Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 82)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ஸம்ஸாரிகளுக்குத் தோற்றாது.
இப்படி ஸ்வயம்ப்ரகாசமாயிருக்குமாகில ஸம்ஸாரிகளுக்கு ஜ்ஞாந வேத்யமாக வேண்டாதே, தானே தோற்ற வேண்டாவோ? என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார்.
“இவ்விதம் தானே வெளிப்படுதல் என்பதாக இருந்தால், சுத்தஸத்வமானது இந்த லோகத்தில் உள்ளவர்களுக்கு ஞானத்தால் அறிதல் என்பது இன்றி, தானாகவே வெளிப்பட வேண்டாமோ?”, என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.
(ஸம்ஸாரிகளுக்குத் தோற்றாது) என்று. இதுதான் அபியுக்தராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது எங்ஙனே? என்னில், த்ரிவித அசேதனங்க ளென்றெடுத்தவற்றில், ப்ரக்ருதியும் காலமும் ஜடங்கள்; சுத்தஸத்வமான த்ரவ்யத்தையும் ஜடமென்று சிலர் சொல்லுவார்கள். ஜடத்வமாவது ஸ்வயம்ப்ரகாசமன்றிக்கேயிருக்கை. பகவச் சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள், ஞானாத்மகத்வம் சாஸ்த்ர ஸித்தமாகையாலே சுத்தஸத்வ த்ரயத்தை ஸ்வயம்ப்ரகாசமென்பார்கள். இப்படி ஸ்வயம்ப்ரகாசமாகில் ஸம்ஸாரிகளுக்கு சாஸ்த்ர வேத்யமாக வேண்டாதே, தானே தோன்ற வேண்டாவோவென்னில் ஸர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்மபூதஞானமும் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்க, ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம்ப்ரகாசமாய் வேறெல்லார்க்கும் ஞானாந்தர வேத்யமானாற் போலவும், தர்மபூதஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமாய் இதரர்க்கு ஸ்வயம்ப்ரகாசம் அல்லாதாப்போலவும் இதுவும் நியதவிஷயமாக ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை. “யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: | தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாய தத்வம் ப்ரசக்ஷ்மஹே” என்கிறபடியே, தர்மபூதஞானத்தாலே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கிற ஈச்வரனுக்கு, சுத்தஸத்வ த்ரயம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறபடி எங்ஙனேயென்னில், இவனுடைய தர்மபூதஞானம், திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கிறாப்போலே, இதுவும் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கலாம். இப்படி நித்யருக்கும் துல்யம். விஷய ப்ரகாச காலத்திலே தர்மபூதஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமானாற்போலே, முக்தருக்கும் அவ்வவஸ்தையிலே இதுவும் ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை. தர்மபூதஞானத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியானது விஷய ப்ரகாசமில்லாத காலத்தில் கர்மவிசேஷங்களாலே ப்ரதிபத்தையானாப்போலே, சுத்தஸத்வத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியும் பத்ததசையில் ப்ரதிபத்தையாகையாலே, சுத்தஸத்வம் பத்தருக்கு ப்ரகாசியாதொழிகிறது. “தியஸ் ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தௌ ஸ்வாபாவிகம் யதா | பத்தே கதாசித் ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே”; இவ்வளவு அவஸ்தாந்தராபத்தி, விகாரி த்ரவ்யத்துக்கு விருத்தமன்று. ஆகையாலே ப்ரமாண ப்ரதிபந்நார்த்தத்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழியில்லை - என்றிப்படி ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே.
