Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 97)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

விஷம விகாரங்களில் ப்ரதம விகாரம் மஹான்.

இந்த குண வைஷம்ய ப்ரயுக்தமான விஷம விகாரங்களில் ப்ரதம விகாரமேது என்னுமாகாங்க்ஷையிலே, (விஷம விகாரங்களில் ப்ரதம விகாரம் மஹான்) என்கிறார். “குண ஸாம்யாத் ததஸ்தஸ்மாத் க்ஷேத்ரஜ்ஞாதிஷ்டிதாந் முநே, குண வ்யஞ்ஜநஸம்பூதி ஸர்ககாலே த்விஜோத்தம” என்னக் கடவதிறே. அதாவது, குண ஸாம்யத்தையுடைத்தாய், க்ஷேத்ரஜ்ஞனான பத்த சேதநனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்யக்த குணோந்மேஷ ஹேதுவாகையாலே குண வ்யஞ்ஜநமென்று பேரான மஹத் தத்வம் உத்பந்நமாமென்றபடி.

இத்தகைய குண ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஏற்படும் மாற்றங்களில் முதல் மாற்றத்தை அருளிச்செய்கிறார். அது எது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார். ஸ்ரீவிபு. (1-2-36) - குண ஸாம்யாத் ததஸ்தஸ்மாத் க்ஷேத்ரஜ்ஞாதிஷ்டிதாந் முநே, குண வ்யஞ்ஜநஸம்பூதி ஸர்ககாலே த்விஜோத்தம - ஸ்ருஷ்டியின்போது சம நிலையில் உள்ள மூன்று குணங்களும், க்ஷேத்ரஜ்ஞன் என்பதான ஆத்மாவால் உட்புகப்பட்டு ப்ரக்ருதியிலிருந்து குணங்கள் வளர்வதற்குக் காரணமாக உள்ள மஹாந் ஏற்படுகிறது - என்றது காண்க. அதாவது குணங்கள் சமநிலையில் உள்ளதாகவும், க்ஷேத்ரஜ்ஞனான பந்தப்பட்ட சேதநனால் அடையப் பெற்றதும் ஆகிய அவ்யக்தத்திலிருந்து குணங்கள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ளதால், “குணங்களின் வெளிப்பாடு” என்பதைக் குறிக்கும் மஹத் தத்வம் வெளிப்படுகிறது.