Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 102)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்; இதில் நின்றும் ஆகாசமும், ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் வாயுவும், ரூப தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் தேஜஸ்ஸும் ரஸ தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் அப்பும், கந்த தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும்.

– இனிமேல், “பூத தந்மாத்ரஸர்கோயமஹங்காராத்து தாமஸாத்” என்கிறபடியே, பூதாதி சப்த வாச்யமான தாமஸாஹங்காரத்தில் நின்றும் தந்மாத்ர பஞ்சகமும், தத் விசேஷமான ஆகாசாதி பஞ்சபூதங்களும் உத்பந்நங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் (பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்) என்று தொடங்கி.

அடுத்து ஸ்ரீவிபு. (1-2-48) - பூத தந்மாத்ர ஸர்கோயம் அஹங்காராத் து தாமஸாத் – பூதங்கள் மற்றும் தந்மாத்ரைகள் அனைத்தும் தாமஸ அஹங்காரத்திலிருந்து உண்டாகின்றன - என்பதற்ற்கு ஏற்ப, பூதம் முதலான சொற்களுக்குப் பொருளாக உள்ள தாமஸ அஹங்காரத்திலிருந்து ஐந்து தந்மாத்ரைகளும், அவற்றின் விசேஷங்களாக உள்ள ஆகாசம் முதலான ஐந்து பூதங்களும் உற்பத்தி ஆகின்ற வரிசையை அருளிச்செய்கிறார்.

அதாவது பூதாதி ஸம்ஜ்ஞகமான தாமஸ அஹங்காரத்தில் நின்றும், ஆகாசத்தினுடைய ஸூக்ஷ்மாவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும். இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும், வாயுவினுடைய ஸூக்ஷ்மாவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும். இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்தையாய ஸ்பர்ச குணகமான வாயுவும், தேஜஸ்ஸினுடைய ஸூக்ஷ்மமான ரூப தந்மாத்ரையும் பிறக்கும். இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸும், அப்பினுடைய ஸூக்ஷ்மமான ரஸ தந்மாத்ரையும் பிறக்கும். இந்த ரஸ தந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்தையாய ரஸ குணையான அப்பும், ப்ருதிவியினுடைய ஸூக்ஷ்மமான கந்த தந்மாத்ரையும் பிறக்கும். இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்தையா கந்தய் குணையான ப்ருதிவி பிறக்கும் என்கை. – “ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும். வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்” என்று உத்பத்தி சொல்லுகிறவளவில், பூதத்தை முற்படச் சொல்லி, தந்மாத்ரையைப் பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது, பூதோத்பத்திதகு அநந்தரம் தந்மாத்ரோத்பத்தியென்கிற க்ரமம் தோற்றுகைக்காக இந்த தந்மாத்ராத் தந்மாத்ரோத்பத்தி க்ரமம் நம்மாசார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாய்ப் போரும்; அதுக்கடி, “அஷ்டௌ ப்ரக்ருதய: ஷோடச விகாரா:” என்கிற ச்ருதிக்கு ஸ்வரஸார்த்தம் ஸித்திக்கையாலே. “ஈச்வராத் ப்ரக்ருதி புருஷௌ, ப்ரக்ருதோ மஹாந், மஹதோஹங்காரோஹங்காராச் சப்த தந்மாத்ரம், சப்த தந்மாத்ராதாகாசம் ஸ்பர்ச தந்மாத்ரஞ்ச, ஸ்பர்ச தந்மாத்ராத் வாயூ ரூப தந்மாத்ரஞ்ச, ரூப தந்மாத்ராத் தேஜோ ரஸ தந்மாத்ரஞ்ச, ரஸ தந்மாத்ராதாபோ கந்த தந்மாத்ரஞ்ச, கந்த தந்மாத்ராத் ப்ருதிவீ” என்று, இந்த க்ரமத்தை யாதவப்ரகாசாதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்.

பூதாதி என்று அறியப்படுவதான தாமஸ அஹங்காரத்திலிருந்து, ஆகாசத்தின் ஸூக்ஷ்ம நிலையாகிய சப்த தந்மாத்ரை தோன்றுகிறது. இந்த சப்த தந்மாத்ரையிலிருந்து, இதன் ஸ்தூல நிலையாகிய தெளிவான ஓசை என்பதை உள்ளடக்கிய ஆகாசமும், வாயுவின் ஸூக்ஷ்ம நிலையாகிய ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கின்றன. இந்த ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து, இதன் ஸ்தூல நிலையாகிய ஸ்பர்ச குணத்தை உள்ளடக்கிய வாயுவும், தேஜஸ்ஸின் ஸூக்ஷ்ம நிலையாகிய ரூப தந்மாத்ரையும் பிறக்கின்றன. இந்த ரூப தந்மாத்ரையிலிருந்து, அதன் ஸ்தூல நிலையாகிய ரூப குணத்தை உள்ளடக்கிய தேஜஸ்ஸும், நீருடைய ஸூக்ஷ்மமான சுவை தந்மாத்ரையும் பிறக்கின்றன. இந்தச் சுவை தந்மாத்ரையிலிருந்து, அதன் ஸ்தூல நிலையாகிய சுவையை உள்ளடக்கிய நீரும், பூமியின் ஸூக்ஷ்மமான மண தந்மாத்ரையும் பிறக்கின்றன. இந்த மண தந்மாத்ரையிருந்து, அதன் ஸ்தூல நிலையாகிய மணத்தை உள்ளடக்கிய பூமி பிறக்கிறது. “ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும். வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்” என்பதாக உற்பத்தி வரிசையைக் கூறியபடி வரும்போது, பூதத்தை முதலில் உரைத்து, அதனைத் தொடர்ந்து தந்மாத்ரையைக் கூறினார்; இது ஏன் என்பதற்கு விடை அளிக்கிறார்; அதாவது பூதத்தின் உற்பத்திற்குப் பின்னரே தந்மாத்ரையின் உற்பத்தி ஏற்படுகிறது என்பதான வரிசை முறை வெளிப்படவே ஆகும். இப்படியாக ஒரு தந்மாத்ரையிலிருந்து அடுத்து தந்மாத்ரையின் உற்பத்தி நிகழ்கிறது என்ற கருத்தானது நம்முடைய பூர்வாசார்யர்கள் கூறும் கருத்திற்கு ஏற்பவே உள்ளது; எப்படி என்றால், கர்ப உபநிஷத்தில் - அஷ்டௌ ப்ரக்ருதய: ஷோடச விகாரா: – எட்டு ப்ரக்ருதிகள், பதினாறு மாற்றங்கள் - என்பதால் ஆகும்; இந்தக் கருத்தானது ச்ருதிக்கு மகிழ்வை ஏற்படுத்துவதால் ஆகும். மேலும், “ஈச்வராத் ப்ரக்ருதி புருஷௌ, ப்ரக்ருதோ மஹாந், மஹதோஹங்காரோஹங்காராச் சப்த தந்மாத்ரம், சப்த தந்மாத்ராதாகாசம் ஸ்பர்ச தந்மாத்ரஞ்ச, ஸ்பர்ச தந்மாத்ராத் வாயூ ரூப தந்மாத்ரஞ்ச, ரூப தந்மாத்ராத் தேஜோ ரஸ தந்மாத்ரஞ்ச, ரஸ தந்மாத்ராதாபோ கந்த தந்மாத்ரஞ்ச, கந்த தந்மாத்ராத் ப்ருதிவீ - ஈச்வரனிடமிருந்து ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள்; ப்ரக்ருதியிலிருந்து மஹத், மஹத்திலிருந்து அஹங்காரம், அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரை, சப்த தந்மாத்ரையிலிருந்து ஆகாசம் மற்றும் ஸ்பர்ச தந்மாத்ரை, ஸ்பர்ச தந்மாத்ரையிலிருந்து வாயு மற்றும் ரூப தந்மாத்ரை, ரூப தந்மாத்ரையிலிருந்து அக்னி மற்றும் சுவை தந்மாத்ரை, சுவை தந்மாத்ரையிலிருந்து நீர் மற்றும் மண தந்மாத்ரை, மண் தந்மாத்ரையிலிருந்து பூமி – என்பதான இந்த வரிசையை யாதவப்ரகாசர் போன்றவர்கள் ஏற்கிறார்கள்.