Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 112)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
அண்டங்கள்தான் அநேகங்களாய், பதினாலு லோகங்களோடே கூடி ஒன்றுக்கொன்று பதிற்று மடங்கான ஏழாவரணங்களாலும் சூழப்பட்டு, ஈச்வரனுக்கு க்ரீடாகந்துக ஸ்த்தாநீயங்களாய், ஜலபுத்புதம்போலே ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களா யிருக்கும்.
– “ஈச்வரன் இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஓரண்டமாக்கி” என்று ஸர்வேச்வரன் மஹதாதி பதார்த்தங்களைச் சேர்த்து அண்டஸ்ருஷ்டியைப் பண்ணுமென்னும் இவ்வளவிறே கீழருளிச் செய்தது. இப்போது அந்த அண்ட பஹுத்வத்தையும், அவற்றினுடைய கட்டளையிருக்கும்படியையும், அவைதான் ஸர்வேச்வரனுக்கு இன்ன விநியோகத்துக்கு உறுப்பென்னுமத்தையும், அவற்றினுடைய பரிணாம ப்ரகாரத்தையும் அருளிச்செய்கிறார் (அண்டங்கள்தான்) என்று தொடங்கி.
சூர்ணை (110) - ஈச்வரன் இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஓரண்டமாக்கி - என்று, “ஸர்வேச்வரன் மஹத் முதலான பதார்த்தங்கள் அனைத்தையும் சேர்த்து அண்ட ஸ்ருஷ்டியைச் செய்கிறான்”, என்று மட்டுமே கீழே அருளிச் செய்யப்பட்டது. இப்போது அந்த அண்டத்தின் பலவான தன்மையும், அவற்றின் கட்டளைகள் உள்ள விதங்களையும், அவைகள் ஸர்வேச்வரனால் “இத்தகைய செயல்களுக்கு பயன்படுகின்றன” என்பதற்கு உறுப்பாக உள்ளன என்பதையும், அவற்றின் மாற்றங்களில் உள்ள விதங்களையும் அடுத்து அருளிச்செய்கிறார்.
(அண்டங்கள்தான் அநேகங்களாய்) “அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச, ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச” என்னக் கடவதிறே. (பதினாலு லோகங்களோடே கூடி) பதினாலு லோகங்களாவன கீழில் அண்ட கடாஹலத்துக்குமேல் எண்பத்து மூன்று நூறாயிரத்தைம்பதினாயிரம் யோஜநம் உயர்த்தியுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே, “ஸப்ததிஸ்து ஸஹஸ்ராணாம் த்விஜோச்ச்ராயோபி கத்யதே, தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி ஸத்தம! அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கபஸ்திமத், மஹாக்க்யம் ஸுதலஞ்சாக்ர்யம் பாதாளஞ்சைவ ஸப்தமம்” என்கிறபடியே, ஓரொன்று பதினாலாயிரம் யோஜநத்தளவு உயர்த்தியையும் பரப்பையுமுடைத்தாய், தைத்ய தாநவ பந்நக ஸுபர்ணாதிகள் வர்த்திக்கும் தேசமாய், “சுக்ல க்ருஷ்ணாருணா: பீதாச் சர்க்கராச்சைல காஞ்சநா: பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ராஸாத சோபிதா:” என்கிறபடியே, சுக்லங்களாயும், க்ருஷ்ணங்களாயும், அருணங்களாயும், பீதங்களாயும், வாலுகாமயமான சர்க்கரா ரூபங்களாயும், சைலரூபமாயும், பொன்னாயுமிருக்கிற ஸ்தல விசேஷங்களை யுடையவையாய், விலக்ஷணமான