Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 79)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இதில் சுத்தஸத்வமாவது ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்த ஜநகமாய், கர்மத்தாலன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந கோபுர மண்டப ப்ராஸாதாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய், நிரவதிக தேஜோ ரூபமாய், நித்யமுக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய், அத்யத்புதமா யிருப்பதொன்று.
உத்தேசித்த க்ரமத்திலே அசித் த்ரயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை ப்ரதிபாதிப்பதாக நினைத்து ப்ரதமம் சுத்தஸத்வத்தின் படியை அருளிச்செய்கிறார் (இதில் சுத்தஸத்வமாவது) என்று தொடங்கி.
தான் கருதிய முறையில், அசித் வஸ்துக்களுடைய தன்மைகள் மற்றும் இயல்புகளின் சிறப்புகளை வெளிப்படுத்த எண்ணியவராக, முதலில் சுத்தஸத்வத்தின் தன்மையை அருளிச்செய்கிறார்.
சுத்தஸத்வமென்றது குணாந்தரம் கலசாத ஸத்வகுணத்தையுடையதென்ற படி. அத்தை அருளிச்செய்கிறார் (ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய்) என்று. “க்ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே”, “தமஸஸ்து பாரே”, “தமஸஸ் பரஸ்தாத்”, “பஞ்ச சக்திமயே திவ்யே சுத்தஸத்வே ஸுகாகரே” என்று ச்ருதி ஸ்ம்ருதிகளிலே இப்படி சொல்லாநின்றதிறே. (நித்யமாய்) அதாவது, அநாதி நிதநமாயிருக்கை. “ததக்ஷரே பரமே வ்யோமந்”, “காலாதீதமநாத்யந்தமப்ராக்ருதமசஞ்சலம், ப்ராப்யமர்ச்சி: பதாத் ஸத்பிர்மயி ஸம்ந்யஸ்தமாநஸை:”, “யத் தத் புராணமாகாசம் ஸர்வஸ்மாத் பரமம் த்ருவம், யத் பதம் ப்ராப்ய தத்வஜ்ஞா முச்யந்தே ஸர்வ கில்பிஷை:” என்று இதினுடைய நித்யத்வமும் ச்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப்பட்டது. (ஜ்ஞாநாநந்த ஜநகமாய்) சுத்த ஸத்வமாகையாலே ஜ்ஞாநாநந்த ஜநகமாயிருக்குமிறே. ஸத்வம் ஜ்ஞாந ஸுகாவஹமாயிறே இருப்பது; ஆகையிறே “சுத்த ஸத்வே” என்ற அநந்தரத்திலே, “ஸுகாகரே” என்றது. (கர்மத்தாலன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந கோபுர மண்டப ப்ராஸாதாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்) அதாவது சேதநன் கர்மாநுகுணமாக இச்சிக்க, அந்த இச்சாநுகுணமாக பகவத் ஸங்கல்பத்தாலே சதுர்விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து, சேதநர்க்கு போக்ய போகோபகரண போகஸ்தாநங்களாகிற ப்ரக்ருதி தத்வம் போலன்றிக்கே, ஸ்வபோகார்த்தமாக உண்டான பகவதிச்சையாலே விமாந கோபுராதி ரூபேண பரிணமியா நிற்குமென்கை. “தேவாநாம் பூரயோத்யா தஸ்யாம் ஹிரண்மய கோச: | யோ வை தாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநாவ்ருதாம் புரீம்”, “அபராஜிதா பூர்ப்ரஹ்மண:”, “ப்ரஜாபதேஸ் ஸபாம் வேச்மப்ரபத்யே” என்று ச்ருதியிலேயும் ஸங்க்ரஹேண நித்யவிபூதியிலுண்டான