Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 110)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இவை கூடினாலல்லது கார்யகரமல்லாமையாலே, மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிச் சுவரிடுவாரைப்போலே, ஈச்வரன் இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஓரண்டமாக்கி, அதுக்குள்ளே சதுர்முகனை  ஸ்ருஷ்டித்தருளும்.

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களினுடைய உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்; இவற்றைக் கொண்டு ஈச்வரன் அண்ட ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணும்படியை அருளிச்செய்கிறார் மேல்.

இப்படியாக மஹத் முதலானவற்றின் உற்பத்தி வரிசை குறித்து இதுவரை அருளிச்செய்தார். அடுத்து இவற்றைக் கொண்டு ஈச்வரன் இந்த அண்டத்தை, ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்வது குறித்து அருளிச்செய்கிறார்.

(இவை கூடினாலல்லது கார்யகரமல்லாமையாலே) என்று. அதாவது “நாநாவீர்யா: ப்ருதக் பூதாஸ் ததஸ் தே ஸம்ஹதிம் விநா, நாசக்நுவந் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டுமஸமாகம்ய க்ருதஸ்நச:” என்கிறபடியே சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே நாநா சக்தி யுக்தங்களாய ப்ருதக் பூதங்களாயிருக்கிற இம்மஹதாதி பதார்த்தங்கள், பரஸ்பர ஸம்ஹதமானாலல்லது அண்டரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே என்கை. (மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிச் சுவரிடு வாரைப் போலே) அதாவது ப்ருதக் வீர்யங்களாய், ப்ருதக் ஸ்த்திதங்களாயிருக்கிற ம்ருத் ஸிகதாஸலிலங்களை அந்யோந்யம் சேர்த்து தத் ஸமுதாயாத்மகமானதொரு த்ரவ்யமாக்கி, பித்தி ரூபமானதொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை. (ஈச்வரன் இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஓரண்டமாக்கி) அதாவது ஜகத்ஸ்ரஷ்டாவான ஈச்வரன் “ஸமேத்யாந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாச்ரயா, ஏக ஸங்காத லக்ஷ்யாச்ச ஸம்ப்ராப்யைக்யமசேஷத மஹதாதயோ விசேஷாந் தா ஹயண்டமுத்பாதயந்திதே” என்கிறபடியே, இவற்றையெல்லாம் அந்யோந்யம் ஸம்ஹதமாக்கி, இவற்றாலே அண்ட ஸ்ருஷ்டியைப் பண்ணியென்கை. இவ்வண்டத்துக்குள்ளே மஹதாதி கார்யங்களையடையக் காண்கையாலே மஹதாதி பதார்த்தங்களெல்லாவற்றையும் சேர்த்து அண்ட ஸ்ருஷ்டியைப் பண்ணினா னென்னுமிடம ஸுவ்யக்தம். ஆகையாலே, “பூதேப்யோண்டம் மஹாபுத்தே ப்ருஹத் தது தகேசயம்” என்று, பூதங்களில் நின்றும அண்டம் உத்பந்நமாம்; அது உதகத்திலே கிடக்குமென்று சொன்னதும், “அப ஏவ ஸஸர்ஜாதௌ தாஸு வீர்யமபா ஸ்ருஜத ததண்டமபவத்தைமம் ஸஹஸ்ராம்சு ஸமப்ரபம்” என்று அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பந்நமாமென்று மநுபகவான் சொன்னதும் பூதாந்தரத்துக்கும் உபலக்ஷணம். அதாவது பூர்வபூதாம்சங்களோடே ஸம்ஸ்ருஷ்டமுமாய் ப்ருதிவியும் தனக்குள்ளே கரைந்து கிடக்கிற ஐலத்தில் நின்றும் உத்பந்நமாய் அதிலே கிடக்குமென்றபடி. இப்படி அண்ட ஸ்ருஷ்டியைப் பண்ணும்படியை அருளிச் செய்து அநந்தரம், இந்த பாஹ்யமான பூதங்கள் ஆந்தரமான ஆகாசாதிகளாய் பரிணமித்த பின்பு அவற்றைக் கொண்டு லோகவிபாகங்களைப் பண்ணுகைக்காகவும் அந்த லோகங்களில் தேவாதி ஜீவ விபாகங்களைப் பண்ணுகைக்காகவும் இவ்வண்டத்துக்குள்ளே பத்தாத்ம ஸமஷ்டிபூதனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தருளும்படியை அருளிச்செய்கிறார் (அதுக்குள்ளே சதுர்முகனை ஸ்ருஷ்டித்தருளும்) என்று. சதுர்முகனுக்கு பத்தாத்ம ஸமஷ்டிபாவமாவது, இவ்வண்டத்துக்கு வேண்டும் கர்மவச்ய சேதனர் இவன் சரீரத்திலே உண்டாய்க் கிடக்கை. இப்படி சதுர்முகனை ஸ்ருஷ்டித்தது, இனிமேலுண்டான ஸ்ருஷ்டியெல்லாம் ஸத்வாரகமாக நின்று செய்வதாகவிறே.

