Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 85)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

மிச்ரஸத்வமாவது, ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் மூன்றோடுங்கூடி பத்தசேதனருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரோதாயகமாய், விபரீத ஜ்ஞாந ஜநகமாய், நித்யமாய், ஈச்வரனுக்கு க்ரீடாபரிகரமாய், ப்ரதேச பேதத்தாலும் காலபேதத்தாலும் ஸத்ருசமாயும் விஸத்ருசமாயுமிருக்கும் விகாரங்களையுண்டாக்கக் கடவதாய், “ப்ரக்ருதி, அவித்யை, மாயை”யென்கிற பேர்களையுடைத்தாயிருக்கும் அசித்விசேஷம்.

ஆகவிப்படி சுத்தஸத்வத்தினுடைய ப்ரகாரத்தை அருளிச்செய்தாராய் நின்றார் கீழ்; அநந்தரம், மிச்ரஸத்வ ப்ரகாரத்தை அருளிச்செய்வதாக (மிச்ரஸத்வமாவது) என்று தொடங்குகிறார்.

இப்படியாக இதுவரை சுத்தஸத்வத்தின் தன்மைகளை அருளிச்செய்தார். அடுத்ததாக ரஜஸ் மற்றும் தமஸ் கலந்த ஸத்வத்தின் தன்மைகளை அருளிச்செய்யத் தொடங்குகிறார்.

(மிச்ரஸத்வமாவது) ரஜஸ் தமஸ்ஸுக்களோடே கூடின ஸத்வகுணத்தை யுடைத்தானது. அத்தை அருளிச்செய்கிறார் “ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் மூன்றோடுங் கூடி” என்று. “த்ரிகுணம் தஜ்ஜகத் யோநிரநாதி ப்ரபவாப்யயம்”, “த்ரிகுணம் கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே”, “ஸத்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:” எனனக் கடவதிறே. (பத்தசேதநருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரோதாயகமாய்) அதாவது குணத்ரயாத்மகமாயிருக்கையாலே, ரஜஸ் தமோம்சத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதாநத்தைப் பண்ணுமென்கை. சேதநருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரோதாயகமாயென்று ஸாமாந்யேந சொல்லாதே, “பத்த சேதநருடைய” என்று விசேஷிக்கையாலே, கர்மஸம்ஸ்ருஷ்டரான சேதநருடைய ஜ்ஞாநாதிகளுக்கே அது திரோதாயகமென்றபடி. அல்லது, ஐச்சிகமாக ப்ராக்ருத சரீர பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய ஜ்ஞாநாதிகளுக்கும் இது ஸங்கோசத்தைப் பண்ணவேண்டி வருமிறே. ஆகையாலே “அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்த பந்தா: விமல சரம தேஹா: இதி அமீ ரங்கதாம | மஹித மநுஜ திர்யக் ஸ்த்தாவரத்வா: ச்ரயந்தே”, என்கிறபடியே, நித்ய முக்தரும் இங்கே வந்து ப்ராக்ருத தேஹங்களைப் பரிக்ரஹித்து சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணுமளவில் அவர்களுக்கிது ஸங்கோசத்தைப் பண்ணாமையாலே, பத்த சேதநருடைய ஜ்ஞாநாதிகளுக்கே இது திரோதாயகமென்னுமிடம் ஸித்தம். “அநீசயா சோசதி முஹ்யமாந:”, “அநாதி மாயயா ஸுப்த:”, “பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாச:” என்னக்கடவதிறே. (விபரீத ஜ்ஞாந ஜநகமாய்) விபரீத ஜ்ஞாநமாவது, அதஸ்மிந் தத் புத்தி:, அதாவது அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும் அஸ்வதந்த்ரமான ஆத்மவஸ்துவில் ஸ்வதந்த்ரபுத்தியும், அநந்ய சேஷமானவதுதன்னில் அந்ய சேஷத்வ புத்தியும், அநீச்வரரானவர்கள் பக்கல் ஈச்வரத்வ புத்தியும், அபுருஷார்த்தமான ஐச்வர்யாதிகளிலே புருஷார்த்தத்வ புத்தியும், அநுபாயங்களானவற்றில் உபாயத்வ புத்தியும் தொடக்கமானவை. யதா ஜ்ஞாநத்தை மறைக்குமளவன்றிக்கே இப்படியிருந்துள்ள விபரீத ஜ்ஞாநங்களையும் பத்தசேதநர்க்கு உண்டாக்கா நிற்குமாயிற்று. “பகவத் ஸ்வரூப திரோதாநகரீம் விபரீத ஜ்ஞாந ஜநநீம்” என்று இது தன்னை பாஷ்யகாரர் அருளிச்செய்தாரிறே. (நித்யமாய்) அதாவது உத்பத்தி விநாச ரஹிதமாயிருக்கை. “அஜாமேகாம்”, “கௌரநாத்யந்தவதீ ஸா ஜநித்ரீ பூதபாவிநீ”, “அசேதநா பரார்த்தா ச நித்யா ஸதத விக்ரியா”, “விகார ஜநநீமஜ்ஞாமஷ்டரூபாமஜாம் த்ருவாம்” என்னக்கடவதிறே. (ஈச்வரனுக்கு க்ரீடா பரிகாரமாய்) அதாவது ஸர்வேச்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாயிருக்கை. “க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய”, “அப்ரமேயோ நியோஜ்யச்ச யத்ர காமகமோவசீ | மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ”, “த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி: காம ஸூத்ரோபபாதிதை: | ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி:” என்று சொல்லப்படுகிற, ஸர்வேச்வரனுடைய லீலைக்கு குணத்ரயாத்மிகையான ப்ரக்ருதியிறே ப்ரதாநோபகரணம். “ஸிதாஸிதா ச ரக்தா ச ஸர்வகாமதுகா விபோ:” என்னக்கடவதிறே. “தைவீ ஹ்யேஷா குணமயீ” என்று தானே அருளிச்செய்தானிறே. (ப்ரதேச பேதத்தாலும், காலபேதத்தாலும் ஸத்ருசமாயும், விஸத்ருசமாயு மிருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்) ப்ரதேச பேதமாவது, குண வைஷம்ய மில்லாத ப்ரதேசமும் குண வைஷம்யமுள்ள ப்ரதேசமும். இது தனக்கு குணவைஷம்ய முள்ளது, கார்யோந்முகமான ஸ்தலத்திலேயிறே. அல்லாதவிடமெல்லாம் குண ஸாம்யாபந்நமாயிருக்குமித்தனை. அதில், குணவைஷம்யமில்லாதவிடம் ஸத்ருச விகாரமாயிருக்கும். வைஷம்யமுள்ளவிடம் விஸத்ரூச விகாரமாயிருக்கும். ஸத்ருச விகாரமாவது, நாம ரூப விபாகாதேசாநர்ஹமாயிருக்கும் ஸூக்ஷ்மவிகாரம். விஸத்ருச விகாரமாவது, நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாயிருக்கும் ஸ்தூல விகாரம். “குண ஸாம்ய மநுத்ரிக்தமந்யூநம்” என்கையாலே, அவ்யக்தாவஸ்தையிலுள்ள விகாரமெல்லாம் ஸத்ருசமாயிருக்கும்; மஹதாதி விஸத்ருச விகாரமாயிருக்கும். – இனி, காலபேதமாவது ஸம்ஹாரகாலமும், ஸ்ருஷ்டி காலமும். ஸம்ஹார காலத்தில் இது அவிபக்த தமஸ்ஸாய்க் கிடக்கையாலே ஓரிடத்திலும் குண வைஷம்யமில்லாமையால் எங்குமொக்க ஸத்ருச விகாரமாயிருக்கும். ஸ்ருஷ்டி காலத்திலே பகவததிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய், கார்யோந்முகமாய், குண வைஷம்யம் பிறந்தவாறே விஸத்ருச விகாரத்தையுடைத்தாகா நிற்கும், ஸதத விகா ராஸ்பதமா யிருக்கையாலே, அதுக்கு ஸத்தாப்ரயுக்தமிறே விகாரம். அதினுடைய ஸௌக்ஷ்ம்யாஸௌக்ஷ்ம்ய நிபந்தநமான விபாக நிர்தேசமிறே உள்ளது. அல்லது நிர்விகாரமாயிருப்பதோரவஸ்தையும் இல்லையிறே. (ப்ரக்ருதி, அவித்யை, மாயை என்கிற பேர்களை உடைத்தாயிருக்கும் அசித் விசேஷம்) மிச்ரஸத்வமாவது இப்படி இருப்பதோர் அசித் விசேஷமென்று வாக்யாந்வயம்.

