Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 84)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
நானென்று தோற்றாமையாலும், சரீரங்களாய் பரிணமிக்கையாலும், விஷயங்களை யொழியவும் தானே தோற்றுகையாலும், சப்த ஸபர்சாதிகளுண்டாகையாலும் பிந்நமாகக் கடவது.
அநேக ஹேதுக்களாலே அதுதன்னை தர்சிப்பிக்கிறார் “நானென்று தோற்றாமையாலும்” என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பல காரணங்கள் மூலம் விடை அளிக்கிறார்.
அதாவது ஆத்மவஸ்து ப்ரத்யக்காகையாலே அஹமென்று ப்ரகாசியா நிற்கும்; இது பராக்காகையாலே இதமென்றிறே ப்ரகாசிப்பது. இத்தாலே ஆத்மாவில் பின்னமென்றபடி. சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஜ்ஞானத்திலும் இரண்டிலும பின்னமென்றபடி. ஏகரூபனாகையாலே ஆத்மாவுக்கு பரிணாமமில்லையிறே. ஜ்ஞாநத்துக்கு பரிணாமமுண்டேயாகிலும், சரீராதிகளாய் பரிணமியாதிறே. விஷய நிரபேக்ஷமாக ப்ரகாசிக்கையாலும், சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆச்ரயமாகையாலும் விஷய ஸந்நிதியிலொழிய ப்ரகாசிப்பதும் செய்யாதே, சப்தாத்யாச்ரயமன்றிக்கே தத் க்ராஹகமாயிருக்கிற ஜ்ஞாநத்தில் பின்னமென்றபடி.
ஆத்ம வஸ்துவானது தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவல்லது என்பதால் “நான்” என்று புலப்பட்டபடி இருப்பதாகும்; ஆனால் சுத்தஸத்வமானது தானாகவே தன்னை வெளிப்படுத்தாதது என்பதால் “அது” என்று புலப்பட்டபடி இருக்கும். இதன் விளைவாக, சுத்தஸத்வமானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளது. சரீரம் போன்றவையாக வெளிப்படுவதால் ஆத்மா மற்றும் ஞானம் ஆகிய இரண்டைக் காட்டிலும் வேறுபட்டதாகும். ஒரே ரூபமாக உள்ள ஆத்மாவிற்குப் பரிணாமம் இல்லை. ஞானத்திற்குப் பரிணாமங்கள் உண்டு என்றாலும், சரீரம் போன்றவையாக பரிணமிக்காது. எந்தவிதமான விஷயங்களையும் எதிர்பாராமல் வெளிப்படுவதாலும், “ஓசை, தொடு உணர்ச்சி” போன்ற பலவற்றுக்கும் இருப்பிடமாக உள்ளதாலும், விஷயங்கள் இருந்தால் அல்லாமல் வெளிப்படுவது என்பது செய்யாமல், ஓசை போன்றவற்றுக்கு இடமாக இல்லாமல் அவற்றை கிரஹிப்பதாலும், ஞானத்திலிருந்து வேறுபட்டதாகும்.