Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 103)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் ஆகாசம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய், வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாயிருக்குமென்றுஞ் சொல்லுவர்கள்.

– இனி, பூதாத் தந்மாத்ரோத்பத்தி க்ரமமும் சாஸ்த்ர ஸித்தமாகையாலே அத்தையும் ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் (ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும்) என்று தொடங்கி.

அடுத்து, பூதங்கள் மற்றும் தந்மாத்ரைகள் ஆகியவற்றின் உற்பத்தியானது சாஸ்த்ரங்களிலும் கூறப்பட்டுள்ளதால், அவற்றையும் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.

– அதாவது, பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும், சப்த தந்மாத்ரையில் நின்றும் ஆகாசம் பிறக்கும்; ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்; ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்; வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்; ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ்ஸு பிறக்கும்; தேஜஸ்ஸில் நின்றும் ரஸ தந்மாத்ரை பிறக்கும்; ரஸ தந்மாத்ரையில் நின்றும் ஜலம் பிறக்கும்; ஜலத்தில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்; கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் என்றபடி. இந்த க்ரமம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸித்தம்; பூர்வக்ரமம் புராணாந்தர ஸித்த மென்று சொல்லுவர்கள்; அது சொல்லவொண்ணாதிறே. “அஷ்டௌ ப்ரக்ருதயஷ் ஷோடச விகாரா:” என்று ஆகாசாதி பூதங்களைந்தையும், இந்த்ரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக ச்ருதி சொல்லுகையாலே. ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே “ஆகாசஸ்து விகுர்வாண: ஸ்பர்சமாத்ரம் ஸஸர்ஜ ஹ” என்று தொடங்கி, ஸ்பர்ச தந்மாத்ராதிகளுக்குக் காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும் தந்மாத்ர லக்ஷணமான பூதங்களாக ஸ்ரீபராசரபகவானுக்கு விவக்ஷிதமென்று நினைத்து வ்யாக்யாதாக்கள் வ்யாக்யாநம் பண்ணி வைக்கையாலே. ஆகையால், ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் பூதாத் தந்மாத்ரோத்பத்தி சாப்தமாய்த் தோற்றியிருந்ததேயாகிலும், வ்யாக்யாந ப்ரக்ரியையைப் பார்த்தால் தந்மாத்ராத் தந்மாத்ரோத்பத்தி என்றே கொள்ளவேணும். பூதாத் தந்மாத்ரோத் பத்தி பக்ஷத்திலும் “அஷ்டௌ ப்ரக்ருத்ய ஷோடச விகாரா:” என்று சொல்லுகிற ஷோடச விகாரங்களாகிறது, பூதங்களையொழிய ஏகாதசேந்த்ரியங்களும் சப்தாதிகளைந்தும் என்று தந்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதமின்றியிலே அவஸ்தாபேதமாத்ர மாகையாலே. – “அஷ்டௌ ப்ரக்ருதய:” என்று ப்ரக்ருதி மஹதஹங்காரங்களையும், ஆகாசாதிகளைந்தையுஞ் சொல்லுகிறதென்றும் ச்ருதயவிரோதம் நிர்வஹிப்பர்கள். இதுதான், ஸ்ரீவேதவ்யாஸ பகவானாலே, “அஷ்டௌ ப்ரக்ருதய: ப்ரோக்தா விகாராச்சாபி ஷோடச, அத வ்யக்தாநி ஸப்தைவ ப்ராஹுரத்யாத்ம சிந்தகா:; அவ்யக்தஞ்ச மஹாம்ச்சைவ ததாஹங்கார ஏவ ச, ப்ருதிவீ வாயுராகாசமாபோ ஜ்யோதிச்ச பஞ்சமம், ஏதா ப்ரக்ருத்யஸ்த்வஷ்டௌ விகாராநபி மே ச்ருணு ச்ரோத்ரம் த்வக் சைவ சஷுச்ச ஜிஹ்வா க்ராணஞ்ச பஞ்சமம், வாக் ச ஹஸ்தௌ ச பாதௌ ச பாயுர் மேட்ரம் ததைவச; சப்த ஸ்பர்சௌ ச ரூபஞ்ச ரஸோ கந்தஸ்ததைவச, ஏதே விசேஷா ராஜேந்தர மஹாபூதேஷு; பஞ்சஸு தசேந்த்ரியாண்யதைதாநி ஸவிசேஷாணி மைதில, மநஷ் ஷோடசமித்யாஹுரத்யாத்ம கதி சிந்தகா:” என்று மோக்ஷதர்மத்திலே யாஜ்ஞவல்க்ய ஜநக ஸம்வாதத்திலே சொல்லப்பட்டது. அப்படியே யம ஸ்ம்ருதியிலும் “மநோ புத்திரஹங்காரகாநிலாக்நி ஜலாநி பூ:, ஏதா ப்ரக்ருதயஸ் த்வஷ்டௌ விகாராஷ் ஷோடசாபரே, ச்ரோத்ராக்ஷி ரஸநாக்ராண த்வக் ச ஸங்கல்ப ஏவ ச, சப்த ரூப ரஸ ஸ்பர்ச கந்த த்வக் பாணிபாயவ:, உபஸ்த பாதாவிதி ச விகாராஷ்ஷோடச ஸ்ம்ருதா” என்று சொல்லப்பட்டது. இந்த ஸ்ம்ருதியில் ப்ரக்ருதிகளிலே