(மிச்ரஸத்வமாவது) - ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றுடன் கூடிய ஸத்வகுணத்தைக் கொண்டது. அதனை, “ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் மூன்றோடுங் கூடி” என்று அருளிச் செய்கிறார். ஸ்ரீவிபு. (1-2-23) – த்ரிகுணம் தஜ்ஜகத் யோநிரநாதி ப்ரபவாப்யயம் - மூன்று குணங்களுடன் கூடிய ப்ரக்ருதியானது இந்த ஜகத்தின் பிறப்பிடமாக அநாதியாக உள்ளது – என்றும், பரமஸம்ஹிதை - த்ரிகுணம் கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே - மூன்று குணங்களுடன் கூடிய இந்தச் சரீரமானது கர்மங்கள் அனைத்தையும் அனுபவிக்கவல்ல ரூபமாக உள்ளது என ப்ரக்ருதியானது கூறப்படுகிறது - என்றும், கீதை (14-5) - ஸத்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா: - ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பதாக உள்ள ப்ரக்ருதியிலிருந்து உண்டான மூன்று குணங்களும் – என்றும் கூறப்பட்டன. (பத்தசேதநருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரோதாயகமாய்) - மூன்று குணங்களுடன் கூடியதாக உள்ளதால் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய பகுதிகளின் விளைவாக ஞானம் முதலானவற்றில் மறைவை ஏற்படுத்துகிறது. இங்கு, “சேதநர்களுடைய ஞானம், ஆனந்தம் போன்றவற்றுக்கு மறைவை ஏற்படுத்துகிறது” என்று பொதுவாக உரைக்காமல், “ஸம்ஸாரத்தில் பந்தப்பட்ட சேதநருடைய” என்று சிறப்பித்துக் கூறப்பட்டது; ஆகவே இத்தகையை மறைவு என்பது, கர்மஸம்பந்தம் கொண்டுள்ள சேதநர்களுடைய ஞானம் முதலானவற்றுக்கு மட்டுமே ஆகும் என்றாகிறது. அல்லது வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். நித்யர்கள் மற்றும் முக்தர்கள், தங்களுடைய விருப்பத்தினால் கூட இந்த லோகத்தில் சரீரங்களை எடுக்கலாம்; அப்போது அவர்களுடைய ஞானம் மற்றும் ஆனந்தம் போன்றவற்றுக்கு இத்தகைய சுருக்கம் ஏற்படலாம் அல்லவோ? இதற்குச் சமாதானம் கூறும்விதமாக, ஸ்ரீரங்கராஜஸ்தவம் (1-33) - அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்த பந்தா: விமல சரம தேஹா: இதி அமீ ரங்கதாம | மஹித மநுஜ திர்யக் ஸ்த்தாவரத்வா: ச்ரயந்தே -கைங்கர்யம் என்ற செல்வத்தை இயற்கையாகவே உடைய நித்யஸூரிகள், ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்ட முக்த ஜீவன்கள் மற்றும் அடுத்து வரும் பிறவிகள் இனி இல்லை என்பது போன்றுள்ள முமுக்ஷுக்கள் ஆகிய அனைவரும் மனிதப்பிறவி, பசு முதலான பிறவி, தாவரங்களாகப் பிறவி முதலானவற்றை ஏற்று – என்பதற்கு ஏற்ப, நித்யர்கள் மற்றும் முக்தர்கள் இந்த உலகிற்கு வந்து, இந்த உலகியல் சரீரங்களை எடுத்து, தங்களுடைய எஜமானனாகிய ஸர்வேச்வரனுக்கு மேன்மையை உண்டாக்குவிதமாக உள்ளபோது, அவர்களுக்கு இத்தகைய சுருக்கங்கள் உண்டாவதில்லை; எனவே இத்தகைய மறைவு என்பது, பந்தத்தில் உள்ள சேதநர்களுக்கு மட்டுமே ஆகும் என்பது புலப்படுகிறது. முண். (3-1-2) - அநீசயா சோசதி முஹ்யமாந: - ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு – என்றும், மாண்டூக்யம் - அநாதி மாயயா ஸுப்த: - எல்லையற்ற