Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 92)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இவை ப்ரக்ருதிக்கு ஸ்வரூபாநுபந்திகளான ஸ்வபாவங்களாய், ப்ரக்ருத்யவஸ்தையில் அநுத்பூதங்களாய், விகார தசையில் உத்பூதங்களாயிருக்கும்.
(இவை ப்ரக்ருதிக்கு ஸ்வரூப அநுபந்திகளான ஸ்வபாவங்களாய்) “ஸத்வம் ரஜஸ் தம இதி குணா ப்ரக்ருதி ஸம்பவா”, “ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச:”, “ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணா:” என்னக்கடவதிறே. ஸ்வபாநுபந்திகளென்றது, ஆகந்துகங்களன்றிக்கே ஸத்தா ப்ரயுக்தங்களாகையாலே, இவற்றையொழிந்திருப்பதோரவஸ்தையும் இல்லையென்கை. இவற்றை ஸ்வபாவங்க ளென்றும், ப்ரக்ருதிக்கு ஸ்வரூபாநுபந்திகளென்றும் சொல்லுகையாலே, “மூல ப்ரகருதிர் நாம ஸுக துக்க மோஹாத்மகாநி லாகவ ப்ரகாச சலநோபஷ்டம்பந கௌரவா வரண கார்யாணயத்யந்தாதீந்தரியாணி கார்யைக நிரூபண விவேகாநி அந்யூநாநதிரே காணி ஸமதாமுபேதாநி ஸத்வ ரஜஸ தமாம்ஸி த்ரவ்யாணி” என்று இவற்றை த்ரவயங்களாகவும், இவைதானே ப்ரக்ருதி ஸ்வரூபமாகவும் கொள்ளுகிற ஸாங்க்ய மதம் நிரஸ்தமாயிற்று. இந்த மத நிராகரணார்த்தமாகவிறே ஆளவந்தார், “குணா: ப்ரதாநம்” என்று பிரித்தருளிச் செய்தது. (ப்ரக்ருத்யவஸ்தையில் அநுத்பூதங்களாய், விகார தசையில் உத்பூதங்களாயிருக்கும்) அதாவது, ஸாம்யாபந்நங்களாயிருக்கையாலே, ப்ரக்ருத் யவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது. வைஷம்யாபத்தியாலே விக்ருத்யவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றியிருக்குமென்கை. “ஸத்வ ரஜஸ தமாம்ஸி த்ரயோ குணா: ப்ரக்ருதேஸ் ஸ்வரூபாநுபந்திநஸ் ஸ்வபாவ விசேஷா ப்ரகாசாதி கார்யைக நிரூபணீயா: ப்ரக்ருத்யவஸ்தாயாம் அநுத்பூதாஸ் தத் விகாரேஷு மஹதாதிஷூத்பூதா” என்றிறே பாஷ்யகாரரும் அருளிச்செய்தது.
(இவை ப்ரகருதிக்கு ஸ்வரூப அநுபந்திகளான ஸ்வபாவங்களாய்) - கீதை (14-5) – ஸத்வம் ரஜஸ் தம இதி குணா ப்ரக்ருதி ஸம்பவா – ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்பதான, ப்ரக்ருதியிலிருந்து உண்டான குணங்களை - என்றும், கீதை (3-27) - ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச: – அனைத்து செயல்களும் அனைத்து விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் இயங்குகின்றன – என்றும், ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணா: - ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை ப்ரக்ருதியின் குணங்கள் - என்றும் கூறப்பட்டது அல்லவோ? (ஸ்வபாவ அநுபந்திகள்) - அவை இடையில் வந்து சேர்ந்தவை அல்ல, ப்ரக்ருதியில் எப்போதும் உள்ளவை; ஆகவே அவற்றைத் தவிர்த்து ஒரு நிலையும் இல்லை. இவற்றை ஸ்வபாவங்கள் என்றும், ப்ரக்ருதியின் ஸ்வரூபத்துடன் சேர்ந்தவை என்றும் கூறுவதால், “மூலப்ரக்ருதிர் நாம ஸுகதுக்க மோஹாத்மகாநி லாகவ ப்ரகாசசலநோபஷ்டம்பந கௌரவாவரண கார்யாணி, அத்யந்தாதீந்த்ரியாணி, கார்யைக