பரிகணிக்கையாலும், ப்ரதமத்திலே எடுக்கையாலும், மந்தவ்யதையாலே மநஸ்ஸென்று ப்ரதாந தத்வம் சொல்லப்படுகிறது. ஸங்கல்ப சப்தத்தாலே தத்காரணமான மநஸ்ஸு லக்ஷிக்கப்படுகிறதென்று ஸுபாலோபநிஷத் வ்யாக்யாநத்திலே ச்ருதப்ரகாசிகாகாரராலே வ்யாக்க்யாதமாயிற்று. இப்படி இதிஹாஸாதிகளிலே சொல்லப்படுகையாலே, “அஷ்டௌ ப்ரக்ருதய:” என்கிற ச்ருதிக்கு பூதாத் தந்மாத்ர உத்பத்தி பக்ஷத்தில் விரோதாபாவம் ஸுஸ்பஷ்டம். – “த்வசா பீஜமிவா வ்ருதம்” என்கிற த்ருஷ்டாந்த பலத்தாலே த்வக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தியில்லாதவோபாதி ஆவாரகத்தை யொழிந்தபோது உத்தர கார்ய சக்தியில்லையென்று தோற்றுகையாலும், காரணகுணத்தையொழிய உத்தரோத்தர விசேஷங்களில் “ஆத்யாத்யஸ்ய குணாநேதாநாப்நோதி ச பர: பர:” என்று ஸ்வவிசேஷத்துக்குச் சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும், “ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்சமாத்ரம் ஸமாவிசத், ரூபம் ததைவாவிசதச் சப்த ஸ்பர்ச குணாவுபௌ: சப்த ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரஸமாத்ரம் ஸமாவிசந், தஸ்மாத் சதுர்குணா ஹ்யாபோ விசேஷாச்சேந்த்ரிய க்ரஹா:” என்கிற புராணவசநங்களினுடைய ஆநுகுண்யத்துக்காகவும், “தேப்யஸ் தந்மாத்ரேப்யோ யதா ஸங்க்யமேக த்வி த்ரி சது: பஞ்சப்யோ பூதாந்யாகாசாநிலாநல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே” என்று இதில் அதிக்ருதனான ஸாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும், “கார்யோத் பாதகங்களான தத்வங்கள் ஸ்வஸ்வ காரணாவ்ருதங்களாய்க் கொண்டே உத்பாதிக்கிறதென்று சொல்ல வேணும்” என்று, தத்வத்ரய விவரணத்திலே ஆச்சான்பிள்ளை அருளிச்செய்கையாலும், “ப்ரதாந தத்வமுத்பூதம் மஹாந்தம் தத் ஸமாவ்ருணோத்”, “யதா ப்ரதாநேந மஹாந் மஹதா ஸ ததாவ்ருத:”, “சப்தமாத்ரம் ததாகாசம் பூதாதிஸ் ஸஸமாவ்ருணோத்”, “ஆகாசம் சப்த மாத்ரஸ்து ஸ்பர்சமாத்ரம் ஸமாவ்ருணோத்”, “ஸ்பர்சமாத்ரஸ்து வைவாயூ ரூப மாத்ரம் ஸமாச்ருணோத்”, “ரஸ மாத்ராணி சாம்பாம்ஸி ரூப மாத்ரம் ஸமாவ்ருணோத்” என்று ஸ்ரீபராசரபகவானாலே உக்தமாகையாலும், “முன்புத்தை தந்மாத்ரைகளோடு கூடிக்கொண்டு உத்தரோத்தர தந்மாத்ரைகள் ஸ்வவிசேஷங்களைப் பிறப்பிக்கையாலே” என்று இவர் தாமே மேலே அருளிச்செய்கையாலும் ஆவரண க்ரமங்கொள்ளவேணும். அப்படியே பூர்வபாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்ச தந்மாத்ராதிகளுக்கு ஸ்வஸ்வ விசேஷங்களை உத்பாதிக்குமளவில், ஸ்வஸ்வ பூர்வ பூத ஸஹாயத்வமும் கொள்ள வேணும். அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும், சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும், இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும். அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும், ஸ்பர்ச தந்மாத்ரையை சப்த தந்மாத்ரை ஆவரிக்கும், இப்படி சப்த தந்மாத்ராவ்ருதையாய் ஆகாசத்தை ஸஹாயமாகவுடைத்தான ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும். இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும், ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரையாவரிக்கும், இப்படி ஸ்பர்ச தந்மாத்ராவ்ருதையாய் வாயுவை ஸஹாயமாகவுடைத்தான ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ்ஸு பிறக்கும். இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரஸ தந்மாத்ரை பிறக்கும், ரஸ தந்மாத்ரையை ரூப தந்மாத்ரையாவரிக்கும், இப்படி ரூப தந்மாத்ராவ்ருதையாய் தேஜஸ்ஸை ஸஹாயமாகவுடைத்தான ரஸ தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும். இந்த ரஸ தந்மாத்ரையில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும், கந்த தந்மாத்ரையை ரஸ தந்மாத்ரையாவரிக்கும், இப்படி ரஸ தந்மாத்ராவ்ருதையாய் அப்பை ஸஹாயமாகவுடைத்தான கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் என்கை. சப்த தந்மாதத்ராவ்ருதமாய் ஆகாசத்தை ஸஹாயமாகவுடைத்தான ஸ்பர்ச தந்மாத்ரத்தில் நின்றும் வாயு பிறக்குமென்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம், பூதாத் தந்மாத்ர உத்பத்தி பக்ஷத்துக்கும் ஒக்கும்; பூர்வபூர்வ பூதத்தில நின்றும், உத்தர உத்தர தந்மாத்ர உத்பத்தியாகிறவிது விசேஷம். இது தத்வத்ரய விவரணத்தில் ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த க்ரமம். இங்ஙனன்றிக்கே தத்வநிரூபணத்திலே ஜீயரருளிச் செய்ததும் ஒரு க்ரமமுண்டு. அதாவது, “பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்; சப்த தந்மாத்ரையில் நின்றும், அதினுடைய ஸ்தூலாவஸ்தையான ஆகாசம் பிறக்கும்; சப்த தந்மாத்ரத்தையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்; இப்படி பூதாத்யாவ்ருதமாய், ஸ்தூல ஆகாச ஸஹக்ருதமாய்க் கொண்டு விக்ருதமான சப்த தந்மாத்ரத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரம் பிறக்கும்; அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்; அவையிரண்டையும், காரணமான சப்த தந்மாத்ரையாவரிக்கும்; சப்த தந்மாத்ராவ்ருதமாய், வாயு ஸஹக்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தந்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்; அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸு பிறக்கும்; அவையிரண்டையும், காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்; இத்தாலே ஆவ்ருதமாய், தேஜஸ் ஸஹக்ருதமாய் விகரித்த ரூப தந்மாத்ரத்தில் நின்றும் ரஸ தந்மாத்ரை பிறக்கும்; அதில் நின்றும், ரஸ குணகமான ஜலம் பிறக்கும்; அவையிரண்டையும், காரணமான ரூப தந்மாத்ரம் ஆவரிக்கும்; இத்தாலே ஆவ்ருதமாய், அம்ப ஸஹக்ருதமாய்க் கொண்டு விகரித்த ரஸ தந்மாத்ரத்தில் நின்றும் கந்த தந்மாத்ரம் பிறக்கும்; அதில் நின்றும் கந்தகுணையான ப்ருதிவி பிறக்கும்; அவையிரண்டையும், காரணமான ரஸ தந்மாத்ரம் ஆவரிக்கும்”, என்கை. இதில் முற்பட்ட க்ரமத்திலே ஸ்பர்ச தந்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு ஸ்வஸ்வ விசேஷ உத்பாதநத்தில் பூர்வபூர்வ பூத ஸாஹாய்யம் சொல்லப்பட்டது; பிற்பட்ட க்ரமத்தில், பூர்வ பூர்வ தந்மாத்ரத்துக்கு உத்தரோத்தர தந்மாத்ர உத்பாதநத்தில் ஸ்வஸ்வ விசேஷ ஸாஹாய்யம் சொல்லப்பட்டது. ஆகையால், அந்யோந்ய விரோதமில்லை. ஓரொன்றில் இரண்டும் அநுக்தமேயாகிலும், இரண்டும் அபேக்ஷிதமாகையாலே, ஆவரண கதநத்திலும், “பூர்வ பூர்வ தந்மாத்ரம் உத்தரோத்தர தந்மாத்ரத்தையும், தத் விசேஷத்தையும ஆவரிக்கும்”, என்று ஜீயரருளிச் செய்கையாலும்; ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே “சப்த மாத்ரம் ததாகாசம் பூதாதிஸ்ஸ ஸமாவ்ருணோத்” என்றவிதுக்கு, “சப்த மாத்ரம் – சப்த தந்மாத்ரம்; ததாகாசம் - ஸ்தூலாகாசஞ்ச ஸ பூதாதிராவ்ருணோத். ஏதேந பூர்வ பூர்வ தந்மாத்ரமுத்தரோத்தர தந்மாத்ரம் தத் விசேஷஞ்சாவ்ருணோதிதி தர்சிதம்” என்று பிள்ளை எங்களாழ்வான் வ்யாக்யானம் பண்ணுகையாலும்; தத்வத்ரய விவரணத்தில், தந்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்றில்லையேயாகிலும் அது உபலக்ஷணமாமித்தனை. அல்லாதபோது, அவ்விடம் தன்னில் பூதாத் தந்மாத்ரோத்பத்தி சொல்லவும் போகாது. ஆகையாலிரண்டும் கொள்ளவேணும். தத்வநிரூபணத்தில், தந்மாத்ர தத் விசேஷங்களிரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிறவளவில் இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப்பட்டதேயாகிலும், விசேஷ உத்பத்திக்கு முன்பே தந்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ளவேணும். த்வக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தியில்லாதாப்போலே, ஆவாரகத்தையொழிந்தபோது உத்தர கார்ய சக்தியில்லை யென்னுமிடம் கீழே சொல்லப்பட்டதிறே. இப்படி பூத தந்மாத்ர ஸ்ருஷ்டி சொல்லுகிறவிடத்திலே ஆவரண க்ரமம் வக்தவ்யமாயிருக்கச் செய்தேயும், அருளிச் செய்யாதொழிந்தது அபேக்ஷிதமல்லாமையன்று; ஸங்கோசேந உத்பத்தி க்ரமத்தை அருளிச்செய்தாரித்தனை. பெரியவாச்சான்பிள்ளையும் இப்படியிறே அருளிச்செய்தது.

