Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 117)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதுமத்தாலே.
(ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே) அதாவது, அதிஸூக்ஷ்மதையாலே கண்ணுக்குத் தோற்றாதபடியிருக்கும் ஆகாசத்துக்கு சக்ஷுர் விஷயத்வமும், “யத் க்ருஷ்ணம் தத் ப்ருதிவீ” என்று ப்ருதிவிக்கு உள்ளதொன்றாகச் சொல்லுகிற க்ருஷ்ணத்வமும் உண்டாயிற்று; அது பஞ்சீகரணத்தாலே என்கை. – இத்தால், த்ரிவ்ருத்கரணத்தைச் சொன்ன வநந்தரம், ச்ருதிதானே “யதக்நே ரோஹிதம் ரூபம் தேஜஸஸ் தத் ரூபம் யச்சுக்லம் ததபாம் யத்க்ருஷ்ணம் ததந்நஸ்ய” என்று, அக்நியிலே த்ரிரூபத்வத்தை தர்சிப்பித்தாப்போலே, இவரும் பஞ்சீகரணத்தை அருளிச் செய்த அநந்தரம், அது தன்னை ஸர்வத்தையும் பற்ற ஸூக்ஷ்மமாயிருப்பதொரு பூதத்திலே தர்சிப்பித்தாராயிற்று. இப்படி ஸ்ரீபாஷ்யத்திலே, “யதக்நேர் லோஹிதம் ரூபம் தேஜஸஸ் ததபாமபி, சுக்லம் க்ருஷ்ணம் ப்ருதிவ்யாச்சேத்யகநாவேவ த்ரிரூபதா; ச்ருத்யைவ தர்சிதா தஸ்மாத் ஸர்வே ஸர்வத்ர ஸங்கதா:” என்று பாஷ்யகாரரும் அருளிச் செய்தார். – சாந்தோக்யத்தில், பஞ்சீகரணம் சொல்லாதே த்ரிவ்ருத்கரணத்தைச் சொல்லுவானென்? என்னில்; அங்கு தேஜோபந்நங்கள் மூன்றினுடையவும் உத்பத்தி மாத்ரமிறே சொல்லிற்று; ச்ருத்யந்தரத்திற் சொல்லுகிற ஆகாச வாயுக்களினுடையவும் அவ்யக்த மஹதஹங்காராதிகளினுடையவும் உத்பத்திதானும் சொல்லிற்றில்லையிறே. ஆகையால், தேஜோபந்நமாத்ரகதநம், தத்வாந்தரங்களுக்கும் உபலக்ஷணமானாப் போலே, த்ரிவ்ருத்கரண கதநமும் பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம். இப்படி, பஞ்சீகரணத்தாலே ஸகல பூதங்களும் பரஸ்பர மிச்ரங்களாகையாலே, சப்தாதி குண பஞ்சகமும் ஸாவபூதங்களிலுமுண்டா யிருக்குமென்று குண விநிமய ஹேது சொல்லிற்றாய் நின்றது.
ஆகாசம் என்ற பூதமானது மிகவும் நுண்ணியதாக உள்ளதால் கண்களுக்குப் புலப்படாமல் உள்ளதாகும். அப்படிப்பட்ட ஆகாசமானது, கண்களுக்குப் புலப்படுவது எந்தக் காரணத்தால் என்பதற்கு விடை அளிக்கிறார். சாந். (6-4-1) - யத் க்ருஷ்ணம் தத் ப்ருதிவீ – எந்த ஒன்று கருமையாக உள்ளதோ அது பூமியின் அம்சமாகும் – என்று கூறப்படுவதற்கு ஏற்ப, பூமிக்கு உள்ளதான கருமை நிறமானது ஆகாசத்திற்கு ஏற்படுகிறது. அது பஞ்சீகரணத்தால் வந்ததாகும். இப்படியாக த்ரிவ்ருத்கரணத்தைக் கூறியதைத் தொடர்ந்து, ச்ருதியானது சாந். (6-4-1) – யத் அக்நே ரோஹிதம் ரூபம் தேஜஸஸ் தத் ரூபம் யத் சுக்லம் தத் அபாம் யத் க்ருஷ்ணம் தத் அந்நஸ்ய - அக்னிக்கு உள்ள சிவந்த நிறம் தேஜஸ்ஸின் அம்சம், வெண்மையானது நீரின் அம்சம், கருமையானது பூமியின் அம்சம் - என்று அக்னியில் மூன்றுவிதமான ரூபங்களையும் உணர்த்தியது. அதே போன்று இவரும், பஞ்சீகரணத்தை அருளிச்செய்ததைத் தொடர்ந்து, அதனை, அனைத்தையும் பற்றுவதற்காக, நுண்ணியதாக உள்ள ஆகாசத்தில் காண்பிக்கிறார். இவ்விதமாக ஸ்ரீபாஷ்யத்தில் (1-1-1, ஸத் க்யாதி வாதம்), “யத் அக்நேர் லோஹிதம் ரூபம் தேஜஸஸ் தத் அபாம் அபி, சுக்லம் க்ருஷ்ணம் ப்ருதிவ்யாச்சேத்யகநாவேவ த்ரிரூபதா; ச்ருத்யைவ தர்சிதா தஸ்மாத் ஸர்வே ஸர்வத்ர ஸங்கதா: - அக்னியில் உள்ள சிவப்பு நிறமானது தேஜஸ்ஸுடையது ஆகும், வெண்மை நிறமானது நீரினுடையது ஆகும், கறுப்பு நிறமானது ப்ருதிவீ(பூமி)யின் நிறம் ஆகும். இப்படியாக அக்னியில் உள்ள மூன்றுவிதமான ரூபங்கள் குறித்து ச்ருதியிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது”, என்று பாஷ்யகாரரும் அருளிச்செய்தார். ஆனால் சாந்தோக்யத்தில் பஞ்சீகரணம் கூறப்படாமல், த்ரிவ்ருத்கரணம் மட்டுமே கூறப்பட்டது ஏன்? இதன் காரணம், இந்த இடத்தில், தேஜஸ் உள்ளிட்ட மூன்றின் உற்பத்தி மட்டுமே கூறப்படுவதால் ஆகும். ச்ருதியின் வேறு பகுதியில் கூறப்படுவதான, ஆகாசம் மற்றும் வாயு ஆகியவையும், “அவ்யக்தம், மஹத் மற்றும் அஹங்காரம்” ஆகியவையும் உற்பத்தி ஆனது குறித்தும் இந்தப் பகுதியில் கூறப்படவில்லை அல்லவோ? எனவே தேஜஸ், நீர் மற்றும் பூமி ஆகியவற்றின் குணங்களில் கூறப்பட்ட விஷயமானது மற்ற தத்வங்களுக்கும் பொருந்தும் என்பது போன்று, த்ரிவ்ருத்கரணம் மட்டுமே கூறப்பட்டதும் பஞ்சீகரணத்திற்கு உபலக்ஷணம் ஆகியது. இப்படியாகப் பஞ்சீகரணம் மூலம் அனைத்து பூதங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்பதால், ஓசை முதலான ஐந்து குணங்களும், அனைத்து பூதங்களிலும் காணப்படும் என்பதாக, குணங்களுடைய சேர்க்கையின் காரணம் கூறப்பட்டது.