மாளிகைகளாலேயும், ப்ராஸாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய், ஸ்வர்காதிகளிலுங்காட்டில் நிரதிசய போக்யமாய், அதலமென்றும், விதலமென்றும், நிதலமென்றும் கபஸ்திமத்தென்று சொல்லப்பட்ட தலாதலமென்றும், மஹாதலமென்றும், ஸுதலமென்றும், பாதாளமென்றும் பேரையுடைத்தான அதோ லோகங்களேழும்; இதுக்கு மேல் எழுபதினாயிரம் யோஜநமகலத்தை உடைத்தாய், ஸப்த த்வீப ஸாகர பர்வதாதி விசிஷ்டமாய், பாதசாரிகளான மநுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய், பத்மாகாரமான பூலோகமும்; பூலோகத்துக்கு மேல் ஆதித்யனுக்குக் கீழ் நூறாயிரம் யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், கந்தர்வாதிகள் வர்த்திக்கும் தேசமான புவர்லோகமும்; ஆதித்யனுக்கு மேல் த்ருவனுக்குக் கீழ் பதினாலு ஆயிரம் யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், ஸாதிகாரரான க்ரஹ நக்ஷத்ர இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர்லோகமும் – த்ருவனுக்கு மேல் ஒரு கோடி யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், “விநிவ்ருத்தாதிகாராஸ்து மஹர்லோக நிவாஸிந” என்று நிவ்ருத்த அதிகாரராய், அதிகார அபேக்ஷரான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான மஹர்லோகமும். அந்த மஹர்லோகத்துக்கு மேல் இரண்டு கோடி யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், ப்ரஹ்மபுத்ரர்களான ஸநகாதி பரமயோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜநர்லோகமும்; – ஜநர்லோகத்துக்கு மேல் எட்டு கோடி யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், வைராஜாக்க்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான தபோலோகமும், தபோ லோகத்துக்கு மேல் நாற்பத்தெட்டு கோடி யோஜநத்தளவு உயர்த்தியையுடைத்தாய், “தேஷாமேஷாம் கேசந பரஹ்மலோகா ருத்ரஸ்யாந்யே ஸந்தி தத்ரைவ லோகா: விஷ்ணோரந்யே ஸந்தி லோகா விசாலாஸ் தாம்ஸ்தாந்லோகான் தாநுபாஸ்ய வ்ரஜந்தி” என்கிறபடியே ப்ரஹ்ம விஷ்ணு சிவர்களும், அவர்களை உபாஸித்து தத் ப்ராப்தி பண்ணினவர்களும் வர்த்திக்கும் தேசமான ஸத்யலோகமும், ஆக ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அறுபது கோடி யோஜநம் அண்டோச்ச்ராயமாயிருக்கும். ஐம்பது கோடி யோஜநம் அண்டோச்ராயமென்பாருமுண்டு. அதில் “ஸூர்யாண்ட கோளயோர்மத்யே கோட்யஸ்யு: பஞ்சவிம்சதி:” என்கிற சுக்ர வசநத்தின்படியே, ஸூர்யனுக்கு மேல் இருபத்தஞ்சு கோடியும் கீழ் இருபத்தஞ்சு கோடியுமாயிருக்கும். இப்படியிருந்துள்ள சதுர்தச புவநங்களோடே கூடி, (ஒன்றுக்கொன்று பதிற்று மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப்பட்டு) அதாவது கீழ்ச்சொன்ன பதினாலு லோகத்தையும் “ஏததண்ட கடாஹேந