Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 86)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ப்ரக்ருதியென்கிறது விகாரங்களைப் பிறப்பிக்கையாலே; அவித்யையென்கிறது ஜ்ஞாந விரோதியாகையாலே; மாயையென்கிறது விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே.
ப்ரக்ருத்யாதி நாமபேதங்கள் இதினுடைய ஸ்வபாவங்களைப் பற்ற வந்ததென்கிறார் (ப்ரக்ருதியென்கிறது) என்று தொடங்கி.
ப்ரக்ருதி முதலான பெயர் வேறுபாடுகள் பலவும் மிச்ரஸத்வத்தின் இயல்பு காரணமாக வந்தவை ஆகும் என்கிறார்.
– அதாவது, “மூலப்ரக்ருதிர்விக்ருதி” இத்யாதிகளிலே ப்ரக்ருதி சப்தம் காரணவாசியாகச் சொல்லப்பட்டதிறே, இதுதான் உபாதாந காரணத்துக்கே வாசகம். ஆகையிறே ப்ரஹமத்தினுடைய ஜகதுபாதாநத்வத்தைச் சொல்லுகிற ஸூத்ரகாரர், “ப்ரக்ருதிச்ச ப்ரதிஜ்ஞாத்ருஷ்டாந்தாநுபரோதாத்” என்று, ப்ரக்ருதி சப்தத்தாலே சொல்லிற்று. ஆகையால், இத்தை ப்ரக்ருதியென்கிறது மஹதாதி விகாரங்களைத் தன்பக்கலில் நின்றும ஐநிப்பிக்கையாலே. அவித்யா சப்தம், வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும், வித்யாவிரோதிக்கும் வாசகமாயிருந்ததேயாகிலும், விஷயா நுகுணமாயிறே ப்ரயோகமிருப்பது. ஆகையால் இத்தை அவித்யை என்கிறது, ஜ்ஞாந விரோதியாகையாலே. “ஜ்ஞாநாநந்தங்களுக்குத் திரோதாயகமாய்” என்று இதினுடைய ஜ்ஞாந விரோதித்வம்தான் கீழே சொல்லப்பட்டதிறே. அஸுர ராக்ஷஸாதி க்ரியைகளை, ஆச்சரியகரத்வததைப் பற்ற மாயாசப்தத்தாலே சொல்லுகிறாப்போலே இத்தையும் மாயை என்கிறது, விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே; அதாவது, ஒன்று போலொன்றன்றிக்கே, விஸ்மயநீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை.
“மூலப்ரக்ருதிர்விக்ருதி - மூலப்ரக்ருதியானது ஜகத் உண்டாகக் காரணமாக இருக்கிறது” என்பது போன்ற வாக்கியங்களில், ப்ரக்ருதி என்ற சொல்லானது காரணப் பொருளைக் கூறும்விதமாக உள்ளது. ஆனால் இது உபாதானக் காரணத்தைக் கூறும் வாசகமாக மட்டுமே உள்ளது இதனால்தான், ப்ரஹ்மத்திற்கு மட்டுமே ஜகத்தின் உபாதானக்காரணம் என்பது பொருந்தும் என்று கூறுகின்ற ஸூத்ரகாரர், ப்ர. ஸூ. (1-4-23) - ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் - ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்றால் மட்டுமே, உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண்படாமல் இருக்கும் - என்று, ப்ரக்ருதி என்னும் சொல்லால் கூறினார். ஆகவே மிச்ரஸத்வத்தை ”ப்ரக்ருதி” என உரைப்பது ஏனென்றால் மஹத் முதலான மாற்றங்களைத் தன்னிடமிருந்து பிறக்கும்படிச் செய்வதால் ஆகும். அவித்யை என்ற சொல்லானது “வித்யை இல்லை” என்பதையும், வித்யை தவிர உள்ள மற்றவற்றையும், வித்யைக்கு விரோதமாக உள்ளவற்றையும் குறிக்கும் பொதுவான சொல்லாக உள்ளது; ஆயினும், அந்தந்த விஷயத்திற்கு ஏற்றபடி அல்லவோ பொருள் கொள்ளவேண்டும்? ஆகவே ஞானத்திற்கு விரோதமாக உள்ளதால், அவித்யை எனப்படுகிறது. அவித்யையின் ஞானத்திற்கு விரோதமாக உள்ள தன்மை குறித்து சூர்ணை (85) - ஜ்ஞாநாநந்தங்களுக்குத் திரோதாயகமாய் – என்று முன்பே கூறப்பட்டது. அஸுரர்கள், ராக்ஷஸர்கள் போன்றவர்கள் செய்கின்ற செயல்களில் உள்ள ஆச்சர்யமான தன்மை என்பதை உணர்த்தும்விதமாக “மாயா” என்று கூறுவது போன்று, இது விசித்ரமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதால் “மாயா” என்ற சொல்லால் கூறப்பட்டது. அதாவது ஒரே போன்று அல்லாமல் வியக்க வைக்கின்ற காரயங்களை உண்டாக்குவதால் ஆகும்.