பூதாதியிருந்து சப்த தந்மாத்ரை பிறக்கும், சப்த தந்மாத்ரையிலிருந்து ஆகாசம் பிறக்கும், ஆகாசத்திலிருந்து ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும், ஸ்பர்ச தந்மாத்ரையிருந்து வாயு பிறக்கும், வாயுவிலிருந்து ரூப தந்மாத்ரை பிறக்கும், ரூப தந்மாத்ரையிலிருந்து தேஜஸ் பிறக்கும், தேஜஸ்ஸிலிருந்து சுவை தந்மாத்ரை பிறக்கும், சுவை தந்மாத்ரையிலிருந்து நீர் பிறக்கும், நீரிலிருந்து மண தந்மாத்ரை பிறக்கும், மண தந்மாத்ரையிருந்து பூமி பிறக்கும். “இந்த வரிசையானது ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் கூறப்பட்டதாகும். முன்பு கூறப்பட்ட வரிசையானது மற்ற புராணங்களில் கூறப்பட்டது”, என்றும் சிலர் உரைப்பர்; ஆனால் இவ்விதம் உரைக்க இயலாது. ஏன்? அஷ்டௌ ப்ரக்ருத்ய ஷோடச விகாரா: – எட்டு ப்ரக்ருதிகள் மற்றும் பதினாறு மாற்றங்கள் – என்று, ஆகாசம் முதலான பஞ்சபூதங்களையும், இந்த்ரியங்கள் போன்று வெறும் மாற்றங்களாக ச்ருதி கூறுவதால் ஆகும். மேலும், ஸ்ரீவிபு. (1-2-41) – ஆகாசஸ்து விகுர்வாண: ஸ்பர்சமாத்ரம் ஸஸர்ஜ ஹ – ஆகாசம் மாற்றம் அடைந்து ஸ்பர்ச தந்மாத்ரையை உண்டாக்கியது - என்பது தொடங்கி,” “ஸ்பர்ச தந்மாத்ரைகளுக்குக் காரணமாகக் கூறப்பட்ட ஆகாசம் முதலானவற்றையும் தந்மாத்ர லக்ஷணமான பூதங்கள் என்பதே சரியானது” என்னும் கருத்தே ஸ்ரீபராசரபகவான் கூறுவதாகும் என ச்ருதி வ்யாக்யானங்களை இயற்றியவர்கள் வ்யாக்யானம் செய்வதால் ஆகும். எனவே, ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் கூட, “பூதத்திலிருந்து தந்மாத்ரை உண்டானது” என்று சொல் வடிவில் நமக்கும் புலப்படுகிறது என்றாலும், வ்யாக்யானங்களை நோக்கும்போது, “தந்மாத்ரையிலிருந்து தந்மாத்ரை உற்பத்தி ஆகிறது” என்பதாகவே கொள்ளவேண்டும். “பூதங்களிலிருந்து தந்மாத்ரை உற்பத்தி ஆகிறது” என்பதாகக் கூறப்படும் கருத்திலும், “அஷ்டௌ ப்ரக்ருத்ய ஷோடச விகாரா: – எட்டு ப்ரக்ருதிகள் மற்றும் பதினாறு மாற்றங்கள்” என்பது, “பூதங்கள் தவிர உள்ள பதினோரு இந்த்ரியங்களும் ஐந்து புலன்களும்” என்பதாக, தந்மாத்ரைகளுக்கு பூதங்களுடன் ஸ்வரூபத்தில் வேறுபாடு இல்லாமல், நிலைகளில் உள்ள வேறுபாடு மட்டும் உள்ளது என்பதால் ஆகும். “அஷ்டௌ ப்ரக்ருதய: - எட்டு ப்ரக்ருதிகள்” என்பதன் மூலம், “ப்ரக்ருதி, மஹத் அஹங்காரங்கள் மற்றும் ஆகாசம் முதலான ஐந்து பூதங்கள்” கூறப்பட்டதாகவும், ச்ருதிக்கு முரண்பாடு ஏற்படாமல் சிலர் கூறுவார்கள். இந்தக் கருத்தானது, ஸ்ரீவேதவ்யாஸ பகவானால் - அஷ்டௌ ப்ரக்ருதய: ப்ரோக்தா விகாராச்சாபி ஷோடச, அத வ்யக்தாநி ஸப்தைவ ப்ராஹுரத்யாத்ம சிந்தகா:; அவ்யக்தஞ்ச மஹாம்ச்சைவ ததாஹங்கார ஏவ ச, ப்ருதிவீ வாயுராகாசமாபோ ஜ்யோதிச்ச பஞ்சமம், ஏதா ப்ரக்ருத்யஸ்த்வஷ்டௌ விகாராநபி மே ச்ருணு; ச்ரோத்ரம் த்வக் சைவ சஷுச்ச ஜிஹ்வா க்ராணஞ்ச பஞ்சமம், வாக் ச ஹஸ்தௌ ச பாதௌ ச பாயுர் மேட்ரம் ததைவச; சப்த ஸ்பர்சௌ ச ரூபஞ்ச ரஸோ கந்தஸ்ததைவச, ஏதே விசேஷா ராஜேந்தர மஹாபூதேஷு; பஞ்சஸு தசேந்த்ரியாண்யதைதாநி ஸவிசேஷாணி மைதில, மநஷ் ஷோடசமித்யாஹுரத்யாத்ம கதி சிந்தகா: - ப்ரக்ருதிகள் எட்டு எனக் கூறப்படுகின்றன; மாற்றங்கள் பதினாறு என்றும், அதன் பின்னர் தெளிவாகக் காணப்படும் மாற்றங்கள் ஏழு என்றும் மோக்ஷ சாஸ்த்ரம் கற்றவர்கள் கூறுகிறார்கள். அவ்யக்தம், மஹத் மற்றும் அஹங்காரம் என்பதுடன் ப்ருதிவீ, வாயு, ஆகாசம், நீர் மற்றும் தேஜஸ் என்பதான