திரச்சோர்த்வமதஸ் ததா, கபித்தஸ்ய யதா பீஜம் ஸர்வதோ வை ஸமாவ்ருதம்” என்கிறபடியே, உளவாயில் விளாம்சதையை விளாவோடு எங்குமொக்க ஆவரிக்குமாபோலே “கோடி யோஜநமாநஸ்து கடாஹஸ் ஸம்வ்யவஸ்த்தித:” என்று கோடி யோஜநமெடுப்பமவகாசதயா உக்தமானபடியே அண்டகடாஹம் ஆவரித்து நிற்கும். ஸாண்டகடாஹமான இவ்வண்டம், “தசோத்தரேண பயஸா மைத்ரேயாண்டஞ்ச தத் வ்ருதம்” என்கிறபடியே, தன்னில் பதிற்று மடங்கு பரந்திருக்கிற ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாயிருக்கும். “பஞ்சாசத் கோடி விஸ்தாரா ஸேயமுர்வீ மஹாமுநே, ஸஹைவாணடகடாஹேந ஸத்வீபாபதி மஹீதரா” என்று, ஸாண்டகடாஹமான பூமண்டலம் பஞ்சாசத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாரும்; “பூமண்டலம் து சதகோடி விஸ்தாரம் ஸாண்டகடாஹம்” என்று வாராஹபுராணத்திலே சொல்லுகையாலும், இப்படி ஸ்காந்தபுராணத்திலே சிவ ரஹஸயத்திலே பரக்கச் சொல்லுகையாலும், மேருவைச் சுற்றும் பஞ்சாசத கோடி விஸ்தாரத்தைக் கொண்டு பூமியை சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாருமாயிருக்கும். இதில் இரண்டத்தொரு மர்யாதையைத் தளமாக்கி, அதில் பதிற்று மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாயிருக்கும் என்றபடி. அண்டகடாஹத்தைப் பற்ற பதிற்று மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதமென்பாருமுண்டு. இப்படி தசோத்தரமாய்க் கொண்டு ஜல தத்வத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும். அப்படி அத்தை வாயு தத்வம் ஆவரிக்கும். வாயுவை ஆகாசம் ஆவரிக்கும். ஆகாசத்தை அஹங்காரம் ஆவரிக்கும். அஹங்காரத்தை மஹத் தத்வம் ஆவரிக்கும். அந்த மஹத் தத்வத்தை அவ்யக்தம் ஆவரிக்கும். “ததநந்தமஸங்கயாத ப்ரமாணம்” என்று அபரிமித ப்ரமாணமான அவ்யக்தத்துக்கு ஆவரணத்வ ப்ரயுக்தமான தசோத்தரத்வம் கூடும்படியெங்ஙனே என்னில், ஆயிரத்திலே பத்துமுண்டாமாபோலே அபரிமித ஸங்க்யையிலே அதுவுமுண்டாகையாலே கூடும். – “வாரிவஹ்ந்யநிலாகாசைஸ் ததோ பூதாதிநா பஹி:, வ்ருதம் தச குணைரண்டம் பூதாதிர் மஹதா ததா, அவ்யக்தேநாவ்ருதோ ப்ரஹ்மந் தைஸ்ஸர்வைஸ் ஸஹிதோ மஹாந்; ஏபிராவரணைரண்டம் ஸப்தபி: ப்ராக்ருதைர் வ்ருதம்” என்கிறபடியே, இப்படி தசோத்தரங்களான ஸப்த ஆவரணங்களாலும் சூழப்பட்டு (ஈச்வரனுக்கு க்ரீடாகந்துகஸ்த்தாநீயங்களாய்) அதாவது க்ரீடாபரனான பாலனுக்கு க்ரீடநகங்கள் போலே, க்ரீடாரஸாநுபுபூஷுவான ஈச்வரனுக்கு, லீலோபகரணங்களாயிருககை. “ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி:” என்றும், “மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ” என்றும் சொல்லுகிறபடியே, ஈச்வரனுக்கு விபூதியாக லீலோபகரணமாயிறே இருப்பது. (ஜலபுத்புதம்போலே, ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்) அதாவது