நிரூபண விவேகாநி, அந்யூநாநதிரேகாணி ஸமதாமுபேதாநி ஸத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி - மூலப்ரக்ருதி என்பது ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று திரவியங்களைக் கொண்டதாகும்; இவை மூன்றும் சரிசமமான நிலையில் (ஒன்றை ஒன்று விஞ்சாத விதத்தில்) உள்ளன. இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸுகம், துக்கம் மற்றும் மயக்கம் (மோகம்) என்பதாகும். ஸத்வம் அதிகமாகும்போது ஸுகம் ஏற்படும், சரீரம் எடை குறைவாக இருப்பதாகத் தோன்றும், இந்த்ரியங்கள் நன்கு இயங்கும் (இதனை லாகவ ப்ரகாசங்கள் என்பர்). ரஜஸ் அதிகமாகும்போது துக்கம் ஏற்படும், அசைவு மற்றும் இந்த்ரியங்கள் செயலாற்றுவதும் நிகழும் (சலநம் – சஞ்சலமான இயல்பு கொண்டபடியும், உஷ்டம்பநம் – யாரையேனும் வாக்குவாதத்திற்கு இழுத்தபடியும் இருப்பர்). தமஸ் அதிகமாகும்போது மயக்கம் ஏற்படும், சரீரம் பளுவாக உணரப்படும், இந்தியங்கள் மறைக்கப்படும் (கௌரவம், ஆவரணம்). இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும். அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணரவல்லதாக (அல்லது நிரூபிக்கும்படியாக) இருப்பதாகும். ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றையும் சமநிலையில் கொண்டதான மூலப்ரக்ருதியானது அசேதனமாக உள்ளபோதிலும், எண்ணற்ற சேதநர்களுடைய இன்பத்திற்கும், மோக்ஷத்திற்கும் உதவுவதாக உள்ளது [ஸ்ரீபாஷ்யம் 2-2-1]” என்று, இவற்றை த்ரவ்யங்களாகவும், இவையே ப்ரக்ருதியின் ஸ்வரூபங்கள் என்பதாகவும் கொள்ளும் ஸாங்க்ய மதம் தள்ளப்பட்டது. இந்த மதத்தைத் தள்ளுவதற்காக அல்லவோ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் (17) - குணா: ப்ரதாநம் – குணங்களும் ப்ரக்ருதியும் - என்று தனித்தனியாகப் பிரித்து அருளிச்செய்தார். (ப்ரக்ருதி அவஸ்தையில் அநுத்பூதங்களாய், விகார தசையில் உத்பூதங்களா யிருக்கும்) - இந்த மூன்று குணங்களும் ஏற்றத்தாழ்வு இன்றி சமமாக உள்ளதால், ப்ரக்ருதி நிலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி உள்ளதால், இவற்றின் ஸ்வரூப வேறுபாடு புலப்படாது. மாற்றம் அடையும் நிலையில் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடியுள்ளதால், இவற்றின் ஸ்வரூப வேறுபாடு வெளிப்படுகிறது. கீதாபாஷ்யத்தில் (14-5) – ஸத்வ ரஜஸ தமாம்ஸி த்ரயோ குணா: ப்ரக்ருதேஸ் ஸ்வரூபாநுபந்திநஸ் ஸ்வபாவ விசேஷா ப்ரகாசாதி கார்யைக நிரூபணீயா: ப்ரக்ருத்யவஸ்தாயாம் அநுத்பூதாஸ் தத் விகாரேஷு மஹதாதிஷூத்பூதா - ஸத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை ப்ரக்ருதியின் ஸ்வரூபத்தை அண்டியுள்ளன; இவற்றின் ஸ்வபாவத்தில் உள்ள சிறப்புகள் அனைத்து கார்யத்தால் மட்டுமே நிச்சயிக்கத்தக்கவையாக, ப்ரக்ருதி என்ற நிலையில் வெளிப்படாமல், ப்ரக்ருதியின் மாற்றங்களாகிய மஹத் முதலானவற்றின் மூலம் வெளிப்படுகின்றன – என்பதாக பாஷ்யகாரர் அருளிச்செய்தார்.