திவ்ய நகர திவ்யாயதநாதிகள் சொல்லப்பட்டது. இதுதன்னை பாஷ்யகாரர் ஸ்ரீவைகுண்டகத்யத்தில், “திவ்யாவரண சத ஸஹஸ்ராவ்ருதே, திவ்ய கல்பகதரூப சோபிதே, திவ்யோத்யாந சதஸஹஸ்ர கோடி பிராவ்ருதே அதிப்ரமாணே, திவ்யாயதநே கஸ்மிம்ச்சித் விசித்ர திவ்ய ரத்நமய திவ்யாஸ்தாந மண்டபே” என்று தொடங்கி விஸ்தரேண அருளிச்செய்தாரிறே. (நிரவதிக தேஜோ ரூபமாய்) அதாவது, அக்நி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும கத்யோத்கல்பமாக்கும்படி அளவிறந்த தேஜஸே வடிவாயிருக்கை. “ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி:”, “அத்யர்காநலதீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ மஹாத்மந: ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவ தாநவை:” என்னக்கடவதிறே. “சுடரொளியாய் நின்ற தன்னுடைய சோதி”, “கழிப்பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளம்”, “விளங்குஞ் சுடர்ச்சோதி” என்று ஆழ்வாரும் இதினுடைய நிரவதிக தேஜோ ரூபத்வத்தைப் பலவிடங்களிலும் அருளிச் செய்தாரிறே. (நித்யமுக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய்) அதாவது இதினுடைய பரிமாணதிகள் ஒருவராலுமளவிட வொண்ணாதபடியிருக்குமாயிற்று. “தேஷாமபி இயத் பரிமாணம் இயதைச்வர்யம், ஈத்ருச ஸ்வபாவம் இதி பரிச்சேத்தும் அயோக்யே” என்று நித்யரால் பரிச்சேதிக்கவொண்ணாதென்று ஸ்ரீவைகுணடகத்யத்திலே பாஷ்யகாரர் அருளிச்செய்தவிது முக்தருக்குமொக்குமிறே. ஈச்வர ஜ்ஞாநத்தோபாதி இவர்களுடைய ஜ்நாநத்துக்கும் ஸர்வதர்சித்வமுண்டாகையாலே; அவனால் பரிச்சேதிக்கலாமாகில், இவர்களாலும் பரிச்சேதிக்கலாமிறே; ஆகையால் அவனுக்குமரிது என்கை. ஆனால் இவர்களுடைய ஸர்வஜ்ஞதைக்குக் கொத்தை வாராதோ? என்னில், வாராது; ஸர்வஜ்ஞதையாவது ஸர்வத்தையுமுள்ளபடியறிகையிறே. பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்தறிகையும், அபரிச்சேத்யமாகில் அப்படியறிகையுமிறே உள்ளது. ஸீமையில்லாததொன்றுக்கு ஸீமையறியாமை ஸர்வஜ்ஞதைக்கு அநுகுணமென்னுமிடம் “தேவி த்வத் மஹிம் அவதி: ந ஹரிணா ந அபி த்வயா ஜ்ஞாயதே | யத்யபி ஏவம் அத அபி ந ஏவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே | யத் ந அஸ்தி ஏவ தத் அஜ்ஞதாம் அநுகுணாம் ஸர்வஜ்ஞதா: விது: | வ்யோம அம்போஜம் இதந்தயா கில விதந் ப்ராந்த: அயம் இதி உச்யதே” என்று ஸ்ரீஸ்தவத்திலே ஆழ்வானருளிச்செய்தார். இங்ஙனன்றாகில், “தனக்குந் தன் தன்மையறிவரியான்” என்கிறவிதுவும் ஸர்வஜ்ஞதையோடு விரோதிக்கும். ஆகையால், நித்ய முக்த ஈச்வரர்களால் அபரிச்சேத்யமென்றவிதில் குறையில்லை. இத்தால் இதினுடைய வைபவம் சொன்னபடி. (அத்யத்புதமாயிருப்பதொன்று) அத்யத்புதத்வமாவது அநுக்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம். “அநந்தாச்சர்யாநந்த மஹா விபவ” என்றாரிறே பாஷ்யகாரர். ஆக சுத்தஸத்வமாவது இப்படியிருப்ப தொன்றென்றதாயிற்று.
சுத்தஸத்வம் என்பது மற்ற இரண்டு குணங்களான ராஜஸம் மற்றும் தாமஸம் கலக்காத, ஸத்வகுணத்தை மட்டுமே கொண்டது என்று பொருள். இதனை “ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய்” என்று அருளிச்செய்கிறார். யஜுஷி - க்ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே – ராஜஸம் கலந்த இந்த லோகங்களைக் காட்டிலும் மேலே உள்ள பரமபதத்தில் – என்றும், புருஷஸூக்தம் – தமஸஸ்து பாரே - தமோ குணம் நிறைந்த இந்த லோகத்திற்கு அப்பால் – என்றும், தைத். (2-11) – பஞ்ச சக்திமயே திவ்யே சுத்தஸத்வே ஸுகாகரே - ஐந்து சக்திகளைத் தனது இயல்பாகக் கொண்டதும், சுகத்திற்கு இருப்பிடமாக உள்ளதும், தெய்வீகமானதும், சுத்தஸத்வமாக உள்ளதும் ஆகிய பரமபதம் - என்றும் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகள் கூறியது காண்க. அதாவது தொடக்கமும் முடிவும் அற்றதாக, எப்போதுமே உள்ளதாக இருத்தல். தைத். (2-12) – தத் அக்ஷரே பரமே வ்யோமந் – அந்த வஸ்துவானது அழிவற்ற பரமபதத்தில் உள்ளது - என்றும், காலாதீதம் அநாத்யந்தம் அப்ராக்ருதமசஞ்சலம், ப்ராப்யம் அர்ச்சி: பதாத் ஸத்பிர்மயி ஸம்ந்யஸ்தமாநஸை: - எந்த ஒரு பரமபதமானது அனைத்து காலங்களுக்கும் அப்பாற்பட்டதகவும், தொடக்கம் மற்றும் முடிவு அற்றதாகவும், என்னிடம் அசையாத மனதைச் செலுத்தியவர்களால் அர்ச்சிராதி மார்க்கமாக அடையப்படுவதாகவும் உள்ளதோ - என்றும், யத் தத் புராணமாகாசம் ஸர்வஸ்மாத் பரமம் த்ருவம், யத் பதம் ப்ராப்ய தத்வஜ்ஞா முச்யந்தே ஸர்வ கில்பிஷை: - எந்த ஒரு பரமபதமானது மிகவும் புராணமாகவும், பரமாகாசம் என்று கூறப்படுவதாகவும், அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவும், நித்யமாகவும் உள்ளதோ, எதனை அடைந்த தத்வ ஞானிகள் தங்கள் பாபங்கள் அனைத்தையும் விடுகிறார்களோ - என்றும் உள்ள ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளால் இதன் நித்யமாக உள்ள தன்மை கூறப்ப்பட்டது. (ஜ்ஞாந ஆநந்த ஜநகமாய்) - சுத்தஸத்வமாக உள்ளதால் ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருப்பதாகும். ஸத்வ குணமானது ஞானம் மற்றும் ஆனந்தத்தின் இருப்பிடமாக உள்ளதால் அல்லவோ வேதமானது, “சுத்த ஸத்வே” என்ற கூறியதைத் தொடர்ந்து, “ஸுக ஆகரே” என்று கூறியது? (கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமாந கோபுர மண்டப ப்ராஸாதாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்) - சேதநன் தனது கர்மங்களுக்கு ஏற்றபடி விருப்பங்கள் கொள்கிறான்; அந்த விருப்பங்களுக்கு ஏற்ப ப்ரக்ருதியானது, பகவானின் ஸங்கல்பத்தால், இருபத்து நான்கு தத்வங்களாக விரிவடைந்து, சேதநர்களுக்கு “இனிமையாகவும், இன்பத்தை அனுபவிக்க உதவும் கருவியாகவும், இன்பம் அனுபவிக்கவல்ல இடமாகவும்” உள்ளது. இத்தகைய ப்ரக்ருதி போன்று அல்லாமல், பகவானுடைய இன்ப அனுபவத்திற்காக ஏற்பட்டதான, அவனுடைய விருப்பத்தால் விமானம், கோபுரம் முதலான வடிவங்களில் வெளிப்பட்டு நிற்பதான சுத்தஸத்வம் என்று