Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 87)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இதுதான் “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதமிங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்கள” என்கிறபடியே இருபத்து நாலு தத்வமாயிருக்கும்.
ஏவம்பூதமான அசித்துதான் கார்யகாரணரூபேண அநேக தத்வமாயிருக்கும் படியை அருளிச்செய்கிறார் (இதுதான் பொங்கைம்புலன்) என்று தொடங்கி.
இவ்விதம் உள்ள அசித்தானது, கார்யம் மற்றும் காரண வடிவமாகப் பல தத்வங்களாக உள்ள விதங்களை அருளிச்செய்தார்.
– (ஐம்புலன்) சப்தாதிகள்; பொங்குதலால், சேதநரை விக்ருதராம்படி பண்ணுகைக்கீடான இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது. இவ்விடத்தில் விசேஷ்ய மாத்ரமே அபேக்ஷிதம். (பொறியைந்தாவன) ச்ரோத்ராதிகள். (கருமேந்திரியம்) வாகாதிகள். (ஐம்பூதம்) ககநாதிகள். (இங்கிவ்வுயிரேய் பிரகிருதி) என்றது, ஸம்ஸார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த ஸம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற ப்ரக்ருதி யென்றபடி. இங்கும் விசேஷ்ய மாத்ரமிறே தத்வ ஸங்க்யைக்கு வேண்டுவது. (மானாங்கார மனங்களாவன) மஹானும் அஹங்காரமும் மநஸ்ஸும். இப்படி இருபத்து நாலு தத்வத்தையும் அருளிச் செய்கிற ஆழ்வார், தந்மாத்ரங்களை அருளிச்செய்யாதே, சப்தாதிகளை அருளிச் செய்தது, தந்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதமின்றியிலே, அவஸ்தா பேத மாத்ரமாகையாலே தந்மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி, சப்தாதிகளைந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு இவையும், ஏகாதசேந்த்ரியங்களும் ப்ரக்ருதி மஹதஹங்காரங்களுமாக சதுர்விம்சதி தத்வமென்று கொள்ளுவதும் ஒரு பக்ஷமுண்டாகையாலே, உபய பக்ஷத்திலும் தத்வ ஸங்க்யையில் ந்யூநாதிரேகமில்லையிறே. ஆகையால், இப்பாட்டிற் சொன்னபடியே இருபத்துநாலு தத்வமாயிருக்குமென்றதாயிற்று.
இங்கு திருவாய்மொழி (10-7-10) – பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே – என்ற பாசுரத்தைக் கூறுகிறார். ஐம்புலன் என்பது ஓசை முதலானவை. இவற்றுக்கு “பொங்கு” என்ற அடைமொழி கொடுத்ததன் மூலம், இவை மனிதர்களை மாற்றம் அடையும்படிச் செய்வதற்கு இணையாக உள்ள எழுச்சியைக் கூறுகிறார். இங்கு புலன்களுடைய நிலையை மட்டுமே கொள்ளவேண்டும். “ஐந்து பொறிகள்” என்பது செவி போன்றவை ஆகும். கர்ம இந்த்ரியங்களானவை, வாக்கு போன்றவை; ஐந்து பூதங்களானவை ஆகாசம் போன்றவை ஆகும். (இங்கு இவ் உயிரேய் பிரகிருதி) – ஸம்ஸார நிலையில் இந்த ஆத்மாவுடன் கலந்து கிடக்கும் ப்ரக்ருதி. இந்த இடத்திலும் முதன்மையான இந்த்ரியங்களை மட்டுமே தத்வ கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். (மானாங்கார மனங்கள்) - மஹாந், அஹங்காரம் மற்றும் மனம். இவ்விதம் இருபத்து நான்கு தத்துவங்களையும் அருளிச்செய்த ஆழ்வார் தந்மாத்ரைகளை அருளிச்செய்யாமல், ஓசை முதலானவற்றை மட்டும் ஏன் அருளிச்செய்தார்? இதற்கு விடை அளிக்கிறார். தந்மாத்திரைகளுக்கு அவற்றின் பூதங்களுடன் ஸ்வரூப வேறுபாடு இல்லை; ஆகவே நிலைமை மாறுபாடு அடைதல் மட்டுமே நிகழ்கின்றன. எனவே தந்மாத்ரைகளாகிய பூதங்கள் பத்தையும் ஐந்து தத்வங்கள் என்று கொண்டார்; ஒசை முதலான ஐந்தையும் ஐந்து தத்துவங்களாகக் கொண்டார்; ஆகவே இந்தப் பத்தும், பதினொரு இந்த்ரியங்களும், ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் என்பதாக இருபத்து நான்கு தத்துவங்கள் என்று ஒரு சிலர் கொள்வதால், இரண்டு விதமாகக் கொள்வதில் எந்தவிதமான எண்ணிக்கை மாற்றமும் இல்லை. எனவே இந்தப் பாசுரத்தில் கூறியபடி இருபத்து நான்கு தத்வங்கள் உள்ளன என்றாகிறது.