Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 106)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஸாத்விகாஹங்காரம் சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே ஸஹகாரியாய்க் கொண்டு ச்ரோத்ராதி ஜ்ஞாநேந்திரியங்களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும். தத்ஸஹக்ருதமாய்க் கொண்டு வாகாதிகர்மேந்த்ரியங்களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும். இவற்றையொழியத் தானே மநஸ்ஸை ஸ்ருஷ்டிக்குமென்றும் சொல்லுவர்கள்.

இப்படி ஸாத்விக தாமஸ அஹங்காரங்களுக்கு ஸாதாரண ஸஹகாரியை அருளிச்செய்தார் கீழ். அநந்தரம், ஸாத்விக அஹங்காரத்துக்கு அஸாதாரணமாயிருப்பன சில ஸஹகாரி விசேஷங்களை அருளிச்செய்கிறார் (ஸாத்விக அஹங்காரம்) என்று தொடங்கி.

இப்படியாக ஸாத்விகம் மற்றும் தாமஸ அஹங்காரங்களுக்குப் பொதுவாக உள்ளதான “துணை நிற்கும் உதவி” குறித்து அருளிச்செய்தார். அடுத்து, ஸாத்விக அஹங்காரத்திற்கு மட்டுமே உதவி செய்தபடி உள்ளதான சில விசேஷங்கள் குறித்து அருளிச்செய்கிறார்.

அதாவது ஸாத்விக அஹங்காரம் இந்த்ரியங்களை ஸ்ருஷ்டிக்குமளவில் இவற்றினுடைய விஷய ப்ரதிநியமத்துக்காக சப்த தந்மாத்ரத்தை ஸஹகாரியாகக் கொண்டு ச்ரோத்ரத்தையும், ஸ்பர்ச தந்மாத்ரத்தை ஸஹகாரியாகக் கொண்டு த்வக் இந்த்ரியத்தையும், ரூப தந்மாத்ரத்தை ஸஹகாரியாகக் கொண்டு சக்ஷுஸ்ஸையும், ரஸ தந்மாத்ரத்தை ஸஹகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும், கந்த தந்மாத்ரத்தை ஸஹகாரியாகக் கொண்டு க்ராணேந்த்ரியத்தையும் ஸ்ருஷ்டிக்கும். இப்படி சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே ஸஹகாரியாகக் கொண்டு ச்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங்களைந்தையும் ஸ்ருஷடித்தவநந்தரம், ச்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும், த்வகிந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும், சக்ஷுர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும், ரஸநா விஷய ரஸ ஆச்ரயமான ஜலத்தினுடைய நிஸ்ஸரண ஹேதுவாயும், க்ராண விஷய கந்தாச்ரய ப்ருதிவி அம்சமான அந்நாதிகளில் ருஜீஷோத்ஸர்ஜந ஹேதுவாயும், இப்படி ஜ்ஞாநேந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டியிருக்கும். “கர்மேந்த்ரிய பஞ்சகத்தை ஸ்ருஷ்டிக்குமளவில், ச்ரோத்ர ஸஹக்ருதமாய்க் கொண்டு வாக்கையும், த்வக் ஸஹக்ருதமாய்க் கொண்டு பாணியையும, சக்ஷுஸ் ஸஹக்ருதமாய்க் கொண்டு பாதத்தையும், ஜிஹ்வா ஸஹக்ருதமாய்க் கொண்டு உபஸ்தத்தையும், க்ராண ஸஹக்ருதமாய்க் கொண்டு பாயுவையும் ஸ்ருஷ்டித்து, ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கும் கர்மேந்த்ரியங்களுக்கும் ஸஹகாரியாய், உபயாத்மகமான மநஸ்ஸை ஸஹகாரி நிரபேக்ஷமாகத் தானே ஸ்ருஷ்டிக்குமென்று தத்வவித்துக்கள் சொல்லுவர்கள்”, என்கை. இது தன்னை ஸ்ரீவிஷ்ணுபுராண வ்யாக்யாநத்திலே, “அயமத்ரேந்த்ரிய ஸ்ருஷ்டி க்ரம: வைகாரிகாஹங்காராத் க்ரமேண சப்த தந்மாத்ராதி பஞ்சக ஸஹாயாத் க்ரமேண ச்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரிய பஞ்சகஸ்ய ஸ்ருஷ்டி:, தஸ்மாதேவ தத் ஸஹாயாத் வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகஸ்ய; அஸஹாயாத்து தஸ்மாந் மநஸஸ் ஸ்ருஷ்டிரிதி” என்று பிள்ளை எங்களாழ்வானுமருளிச்செய்தார்.