கருத்து. தேவாநாம் பூரயோத்யா தஸ்யாம் ஹிரண்மய கோச: | யோ வை தாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநாவ்ருதாம் புரீம் – தேவர்களுடைய அந்த நகரமானது அயோத்தி என்று பெயர் கொண்டதாக உள்ளது; அங்கு ஸ்வர்ணமயமாக உள்ள நிதி உள்ளது; எந்த ஒருவன் ப்ரஹ்மத்தின் அமிர்தத்தால் சூழப்பட்ட அந்த நகரத்தை அறிகிறானோ - என்றும், அபராஜிதா பூர்ப்ரஹ்மண: - அந்த நகரமானது யாராலும் வெல்லப்பட இயலாதது – என்றும், சாந். (8-14-1) – ப்ரஜாபதேஸ் ஸபாம் வேச்மப்ரபத்யே - அந்த உபாஸகன் ஸபையின் உள்ளே புகுகிறான் - என்றும் உள்ள பல ச்ருதி வாக்கியங்களால், நித்யவிபூதியில் காணப்படும் திவ்யமான நகரம் மற்றும் திவ்யமான இடங்கள் குறித்து சுருக்கமாகக் கூறப்பட்டது. இதனை பாஷ்யகாரர் தனது ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் – திவ்ய ஆவரண சத ஸஹஸ்ராவ்ருதே, திவ்ய கல்பகதரூப சோபிதே, திவ்ய உத்யாந சதஸஹஸ்ர கோடி பிராவ்ருதே அதிப்ரமாணே, திவ்யாயதநே கஸ்மிம்ச்சித் விசித்ர திவ்ய ரத்நமய திவ்ய ஆஸ்தாந மண்டபே – திவ்யமான நூறாயிரம் மதிள்களால் சூழப்பட்டும், திவ்யமான கற்பகமரம் கொண்டும், திவ்யமான நூறாயிரம் கோடி நந்தவனங்கள் உள்ளதாகவும், அளவிடப்பட இயலாதபடியும் உள்ள திவ்யமான இடத்தில், விசித்ரமான திவ்ய இரத்தினமயமான உள்ள திருமாமனி மண்டபத்தில் - என்று தொடங்கி விரிவாக அருளிச்செய்தார். (நிரவதிக தேஜோ ரூபமாய்) - அதாவது அக்னி, ஆதித்யன் போன்றதான ஒளியுடன் கூடிய வஸ்துக்களைக் கூட மின்மினிப் பூச்சிகளுக்கு நிகராக மாற்றும்படியாக, அளவற்ற ஒளி வடிவாக இருத்தல், கட உபநிஷத் – ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி: - ப்ரஹ்மத்திடம் ஆதித்யன் ப்ரகாசிப்பதில்லை, சந்த்ரனும் தாரகைகளும் ப்ராசிப்பதில்லை, மின்னலும் அக்னியும் ப்ரகாசிப்பதில்லை - என்றும், மஹாபாரதம் – அத்யர்காநலதீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ மஹாத்மந: ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவ தாநவை: - சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றைக் காட்டிலும் கோடி ஆதித்யனைப் போன்று ஒளியுடன் கூடிய மஹாவிஷ்ணுவின் பரமபதம் எனக் கொண்டாடப்படும் இடமானது, தனது தேஜஸ்ஸால், தேவர்கள் மற்றும் அஸூரர்களால் காணப்பட இயலாதபடி உள்ளது - என்றும் கூறப்பட்டது அல்லவோ? திருவாய்மொழி (3-10-5) – சுடரொளியாய் நின்ற தன்னுடைய சோதி – என்றும், திருவாய்மொழி (8-10-5) - கழிப்பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளம் – என்றும், திருவாய்மொழி (6-4-6) – விளங்குஞ் சுடர்ச்சோதி – என்றும் பலவிதமாக, நம்மாழ்வாரும் பரமபதத்தினுடைய எல்லையற்ற தேஜஸ் ரூபத்தைப் பல இடங்களில் அருளிச்செய்தார். (நித்யமுக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய்) - இதனுடைய அளவானது யாராலும் அளந்து உரைக்கை இயலாதபடியாக உள்ளது. ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் - தேஷாமபி இயத் பரிமாணம் இயதைச்வர்யம், ஈத்ருச ஸ்வபாவம் இதி பரிச்சேத்தும் அயோக்யே - நித்யஸூரிகளால் கூட இத்தகைய அளவு கொண்டது, இத்தகைய ஐச்வர்யம் கொண்டது, இப்படிப்பட்ட இயல்பு கொண்டது என உரைக்க இயலாதது - என்று நித்யஸூரிகளாலும் அளவிட்டுக் கூறமுடியாத நிலையை ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்தார்; இது முக்தர்களுக்கும் பொருந்தும். ஸர்வேச்வரனுடைய ஞானத்தைப் போன்றே இவர்களுடைய ஞானத்திற்கும், “அனைத்தையும் ஒரே நேரத்தில் காணலாம்” என்பதான தன்மை உள்ளது; ஆகவே அவனால் தனது பரமபதத்தை அளவிட்டுக் கூற இயலும் என்றால், இவர்களுக்கும் இயலும்; எனவே அவனாலும் இயலாது என்று கருத்து. ஆனால் இவ்விதம் கொண்டால், “அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியக்கூடிய ஞானம்“ என்பதற்கு இழுக்கு ஏற்படாதோ?”, என்று கேட்கலாம்; ஏற்படாது. அனைத்தையும் அறிதல் என்றால், “அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிதல் என்பதாகும். அதாவது ஒன்றை அளவிட்டு அறிய இயலும் என்றால், அதனை அளவிட்டு அறிய இயலும்; ஒன்றை அளவிட்டு அறிய இயலாது என்றால், அவ்விதம் அறிய இயலாது என்றும் அறிதல்”, என்பதாகும். எல்லையற்ற ஒரு வஸ்துவின் எல்லையை அறிய இயலாது என்று அறிதலே அனைத்தையும் அறிந்த நிலை ஆகும்; இதனை ஸ்ரீஸ்தவம் (8) – தேவி த்வத் மஹிம் அவதி: ந ஹரிணா ந அபி த்வயா ஜ்ஞாயதே | யத்யபி ஏவம் அத அபி ந ஏவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே | யத் ந அஸ்தி ஏவ தத் அஜ்ஞதாம் அநுகுணாம் ஸர்வஜ்ஞதா: விது: | வ்யோம அம்போஜம் இதந்தயா கில விதந் ப்ராந்த: அயம் இதி உச்யதே - ஹே! ஸ்ரீரங்கநாச்சியாரே! உன்னுடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை. உன்னாலும் உனது மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை. இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள். இதன் காரணம், எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாகச் சான்றோர்கள் அறிகிறார்கள். ஆகாயத்தாமரை, முயல்கொம்பு ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் பைத்தியக்காரன் என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான் – என்பதாக கூரத்தாழ்வான் அருளிச்செய்தார் அல்லவோ? இதனை ஏற்கவில்லை என்றால், திருவாய்மொழி (8-4-6) - தனக்குந் தன் தன்மையறிவரியான் – என்ற ஆழ்வார் வாக்கானது, “அனைத்தும் அறிபவன்” என்ற தன்மையையுடன விரோதிக்கும். எனவே நித்யர்கள் மற்றும் முக்தர்களால் அளவிட்டு உரைக்க இயலாது என்று உரைப்பது தவறில்லை இதன் மூலம் சுத்தஸத்வத்தின் வைபவம் கூறப்பட்டது. (அத்யத்புதமாயிருப்பதொன்று) – “அத்யத்புதம்” என்றால், எப்போதும், ஒவ்வொரு நொடியிலும், புதிதாகத் தோன்றியபடி உள்ளதால், வியப்பை ஏற்படுத்தும் தன்மையாகும். கத்யத்தில் - அநந்தாச்சர்யாநந்த மஹா விபவ – எல்லையற்ற வியப்பும் பெருமையும் கொண்ட - என்று பாஷ்யகாரரும் உரைத்தார் அல்லவோ? எனவே சுத்தஸத்வம் என்பது இப்படியாக உள்ள ஒன்றாகும்.