Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 104)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
தந்மாத்ரங்களாவன பூதங்களினுடைய ஸூக்ஷ்மாவஸ்த்தைகள்.
ஆக, பூததந்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச்செய்தார் கீழ்; அதில் தந்மாத்ரங்கள்தான் எவை? என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார்.
இப்படியாக பூதங்கள் மற்றும் தந்மாத்ரைகள் ஆகியவற்றின் உற்பத்தி வரிசை குறித்து இதுவரை அருளிச்செய்தார். இவற்றில் தந்மாத்ரைகள் எவை என்பதற்கு விடை அளிக்கிறார்.
(தந்மாத்ரங்களாவன பூதங்களினுடைய ஸூக்ஷ்ம அவஸ்தைகள்) என்று. அதாவது, “தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தந்மாத்ரம் தேந தந்மாத்ரதா ஸ்ம்ருதா, தந்மாத்ராண்ய விசேஷாணி அவிசேஷாஸ் ததோஹிதே; ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாச்சா விசேஷிண” என்று, சாந்தத்வ கோரத்வ மூடத்வ லக்ஷணமான விசேஷங்களை யுடைத்தல்லாத சப்தாதி மாத்ரத்தை குணமாகவுடைத்தாயிருக்கிற ஆகாசாதி பூத ஸூக்ஷ்மங்கள். சாந்தத்வமாவது அநுகூலவேதநீயத்வம்; கோரத்வமாவது ப்ரதிகூலவேத நீயத்வம்; மூடத்வமாவது உதாஸீநவேதநீயத்வம். அதில் ஸ்வபாவமே சாந்தங்களா யிருக்கும் பூமியும் ஜலமும்; கோரங்களாயிருக்கும் தேஜஸ்ஸும் வாயுவும்; மூடமாயிருக்கும் ஆகாசம். மேளநத்தாலே எல்லா பூதங்களும், சாந்தத்வ, கோரத்வ, மூடத்வங்களை உடையனவாயிருக்கும். தந்மாத்ரங்களுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷமில்லாமையாலே, அவை அவிசேஷங்களென்று சொல்லப்படுகின்றன. ஆகையாலே, தந்மாத்ரங்களென்றும், அவிசேஷங்களென்றும் பர்யாயம். அதில் அபியுக்தரான யாதவப்ரகாசாதிகளும், “தந்மாத்ராண்ய விசேஷா இத்யநர்த்தாந்தரம், சாந்தத்வ கோரத்வ மூடத்வமிதி த்ரயோ விசேஷாஸ்த்ரைகுண்யாத்மாநஸ் தேஷாமநுத்பவாத் ஸூக்ஷ்மமாகாசமவிசேஷ லக்ஷணம் பவதி, தேந சப்த தந்மாத்ர முச்யதே. ஏவம் ஸூக்ஷ்மோ வாயுஸ் ஸூக்ஷ்மம் தேஜஸ் ஸூக்ஷ்மா ஆபஸ் ஸூக்ஷ்மா ப்ருதிவீ” என்று சொல்லி வைத்தார்கள். ஆக, த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக்கொண்டு, ஸாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும், தாமஸ அஹங்காரத்தில் நின்றும் பூத தந்மாத்ரங்களும உத்பந்நமாம் க்ரமம் சொல்லி நின்றது.
