Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 118)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
முன்புத்தை தந்மாத்ரைகளோடே கூடிக்கொண்டு உத்தரோத்தர தந்மாத்ரைகள் ஸ்வவிசேஷங்களைப் பிறப்பிக்கையாலே, குணாதிக்யமுண்டாயிற் றென்றும் சொல்லுவர்கள்.
– இனி, ஆகாசாதிகளில் பூர்வபூர்வத்தைப் பற்ற உத்தரோத்தர தத்வத்துக்கு குணாதிக்யமுண்டாகைக்கு மூலம் அருளிச்செய்கிறார்.
அடுத்து, ஆகாசம் முதலான பூதங்களில், அவற்றுக்கு முன்புள்ள தத்வம் மற்றும் அவற்றுக்கு முன்புள்ள தத்வம் என்பதை விளக்க, அவற்றுக்குப் பின்புள்ள தத்வம் மற்றும் அவற்றுக்குப் பின்புள்ள தத்வம் ஆகியவற்றின் குணங்களுடைய ஆதிக்கம் அதிகமாக உள்ள காரணத்தை அருளிச்செய்கிறார்.
(முன்புத்தை தந்மாத்ரைகள்) என்று தொடங்கி. அதாவது சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு ஸ்பர்ச தந்மாத்ரம் ஸ்வவிசேஷமான வாயுவை ஜநிப்பிக்கையாலே, வாயுவுக்கு ஸ்பர்ச சப்தங்களிரண்டும் குணமாயிற்று. இப்படி, சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமான ஸ்பர்ச தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய், அவை யிரண்டோடுங்கூடி நின்று, ரூப தந்மாத்ரம் ஸ்வவிசேஷமான தேஜஸ்ஸை ஜநிப்பிக்கையாலே, அத்தத்வத்துக்கு சப்த ஸ்பர்ச ரூபங்களாகிற மூன்று குணங்களு முண்டாயிற்று. இப்படி பூர்வ தந்மாத்ர த்வய விசிஷ்டமான ரூப தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய், அவை மூன்றோடே கூடி நினறு ரஸ தந்மாத்ரம் ஸ்வவிசேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே, அதுக்கு சப்த ஸ்பர்ச ரூப ரஸங்களாகிற நாலு குணங்களு முண்டாயிற்று. இப்படி பூர்வ தந்மாத்ர த்ரய விசிஷ்டமான ரஸ தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு கந்த தந்மாத்ரம் ஸ்வவிசேஷமான ப்ருதிவியைப் பிறப்பிக்கையாலே, அதுக்கு சப்தாதிகளான அஞ்சு குணங்களும் உண்டாயிற்று என்கை. இத்தால் ஏகைககுண ஆச்ரயமான ஆகாசாதி பூதங்களுக்கு குண விநிமயம் பஞ்சீகரண ப்ரயுக்தமானவோபாதி, உத்தரோத்தர பூதங்களில் குணாதிக்யமும் ஸ்வஸ்வ தந்மாத்ரங்களுக்குண்டான ஆவரண ப்ரயுக்தமென்றதாயிற்று என்றும் சொல்லுவர்களென்று கீழ்ச் சொன்னத்தோடே இத்தையும் ஸமுச்சயித்தருளிச் செய்கிறார்; இப்படி தத்வ வித்துக்கள் சொல்லுவர்களென்கை. “ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் ஸமாவிசத், ரூபம் ததைவாவிசத சப்த ஸ்பர்ச குணாவுபௌ; சப்தஸ் ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் ஸமாவிசத; தஸ்மாத் சதுர்குணா ஹி ஆபோ விசேஷாச்சேந்த்ரிய க்ரஹ:” என்னக் கடவதிறே.
