Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 96)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இவை ஸமங்களானபோது விகாரங்கள் ஸமங்களுமாய், அஸ்பஷ்டஙகளுமா யிருக்கும்; விஷமங்களானபோது, விகாரங்கள் விஷமங்களுமாய், ஸ்பஷ்டங்களுமா யிருக்கும்.
இனி இக்குணங்களினுடைய ஸமதசையிலும், விஷம தசையிலும், ப்ரக்ருதியினுடைய விகாரங்களிருக்கும்படியை அருளிச்செய்கிறார் (இவை ஸமங்களான போது) என்று தொடங்கி.
அடுத்து மூன்று குணங்களும் சமமான நிலையில் இருத்தல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடியபடி இருத்தல் ஆகிய நிலைகளில், ப்ரக்ருதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அருளிச்செய்கிறார்.
– அதாவது, இக்குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல், க்ருத்ஸ்ந உத்ரேகமாத லின்றிக்கே ஸாம்யாபந்நங்களாயிருந்தபோது, ப்ரக்ருதியினுடைய விகாரங்கள் நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே தன்னில் ஸமங்களுமாய், ப்ரமாணங்களால் தர்சிக்கப் போகாதபடி ஸ்பஷ்டங்களுமன்றிக்கே இருக்கும். இக்குணங்கள் உத்ரேகித்து விஷமங்களானபோது, ப்ரக்ருதியினுடைய விகாரங்களும் நாம ரூப விசேஷ ஸாஹித்யத்தாலே தன்னில் விஷமங்களுமாய், ப்ரமாணங்களாலே தர்சிக்கலாம்படி ஸ்பஷ்டங்களுமாயிருக்குமென்கை. “ப்ரதேச பேதத்தாலும், கால பேதத்தாலும்” என்று கீழ்ச் சொன்னதுக்கும் இந்த குண ஸாம்ய வைஷம்யங்களேயிறே ஹேது. அது இங்கே விசதமாயிற்று.
இந்த மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று மேன்மேலும் வளர்தல் அல்லது சிறிதளவு மேலே எழுதல் போன்றவை இன்றி, சமமாக உள்ளபோது, ப்ரக்ருதியில் மாற்றங்கள் அனைத்தும் பெயர் மற்றும் உருவம் இன்றி உள்ளதால், சமாகவே உள்ளது; மேலும் ப்ரமாணங்களால் அறிய இயலாதபடி தெளிவற்று உள்ளது. இந்த மூன்று குணங்களும் வளர்ந்து ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளபோது, ப்ரக்ருதியில் மாற்றங்கள் அனைத்தும், பெயர் மற்றும் உருவம் ஆகியவை தோன்றுவதன் காரணமாக, ஏற்றத்தாழ்வுகள் அடைகின்றன; மேலும் ப்ரமாணங்களால் அறிய இயலும்படி தெளிவாக உள்ளது. “சூர்ணை (85) - ப்ரதேச பேதத்தாலும், கால பேதத்தாலும்” என்ற உரைத்ததற்கும், இத்தகைய குண ஏற்றத்தாழ்வுகள் அல்லவோ காரணமாக உள்ளன? இது அங்கு தெளிவாக உரைக்கப்பட்டது.