இவ்வண்டங்களை ஈச்வரன் ஸ்ருஷ்டிக்குமளவில், ஓரொரு படையாக இட்டு அகமெடுக்குமா போலே க்ரமததிலே பரிணமிக்கையன்றியே, “ந க்ரமேண விவ்ருத்தம் தத் ஜலபுத்புதவத் ஸமம்” என்கிறபடியே நீர்க்குமிழிபோலே யொருக்காலே உத்பந்நங்களா மென்கையும், அநேக ஜலபுத்புதங்கள ஏக்காலத்திலே யுத்பந்நங்களாமாபோலே “ஏக காலேந ஸ்ருஜயந்தே” என்கிறபடியே ஸகல அண்டங்களும் ஏககாலத்திலே உத்பந்நங்களாமென்கையும். ஆக (அண்டங்கள்தான் அநேகங்கள்) என்னுமிடமும், அவைதான் எல்லாமொன்று போலேயிருக்கும் என்னுமிடமும் சொல்லிற்றாயிற்று.
(அண்டங்கள்தான் அநேகங்களாய்) – ஸ்ரீவிபு. (2-7-27) - அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச, ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச – ஆயிரம் அண்டங்களுடைய, ஆயிரம் மற்றும் பதினாயிரம் என்னும் பிரிவுகள் கொண்ட அண்டங்களுடைய பல கோடிகள் உள்ளன - என்பது காண்க. (பதினாலு லோகங்களோடே கூடி) - பதினான்கு லோகங்கள் எவையென்றால்: கீழே அண்ட கபாலத்திற்கு மேலே, எண்பத்து மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனைகள் [ஒரு யோஜனை = 12 முதல் 15 கிலோமீட்டர்கள்] உயரம் கொண்ட கர்ப்போதகத்தின் மேலே. ஸ்ரீவிபு. (2-5-12) - ஸப்ததிஸ்து ஸஹஸ்ராணாம் த்விஜோச்ச்ராயோபி கத்யதே, தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி ஸத்தம! அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கபஸ்திமத், மஹாக்க்யம் ஸுதலஞ்சாக்ர்யம் பாதாளஞ்சைவ ஸப்தமம் - பூமியின் உயரமானது எழுபதினாயிரம் யோஜனையாகும்; பாதாள லோகம் ஒவ்வொன்றும் பதினாயிரம் யோஜனைகள் உயரம் மற்றும் அகலம் கொண்டதாக உள்ளன; அதலம், விதலம், நிதலம், கபஸ்திமத், மஹாதலம், ஸுதலம், பாதாளம் என்று ஏழு லோகங்கள் உள்ளன - என்பதற்கு ஏற்ப, ஒவ்வொன்றும் பதினாயிரம் யோஜனை உயரமும் பரப்பளவும் கொண்டதாகவும், “தைத்யர்கள், தாநவர்கள், நாகங்கள், பறவைகள்” போன்ற பலவும் வாழ்கின்ற லோகங்களாகவும்; ஸ்ரீவிபு. (2-5-3) - சுக்ல க்ருஷ்ணாருணா: பீதாச் சர்க்கராச்சைல காஞ்சநா: பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ராஸாத சோபிதா: - மைத்ரேயரே! எந்த ஒரு லோகத்தில் மிகவும் சிறந்த விளங்கும் மாளிகைகளில் உள்ள தரை முதலானவை வெளிர் நிறமுள்ளவையாகவும், மலைகளாகவும், கருங்கற்களாகவும், வெண்ணிறமாகவும் உள்ளதோ - என்பதற்கு ஏற்ப “வெண்மை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், கூழாங்கற்கள் நிறைந்தும், குன்றுகளாகவும், பொன்னிறமாகவும்” உள்ள மாளிகைகள், மதில் தோரணங்கள் போன்றவை நிறைந்தும், ஸ்வர்கம் போன்றவற்றைக் காட்டிலும் எல்லையற்ற இன்பமாகவும், “அதலம், விதலம், நிதலம், கபஸ்திமத் எனப்படும் தலாதலம், மஹாதலம்,ஸுதலம், பாதாளம்” என்ற பெயர் கொண்ட