அதாவது, “தந்மாத்ரைகள் என்பவை பூதங்களுடைய ஸூக்ஷ்ம நிலை” என்கிறார். ஸ்ரீவிபு. (1-2-46, 47) – தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தந்மாத்ரம் தேந தந்மாத்ரதா ஸ்ம்ருதா, தந்மாத்ராண்ய விசேஷாணி அவிசேஷாஸ் ததோஹிதே; ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாச்சா விசேஷிண - ஆகாசம் முதலான பூதங்களில் தந்மாத்ரைகள் உள்ளதாக எண்ணப்பட்டது. தந்மாத்ரைகள் எந்தவிதமான விசேஷமும் அற்றவை எனக் கூறப்பட்டது. எனவே ஓசை முதலான பூதங்களுடைய குணங்கள் அனைத்தும் விசேஷங்கள் அற்றவையாகின்றன; ஏனென்றால் இவை சாந்தம், கோரம் மற்றும் மூடம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய விசேஷங்கள் அற்றதாகவே உள்ளன - என்பது காணலாம். அதாவது, “சாந்தம், கோரம், மூடம்” போன்றவற்றின் அடையாள விசேஷங்கள் ஏதும் அற்றதாக உள்ள ஓசை போன்ற குணங்கள் கொண்ட ஆகாசம் முதலான பூதங்களுடைய ஸூக்ஷ்ம நிலைகளே தந்மாத்ரைகள் ஆகும். சாந்தத்தன்மை என்பது அனுகூலம் உள்ளதாகும் என்று அறிதல்; கோரத்தன்மை என்பது விரோதங்களாக இருக்கும் என்று அறிதல்; மூடத்தன்மை என்பது இவை இரண்டும் இன்றி உதாசீனமாக இருக்கும் என்று அறிதல் ஆகும். இவற்றில், பூமி மற்றும் நீர் ஆகியவை இயல்பாகவே சாந்தங்களாகும்; தேஜஸ் மற்றும் வாயு ஆகியவை இயல்பாகவே கோரங்களாகும்; ஆகாசம் என்பது இயல்பாகவே மூடம் ஆகும். ஆனால் சேர்க்கை காரணமாக அனைத்து பூதங்களும் “சாந்தம், கோரம் மற்றும் மூடம்” ஆகிய தன்மைகள் கொண்டதாக உள்ளன. இத்தகைய சாந்தம் போன்ற தன்மைகள், தந்மாத்ரைகளுக்கு இல்லை என்பதால் அவை “விசேஷம் அற்றவை” எனப்படுகின்றன. ஆகவே தந்மாத்ரை மற்றும் “விசேஷம் அற்றவை” ஆகிய இரண்டும் ஒரே பொருள் தரவல்ல சொற்கள் ஆகும். இவற்றில் யாதவப்ரகாசர் முதலானவர்கள், “தந்மாத்ராண்ய விசேஷா இத்யநர்த்தாந்தரம், சாந்தத்வ கோரத்வ மூடத்வமிதி த்ரயோ விசேஷாஸ்த்ரைகுண்யாத்மாநஸ் தேஷாமநுத்பவாத் ஸூக்ஷ்மமாகாசமவிசேஷ லக்ஷணம் பவதி, தேந சப்த தந்மாத்ர முச்யதே. ஏவம் ஸூக்ஷ்மோ வாயுஸ் ஸூக்ஷ்மம் தேஜஸ் ஸூக்ஷ்மா ஆபஸ் ஸூக்ஷ்மா ப்ருதிவீ - தந்மாத்ரைகள் மற்றும் விசேஷம் அற்றவை ஆகிய இரண்டும், ஒரே பொருள் கூறுவதாகும். சாந்தத்தன்மை, கோரத்தன்மை மற்றும் மூடத்தன்மை ஆகிய மூன்று குணங்களையும் ஸ்வரூபமாகக் கொண்ட மூன்று விசேஷங்கள் இத்தகைய தந்மாத்ரைகளுக்கு இல்லை என்பதால், ஸூக்ஷ்மமான ஆகாசமானது விசேஷம் அற்றதாகவே உள்ளது; அந்தச் சொல் மூலம் தந்மாத்ரைகள் கூறப்படுகின்றன; இப்படியாகவே ஸூக்ஷ்ம வாயு, ஸூக்ஷ்ம தேஜஸ், ஸூக்ஷ்ம நீர், ஸூக்ஷ்ம ப்ருதிவி” என்று கூறினார்கள். ஆகவே மூன்றுவிதமான அஹங்காரங்களிலிருந்தும், ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினொரு இந்த்ரியங்கள், தாமஸ அஹங்காரத்திலிருந்து பஞ்சபூதங்கள் மற்றும் தந்மத்ரைகள் உற்பத்தி ஆகின்ற வரிசை கூறப்பட்டது.