Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 111)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானேயுண்டாக்கும். அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்றுயுண்டாக்கும்.

அது தன்னை தர்சிப்பிக்கைக்காக ஸமஷ்டி ஸ்ருஷ்டியிலும், வ்யஷ்டி ஸ்ருஷ்டியிலும் ஸர்வேர்வரன் செய்யும் க்ரமத்தை அருளிச்செய்கிறார் மேல்.

இவ்விதமாக ஸ்ருஷ்டியை விளக்குவதற்காக, ஸமஷ்டி ஸ்ருஷ்டி மற்றும் வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஆகியவற்றில் ஸர்வேச்வரன் செய்யும் வரிசையை அருளிச்செய்கிறார்.

– (அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானேயுண்டாக்கும்) அதாவது, ஸமுதாய கார்யமான அண்டத்தையும், தத் காரணமான மஹதாதி பதார்த்தங்களையும், ஸத்ய ஸங்கல்பனான தன்னுடைய அவயவஹித ஸங்கல்பத்தாலே யுண்டாக்கும் என்கை. “ஸோபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ருக்ஷுர் விவிதா: ப்ரஜா:, அப ஏவ ஸஸர்ஜாதௌ தாஸு வீர்யமபாஸ்ருஜத; ததண்டமபவத்தைமம் ஸஹஸ்ராம்சு ஸம்ப்ரபம்” என்னக் கடவதிறே. (அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்றுயுண்டாக்கும்) அதாவது, சதுர்முகாதி சேதநருடைய ஹ்ருதயங்களிலேயிருந்து, “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்ச” என்று, ஸங்கல்ப ஜ்ஞாநாதிகளை ஜநிப்பித்துக் கொண்டு. அண்டாந்த்ர வர்த்திகளான ஸகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்குமென்கை. “யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யே ஸத்வஜா தேந வை த்விஜ! தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்ஸ்தௌ தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு:” என்று, ஈச்வரன் ஸகல கர்த்ரு சரீரியாய்க் கொண்டு ஸகல கார்யங்களையும் ஸ்ருஷ்டிக்கும் என்னக்கடவதிறே.

(அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானேயுண்டாக்கும்) - அனைத்து தத்துவங்களும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட அண்டத்தையும், அதன் காரணமாக உள்ள மஹத் முதலான பதார்த்தங்களையும் ஸர்வேச்வரன் தனது நேரடியான ஸங்கல்பம் மூலம் உண்டாக்குகிறான். மநு. (1-8-9) - ஸோபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ருக்ஷுர் விவிதா: ப்ரஜா:, அப ஏவ ஸஸர்ஜாதௌ தாஸு வீர்யமபாஸ்ருஜத; ததண்டமபவத்தைமம் ஸஹஸ்ராம்சு ஸம்ப்ரபம் - பரமாத்மா ஸங்கல்பம் செய்து, தனது திருமேனியிலிருந்து பலவற்றையும் படைக்கவேண்டும் என்று எண்ணி, முதலில் நீரைப் படைத்தான்; அந்த நீரில், வீர்யமான அண்டத்தை ஸ்ருஷ்டித்தான்; அது பொன்மயமான சூரியனுக்கு நிகரான தேஜஸ் கொண்டதாக விளங்கியது - என்று கூறப்பட்டது அல்லவோ? (அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்றுயுண்டாக்கும்) - நான்முகன் போன்றவர்கள் சேதநர்களுடைய இதயங்களிலிருந்து, கீதை (15-15) – ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்ச - அனைவருடைய இதயங்களிலும் நான் உள்ளேன்; என்னிடமிருந்தே ஞாபமும் மறதியும் ஏற்படுகின்றன - என்று கூறுவதற்கு ஏற்ப, நினைவுகள் மற்றும் ஞானம் போன்றவற்றை ஸ்ருஷ்டித்துக் கொண்டு, அண்டத்தின் உள்ளே வசிக்கின்ற அனைத்தையும் ஸ்ருஷ்டிக்கிறான். ஸ்ரீவிபு (1-12-33) - யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யே ஸத்வஜா தேந வை த்விஜ! தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்ஸ்தௌ தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு: - எந்தப் பொருள்கள் நான்முகனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவோ அவை அனைத்திற்கும் பகவான் ஸ்ரீஹரியே காரணமாக உள்ளான்; அனைத்தும் அவனுடைய சரீரம் அல்லவோ? - என்பதாக, ஸர்வேச்வரன் அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்டு, அனைத்து கார்யப்பொருள்களையும் படைக்கிறான் என்று கருத்து.