Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 98)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இது ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று த்ரிவிதமாய், அத்யவஸாய ஜநகமாயிருக்கும்.
இதினுடைய ஸ்வரூபமிருக்கும்படி எங்ஙனே? என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (இது ஸாத்விகம்) என்று தொடங்கி.
மஹத் தத்வத்தின் ஸ்வரூபம் எத்தகையது என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, இந்த மஹத் தத்வம் “ஸாத்விகோ ராஜஸச்சைவ தாமஸச்ச த்ரிதா மஹாந்” என்று ப்ரகாச ப்ரவ்ருத்தி மோஹோந்நேயமான ஸத்வ ரஜஸ் தமோ ரூப குணாந்வயத்தாலே ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று த்ரிவிதமாய், “மஹாந் வை புத்தி லக்ஷண:” எனறு புத்தி லக்ஷணமாகையாலே அத்யவஸாய ஜநகமாயிருக்கும் என்கை. அதில், ஸாத்விக புத்தியாவது “ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ” என்று ப்ரவருத்தி நிவ்ருத்திகளுடையவும் கார்யாகார்யங்களினுடையவும் பயாபயங்களினுடையவும், பந்த மோக்ஷங்களி னுடையவும் யதாவத்யவஸாயமென்றும்; ராஜஸ புத்தியாவது “யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ” என்று தர்மாதர்மங்களையும், கார்யாகார்யங்களையும் அந்யதாவாக அறுதியிடுகை யென்றும்; தாமஸ புத்தியாவது “அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா, ஸர்வார்த்தாந் விபரீதாம்ச்ச புத்திஸ்ஸா பார்த்த தாமஸீ” என்று, அதர்மத்தை தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் இப்படி ஸர்வார்த்தங்களையும், விபரீதமாகவும் நிச்சயிக்கையென்றும் பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச்செய்தான். ஆக, ப்ரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் ப்ரதம விகாரமின்ன தென்றும், அதினுடைய ஸ்வரூபமிருக்கும்படியும், அதினுடைய க்ருத்யமும் சொல்லிற்றாயிற்று.
மஹத் தத்வமானது, ஸ்ரீவிபு. (1-2-36) – ஸாத்விகோ ராஜஸச்சைவ தாமஸச்ச த்ரிதா மஹாந் - மஹத்தானது ஸாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம் என மூன்று வகையாகும் - என்பதற்கு ஏற்ற ப்ரகாசம், செயலாற்றுதல் மற்றும் மோகம் என்பதை அறியலாம்படியாக “ஸத்வ, ரஜஸ், தமஸ்” ரூபமாக, குணங்களுடன் சேர்ந்துள்ளதால் “ஸாத்விகம், ராஜஸம், தாமஸம்” என மூன்று வகையாக உள்ளது. மேலும் “மஹாந் வை புத்தி லக்ஷண: - மஹத்தானது புத்தியை லக்ஷணமாகக் கொண்டது” என்பதாக புத்தி லக்ஷணமாக உள்ளதால், உறுதியான அறிவை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இவற்றில் ஸாத்விக புத்தியானது, கீதை (18-30) - ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ – ஸ்வர்க்கம் முதலானவற்றை அடைவதில் முயற்சி மற்றும் மோக்ஷ ஸாதனங்களான கர்மம் போன்றவற்றை அடைதல், எவை செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை என்பதை அறிதல், சாஸ்த்ரங்களில் கூறப்பட்டவற்றை மீறுவதால் அச்சம் மற்றும் அச்சம் இன்மை, ஸம்ஸாரம் மற்றும் மோக்ஷம் போன்றவற்றைக் குறித்து அறிதல் ஆகியவற்றை எந்த ஒரு புத்தி அறிகிறதோ, அந்தப் புத்தியானது ஸாத்விகம் ஆகும் – என்பது காண்க. ஆக செயலாற்றுதல் மற்றும் செய்யத்தகாதவை, அஞ்சவேண்டியவை மற்றும் அஞ்சத் தகாதவை, பந்தம் மற்றும் மோக்ஷம் போன்றவை குறித்து அறிதலே ஆகும். ராஜஸ புத்தியானது, கீதை (18-31) – யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ – எந்த ஒரு புத்தியால் தர்மம் மற்றும் அதர்மம், செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை ஆகியவற்றைக் குறித்து உள்ளதுஉள்ளபடி அல்லாமல் அறிகிறானோ, அந்தப் புத்தியானது ராஜஸம் ஆகிறது - என்பதற்கு ஏற்ப, தர்மம் மற்றும் அதர்மம், செய்யக்கூடியவை மற்றும் செய்யத்தகாதவை ஆகியவற்றை வேறுவிதமாக அறிதல் ஆகும். தாமஸ புத்தியானது, கீதை (18-32) – அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா, ஸர்வார்த்தாந் விபரீதாம்ச்ச புத்திஸ்ஸா பார்த்த தாமஸீ - எந்த ஒரு புத்தியால் அதர்மத்தைத் தர்மமாகவும், அனைத்துப் பொருள்களின் தன்மையை மாறாக அறிகிறானோ, அது தாமஸ புத்தியாகிறது - என்பதற்கு ஏற்ப, அதர்மத்தை தர்மம் என்றும், தர்மத்தை அதர்மம் என்றும், அனைத்து வஸ்துக்கள் குறித்து தவறாக அறிதலே ஆகும். இப்படியாக பகவான் கீதோபநிஷத்தில் தானே உறுதிபட அருளிச்செய்தான். எனவே, மாற்றம் அடைகின்ற நிலையில் உள்ள ப்ரக்ருதியில் உண்டாகும் முதன்மையான மாற்றம் இன்னது என்றும், அதன் ஸ்வரூபம் இன்னது என்றும், அதன் செயல்பாடு இன்னது என்றும் கூறப்பட்டது.