Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 116)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
குண விநிமயம் – பஞ்சீகரணத்தாலே.
இப்படி ப்ரதிநியத குணங்களான பூதங்களுக்கு குண விநிமயம் வருகைக்கு அடியருளிச் செய்கிறார்.
இவ்விதம் ஒவ்வொரு பூதங்களுக்கும் குணங்கள் தனித்தனியாக உள்ளபோது, அந்தக் குணங்களுடைய சேர்க்கை வருவதற்கான காரணத்தை அருளிச்செய்கிறார்.
(குண விநிமயம் பஞ்சீகரணத்தாலே) என்று. குண விநிமயமாவது, ஏக பூதத்திலே பூதாந்தர குணங்களும் காணலாம்படி, பூதங்களிலுண்டான குணக் கலப்பு. ச்ருதப்ரகாசிகாகாரர் சுகபக்ஷீயத்திலே, “தேஜோவாரிம்ருதாம் யதா விநிமய:” என்கிறவிதுக்கு, “விநிமய பரஸ்பர ஸம்மிச்ரீகரணம்” என்றாரிறே. இங்கும், பரஸ்பர ஸம்மிச்ரீகரணமே விநிமய சப்தார்த்தம். அங்கு, பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லிற்று; இங்கு குணங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லுகிறது. குணங்களுக்கந்யோந்யம் கலப்பாவது, பூதமும் பூதாந்தரமும் போலே, குணமும் குணாந்தரமும் தன்னிலே கலக்கையன்று; ஒன்றினுடைய குணம் ஒன்றிலே புக்கு, எல்லாவற்றிலும் எல்லாமுண்டாம்படியிருக்கை. – அதவா, விநிமயமாவது ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய், தன் குணத்தை பூதாந்தரங்களுக்குக் கொடுத்து அதின் குணத்தைத் தான் பஜிக்கை என்னவுமாம். இத்தால் தன் குணம் அந்யத்தின் பக்கலிலுமுண்டாய், அந்யத்தினுடைய குணம் தன் பக்கலிலுமுண்டாம்படி இருக்கையைச் சொல்லுகிறது. இந்த (குண விநிமயம் பஞ்சீகரணத்தாலே) என்றதுக்குக் கருத்து, குணங்களாகையாலே ஆச்ரயாதந்யதோ வ்ருத்தியில்லையிறே இவற்றுக்கு. ஆகையால், த்ரவயத்தினுடைய கலப்பே குணக் கலப்புக்கு ஹேது என்கை. – பஞ்சீகரணமாவது, “ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர் த்விதா தத:, சதுர்த்தா பிந்ந மேகைகமர்த்தமர்த்தம் ததா ஸ்த்திதம்; வ்யோமநோர்த்த பாகாச் சத்வாரோ வாயு தேஜ: பயோபுவாம்; அர்த்தாநியாநி வாயோஸ்து வ்யோம தேஜ: பயோபுவாம்” இத்யாதி புராணங்களிலே சொல்லுகிறபடியே ஆகாசாதி பூதங்களைந்தையும் தனித்தனியே இரண்டு கூறாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வபூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை. இப்படி பஞ்சீகரணமானாலும், அவிபக்தமான அர்த்தங்கள் ப்ரதாநங்களாய் நிற்கையாலே, ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்கும் குறையில்லை.