காலமாகத் தொடரும் மாயையால் மயக்கம் கொண்டு – என்றும், கத்யத்தில் – பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாச: - பகவானுடைய மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்டவனாக - என்றும் கூறப்படுவது காண்க. (விபரீத ஜ்ஞாந ஜநகமாய்) – “விபரீத ஞானம்” என்றால், உண்மைக்கு மாறாக அறிதல் என்று பொருள். அதாவது ஆத்மா அல்லாத சரீரத்தை ஆத்மா என்று எண்ணுதல், சுதந்திரம் அற்றதான ஆத்மாவைச் சுதந்திரமானது என்று எண்ணுதல், மற்றவர்களுக்கு அடிமை அல்லாத தன்னை மற்றவர்களுக்கு அடிமை என்று எண்ணுதல், ஈச்வரர்கள் அல்லாதவர்களை ஈச்வரர்கள் என்று எண்ணுதல், புருஷார்த்தம் அல்லாத ஐச்வர்யம் போன்றவற்றைப் புருஷார்த்தங்களாக எண்ணுதல், உபாயங்கள் அல்லாதவற்றை உபாயங்களாக எண்ணுதல் என்பது தொடக்கமாக உள்ளவை ஆகும். உண்மையான ஞானமானது பந்தப்பட்ட சேதநர்களுக்கு மறைக்கப்படுவது மட்டும் அல்லாமல், இது போன்ற விபரீத ஞானமும் ஏற்படுகிற்து. கத்யத்தில் - பகவத் ஸ்வரூப திரோதாநகரீம் விபரீத ஜ்ஞாந ஜநநீம் - பகவானுடைய ஸ்வரூபத்தை மறைப்பதாகவும், விபரீத ஞானத்தைப் பிறக்கச் செய்வதாகவும் உள்ள ப்ரக்ருதி - என்று பாஷ்யகாரர் அருளிச்செய்தார் அல்லவோ? (நித்யமாய்) - உற்பத்தி மற்றும் அழிவு இல்லாமல் இருத்தல். அஜாமேகாம் - பிறப்பற்றதும் ஒன்றாக உள்ளதும் ஆகிய ப்ரக்ருதி - என்றும், கௌரநாத்யந்தவதீ ஸா ஜநித்ரீ பூதபாவிநீ - ப்ரக்ருதியானது தொடக்கம் மற்றும் முடிவு அற்றது; கண்களுக்குத் தென்படாதவற்றையும் தென்படுவதையும் உண்டாக்குகிறது - என்றும், பரமஸம்ஹிதை - அசேதநா பரார்த்தா ச நித்யா ஸதத விக்ரியா - அறிவற்றதும் மற்றவர்களுக்காகவே உள்ளதும் நித்யமானதும் மாற்றம் உடையதும் - என்றும், விகார ஜநநீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்ருவாம் - மாற்றத்திற்கு இடமாகவும், ஞானம் அற்றதாகவும், எட்டு உருவம் கொண்டதாகவும் பிறப்பற்றதாகவும் உறுதியானதாகவும் – என்றும் கூறப்பட்டது. (ஈச்வரனுக்கு க்ரீடா பரிகாரமாய்) - ஸர்வேச்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்டி முதலான பல லீலைகளுக்கு ஏற்ற கருவியாக உள்ளது. ஸ்ரீவிபு. (1-2-18) - க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய - விளையாடி மகிழும் பாலர்கள் போன்று, மஹாவிஷ்ணுவின் லீலைகளைக் காண்பாய் – என்றும், ஸ்ரீவிபு. (1-2-20) - அப்ரமேயோ நியோஜ்யச்ச யத்ர காமகமோவசீ | மோததே பகவாந் பூதைர் பால: க்ரீடநகைரிவ - அளவிட இயலாதவனும், அனைத்துவிதமான இன்பங்களையும் அடையப் பெற்றவனும், அனைவரையும் வசப்படுத்துபவனும் ஆகிய பகவான், இவை அனைத்தையும், சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக் கருவிகள் போன்று பயன்படுத்துகிறான் - என்றும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் - த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி: காம ஸூத்ரோபபாதிதை: | ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி: - தாழ்ந்தும் உயர்ந்தும் காணப்படுவதன் வினைகள் என்ற கயிறு கொண்டு கட்டப்பட்ட இந்த