சப்த தந்மாத்ரையால் மூடப்பட்ட ஸ்பர்ச தந்மாத்ரையானது, தனது குணத்தை உள்ளடக்கியதான வாயுவை உண்டாக்குவதால், வாயுவிற்குத் தீண்டுதல் மற்றும் சப்தம் ஆகிய இரண்டு குணங்களுமே ஏற்பட்டது. இவ்விதம் சப்த தந்மாத்ரையால் மூடப்பட்டதான ஸ்பர்ச தந்மாத்ரையால் மூடப்பட்டதும், அவை இரண்டுடன் கூடி நிற்பதும் ஆகிய ரூப தந்மாத்ரையானது, தனது குணத்தை உள்ளடக்கியதான தேஜஸ்ஸை வெளிப்படுத்துகிறது. ஆகவே தேஜஸ்ஸிற்கு சப்தம், ஸ்பர்சம் மற்றும் ரூபம் ஆகிய மூன்று குணங்களும் உள்ளன. இவ்விதம் தனக்கு முன்புள்ள இரண்டு தந்மாத்ரைகளால் மூடப்பட்ட ரூப தந்மாத்ரையால் மூடப்பட்டதும், இந்த மூன்று தந்மாத்ரைகளுடன் கூடி நிற்பதும் ஆகிய சுவை தந்மாத்ரையானது, தனது குணத்தை உள்ளடக்கியதான நீரை வெளிப்படுத்தியது. ஆகவே நீருக்கு சப்தம், ஸ்பர்சம், ரூபம் மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்களும் உள்ளன. இவ்விதம் தனக்கு முன்புள்ள மூன்று தந்மாத்ரைகளால் மூடப்பட்ட சுவை தந்மாத்ரையால் மூடப்பட்டதும், இந்த நான்கு தந்மாத்ரைகளுடன் கூடி நிற்பதும் ஆகிய மண தந்மாத்ரையானது, தனது குணத்தை உள்ளடக்கியதான பூமியை வெளிப்படுத்தியது. ஆகவே பூமிக்கு சப்தம் போன்ற ஐந்து குணங்கள் உள்ளன. ஆக, இதன் மூலம், “ஒரு குணத்தை மட்டுமே கொண்டதான ஆகாசம் முதலான பூதங்களுக்குப் பஞ்சீகரணம் போன்றவற்றால் குணச் சேர்க்கை ஏற்படுவது போன்று, அடுத்தடுத்து உள்ள பூதங்களில் ஏற்படும் குணங்களுடைய அதிகம் என்பது, அந்தந்த பூதங்களுடைய தந்மாத்ரைகள் மூலம் ஏற்படுகிறது என்றானது என்றும் கூறுவார்கள்”, என்பதைக் கீழே கூடியவற்றுடன் இதனையும் சேர்த்துக் கொண்டு அருளிச்செய்கிறார். இவ்விதமாக தத்வங்கள் குறித்து அறிந்தவர்கள் கூறுவார்கள் என்று கருத்து. ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் ஸமாவிசத், ரூபம் ததைவாவிசத சப்த ஸ்பர்ச குணாவுபௌ; சப்தஸ் ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் ஸமாவிசத; தஸ்மாச்ச: துர்குணாஹ்யாபோ விசேஷாச்சேந்த்ரிய க்ரஹ: - ஆகாசமானது சப்தம் மற்றும் ஸ்பர்சம் தந்மாத்ரைகளைப் பெற்றுள்ளது. அவ்விதமே, இரண்டாக உள்ளதான சப்தம் மற்றும் ஸ்பர்சம் ஆகிய குணங்கள், அக்னிக்குக் காரணமாக உள்ள ரூப தந்மாத்ரையை அடைகின்றன. சப்தம், ஸ்பர்சம், ரூபம் ஆகிய குணங்கள், நீருக்குக் காரணமாக உள்ள சுவை தந்மாத்ரையை அடைகின்றன. எனவே இந்த்ரியங்களால் அறியப்படவல்லதாக உள்ளதும், சிறப்பையும் கொண்ட நீரானது நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது - என்பது காண்க.