Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 109)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை.
அதுவென்? மோக்ஷதர்மத்திலே, “சப்த ச்ரோத்ரம் ததா காதித்ரயமாகாச ஸம்பவம், வாயோ ஸ்பர்சம் ததா சேஷ்டா த்வக் சைவ த்ரிதயம் ஸ்ம்ருதம்; ரூபம் சக்ஷுஸ் ததா வ்யக்திஸ் த்ரிதயம் தைஜ உச்யதே; ரஸ: க்லேதச்ச ஜிஹ்வா ச த்ரயோ ஜலகுணா: ஸ்ம்ருதா:, க்ராணம் க்ரேயம் சரீரஞ்ச தே து பூமிகுணா: ஸ்ம்ருதா:” என்று சொல்லுகையாலே, இதிஹாஸாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப்படுகையால், பூதங்கள் இவற்றுக்குக் காரணமாக வேணுமே என்ன;
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட கருத்திற்குச் சிலர் ஆக்ஷேபம் கூறுகிறார்கள். மஹாபாரதம் மோக்ஷதர்மத்தில் - சப்த ச்ரோத்ரம் ததா காதித்ரயமாகாச ஸம்பவம், வாயோ ஸ்பர்சம் ததா சேஷ்டா த்வக் சைவ த்ரிதயம் ஸ்ம்ருதம்; ரூபம் சக்ஷுஸ் ததா வ்யக்திஸ் த்ரிதயம் தைஜ உச்யதே; ரஸ: க்லேதச்ச ஜிஹ்வா ச த்ரயோ ஜலகுணா: ஸ்ம்ருதா:, க்ராணம் க்ரேயம் சரீரஞ்ச தே து பூமிகுணா: ஸ்ம்ருதா: - ஓசை, செவி மற்றும் பறவைகளுடைய வழியாக உள்ள ஆகாயம் ஆகியவை ஆகாசத்திலிருந்து உண்டாயின. ஸ்பர்சம், அசைவு மற்றும் தோல் ஆகியவை வாயுவிடமிருந்து உண்டாயின. சுவை, நனைத்தல் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் குணங்களாகக் கூறப்படுகின்றன. மூக்கு, மணம் மற்றும் சரீரம் ஆகியவை பூமியின் குணங்களாகக் கூறப்படுகின்றன - என்று கூறப்படுவதால், இதிஹாஸம் முதலானவற்றிலும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்தன்மை கூறப்படுவதால், இவற்றின் உற்பத்திற்கு பூதங்கள் காரணமாக இருக்கவேண்டும் அல்லவோ? இந்த ஆக்ஷேபத்திற்குச் சமாதானம் கூறுகிறார்.
(பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை) என்கிறார். அதாவது இதிஹாஸாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம், பூதங்களாலுண்டான ஆப்யாயந மாத்ரத்தைப் பற்றவாகையாலே, இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை; காரணங்களன்றென்கை. ஆப்யாயகத்வமாவது போஷகத்வம். இன்னமும், அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்தகாரணமாகவும், பூதங்களை இவற்றுக்கு உபாதாந காரணமாகவும் சொல்லுகிறதொரு குத்ருஷ்டி மதமுண்டிறே . “அஹங்காரஸ்யேந்த்ரியாணி ப்ரதி நிமித்தத்வமேவ; பூதாநாமேவ உபாதாநத்வம். அந்நமயம் ஹி ஸோம்ய மந: ஆபோமய ப்ராணஸ் தேஜோமயீ வாக் இதி ச்ருதேரிதி கேசிதாஹு:, ததயுக்தம்; அஹங்காரஸ்யைவோபாதாநத்வேபி பூதாநாமாப்யாயகத்வேநாபி ததா நிர்தேசோ பபத்தே:” என்று பிளளை எங்களாழ்வானெடுத்துக் கழித்தது. அதுவும், “இந்த்ரியங்களிலே சிலவற்றை” என்று தொடங்கி இவரருளிச் செய்த க்ரமந்தன்னாலே ப்ரதிக்ஷிப்தம். அப்போதைக்கு, “அது சாஸ்த்ர விருத்தம்” என்றது, “ஏகாதசம் மநச்சாத்ர தேவா வைகாரிகாஸ் ஸ்ம்ருதா:” இத்யாதிகளாலே இவற்றை ஸாத்விக அஹங்கார