ஐந்தும் சேர்த்து எட்டு ப்ரக்ருதிகள் ஆகும். அவை ஒன்றுக்கொன்று காரணங்களாக உள்ளதையும், மாற்றங்களாக உள்ளதையும் நான் கூறக் கேட்பாயாக. செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என ஐந்து; வாக்கு, கைகள் காலகள், மலமூத்ர கருவிகள் மற்றும் மர்மக்குறிகள் என ஐந்து; ஓசை, உருவம், சுவை, மணம் மற்றும் தொடுதல் என ஐந்து என்று இப்படியாக பஞ்சபூதங்களுடைய விசேஷங்கள் உள்ளன. விசேஷங்களுடன் கூடிய இந்த ஐந்து பூதங்கள், பத்து இந்த்ரியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இறுதியாக மனதையும் பதினாறாவது விஷயமாக மோக்ஷம் குறித்து எண்ணுபவர்கள் கூறுகிறார்கள் – என்பதாக மஹாபாரதம் மோக்ஷ தர்மத்தில், யாஜ்ஞவல்க்யர் மற்றும் ஜனகர் ஆகியவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடல் கூறப்பட்டது. இது போன்று யம ஸ்ம்ருதியில் - மநோ புத்திரஹங்காரகாநிலாக்நி ஜலாநி பூ:, ஏதா ப்ரக்ருதயஸ் த்வஷ்டௌ விகாராஷ் ஷோடசாபரே, ச்ரோத்ராக்ஷி ரஸநாக்ராண த்வக் ச ஸங்கல்ப ஏவ ச, சப்த ரூப ரஸ ஸ்பர்ச கந்த த்வக் பாணிபாயவ:, உபஸ்த பாதாவிதி ச விகாராஷ்ஷோடச ஸ்ம்ருதா - மனம், புத்தி, அஹங்காரம், ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி என்ற எட்டும் ப்ரக்ருதிகள்; மற்ற அனைத்து பதினாறும் மாற்றங்கள் ஆகும்; செவி, கண், வாய், மூக்கு, தோல் ஆகியவற்றுடன் எண்ணம் என்பதும் சேர்ந்து; ஒலி, உருவம், சுவை, தொடு உணர்ச்சி, மனம், நாக்கு, கைகள், மலமூத்ர கருவிகள், மர்ம உறுப்புகள் மற்றும் கால்கள் என்பதான பதினாறு மாற்றங்கள் கூறப்படுகின்றன - என்று உரைக்கப்பட்டது. இந்த யமஸ்ம்ருதியில், ப்ரக்ருதிகளுடன் சேர்ந்து எண்ணப்படுவதாலும், முதலில் கூறப்படுவதாலும், மனனம் செய்வது என்பதால் மனம் என்பதாக இதன் முதன்மைத்தன்மை உள்ளது. ச்லோகத்தில் உள்ள “ஸங்கல்பம் – எண்ணுதல்” என்பதன் மூலம், அதன் காரணமான மனம் என்பது உணர்த்தப்படுகிறது என்பதாக ஸுபால உபநிஷத் உரையில் ச்ருதப்ரகாசிகாகாரர் வ்யாக்யானம் செய்தார். இவ்விதம் இதிஹாஸம் போன்றவற்றில் கூறப்படுவதால், “அஷ்டௌ ப்ரக்ருதய: - எட்டு ப்ரக்ருதிகள்” என்பதான ச்ருதி வாக்கியத்திற்கும், “பூதத்திலிருந்து தந்மாத்ரை உற்பத்தி ஆகிறது” என்று கூறும் கருத்திற்கும் விரோதம் இல்லை என்றாகிறது. ஸ்ரீவிபு (1-2-37) - த்வசா பீஜமிவா வ்ருதம் – தோலால் மூடப்பட்ட விதை போன்று - என்கிற உதாரணம் மூலம், “தோலால் மூடப்படாத விதைக்கு முளை விடும் சக்தி இல்லாதது போன்று, மேலே மூடப்படும் திரை இன்றி, அடுத்து வரவுள்ள கார்யம் ஏற்படாது” என்பது வெளிப்படுவதாலும்; காரணப்பொருளுடைய குணம் அல்லாமல், பின்னர் வரவுள்ள சிறப்புக்களில், மநுஸ்ம்ருதி (1-20) - ஆத்யாத்யஸ்ய குணாநேதாநாப்நோதி ச பர: பர: - முன்பு உள்ள தத்வங்களுடைய குணங்கள், பின்னர் வரவுள்ள தத்வங்களை அடைகின்றன - என்பதற்கு ஏற்ப, தங்கள் சிறப்புகளைத் தனியாக உரைக்கும்படியாக குணச் சிறப்பு ஏதும் இல்லை என்பதாலும்; ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்சமாத்ரம் ஸமாவிசத், ரூபம் ததைவாவிசதச் சப்த ஸ்பர்ச குணாவுபௌ: சப்த ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரஸமாத்ரம் ஸமாவிசந், தஸ்மாத் சதுர்குணா ஹ்யாபோ விசேஷாச்சேந்த்ரிய க்ரஹா: - ஆகாசமானது