Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 95)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
தமஸ்ஸு விபரீத ஜ்ஞாநத்தையும், அநவதாநததையும், ஆலஸ்யத்தையும், நித்ரையையும் பிறப்பிக்கும்.
– “தமஸ்த்வ ஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம் ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ் தந்நிபத்நாதி பாரத” என்னக் கடவதிறே. விபரீத ஜ்ஞாநமாவது, வஸ்து யாதாத்ம்ய விபரீத விஷயமான ஜ்ஞாநம். அநவதாநமாவது, செய்யுமதொன்றில் குறிக்கோளில்லாமை. ஆலஸ்யமாவது, ஒரு கார்யத்திலும் ஆரம்பமற்றிருக்கும் சொப்பம். நித்ரையாவது, புருஷனுக்கு இந்த்ரிய ப்ரவர்த்தந ச்ராந்தியடியாக வருகிற ஸர்வேந்த்ரிய ப்ரவர்த்தநோபரதி.
கீதையில் (14- 8) - தமஸ்த்வ ஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம் ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ் தந்நிபத்நாதி பாரத – சரீரத்தில் பற்றுதல் கொண்ட அனைவரையும் மயக்கவல்லதான தமஸ்ஸானது அஜ்ஞானத்தினால் ஏற்படுவதாகும். அது ஜீவாத்மாக்களை தேவையற்ற செயல்களில் ஈடுபடுத்தல், சோம்பம் மற்றும் உறக்கம் முதலியவற்றால் கட்டுகிறது - என்றது காண்க. விபரீத ஞானம் என்றால், உண்மையான பொருளைச் சரியாக அறிவதற்கு மாறாக உள்ள அறிவு ஆகும். அநவதாநம் என்றால், எந்த ஒரு செயலிலும் குறிக்கோள் இன்மை ஆகும். ஆலஸ்யம் என்றால், எந்த ஒரு செயலையும் செய்ய முயலாமல் உள்ள சோம்பல் ஆகும். நித்ரை என்றால், அனைத்து இந்திரியங்களும் செயலற்று உள்ள உறக்கம் ஆகும்.