கார்யமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தமென்கை. புராணாதிகளைப் பற்ற, “அந்நமயம் ஹி ஸோம்ய மந:” இத்யாதி ச்ருதிக்கு ப்ராபல்யமுண்டேயாகிலும், “இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத்” என்கையாலே, உபப்ரும்ஹணாநுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ளவேணுமென்று கருத்து. ஆனால், உபப்ரும்ஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே, இவற்றுக்கு பூதங்கள் காரணமாயன்றோ தோற்றுகிறது என்ன; “பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை” என்று நிர்வாஹம். க்ராணாதிகளான இந்த்ரியங்களுக்கு ப்ருதிவ்யாதி பூதங்களாலுண்டான ஆப்யாயநம் ச்ருதி ஸ்ம்ருதிகளிலே ப்ரஸித்தம். இதுதான் ஸுபாலோபநிஷத் வ்யாக்யாநத்திலே, “க்ராணாதீநாமிந்த்ரியாணாம் ஹி ப்ருதிவ்யாதி பூதைராப்யாயநம் ச்ருதி ஸ்ம்ருதிஷு ப்ரஸித்தம். அந்நமயம் ஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ் தேஜோமயீ வாக் ச்ரோத்ரம் நபோ க்ராணமுக்தம் ப்ருதிவ்யா: இத்யாரப்ய, வாய்வாத்மகம் ஸ்பர்சநமாமநந்தி நபே: ச்ரோத்ரஞ்ச தந்மயம் இத்யாதிஷு” என்று ச்ருதப்ரகாசிகாகாரராலே அபிஹிதமாயிற்று. இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யாயகங்களாயிருக்குமென்னுமிடம் மோக்ஷதர்மத்திலே ப்ருகு பரத்வாஜ ஸம்வாதத்திலே, “ஆப்யாயந்தே ச தே நித்யம் தாதவஸ் தைஸ்து பஞ்சபி:” என்று ஸுவ்யக்தமாகச் சொல்லப்பட்டது. ஆகையால், பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்களித்தனை; காரணங்களன்று என்றதாயிற்று.
இதிஹாசம் முதலானவைகளில் இந்த்ரியங்களுக்குக் கூறப்பட்ட பௌதிகத்வம் என்பது பூதங்களால் ஏற்பட்ட வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கமுடியாது என்பதால், இந்த்ரியங்களை பூதங்கள் வளரச் செய்வதாக மட்டுமே உள்ளன; உற்பத்தி காரணங்கள் அல்ல. ஆப்யாயகத்வம் என்பது போஷகத்வம் (வளரச் செய்யும் தன்மை). மேலும் அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்தகாரணமாகவும், பூதங்களை உபாதானக் காரணமாகவும் கூறுகின்ற வேறு ஒரு முரணான மதமும் உள்ளது. ஸ்ரீவிபு. (21-2-48) – அஹங்காரஸ்ய இந்த்ரியாணி ப்ரதி நிமித்தத்வம் ஏவ; பூதாநாம் ஏவ உபாதாநத்வம். “அந்நமயம் ஹி ஸோம்ய! மந: ஆபோ மய ப்ராண: தேஜோமயீ வாக்” இதி ச்ருதேரிதி கேசிதாஹு:, தத் அயுக்தம்; அஹங்காரஸ்ய ஏவ உபாதாநத்வேந அபி பூதாநாம் ஆப்யாயகத்வேந அபி ததா நிர்தேச உபபத்தே: - அஹங்காரத்திற்கு இந்த்ரியங்களைக் குறித்து நிமித்தகாரணமாக உள்ள தன்மை மட்டுமே உள்ளது; பூதங்களுக்கு மட்டுமே உபாதானக்காரணமாக உள்ள தன்மை உள்ளது. “ச்வேதகேது! மனமானது அன்னமயம், ப்ராணனானது நீர்மயம், வாக்கானது தேஜோமயம்” என்று ச்ருதி கூறுகிறது. இவ்விதம் வேதம் கூறுவதால், பூதங்களை முதற்காரணம் என சிலர் உரைக்கிறார்கள். ஆனால் அது சரியான கருத்து அல்ல. அஹங்காரத்திற்கு முதற்காரணமாக உள்ள தன்மையும், பூதங்களுக்கு வளர்க்கின்ற