தனக்குக் காரணமாக உள்ள சப்த தந்மாத்ரை மற்றும் வாயுவின் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆகியவற்றை அடைகிறது; இதே போன்று இரண்டாக உள்ள சப்தம் மற்றும் ஸ்பர்ச தந்மாத்திரைகள் ஆகியவை, அக்னியின் காரணமான ரூப தந்மாத்ரையை அடைகின்றன; சப்தம், ஸ்பர்சம் மற்றும் ரூப தந்மாத்ரைகள், நீரின் காரணமாக உள்ள சுவை தந்மாத்ரையை அடைகின்றன; ஆகவே இந்த்ரியங்களால் அறியத்தக்க சிறப்பு கொண்ட நீரானது, நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது - என்கிற புராண வசனங்களுக்கு ஒத்துப் போகவேண்டும் என்பதாலும்; தேப்யஸ் தந்மாத்ரேப்யோ யதா ஸங்க்யமேக த்வி த்ரி சது: பஞ்சப்யோ பூதாநி ஆகாச அநில அநல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே - ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து என்பதான எண்ணிக்கைகளில் அடங்கியுள்ளதான தந்மாத்ரைகளிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து பூதங்களும் உண்டாகின்றன – என்பதாக இந்த விஷயத்தில் கூடுதலாக உரைக்கின்ற ஸாங்க்ய வாசஸ்பதியின் கூற்று உள்ளதாலும்; “கார்யோத்பாதகங்களான தத்வங்கள் ஸ்வஸ்வ காரணாவ்ருதங்களாய்க் கொண்டே உத்பாதிக்கிறதென்று சொல்ல வேணும் - கார்யத்தை உண்டாக்கக்கூடிய தத்வங்கள் அனைத்தும் தங்களுடைய காரணங்களை மேல்திரையாக மூடியபடியே உண்டாகின்றன என்றே உரைக்கவேண்டும்” என்பதாக தத்வத்ரய விவரணத்தில் ஸ்வாமி ஆச்சான்பிள்ளை கூறுவதாலும்; ஸ்ரீவிபு. (1-2-32) – ப்ரதாந தத்வமுத்பூதம் மஹாந்தம் தத் ஸமாவ்ருணோத் - ப்ரதானம் என்பதால் உண்டாக்கப்பட்ட மஹத் தத்வத்தை வ்யாபித்து நிற்கிறது – என்று, ஸ்ரீவிபு (1-2-36) - யதா ப்ரதாநேந மஹாந் மஹதா ஸ ததாவ்ருத: - எப்படி ப்ரதானத்தால் மஹத் மூடப்பட்டபடி உள்ளதோ அதே போன்று அஹங்காரமானது மஹத்தால் மூடப்பட்டுள்ளது – என்றும், ஸ்ரீவிபு. (1-2-42) - சப்தமாத்ரம் ததாகாசம் பூதாதிஸ் ஸஸமாவ்ருணோத் – தாமஸ அஹங்காரமானது சப்த தந்மாத்ரை மற்றும் ஆகாசத்தை மூடி உள்ளது - என்றும், ஸ்ரீவிபு (1-2-42) – ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்சமாத்ரம் ஸமாவ்ருணோத் - ஆகாசமானது சப்த தந்மாத்ரை மற்றும் ஸ்பர்ச தந்மாத்ரை ஆகியவற்றை மூடியுள்ளது - என்றும், ஸ்ரீவிபு (1-2-42) - ஸ்பர்சமாத்ரஸ்து வைவாயூ ரூப மாத்ரம் ஸமாச்ருணோத் – ஸ்பர்ச தந்மாத்ரை மற்றும் ரூப தந்மாத்ரை ஆகியவற்றை வாயுவானது மூடியுள்ளது – என்றும், ஸ்ரீவிபு (1-2-45) - ரஸ மாத்ராணி சாம்பாம்ஸி ரூப மாத்ரம் ஸமாவ்ருணோத் - நீரானது சுவை தந்மாத்ரை மற்றும் ரூப தந்மாத்ரைகளை மூடியுள்ளது - என்றும் ஸ்ரீபராசரபகவானால் கூறப்பட்டது என்பதாலும்; “முன்புத்தை தந்மாத்ரைகளோடு கூடிக்கொண்டு உத்தரோத்தர தந்மாத்ரைகள் ஸ்வவிசேஷங்களைப் பிறப்பிக்கையாலே - முன்புள்ள தந்மாத்ரைகளோடு கூடியபடி பின்பு தோன்றும் தந்மாத்ரைகள், தங்களுடைய குணங்களைப் பிறக்கும்படிச் செய்வதால்” என்று முன்பு இவரே அருளிச்செய்வதாலும், மேலே கூறியபடியே மூடப்படும் வரிசையைக் கொள்ளவேண்டும். இதனைப் போன்றே, முன்பு கூறப்பட்ட விதிமுறையைப் பின்பற்றி, ஸ்பர்ச தந்மாத்ரை போன்ற அனைத்தும், தங்கள் தங்கள் குணங்களை ஏற்படுத்தும்போது, முன்பு உள்ளதான தங்கள் தங்கள் பூதத்தின் துணையைக் கைகொள்ளவேண்டும். அதாவது, பூதாதியிருந்து சப்த தந்மாத்ரை பிறக்கும்; சப்த தந்மாத்ரையை பூதாநி