ஸாத்விக அஹங்காரமானது இந்த்ரியங்களை ஸ்ருஷ்டி செய்யும்போது அந்தந்த புலன்களுடைய விஷயத்தின் நியமத்திற்காக, சப்த தந்மாத்ரத்தைத் துணையாகக் கொண்டு காதுகளையும், ஸ்பர்ச தந்மாத்ரத்தைத் துணையாகக் கொண்டு தோலையும், ரூப தந்மாத்ரத்தைத் துணையாகக் கொண்டு கண்களையும், ரஸ தந்மாத்ரத்தைத் துணையாகக் கொண்டு நாக்கையும், கந்த தந்மாத்ரத்தைத் துணையாகக் கொண்டு மூக்கையும் படைக்கிறது. இப்படியாக சப்த தந்மாத்ரைகள் முதலான ஐந்தையும் துணையாகக் கொண்டு, காதுகள் முதலான ஐந்து ஞான இந்த்ரியங்களையும் படைத்த பின்னர், காதுகளால் பெறப்படும் சப்த விஷயமாகவும், தோல் இந்த்ரியம் மூலம் உணரப்படுவதான ஸ்பர்ச விஷயமாகவும், கண்கள் மூலம் பெறப்படுவதான உருவத்தில் செயல்படும் விஷயமாகவும், மூக்கின் விஷயமாக உள்ள மணம் என்பதை அண்டி நிற்கும் ப்ரக்ருதியின் அம்சமாக உள்ள உணவு முதலானவற்றில் சாரமாக அல்லாதவற்றை மேலே தள்ளுவதற்குக் காரணமாகவும் என, இப்படியாக ஞான இந்த்ரியங்கள் முதலானவற்றையும் கொண்டு, சப்த தந்மாத்ரை போன்ற ஐந்தையும் அண்டியிருக்கும். “கர்ம இந்த்ரியங்கள் ஐந்தையும் படைக்கும்போது செவியைத் துணையாகக் கொண்டு வாக்கையும், தோலை உதவியாகக் கொண்டு கைகளையும், கண்களை உதவியாகக் கொண்டு கால்களையும், நாக்கை உதவியாகக் கொண்டு மர்ம உறுப்புகளையும், மூக்கை உதவியாகக் கொண்டு மலக் கருவியையும் படைத்து, ஞானம் மற்றும் கர்ம இந்தரியங்களுக்குத் துணையாக இருந்தபடி, இந்த இரண்டிற்கும் பொதுவாக உள்ள மனத்தை, வேறு எந்த உதவியும் இன்றி ஸாத்விக அஹங்காரம் படைக்கிறது என தத்வங்கள் குறித்து நன்றாக அறிந்தவர்கள் கூறுவர்” என்று கருத்து. இதனை ஸ்ரீவிஷ்ணுபுராண வ்யாக்யானத்தில் - அயமத்ரேந்த்ரிய ஸ்ருஷ்டி க்ரம: வைகாரிகாஹங்காராத் க்ரமேண சப்த தந்மாத்ராதி பஞ்சக ஸஹாயாத் க்ரமேண ச்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரிய பஞ்சகஸ்ய ஸ்ருஷ்டி:, தஸ்மாதேவ தத் ஸஹாயாத் வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகஸ்ய; அஸஹாயாத்து தஸ்மாந் மநஸஸ் ஸ்ருஷ்டிரிதி - இது இங்கு இந்த்ரிய ஸ்ருஷ்டி வரிசைகள்; ஸாத்விக அஹங்காரத்திலிருந்து முறையே, சப்தம் போன்ற தந்மாத்ரைகளின் துணையுடன், முறையே காதுகள் போன்ற ஐந்து ஞான இந்த்ரியங்களின் ஸ்ருஷ்டி உண்டாக்கிறது; ஞான இந்த்ரியங்களுடன் உதவி கொண்டு, காதுகள் போன்ற ஐந்து கர்ம இந்த்ரியங்களுடைய ஸ்ருஷ்டி ஏற்படுகிறது; மற்ற தத்வங்களுடைய துணை ஏதும் இன்றி, ஸாத்விக அஹங்காரத்திலிருந்து மனம் தோன்றுகிறது - என்பதாகப் பிள்ளை எங்களாழ்வான் அருளிச்செய்தார்.