(இவை கூடினாலல்லது கார்யகரமல்லாமையாலே) - அதாவது ஸ்ரீவிபு. (1-2-53) – நாநாவீர்யா: ப்ருதக் பூதாஸ் ததஸ் தே ஸம்ஹதிம் விநா, நாசக்நுவந் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டுமஸமாகம்ய க்ருதஸ்நச: - அதன் பின்னர் பலவிதமான வீர்யங்கள் கொண்டதும், தனித்தனியாக உள்ளதும் ஆகிய அந்த மஹத் முதலான தத்வங்கள் ஒன்றாகச் சேர்ந்தால் அல்லாமல் ப்ரஜைகள் போன்றவற்றைப் படைப்பதற்கு ஒன்றாகச் சேரத் தக்க வரிசையை அடைவதில்லை - என்பதற்கு ஏற்ப சாந்தத்தன்மை, கோரத்தன்மை மற்றும் மூடத்தன்மை ஆகிய தன்மைகளின் விளைவாக பலவிதமான சக்தி கொண்டவைகளாகவும், தனித்தன்மையாக உள்ளவையாகவும் இருக்கின்ற இந்த மஹத் முதலான பதார்த்தங்கள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் அல்லாமல், அண்ட ரூபமாக உள்ள ஸ்ருஷ்டியை உற்பத்தி செய்ய இயலாது. (மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிச் சுவரிடு வாரைப் போலே) - தனித்தன்மையாக சக்தி கொண்டவைகளாகவும், தனித்தனியே இருப்பதற்கு ஏற்றவையாகவும் உள்ள மண் மற்றும் நீர் போன்றவற்றை, ஒன்றுடன் ஒன்று பிரிக்க இயலாதபடிச் சேர்த்து, அந்தக் கலவையை உள்ளடக்கியதான ஒரு பொருளாக்கி, சுவர் என்ற வடிவமாக உள்ள கார்யப்பொருளை உண்டாக்குவது போன்று ஆகும். (ஈச்வரன் இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஓரண்டமாக்கி) - இந்த ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவனாகிய ஈச்வரன் ஸ்ரீவிபு (1-2-53) – ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாச்ரயா, ஏக ஸங்காத லக்ஷ்யாச்ச ஸம்ப்ராப்ய ஐக்யம் அசேஷத மஹதாதயோ விசேஷாந் தா ஹி அண்டம் உத்பாதயந்திதே - ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவைகளாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவைகளாக, ஒரு குவியலாகக் காணத்தகுந்தவைகளாக உள்ள அவற்றைக் கொண்டு, மஹத் தொடங்கி அவற்றின் விசேஷமான பூதங்கள் முடிய உள்ள பலவும் சேர்ந்து, அண்டத்தை உற்பத்தி செய்கின்றன - என்பதற்கு ஏற்ப, இவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்து, இவற்றால் அண்ட ஸ்ருஷ்டியைச் செய்து. அதாவது, இந்த அண்டத்திற்குள் மஹத் முதலானவற்றின் கார்யங்களை முற்றிலுமாகக் காண முடிவதால், மஹத் முதலானவற்றைச் சேர்த்து இந்த அண்ட ஸ்ருஷ்டியைச் செய்தான் என்பது மிகவும் தெளிவாகிறது. எனவே, ஸ்ரீவிபு (1-2-55) – பூதேப்யோண்டம் மஹாபுத்தே ப்ருஹத் தது தகேசயம் - பூதங்களிலிருந்து அண்டம் உண்டாகிறது, பெரியதாக உள்ள அந்த அண்டம் நீரில் உள்ளது - என்பதாக, பூதங்களிருந்து அண்டம் உற்பத்தி ஆகிறது. அது நீரில் கிடப்பதாகக் கூறுவது உபலக்ஷணமே ஆகும். மநுஸ்ம்ருதி (1-7-9) - அப ஏவ ஸஸர்ஜாதௌ தாஸு வீர்யம் அபா ஸ்ருஜத தத் அண்டமபவத்தைமம் ஸஹஸ்ராம்சு ஸமப்ரபம் - தொடக்கத்தில் நீரைப் படைத்தான், நீரில் அண்டத்தைப் படைத்தான், அண்டமானது பொன்னைப் போன்று சூரியனை ஒத்த தேஜஸ் கொண்டதாக ஆனது – என்று “நீரிலிருந்து அண்டம் உற்பத்தி ஆனது” என மநுபகவான் கூறியது என்பது, மற்ற பூதங்களுக்கும் உபலக்ஷணமே ஆகும். அதாவது முன்பு முன்பு உள்ள பூதங்களுடைய அம்சங்களுடன் சேர்ந்துள்ளதாகவும், பூமியும் தனக்குள் கரைந்து நிற்கும் நீரிலிருந்து உற்பத்தியாகி அதனுடன் இருக்கும். இப்படியாக அண்டத்தின் ஸ்ருஷ்டியை அருளிச்செய்த பின்னர் வெளியே உள்ளதான பூதங்கள், உள்ளே நிற்கும் ஆகாசம் போன்றவைகளாக மாறிய பின்னர், அவற்றைக் கொண்டு லோக வேறுபாடுகளைச் செய்வதற்காகவும், இந்த லோகங்களில் தேவர்கள் மனிதர்கள் என்பதான வேறுபாடுகளைச் செய்வதற்காகவும், இந்த அண்டத்திற்குள் பந்தப்பட்டுள்ள அனைத்து ஜீவாத்மாக்களுடைய தொகுத்த வடிவமான நான்முகனை ஸ்ருஷ்டித்து நிற்குமாறு அவன் அருளிய விதத்தை அருளிச்செய்கிறார். பந்தப்பட்ட ஜீவாத்மாக்களுடைய தொகுத்த ரூபமாக நான்முகன் உள்ளான் என்பது எப்படியென்றால், இந்த அண்டத்திற்கு வேண்டிய கர்மவசப்பட்ட சேதநர்கள் இவன் சரீரத்தில் உள்ளதால் ஆகும். இவ்விதம் நான்முகனைப் படைத்தான். அடுத்துள்ள ஸ்ருஷ்டிகள் அனைத்தையும் அந்த நான்முகன் மூலமாகச் செய்தான்.