மூடும்; அதிலிருந்து ஆகாசம் தோன்றும். அடுத்து, சப்த தந்மாத்ரையிலிருந்து ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்; ஸ்பர்ச தந்மாத்ரையை சப்த தந்மாத்ரை மூடும்; இவ்விதம் சப்த தந்மாத்ரையால் மூடப்பட்டதும், ஆகாசத்தைத் துணையாகக் கொண்டதும் ஆகிய ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து வாயு தோன்றும். இந்த ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து ரூப தந்மாத்ரை தோன்றும்; ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை மூடும்; இவ்விதம் ஸ்பர்ச தந்மாத்ரையால் மூடப்பட்டதும், வாயுவைத் துணையாகக் கொண்டதும் ஆகிய ரூப தந்மாத்ரையிலிருந்து தேஜஸ் பிறக்கும். இந்த ரூப தந்மாத்ரையிலிருந்து சுவை தந்மாத்ரை பிறக்கும்; சுவை தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை மூடும்; ரூப தந்மாத்ரையால் மூடப்பட்டதும், தேஜஸ்ஸால் உதவி செய்யப்பட்டதும் ஆகிய சுவை தந்மாத்ரையிலிருந்து நீர் பிறக்கும். இந்த சுவை தந்மாத்ரையிலிருந்து மண தந்மாத்ரை பிறக்கும்; மண தந்மாத்ரையை சுவை தந்மாத்ரை மூடும்; சுவை தந்மாத்ரையால் மூடப்பட்டதும், நீரால் உதவி செய்யப்பட்டதும் ஆகிய மண தந்மாத்ரையிலிருந்து பூமி பிறக்கும். “சப்த தந்மாத்ரையால் மூடப்பட்டதும், ஆகாசத்தைத் துணையாகக் கொண்டதும் ஆகிய ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து வாயு பிறக்கும்” என்று தொடங்கிக் கூறப்பட்டதான சிறப்பான உற்பத்தியின் வரிசையானது, “பூதத்திலிருந்து தந்மாத்ரை பிறக்கும்” என்று கூறும் கருத்திற்கும் பொருந்தும். முன்பு உள்ள தந்மாத்ரையிலிருந்து, பின்பு பின்பு தந்மாத்ரை உற்பத்தி ஆகின்றன என்பதே இங்கு சிறப்பாகும். இதுவே தத்வத்ரய விவரணத்தில் ஸ்வாமி ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த வரிசையாகும். இவ்விதம் அல்லாமல், தத்வநிரூபணத்தில் ஸ்வாமி வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த வரிசை ஒன்று உள்ளது. அதாவது பூதாதியிலிருந்து சப்த தந்மாத்ரை பிறக்கும்; சப்த தந்மாத்ரையிலிருந்து, அதனுடைய ஸ்தூல நிலையான ஆகாசம் தோன்றும்; சப்த தந்மாத்ரை மற்றும் ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடும். இவ்விதம் பூதாதியால் மூடப்பட்டதாகவும், ஸ்தூலமான ஆகாசத்தைத் துணையாகக் கொண்டதாகவுமம், சப்த தந்மாத்ரையிலிருந்து ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்; அதிலிருந்து ஸ்பர்ச குணத்தைக் கொண்டதான வாயு பிறக்கும்; இவை இரண்டையும், அவற்றின் காரணப்பொருளான சப்த தந்மாத்ரை மூடும். இவ்விதம் சப்த தந்மாத்ரையால் மூடப்பட்டதும், வாயுவைத் துணையாகக் கொண்டதும் ஆகிய ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து ரூப தந்மாத்ரை பிறக்கும்; அதிலிருந்து ரூப குணத்தைக் கொண்டதான தேஜஸ் பிறக்கும்; இவை இரண்டையும், அவற்றின் காரணப்பொருளாகிய ஸ்பர்ச தந்மாத்ரை மூடும். இவ்விதம் ஸ்பர்ச தந்மாத்ரையால் மூடப்பட்டதும், தேஜஸ்ஸைத் துணையாகக் கொண்டதும் ஆகிய ரூப தந்மாத்ரையிலிருந்து, ரஸ தந்மாத்ரை பிறக்கும்; அதிலிருந்து ரஸ குணத்தைக் கொண்டதான நீர் பிறக்கும்; இவை இரண்டையும், இவற்றின் காரணப்பொருளாகிய ரூப தந்மாத்ரை மூடும். இவ்விதம் ரூப தந்மாத்ரையால் மூடப்பட்டதும், நீரைத் துணையாகக் கொண்டு மாற்றம் அடைந்ததும் ஆகிய ரஸ தந்மாத்ரையிலிருந்து கந்த தந்மாத்ரை பிறக்கும்; அதிலிருந்து கந்த குணத்தைக் கொண்டதான பூமி பிறக்கும்; இவை இரண்டையும் இவற்றின் காரணப்பொருளாகிய ரஸ தந்மாத்ரை மூடும்; இதுவே தத்வ நிரூபணத்தில் உள்ள வரிசையாகும். இவற்றில், முதலில் கூறப்பட்ட வரிசையில், ஸ்பர்ச தந்மாரை முதலான நான்கிற்கு, அவை சிறப்பாக உண்டாகும்விதத்தில் அவைஅவைக்கு முன்புள்ள பூதத்தின் உதவி கூறப்பட்டது. அடுத்துள்ள வரிசையில், முன்பு முன்பு உள்ள தந்மாத்ரைகளுக்கு, அவற்றின் பின்னர் பின்னர் உற்பத்தி ஆகின்ற தந்மாத்ரை உற்பத்தியில், அவைஅவைக்கு சிறப்பாக உள்ள உதவி கூறப்பட்டது. எனவே இந்த இரண்டு வரிசைகளுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடு என்பது இல்லை. இந்த இரண்டில் இரண்டு விஷயங்களும் கூறப்பட்டுள்ளபோது, இரண்டும் அவசியமா என்றால், அந்த இரண்டுமே தேவைப்படுகின்றன என்று கருத்து. மறைவு குறித்துக் கூறப்படும் இடத்தில், “பூர்வ பூர்வ தந்மாத்ரம் உத்தரோத்தர தந்மாத்ரத்தையும், தத் விசேஷத்தையும ஆவரிக்கும் - முன்பு முன்பு உள்ள தந்மாத்ரைகள், அவற்றின் பின்பு பின்பு உள்ள தந்மாத்ரையையும், அதன் சிறப்பாக உள்ள பூதங்களையும் மூடும்” என்று ஸ்வாமி வாதிகேஸரி அழகியமணவாள ஜீயர் அருளிச்செய்வதாலும்; ஸ்ரீவிபு – சப்த மாத்ரம் ததாகாசம் பூதாதிஸ்ஸ ஸமாவ்ருணோத் - சப்த தந்மாத்ரை மற்றும் ஸ்தூல ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது - என்றுள்ள வாக்கியத்திற்கு, “சப்த தந்மாத்ரம் ஸ்தூலாகாசஞ்ச ஸ பூதாதிராவ்ருணோத்; ஏதேந பூர்வ பூர்வ தந்மாத்ரமுத்தரோத்தர தந்மாத்ரம் தத் விசேஷஞ்சாவ்ருணோதிதி தர்சிதம் - தந்மாத்ரை மற்றும் ஸ்தூலமான ஆகாசம் ஆகியவற்றை பூதாதி மூடுகிறது; இவ்விதம் கூறுவதால், முன்பு முன்பு உள்ள தந்மாத்ரைகள், பின்பு பின்பு உள்ள தந்மாத்ரை மற்றும் அதன் சிறப்பான பூதங்கள் ஆகியவற்றை மூடுகின்றன என்று உணர்த்தப்பட்டது” என்பதாக பிள்ளை எங்களாழ்வான் வ்யாக்யானம் செய்துள்ளதாலும்; தத்வத்ரய விவரணத்தில் தந்மாத்ரைக்கு மூடுதல் கூறப்பட்டது போன்று அதன் சிறப்பான பூதங்களுக்கு மூடுதல் கூறப்படவில்லையே என்ற சந்தேகம் எழுந்தாலும், அது உபலக்ஷணம் மட்டுமே ஆகும் என்றாகிறது. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், அங்கு பூதங்களிலிருந்து தந்மாத்ரை உற்பத்தி ஆகின்றன என்பதைக் கூற இயலாது. எனவே இரண்டு வரிசைகளையும் கைக்கொள்ளவேண்டும். தத்வநிரூபணம் என்ற நூலில், தந்மாத்ரை மற்றும் அதன் சிறப்பாகிய பூதங்கள் ஆகிய இரண்டிற்கும் மறைவு குறித்துக் கூறும்போது, தந்மாத்ரை மற்றும் பூதங்கள் ஆகிய இரண்டும் சேர்த்துப் பிடித்து உரைக்கப்பட்டது என்றாலும், பூதங்களின் உற்பத்திக்கு முன்னரே தந்மாத்ரையின் மறைவு குறித்துக் கொள்ளவேண்டும். தோல் அற்றதான விதைக்கு முளை விடும் திறன் இல்லை என்பது போன்று, மறைவு என்பது இல்லாதபோது, அதன் பின்னர் வருகின்ற கார்யசக்தி இல்லை என முன்பே கூறப்பட்டது. இவ்விதம் பூதங்கள் தந்மாத்ரைகளுடைய ஸ்ருஷ்டி கூறப்படும்போது, மூடப்படும் வரிசையானது வெளிப்படையாக உள்ளபோதிலும், அதனை அருளிச்செய்யாமல் விடுத்த காரணம், “அவசியம் இல்லை” என்பது அல்ல; உற்பத்தி வரிசையை அவ்விதம் சுருக்கமக உரைக்கவேண்டும் என்பதால் ஆகும். ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையும் இவ்விதமே அருளிச்செய்தார்.