தன்மையும் உள்ளதால், பூதங்கள் முதற்காரணமாக இருக்க முடியாது - என்று பிள்ளை எங்களாழ்வான் அந்தக் கருத்துக்களை விலக்கினார். மேலும் சூர்ணை (107) - இந்த்ரியங்களிலே சிலவற்றை - என்று தொடங்கி இவர் அருளிச்செய்த வரிசை மூலம் அந்த வாதம் தள்ளப்பட்டது. அப்போது, சூர்ணை (108) – அது சாஸ்த்ர விருத்தம் - என்று கூறியது, “ஏகாதசம் மநச்சாத்ர தேவா வைகாரிகாஸ் ஸ்ம்ருதா:” என்பது போன்றவற்றில், இவற்றில் ஸாத்விக அஹங்கார கார்யமாகக் கூறுகின்ற புராணங்கள் போன்றவைகளுக்கு முரணாக உள்ளதால் ஆகும். புராணங்களைப் பொறுத்தவரையில், “அந்நமயம் ஹி ஸோம்ய மந: –ஸோம்ய! மனமானது பூமிமயமாக உள்ளது” என்பது போன்ற ச்ருதி வாக்கியத்திற்கு வலிமையான தன்மை உள்ளது என்றாலும், மஹாபாரதத்தில் - இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத் - இதிஹாஸங்களாலும் புராணங்களாலும் வேதமானது விவரிக்கப்பட வேண்டியாதாகும் - என்று கூறப்படுவதால், இதிஹாஸம் போன்ற நூல்களுக்கு ஏற்றபடியே வேதங்களுக்கும் பொருள் கொள்ளவேண்டும். ஆனால் இதிஹாஸம் போன்ற துணை நூல்களில் கூட பௌதிகத்வம் கூறப்படுவதால், இந்த்ரியங்களுக்குப் பூதங்கள் காரணமாக உள்ளதாக அல்லவோ தோன்றுகிறது என்று கேட்கலாம். அப்படி அல்ல, பூதங்களுக்கு இந்த்ரியங்களை வளர்க்கின்ற தன்மை மட்டுமே உள்ளது என்று கருத்து. மூக்கு முதலான இந்த்ரியங்களுக்கு பூமி முதலான பூதங்களால் ஏற்படுவது வளர்ச்சி மட்டுமே ஆகும் என்பதான கருத்து ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளில் ப்ரஸித்தம் ஆகும். இது ஸுபால உபநிஷத் வ்யாக்யானத்தில், க்ராணாதீநாமிந்த்ரியாணாம் ஹி ப்ருதிவ்யாதி பூதைராப்யாயநம் ச்ருதி ஸ்ம்ருதிஷு ப்ரஸித்தம். அந்நமயம் ஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ் தேஜோமயீ வாக் ச்ரோத்ரம் நபோ க்ராணமுக்தம் ப்ருதிவ்யா: இத்யாரப்ய, வாய்வாத்மகம் ஸ்பர்சநமாமநந்தி நபே: ச்ரோத்ரஞ்ச தந்மயம் இத்யாதிஷு - மூக்கு முதலான இந்த்ரியங்களுக்கு பூமி முதலான பூதங்களால் வளர்ச்சி ஏற்படுதல் என்பது வேதங்களில் கூறப்பட்டது. மனமானது அன்னமயம், ப்ராணனானது நீர்மயம், வாக்கானது தேஜோமயம் என்றும் கூறப்பட்டது. ஆகாயத்திலிருந்து செவி இந்த்ரியமும், பூமியிலிருந்து மூக்கு இந்த்ரியமும் என்று தொடங்கி , ஸ்பர்சத்தை வாயுவிற்கும், செவியை ஆகாசத்திடமும் கூறுகிறார்கள் - என்று ச்ருதிப்ரகாசிகாகாரால் உணர்த்தப்பட்டது. இவ்விதம் இந்த்ரியங்களுக்குப் பூதங்களானவை எப்போதும் வளர்ச்சிக்கு உதவுபவையாக மட்டுமே உள்ளன என்ற கருத்தானது மஹாபாரதம் மோக்ஷ தர்மத்தில், ப்ருகு மற்றும் பரத்வாஜருடைய உரையாடலில், ஆப்யாயந்தே ச தே நித்யம் தாதவஸ் தைஸ்து பஞ்சபி: - ஐந்தாக உள்ள பூதங்களால் அனைத்து காலத்திலும் வளரும்படிச் செய்து - என்று மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது. எனவே பூதங்களானவை இந்த்ரியங்களுடைய வளர்ச்சிக்கு உதவுபவை மட்டுமே ஆகும், காரணப்பொருள்கள் அல்ல என்றாகிறது.