கீழ் லோகங்கள் ஏழும். இதற்கு மேல் எழுபதினாயிறம் யோஜனை அகலம் கொண்டதாகவும், “ஏழு த்வீபங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள்” ஆகியவற்றுடன் கூடியதாகவும், கால்கள் கொண்டு நகர்கின்ற மனிதர்கள் முதலான உயிர்கள் வசிக்கும் இடமாகவும், தாமரை போன்ற வடிவம் உள்ளதான பூலோகமும். பூலோகத்திற்கு மேலே, ஆதித்யனுக்கும் கீழே, நூறாயிரம் யோஜனை உயரம் கொண்டதாகவும், கந்தர்வர்கள் முதலானோர் வாழ்வதும் ஆகிய புவர்லோகமும். ஆதித்யனுக்கு மேலே துருவனுக்கும் கீழே, பதினான்காயிரம் யோஜனை உயரம் கொண்டதாகவும், மிகுந்த அதிகாரத்துடன் கூடிய “கிரகங்கள், நக்ஷத்ரங்கள், இந்த்ரன்” போன்றவர்கள் வாழ்வதாகவும் உள்ள ஸ்வர்லோகமும். துருவனுக்கு மேலே ஒரு கோடி யோஜனை உயரம் கொண்டதாகவும், விநிவ்ருத்தாதிகாராஸ்து மஹர்லோக நிவாஸிந - அதிகாரம் நீங்கியவர்கள் மற்றும் மஹர் லோகத்தில் உள்ளவர்கள் - என்பதற்கு ஏற்ப அதிகாரம் நீங்கப்பெற்றவராக, அதிகாரத்தை எப்போதும் விரும்புபவராக உள்ள இந்த்ரன் போன்றவர்கள் வாழ்கின்ற மஹர்லோகமும். அந்த மஹர்லோகத்திற்கு மேலே இரண்டு கோடி யோஜனை உயரம் கொண்டதாகவும், நான்முகனுடைய புத்திரர்களாகிய ஸநகர் போன்ற உயர்ந்த யோகிகள் வாழ்வதும் ஆகிய ஜநர்லோகமும்; ஜநர்லோகத்திற்கு மேலே எட்டுகோடி யோஜனை உயரம் கொண்டதாகவும், வைராக்யம் நிறைந்தவர்களாகிய ப்ரஜாபதிகள் வாழ்வதும் ஆகிய தபோலோகமும். தபோலோகத்திற்கு மேலே நாற்பத்து எட்டு கோடி உயரம் கொண்டதாகவும், தேஷாமேஷாம் கேசந பரஹ்மலோகா ருத்ரஸ்யாந்யே ஸந்தி தத்ரைவ லோகா: விஷ்ணோரந்யே ஸந்தி லோகா விசாலாஸ் தாம்ஸ்தாந்லோகான் தாநுபாஸ்ய வ்ரஜந்தி - ஒரு சிலர் ஸத்யலோகத்தில் நான்முகனுடைய லோகம் உள்ளதாகவும், அங்கேயே ருத்ரனுடைய லோகம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்; ஒரு சிலர் விஷ்ணுவின் பரந்த லோகம் அங்கு உள்ளதாகவும் கூறுகிறார்கள் - என்பதற்கு ஏற்ப நான்முகன், விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகியோரும், அவர்களை உபாஸனை செய்து அவர்களை அண்டி வாழும் தேவர்களும் வாழ்கின்ற ஸத்யலோகமும்; இப்படியாக மேல் லோகங்களுக்கு நடுவில் அறுபது கோடி யோஜனை கொண்டதாக அண்டம் உள்ளது. அண்டமானது அந்த இடத்தில் ஐம்பது கோடி யோஜனை தூரம் என்று கூறுபவர்களும் உள்ளனர். அதில், ஸூர்யாண்ட கோளயோர்மத்யே கோட்யஸ்யு: பஞ்சவிம்சதி: - ஸூர்யமண்டலமானது அண்ட கோளங்களின் நடுவில் இருபத்து ஐந்து கோடி யோஜனை பரப்பளவில் உள்ளது - என்னும் சுக்ராசார்ய வசனத்தின்படி சூர்யனுக்கு மேலே இருபத்து ஐந்து கோடியும், கீழே இருபத்து ஐந்து கோடியுமாக உள்ளது. இப்படியாக உள்ள பதினான்கு லோகங்களுடன் சேர்ந்து, (ஒன்றுக்கொன்று பதிற்று மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப்பட்டு) - அதாவது, இதுவரை