Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 77)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

அசித்து ஜ்ஞாந சூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும்.

அதில் ப்ரதமத்திலே அசில்லக்ஷணத்தை அருளிச்செய்கிறார்.

அதில் தொடக்கத்தில், அசித் வஸ்துக்களுடைய லக்ஷணத்தை அருளிச் செய்கிறார்.

(அசித்து ஜ்ஞாந சூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும்) என்று. அசித்தாகிறது, சைதந்ய அநாதாரமான வஸ்துவிறே. அதுதன்னை அருளிச்செய்கிறார், “ஜ்ஞாந சூந்யமாய்” என்று. அத்தைப் பற்றவிறே ச்ருதி, போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று. விகாராஸ்பதமாகையாவது, விகாரத்துக்கு இருப்பிடமாயிருக்கை. விகாரமாவது, அவஸ்தாந்தராபத்தி; அதாவது சித்ஸ்வரூபம் போலே ஸதைக ரூபமாயிரா தொழிகை.

“அசித் என்பது ஞானம் அற்றதாகவும், மாற்றத்தின் இருப்பிடமாகவும் உள்ளது” என்கிறார். அசித் என்பது சைதந்யம் அற்றதான அல்லது சைதந்யத்தால் கைவிடப்பட்ட வஸ்து அல்லவோ? இதனையே “ஜ்ஞாந சூந்யமாய் – ஞானம் அற்றதாக” என்கிறார். இதனை உணர்த்துவதற்காக அல்லவோ ச்ருதியானது “போக்யம்” என்ற சொல் மூலம் அசித்தைக் கூறியது? “விகார ஆஸ்பதம்” என்றால் “மாற்றத்திற்கு இருப்பிடம்” என்று பொருள். “விகாரம் – மாற்றம்” என்றால் வேறு ஒரு நிலையை அடைதல் ஆகும். அதாவது, சித் வஸ்துவின் தன்மைகள் போன்று ஒரேவிதமாக இல்லாத தன்மை கொண்டதாகும்.