Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 88)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இதில் ப்ரதம தத்வம் ப்ரக்ருதி.

இப்பாட்டில் தத்வங்களைச் சொன்னவித்தனையொழிய, இவற்றினுடைய க்ரம கதநம் பண்ணிற்றில்லையிறே. ஆகையால் இதில் ப்ரதம தத்வமேது? என்னு மாகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார்.

இந்தப் பாசுரத்தில் தத்வங்களை எண்ணிக்கையை அருளிச்செய்தார்; ஆனால் இவற்றின் வரிசையைக் கூறவில்லை அல்லவோ? ஆகவே அவற்றில் முதன்மையான தத்வம் எது என்பதை அருளிச்செய்கிறார்.

(இதில் ப்ரதம தத்வம் ப்ரக்ருதி) என்று. ப்ரக்ருதியென்றும், ப்ரதாந மென்றும், அவ்யக்தமென்றும் ப்ரதம தத்வத்துக்குப் பர். ப்ரக்ருதி என்று சொல்லுகைக்கடி முன்னே சொல்லப்பட்டது. ப்ரதாநமென்கிறது, எம்பெருமானுடைய லீலைக்கு ப்ரதாநமான உபகரணமாகையாலே. அவ்யக்தமென்கிறது, அநபிவ்யக்த குண விபாகமாகையாலே.

முதல் தத்வமானது ப்ரக்ருதி, ப்ரதானம், அவ்யக்தம் எனப் பலவிதமாக வழங்கப்படுகிறது. ப்ரக்ருதி என்று கூறுவதற்கான பெயர்க்காரணம் முன்பே கூறப்பட்டது. ப்ரதானம் என்பது, எம்பெருமானுடைய லீலைகளுக்கு முதன்மையான கருவியாக உள்ளது என்ற பொருள் தருகிறது. அவ்யக்தம் என்பது, இதற்குள் இருக்கின்ற மூன்று குணங்களும் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்பதை உணர்த்துகிறது.