கூறப்பட்ட பதினான்கு லோகங்களையும், ஸ்ரீவிபு. (2-7-22) – ஏதத் அண்ட கடாஹேந திரச்ச ஊர்த்வமதஸ் ததா, கபித்தஸ்ய யதா பீஜம் ஸர்வதோ வை ஸமாவ்ருதம் – விளாம்பழத்தின் விதைகளானவை எவ்விதம் ஓட்டுடன் நான்கு பக்கங்களிலும் நன்றாகச் சூழப்பட்டு நிறைந்துள்ளனவோ அதே போன்று இந்த லோகங்கள் அனைத்தும் அண்ட கோளத்தால் கீழும் மேலுமாகச் சூழப்பட்டுள்ளன - என்பதற்கு ஏற்ப, விளாம்பழத்தின் உள்ளே இருக்கின்ற விதைகள் அதன் சதையை எங்கும் ஒரே போன்று பரவி நிற்பது போன்று, கோடி யோஜநமாநஸ்து கடாஹஸ் ஸம்வ்யவஸ்த்தித: - அண்டகோசமானது கோடி யோஜனை அளவு கொண்டது - என்பதற்கு ஏற்ப, கோடி யோஜனை எடுப்பாக சைவபுராணத்தில் கூறப்பட்டபடி அண்டகோசம் சூழ்ந்து நிற்கும். அண்டகோசத்துடன் கூடியுள்ள இந்த அண்டமானது, ஸ்ரீவிபு. (2-7-23) - தசோத்தரேண பயஸா மைத்ரேயாண்டஞ்ச தத் வ்ருதம் - மைத்ரேயரே! பூமிக்குப் பத்து மடங்கு அதிகமான நீராலும் அந்த அண்டம் சூழப்பட்டுள்ளது - என்பதற்கு ஏற்ப, பூமியானது பத்து மடங்கு பரந்து நிற்கும் நீர் தத்வத்தால் சூழப்பட்டுள்ளது. ஸ்ரீவிபு. (2-4-98) - பஞ்சாசத் கோடி விஸ்தாரா ஸேயமுர்வீ மஹாமுநே, ஸஹைவாணடகடாஹேந ஸத்வீபாபதி மஹீதரா - மகாமுனிவரே! தீவுகள், பெருங்கடல்கள், பெரிய மலைகள் என்று பலவற்றுடன் கூடியுள்ள அண்ட கோசத்துடன் சேர்ந்து இந்தப் பூமியானது ஐம்பது கோடி யோஜனை விரிவு கொண்டது – என்பதற்கு ஏற்ப, அண்டகோசத்துடன் சேர்ந்து பூமியானது ஐம்பது கோடி யோஜனை பரப்பு கொண்டது என்று சிலர் கூறுவர். “பூமண்டலம் து சதகோடி விஸ்தாரம் ஸாண்டகடாஹம் - அண்டகோசத்துடன் கூடிய பூமண்டலமானது நூறு கோடி யோஜனை பரப்பு கொண்டது” என்று வராஹபுராணத்தில் கூறப்பட்டதாலும், இவ்விதமே ஸ்காந்தபுராணம் சிவ ரஹஸ்யத்தில் கூறப்பட்டதாலும், மேரு மலையைச் சுற்றியுள்ள எல்லையுடன் ஐம்பது கோடி யோஜனை பரப்பளவையும் சேர்த்துக் கொண்டு, பூமியானது நூறு கோடி யோஜனை பரப்பளவாக உள்ளது என்றும் சிலர் கூறுவர். இவற்றில் ஏதேனும் ஒரு கருத்தை மதிப்பதற்கு ஏற்றதாகக் கொண்டு, அதில் பூமியைப் பத்து மடங்கு பெரும் நீர் தத்வம் சூழ்ந்துள்ளதாகக் கொள்ளவேண்டும். அண்டகோசத்தைப் பற்ற பெரிய நீர் தத்வமானது பத்து மடங்கு சூழ்ந்துள்ளது என்றும் கூறுவர். இப்படியாக உள்ள நீர் தத்வமானது, பத்து மடங்கு அதிகமாக உள்ள அக்னி தத்வம் சூழ்ந்துள்ளது. இது போன்றே அக்னி தத்வத்தை வாயு தத்வம் சூழும். வாயு தத்வத்தை ஆகாசம் சூழும். ஆகாசத்தை அஹங்காரம் மூடும். அஹங்காரத்தை மஹத் தத்வம் மூடும். மஹத் தத்வத்தை அவ்யக்தம் மூடும். ஸ்ரீவிபு. (2-7-26) – தத் அநந்தம் அஸங்கயாதப்ரமாணம் – ப்ரக்ருதி எனப்படும் ப்ரதானமானது, அளவிட இயலாதபடி உள்ளது - என்பதற்கு ஏற்ப அளப்பதற்கு இயலாதபடி உள்ள அவ்யக்தத்திற்குப் பத்து மடங்காகப் பலதும் சூழ்ந்துள்ளதாகக் கூறுவது எப்படி? ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பத்து என்பதும் அடங்கியுள்ளது போன்று, அளவிட இயலாத கணக்கில் இவையும் அடங்கியுள்ளன என்பது சரியே ஆகும். ஸ்ரீவிபு. (1-3-60) – வாரி வஹ்நி அநில ஆகாசைஸ் ததோ பூதாதிநா பஹி:, வ்ருதம் தச குணை: அண்டம் பூதாதிர் மஹதா ததா, அவ்யக்தேந ஆவ்ருதோ ப்ரஹ்மந் தைஸ்ஸர்வைஸ் ஸஹிதோ மஹாந்; ஏபி: ஆவரணை: அண்டம் ஸப்தபி: ப்ராக்ருதைர் வ்ருதம் - அதன் பின்னர் நீர், அக்னி, வாயு, ஆகாசம் ஆகியவற்றாலும், அஹங்காரத்தாலும் சூழப்பட்ட அண்டமானது, ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமாகச் சூழப்பட்டுள்ளது. பூதாதியானது மஹத்தால் சூழப்பட்டுள்ளது. இவ்விதம் அனைத்துவிதமான மூடுதலையும் கொண்ட மஹத்தானது, அவ்யக்தத்தால் சூழப்பட்டுள்ளது. இவ்விதம் ஏழுவிதமான மறைவுகள் கொண்டு அண்டம் மூடப்பட்டுள்ளது - என்பதற்கு ஏற்ப, ஒவ்வொன்றும் பத்து மடங்குகளாக உள்ள ஏழுவிதமான மறைப்புகளால் சூழப்பட்டுள்ளது. இப்படியாக உள்ள இது, (ஈச்வரனுக்கு க்ரீட ஆகந்துக ஸ்த்தாநீயங்களாய்) - விளையாட்டிலேயே எப்போதும் நாட்டம் கொண்டுள்ள ஒரு பாலகனிடம் உள்ள விளையாடும் பந்து போன்று, லீலைகளை உள்ளடக்கிய ஈச்வரனுக்கு இவை அனைத்தும் விளையாட்டுப் பொருள்களாக உள்ளன. ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி: - இந்த மனிதர்களைப் பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் - என்றும், மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ - சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக் கருவிகள் போன்று பயன்படுத்துகிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுக்கு அனைத்தும் விளையாட்டுப் பொருள்கள் அல்லவோ? (ஜலபுத்புதம்போலே, ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்) - இந்த அண்டங்களை ஈச்வரன் படைக்கும்போது, ஒவ்வொரு படையாக வைத்து வீடு கூட்டுவது போன்று, வரிசையாக ஏற்படுத்தல் இன்றி, ஸ்ரீவிபு. (1-2-56) – ந க்ரமேண விவ்ருத்தம் தத் ஜலபுத்புதவத் ஸமம் - அண்டமானது வரிசையாக வளராமல், நீர்க்குமிழி போன்று சட்டென்று வெளிப்படுகிறது - என்பதற்கு ஏற்ப, நீர்க்குமிழி போன்று ஒரே நேரத்தில் உற்பத்தி ஆகிறது. மேலும் பல நீர்க்குமிழிகள் ஒரே நேரத்தில் உற்பத்தி ஆவது போன்று, ஸ்ரீவிபு. (1-3-17) – ஏக காலேந ஸ்ருஜயந்தே - ஒரே காலத்தில் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன - என்பதற்கு ஏற்ப, அனைத்து அண்டங்களும் ஒரே காலத்தில் உண்டாகின்றன. ஆகவே (அண்டங்கள்தான் அநேகங்கள்) என்று கூறும் இடமும், அவை அனைத்தும் ஒரே போன்று இருக்கும் என்ற இடமும் கூறப்பட்டதாகிறது.