“குண விநிமயம்” என்றால், ஒரு பூதத்தில் மற்ற பூதத்தின் குணங்களைக் காணலாம்படியாக, பூதங்களில் ஏற்பட்டுள்ள குணச்சேர்க்கை. ச்ருதப்ரகாசிகாகாரர் சுகபக்ஷீயத்தில், “தேஜோவாரிம்ருதாம் யதா விநிமய: - அக்னி, நீர் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு எவ்விதம் ஒன்றுடன் ஒன்று சேர்க்கை ஏற்படுகிறது?”, என்ற கேள்விக்கு, “விநிமய பரஸ்பர ஸம்மிச்ரீகரணம் - விநிமயம் என்றால் ஒன்றுடன் ஒன்று கலத்தல்” என்றார் அல்லவோ? இங்கும், பூதங்கள் ஒன்றுடன் ஒன்று கலங்கக் கூடிய தன்மையே விநிமயம் எனப்பட்டது. அங்கு, பூதங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வது குறித்துக் கூறப்பட்டது; இங்கு பூதங்களுடைய குணங்களின் சேர்க்கை குறித்துக் கூறப்பட்டது. இந்தச் சேர்க்கையானது, ஒரு பூதமும் மற்ற பூதங்களும் கலப்பது போன்று, ஒரு குணமும் மற்ற குணங்களும் கலப்பது அல்ல; ஒரு பூதத்தின் குணங்கள், மற்ற பூதங்கள் அனைத்திலும் உள்ளது போன்று சேர்தல் ஆகும். அல்லது விநிமயம் என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். கலத்தல் என்பதற்கு “ஒன்றை அளித்து மற்றொன்றைப் பெறுதல்” என்பதாகும். தனது குணத்தை மற்ற பூதங்களுக்கு ஒரு பூதம் அளித்துவிட்டு, அவற்றின் குணங்களைத் தானும் ஏற்பதாகும். இதன் மூலம், ஒரு பூதத்தின் குணம் மற்ற பூதங்களிலும், மற்ற பூதங்களின் குணங்கள் தன்னிலும் உள்ளதாக இருத்தல் கூறப்பட்டது. இந்தச் சேர்க்கை என்பது “பஞ்சீகரணத்தாலே” என்று ஏன் கூறப்பட்டது? குணங்களாக உள்ளதால், வேறு எதனுடைய செயல்பாடும் இவற்றின் மீது இல்லை அல்லவோ? எனவே பூதங்களுடைய சேர்க்கையே இங்கு காரணமாகிறது என்பதால், இவ்விதம் கூறுகிறார். பஞ்சீகரணம் என்றால் என்ன? ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர் த்விதா தத:, சதுர்த்தா பிந்ந மேகைகமர்த்தமர்த்தம் ததா ஸ்த்திதம்; வ்யோமநோர்த்த பாகாச் சத்வாரோ வாயு தேஜ: பயோபுவாம்; அர்த்தாநியாநி வாயோஸ்து வ்யோம தேஜ: பயோபுவாம் – இப்படியாகத் தோன்றிய பூதங்கள், அதன் பின்னர் தனித்தனியாக இரண்டாயின. ஒவ்வொரு பாதி பாகமும் நான்காக மாறின. மற்றொரு பாதி பாகம், பிரிக்கப்படாமல் இருந்தது. ஆகாசத்தின் பாதி பாகம் மற்றும் வாயு, அக்னி, நீர், பூமி ஆகியவற்றின் நான்கு பாகங்களும் சேர்ந்து; வாயுவின் பாதி பாகமும் ஆகாசம், அக்னி, நீ, பூமி ஆகியவற்றின் நான்கு பாகங்களும் சேர்ந்து, பஞ்சீகரணம் ஆகிறது - என்று கூறப்பட்டது. இப்படியாகப் புராணங்களில் கூறப்பட்டபடி, ஆகாசம் முதலான பூதங்களை இரண்டு இரண்டாகப் பிரித்து, அவற்றின் ஒரு பாகத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து, அந்த நான்கு கூறுகளையும் மற்ற பூதங்களுடன் சேர்க்கவேண்டும்; இப்படியாக அனைத்து பூதங்களிலும், அனைத்தும் இருக்கும்படியாகச் செய்தல் ஆகும். இப்படியாகப் பஞ்சீகரணம் செய்யப்பட்டாலும், பிரிக்கப்படாத பாதி பாகமானது அந்தந்த பூதங்களில் முதன்மையாக உள்ளதால், ஆகாசம் முதலான பூதங்களில் உள்ள வேறுபாடுகள் மற்றும் செயல்களுக்கு எந்தப் பாதகமும் இல்லை.