மனிதர்களைப் பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் - என்றும் கூறப்படுகிற ஸர்வேச்வரனுடைய விளையாட்டுக்களுக்கு, மூன்று குணங்களுடன் கூடியதான இந்த ப்ரக்ருதியானது, ஏற்ற கருவியாக உள்ளது அல்லவோ? ஸிதாஸிதா ச ரக்தா ச ஸர்வகாமதுகா விபோ: - வெண்மையும், கருமையும், சிவந்தும் உள்ள ப்ரக்ருதியானது பகவனுக்கு இன்பம் அளிப்பதாக உள்ளது - என்று கூறப்பட்டது. கீதையில் (7-14) - தைவீ ஹ்யேஷா குணமயீ – எனது இந்த மூன்று குணங்கள் - என்று பகவன் தானே அருளிச்செய்கிறார். (ப்ரதேச பேதத்தாலும், காலபேதத்தாலும் ஸத்ருசமாயும், விஸத்ருசமாயு மிருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்) - “ப்ரதேச பேதம் = இருப்பிட வேறுபாடு” என்றால் குணங்களின் ஏற்றத்தாழ்வு இல்லாத இடம் மற்றும் அவற்றின் ஏற்றத்தாழ்வு உள்ள இடம் ஆகும். கார்ய நிலையான ஸ்தூல நிலையில் மூன்று குணங்களுக்கு ஏற்றத்தாழ்வு உள்ளது; அது இல்லாத இடத்தில், அனைத்து குணங்களும் ஒரே போன்று உள்ளன. குணங்களின் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமானது, ஒரே போன்று மாறுதல்கள் கொண்டதாக இருக்கும். அவற்றில் ஏற்றதாழ்வு உள்ள இடமானது, வெவ்வேறு மாறுதல்கள் கொண்டதாக இருக்கும். ஒரே போன்று மாறுதல்கள் கொண்ட நிலை என்பது பெயர் மற்றும் உருவம் ஆகியவை இன்னவை என்று பிரித்துக் கூற இயலாதபடி உள்ள ஸூக்ஷ்ம நிலையாகும். வெவ்வேறு மாறுதல்கள் கொண்ட நிலை என்பது, பெயர் மற்றும் உருவம் ஆகியவற்றைத் தனித்தனியே பிரித்துக் கூறத் தகுதியாக உள்ள ஸ்தூல நிலையாகும். “குண ஸாம்ய மநுத்ரிக்தமந்யூநம் - கண்ணுக்குப் புலப்படாத அவ்யக்த நிலையில் குணங்கள் சமமாகவும், அதிகமாகவோ குறைவாகவோ இன்றியும் உள்ளன”, என்று கூறப்படுவதால், அவ்யக்த நிலையில் உள்ள மாறுதல்கள் அனைத்தும் ஒரே போன்று உள்ளன. மஹத் முதலான நிலைகளில் மாறுதல்கள் வெவ்வேறாக உள்ளன. அடுத்து காலபேதம் என்பது, ஸம்ஹார காலம் மற்றும் ஸ்ருஷ்டி காலம் ஆகும். ப்ரளயகாலத்தில் இந்த மிச்ர ஸத்வமானது, பெயர் மற்றும் ரூபம் போன்ற வேறுபாடுகள் கொண்டதாக பிரித்துக் காண இயலாதபடி இருளாகக் கிடப்பதால், எந்த ஒரு இடத்திலும் குணங்களில் வேறுபாடுகள் இல்லாமல் உள்ளது; ஆகவே அனைத்து இடங்களிலும் ஒரே போன்று, ஒரே மாறுதலுடன் உள்ளது. ஸ்ருஷ்டி காலத்தில், பகவான் அதன் உட்புகுந்த நிலையில், கண்களுக்குப் புலப்படத்தக்கதாகவும், கார்யம் ஏற்பட ஏற்றதாகவும், குணங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதால் அவை மாறுதல்கள் கொண்டதாகவும் மிச்ர ஸத்வம் உள்ளது. எப்போதும் மாற்றத்திற்கு இருப்பிடமாக உள்ளதால், மிச்ர ஸத்வத்தின் இருப்பு என்பதும் மாற்றத்துடன் கூடியதாகவே உள்ளது. உருவம் அற்ற நிலை மற்றும் ரூபத்துடன் கூடிய நிலை ஆகியவையே வேறுபாடு என்ற தன்மையாக உள்ளது. இவ்விதம் அல்லாமல், மிச்ரஸத்வத்திற்கு மாற்றம் இல்லாத நிலையும் இல்லை அல்லவோ? (ப்ரக்ருதி, அவித்யை, மாயை என்கிற பேர்களை உடைத்தாயிருக்கும் அசித் விசேஷம்) – “மிச்ர ஸத்வம் என்பது இவ்விதம் உள்ளதான ஓர் அசித் நிலை” என்று படிக்கவேண்டும் .