Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 81)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
அஜடமானபோது, நித்யர்க்கும் முக்தர்க்கும் ஈச்வரனுக்கும் ஜ்ஞாநத்தையொழியவும் தோற்றும்.
– ஜடமாகையாவது, ஸ்வயம்ப்ரகாசமன்றிக்கேயிருக்கை; அஜடமாகை யாவது, ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கை; அத்தை அருளிச்செய்கிறார்.
ஜடம் என்றால் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமை; அஜடம் என்றால் தானாகவே தன்னை வெளிப்படுத்தக் கொள்ளுதல் ஆகும். இதனை அருளிச் செய்கிறார்.
– (அஜடமானபோது, நித்யர்க்கும் முக்தர்க்கும் ஈச்வரனுக்கும் ஜ்ஞாநத்தையொழியவும் தோற்றும்) என்று. அஜடமானபோது என்றது, ஜடமென்றும் ஒரு பக்ஷம் சொல்லுகையாலே அப்படியன்றிக்கே இப்படியானபோது என்றபடி. அந்த பக்ஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே, இவர் தமக்கு இதுவே திருவுள்ளமென்று தோற்றாநின்றதிறே. ஜ்ஞானத்தையொழியவும் தோற்றுமென்றது, ஜ்ஞானத்தாலே தன்னையறிய வேண்டாதபடி, தானே ப்ரகாசிக்கும் என்றபடி.
“அஜடமானபோது” என்றால், “இதனை ஒரு சிலர் ஜடம் என்று கூறுவதால், அவ்விதம் அல்லாமல் அஜடம் என்று உள்ளபோது” என்று பொருள். அந்த வாதத்தை விடுத்து, இதனை அருளிச்செய்வதால், இதுவே இவருடைய திருவுள்ளத்திற்கு ஏற்புடையதாகிறது என்பது வெளிப்படுகிறது. (ஜ்ஞாநத்தையொழியவும் தோற்றும்) – வேறு ஒரு ஞானத்தால் அறிய வேண்டாதபடி, தானே தன்னை வெளிப்படுத்தவல்லது என்று பொருள்.