இந்தக் கருத்தானது வேதாந்ததேசிகனால் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் விளக்கமாக உரைக்கப்பட்டது; எப்படி? மூன்று வகையான அசேதங்களில் ப்ரக்ருதியும், காலமும் ஜடப்பொருள்கள் ஆகும். ஒரு சிலர் சுத்தஸத்வத்தையும் ஜடப்பொருள் என்று கூறுவதுண்டு; ஜடப்பொருள் என்றால் தன்னைத்தானே வெளிப்படுத்த இயலாத பொருள் ஆகும். பாஞ்சராத்ரம் முதலான ஆகமங்களை ஆராய்ந்து கற்றவர்கள், சாஸ்த்ரங்களில் கூறப்பட்டபடி, சுத்தஸத்வம் என்பது ஞானம் பொருந்தியதாக உள்ளதால், ஜடம் அல்ல; தானாகவே வெளிப்படக்கூடியது என்பார்கள். இவ்விதம் (சுத்தஸத்வம்) தானாகவே வெளிப்படும் திறன் உள்ளது என்றால், சாஸ்த்ரங்கள் மூலம் அறியப்படவேண்டிய அவசியம் இல்லாதது என்றால், அது ஏன் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்குப் புலப்படாமல் உள்ளது? இதற்கான விடை கூறுவோம். ஆத்மாவின் ஸ்வரூபமான ஞானமும், அதன் தர்மபூதஞானமும் தானாகவே வெளிப்படக்கூடியவை ஆகும். இதில் ஆத்மாவின் ஸ்வரூபம் என்பது அந்த ஆத்மாவிற்கு மட்டுமே வெளிப்படும், மற்றவர்களுக்கு அவரவர்களின் தர்மபூதஞானம் வழியாகவே மற்ற ஆத்மாவின் ஸ்வரூபம் புலப்படும். ஆனால் தர்மபூதஞானம் என்பது அந்த ஆத்மாவிற்கு மட்டுமே புலப்படும், மற்றவர்களுக்கு அல்ல. இது போன்று, சுத்தஸத்வம் என்பது ஈச்வரன், நித்யர் மற்றும் முக்தர் ஆகியோருக்கு மட்டுமே தானாகவே வெளிப்படும்; மற்றவர்களுக்கு அல்ல. ஆக இந்தக் கருத்துக்களில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ந்யாய தத்வத்தின் மங்கள ச்லோகம் - யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: | தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாய தத்வம் ப்ரசக்ஷ்மஹே - எந்த ஒரு ஸர்வேச்வரன் அனைத்தையும் ஒரே நேரத்தில் தனது ஸ்வபாவம் காரணமாக அறிகிறானோ, அப்படிப்பட்ட ஹரியை வணங்கிவிட்டு ந்யாயதத்வம் என்ற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம் - என்றது. இங்கு ஒரு கேள்வி எழலாம். சுத்தஸத்வமானது ஸர்வேச்வரனின் தர்மபூதஞானத்தாலேயே அவனுக்குப் புலப்படுகிறது; இப்படி உள்ளபோது, அவனுக்கு சுத்தஸத்வம் தானாகவே புலப்படுவதாகக் கூறுவது எப்படி? விடை அளிப்போம்; ஸர்வேச்வரனின் தர்மபூதஞானம் என்பது அவனது திவ்யமான ஸ்வரூபம் உட்பட அனைத்தையும் புலப்பட வைக்கிறது என்று கூறினோம்; ஆயினும் அவனது ஸ்வரூபம் தானாகவே வெளிப்படவல்லது என்று கூறவில்லையா? இது போன்று அவனுக்கு சுத்தஸத்வமும், தர்மபூதஞானம் வழியே வெளிப்பட்டாலும், தானாகவே வெளிப்படுவதாகவே கொள்ளவேண்டும். இது நித்யஸூரிகளுக்கும் பொருந்தும். ஒரு பொருளை உணர்த்தவல்ல காலத்தில், அந்த ஆத்மாவிற்கு தர்மபூதஞானம் தானாகவே தன்னை வெளிப்படுத்துவது போன்று, முக்தி அடைந்தவர்களுக்கு சுத்தஸத்வமானது தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் கர்மம் காரணமாக, ஒரு பொருளை உணர்த்தவேண்டிய நேரத்தில்கூட தர்மபூதஞானம் தடைபட்டு, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் போகலாம். இது போன்றே ஸம்ஸார பந்தத்தில் உள்ளதால், சுத்தஸத்வம் என்பது தன்னைத் தானாகவே வெளிப்படுத்த இயலாமல் போகிறது. “தியஸ் ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தௌ ஸ்வாபாவிகம் யதா | பத்தே கதாசித் ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே - மோக்ஷ காலத்தில் தானாகவே வெளிப்படும் தர்மபூதஞானமானது, ஸம்ஸார காலத்தில் சில நேரங்களில் தடைபட்டு உள்ளது; இது போன்றே சுத்தஸத்வ விஷயத்திலும் கொள்ளவேண்டும்”. தொடர்ந்து மாற்றம் அடைந்தபடி உள்ள பொருள்கள் ஒரு சில நேரங்களில் ஒருவரால் ஏற்கவும்படலாம், நிராகரிக்கவும்படலாம்; மற்றவர்களும் அந்தப் பொருள் குறித்து இதே போன்று இருக்க வாய்ப்புண்டு. இதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ப்ரமாணங்களால் தளிவாக நிரூபிக்கப்பட்ட பொருள்களுக்கு உதாரணம் மூலம் முரண்பாடு கண்டு பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை.