Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 119)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஸத்வ சூந்யமாவது காலம்.

உத்தேச க்ரமத்திலே சுத்தஸத்வ மிச்ரஸத்வங்களினுடைய ஸ்வரூபாதிகளைத் தெளியவருளிச் செய்தார் கீழ்; இனி, ஸத்வ சூந்யமாகிறது ஏது என்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார்.

இவ்விதமாகத் தனது கருத்தை வெளியிட்ட அதே முறையில், சுத்தஸத்வம் மற்றும் மிச்ரஸத்வம் ஆகியவற்றின் ஸ்வரூபங்கள் குறித்து நன்கு விளங்கும்படியாக முன்பு அருளிச்செய்தார். அடுத்து ஸத்வ சூந்யம் என்றால் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

(ஸத்வ சூந்யமாவது காலம்) என்று. ஸத்வகுணம் ரஜஸ் தமஸ்ஸுக்களுக்கும் உபலக்ஷணமாய், ஸத்வ சூந்யமென்றது ஸத்வாதி குண த்ரய சூந்யமென்றபடி. இத்தால், கேவல ஸத்வமாயும், குண த்ரயாச்ரயமாயும் இருக்கிற அசித் த்வயத்தையும் பற்ற இது வ்யாவ்ருத்த ஸ்வரூபமாயிருக்குமென்கை.

இங்கு கூறப்பட்ட ஸத்வ குணம் என்பது, ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகியவற்றையும் கூறியதாகும். ஸத்வ சூந்யம் என்றால், ஸத்வம் போன்ற மூன்று குணங்களும் இன்றி இருத்தல். இதன் மூலம், வெறும் ஸத்வமாகவும், மூன்று குணங்களும் சேர்ந்துள்ளதாகவும் இருக்கின்ற இரண்டுவிதமான அசித்தை நோக்கும்போது, இது வேறுபட்டதாக உள்ளது என்று கருத்து.