீரமாக உள்ளது - என்றும், ஸ்ரீவிபு. (1-2-19) - ப்ரதாந புருஷா வ்யக்த காலாஸ்து ப்ரவிபாகச:, ரூபாணி ஸ்திதி ஸர்காந்த வ்யக்தி ஸத்பாவ ஹேதவ: – ப்ரதானம், புருஷனாகிய ஆத்மா, வ்யக்தம், காலம் போன்ற அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரங்கள்; இவை மாறுபாடுகளை அடைவிக்கும் தன்மை, இன்பம் அளிக்கவல்ல தன்மை, இருப்பு, தோற்றம், அழிவு, வெளிப்படும் தன்மை ஆகியவற்றுக்குக் காரணங்களாக உள்ளன - என்றும், ஸ்ரீவிபு. (1-2-26) – விஷ்ணோ: ஸ்வரூபாத் பரதோதிதே த்வே ரூபே ப்ரதாநம் புருஷச்ச விப்ர, தஸ்யைவதேந்யேந த்ருதே வியுக்தே ரூபாந்தரம் தத் த்விஜ காலஸம்ஜ்ஞம் - அனைத்தையும் விட உயர்ந்த மஹாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ப்ரதானம் மற்றும் புருஷன் ஆகிய இரண்டும் தோன்றின; இவை ஸ்ருஷ்டிக்கு ஏற்றபடி உள்ளது போன்று, அவனுடைய சரீரத்தில் உள்ள மற்றொன்று, காலம் என்பதாகும் – என்றும் கூறப்பட்டது. ஒரு சேதனனுடன் ஒரு பொருளுக்கு ஏற்படுகின்ற பிரிவது என்பது இன்றி, “தாங்கும் தன்மை, தாங்கப்படும் தன்மை, ஏவும் தன்மை, ஏவப்படும் தன்மை, எஜமானன், அடிமை” ஆகியவற்றில் ஒவ்வொன்றும், சரீரத்தின் அடையாளமாகவே உள்ளன. காலம் என்பதான இந்த அறிவற்ற வஸ்துவிற்கும், மேலே கூறப்பட்ட மூன்றுவிதமான ஸம்பந்தமும் ஈச்வரனுடன் உள்ளது என்பதால், காலம் என்பதும் அவனுடைய சரீரமே என்றாகிறது. இவ்விதம், ப்ரக்ருதி முதலான தத்வங்கள் மாற்றம் அடையக் காரணமாக உள்ள காலமானது, ஈச்வரனுக்குச் சரீரமாக உள்ளது என்பதால், துணைக் காரணமும் ஈச்வரனே ஆகிறான் என்று கூறுவதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக, ஸத்வசூந்யம் என்றால் என்ன என்பதும், அது செய்கின்ற செயல்பாடுகள், அதற்கு அவசியமாக உள்ள அதன் மாற்றங்கள், அதனுடைய புராதானத்தன்மை, அது ஈச்வரனுக்கு இந்த இந்த விஷயங்களில் கருவியாக உள்ள தன்மை மற்றும் அது ஈச்வரனுக்குச் சரீரமாக உள்ள தன்மை ஆகிய பலவும் கூறப்பட்டதாகிறது.