Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 114)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ச்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங்களைந்துக்கும், அடைவே சப்தாதிகளைந்தையும் க்ரஹிக்கை தொழில்; வாகாதி கர்மேந்த்ரியங்களைந்துக்கும், விஸர்க சில்பகத்யுக்திகள் தொழில்; மநஸ்ஸு இவையித்தனைக்கும் பொது.

இனி ஏகாதச இந்த்ரியங்களுடைய வ்ருத்தி பேதத்தை அருளிச்செய்கிறார் மேல்.

அடுத்து பதினொரு இந்த்ரியங்களுடைய செயல்களில் உள்ள வேறுபாடுகளை அருளிச்செய்கிறார்.

(ச்ரோத்ராதி இத்யாதி) ச்ரோத்ரத்துக்கு சப்த க்ரஹணமும், த்வகிந்த்ரியத்துக்கு ஸ்பர்ச க்ரஹணமும், சக்ஷுஸ்ஸுக்கு ரூப க்ரஹணமும், ஜிஹ்வைக்கு ரஸ க்ரஹணமும், க்ராணத்துக்கு கந்த க்ரஹணமும் தொழில். “த்வக் சக்ஷுர் நாஸிகா ஜிஹ்வா ச்ரோத்ரமத்ர து பஞ்சமம், சப்தாதீநாமவாப்த்யர்த்தம் புத்தி யுக்தாநி வை த்விஜ” என்னக் கடவதிறே. இந்த ச்லோகத்தில், இந்த்ரியங்களை வ்யுத்க்ரமமாக எடுக்கையாலே, இன்னத்துக்கு இன்னது விஷயமென்கிற நியமம் ந்யாயங்கொண்டு நிச்சயிக்கவேணும். ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கு சப்தாதிகளை க்ரஹிக்கை தொழிலென்னும் இவ்வளவே ப்ரகாசிப்பது. (வாகாதி இத்யாதி) இப்படி வ்யுத்க்ரமமாக அருளிச்செய்தது, வாக்ய ஸ்வாரஸ்யத்துக்காக. இத்தால் வாக்குக்கு உக்தியும், பாணிக்கு சில்பமும், பாதத்துக்கு கதியும், உபஸ்த்தபாயுக்களுக்கு ஜல மல விஸர்ஜநமும் தொழிலென்கை. “பாயூபஸ்த்தௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ, விஸர்க சில்பகத்யுக்தி கர்ம தேஷாஞ்ச கத்யதே” என்னக் கடவதிறே. (மநஸ்ஸு இவையித்தனைக்கும் பொது) அதாவது ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஸ்வஸ்வ விஷயங்களை க்ரஹிக்கும்போதும், கர்மேந்த்ரியங்கள் ஸ்வஸ்வ கர்மங்களைப் பண்ணும்போதும், மநஸ் ஸஹகாரம் வேண்டுகையாலே, உபயாத்மகமான மநஸ்ஸு இவையித்தனைக்கும் ஸாதாரணமாயிருக்குமென்கை.

(ச்ரோத்ராதி இத்யாதி) - செவிகளுக்குக் கேட்பது, தோலுக்குத் தீண்டுவது, கண்களுக்கு உருவங்களைக் காண்பது, நாக்கிற்கு சுவைப்பது மற்றும் மூக்கிற்கு மணத்தைப் பெறுவது போன்றவை செயல்களாகும். ஸ்ரீவிபு. (1-2-48) - த்வக் சக்ஷுர் நாஸிகா ஜிஹ்வா ச்ரோத்ரமத்ர து பஞ்சமம், சப்தாதீநாமவாப்த்யர்த்தம் புத்தி யுக்தாநி வை த்விஜ - சரீரத்தில் உள்ள தோல், கண், மூக்கு, நாக்கு மற்றும் காது ஆகிய ஐந்தும், சப்தம் முதலான புலன்களை அடையும் விதமாக புத்தி தத்வத்துடன் சேர்ந்துள்ளன – என்பது காண்க. இந்த ச்லோகத்தில், இந்த்ரியங்களை வரிசை இன்றிக் கூறுவதால், “இன்னதற்கு இன்ன தொழில்” என்பதை முறைப்படுத்தி அறிதல் வேண்டும். ஞானத்தை உண்டாக்கும் இந்த்ரியங்களுக்கு, சப்தம் போன்றவற்றை அறிதல் என்பது தொழில் என்ற அளவில் மட்டுமே இங்கு கூறப்பட்டது. (வாகாதி இத்யாதி) – இவ்விதம் “வாக்கு முதலான” என வரிசையாகக் கூறாமல், வரிசை மாற்றி அருளிச்செய்தது ஏனென்றால் வாக்கியத்தின் சுவை மாறாமல் இருப்பதற்காகவே ஆகும். இதன் மூலம் வாக்கிற்குப் பேசுதல், கைகளுக்குப் பொருளைத் தூக்குதல், கால்களுக்கு நடத்தல், மர்மக்குறிகளுக்கு சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றுதல் ஆகியவையே தொழில் எனப்பட்டது. ஸ்ரீவிபு. (1-2-50) - பாயூபஸ்த்தௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ, விஸர்க சில்பகத்யுக்தி கர்ம தேஷாஞ்ச கத்யதே – மலமூத்ர கருவிகள், கைகள், கால், வாக்கு ஆகிய ஐந்தும் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல், பொருளை எடுத்தல், நடத்தல் மற்றும் பேசுதல் என்பதான தொழில் புரிகின்ற கர்ம இந்தத்ரியங்கள் – எனப்பட்டது. (மநஸ்ஸு இவையித்தனைக்கும் பொது) - ஞானேந்த்ரியங்கள் தங்கள் தங்கள் விஷயங்களை அறியும்போதும், கர்மங்கள் தங்கள் தங்கள் தொழில்களைச் செய்யும்போதும், அவை மனதுடைய துணையைக் கொண்டுள்ளன. ஆகவே இரண்டு வகையான இந்த்ரியங்களுக்கும் மனத்தின் துணையானது அவசியம் என்பதால், மனம் இவை இரண்டிற்கும் பொதுவானது என்று கொள்ளவேண்டும்.