Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 76)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

மற்றையாநுகூல்யம் ஸ்வாபாவிகமாகில், ஒருவனுக்கொருக்காலோரிடத்திலே அநுகூலங்களான சந்தந குஸுமாதிகள், தேசாந்தரே காலாந்தரே இவன்தனக்கும் அத்தேசத்திலே அக்காலத்திலே வேறேயொருவனுக்கும் ப்ரதிகூலங்களாகக் கூடாது.

இப்படி ஈச்வராத்மகமாகையாலே ஸகலபதார்த்தங்களுக்கும் ஆநுகூல்யமே ஸ்வபாவமென்பானேன்? சந்தந குஸுமாதிகளிலுண்டான ஆநுகூல்யம் ஸ்வாபாவிக மன்றோ? என்கிற சங்கையின் மேலே அருளிச்செய்கிறார் (மற்றையாநுகூல்யம் ஸ்வாபாவிகமாகில்) என்று தொடங்கி.

இவ்விதம் அனைத்து வஸ்துக்களும் ஈச்வரனையே தங்கள் ஆத்மாவாகக் கொண்டவையாக உள்ளதால், அவை அனைத்திற்கும் “ஏற்புடையதாக உள்ள தன்மை” என்பதே இயல்பானது என்று தனியாக ஏன் கூறவேண்டும்? சந்தனம், மலர்கள் போன்றவற்றுக்கு “ஏற்புடையதாக உள்ள தன்மை” என்பது இயல்பானது அல்லவோ என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

மற்றையாநுகூல்யம் என்கிறது தாமருளிச்செய்த பகவதாத்மகத்வத்தால் வந்த ஆநுகூல்யத்தை ஒழிய சந்தந குஸுமாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆநுகூல்யததை. அது அவற்றுக்கு ஸ்வாபாவிகமாகில், போக்தாவாயிருப்பா னொருவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே அநுகூலங்களாயிருந்தவை, காலாந்தரத்திலேயாதல், தேசாந்தரத்திலேயாதல், இவன்றனக்கே ப்ரதிகூலங்களாவது; இவனுக்கு அநுகூலங்களாயிருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு ப்ரதிகூலங்களாவதாகை கூடாது. இப்படி ப்ரதிகூலங்களாய்த் தோற்றக் காணா நின்றோமிறே. ஆகையால், பகவதாத்மகத்வ நிபந்தநமான ஆநுகூல்யமே ஸ்வாபாவிகம்; மற்றையாநுகூல்யம ஸ்வாபாவிகமன்றென்கை. “தத் ஏவ ப்ரீதயே பூத்வா புநர் துக்காய ஜாயதே || தத் ஏவ கோபாய யத: ப்ரஸாதாய ச ஜாயதே | தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகாத்மகம்” என்று இவ்வர்த்தம் ஸ்ரீபராசரபகவானாலே விசதமாகச் சொல்லப்பட்டதிறே. இத்தால் சொல்லிற்றாயிற்றதென்? என்னில், விஷசஸ்த்ராதிகள் ப்ரதிகூலங்களாயும், சந்தந குஸுமாதிகள் அநுகூலங்களாயும் தோற்றுகிறது தேஹாத்ம ப்ரமாதிகளாலே. ஈச்வராத்மகமாகையாலே எலலா பதார்த்தங்களுக்கும் ஆநுகூல்யமே ஸ்வபாவம். ஆகையால் அவ்வாகாரத்தாலே காணும்போது, ஸர்வ விஷய ப்ரகாசந தசையிலும் ஜ்ஞாநம் ஆனந்தரூபமாயிருக்கும் என்றதாயிற்று. ஆக கீழ்ச்செய்ததாயிற்றது, “சித்தென்கிறது ஆத்மாவை” என்று முதலிலே சிச்சப்தவாச்யமான வஸ்துவை உத்தேசித்து; அநந்தரம் “தேஹாதி விலக்ஷணமாய்” என்று தொடங்கி, “சேஷமாயிருக்கும்” என்னுமளவாக தத் ஸ்வரூப லக்ஷணத்தை விஸ்தரேண சொல்லி; “தேஹாதி விலக்ஷணமானபடியென் என்னில்” என்று தொடங்கி, “சேஷமாகையாவது” எனனுமளவாக உக்த லக்ஷணத்தைப பரீக்ஷித்து; அநந்தரம் ஏவம்பூதமான ஆத்ம ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண த்ரிப்ரகாரமா யிருக்கும்படியையும்; பத்தாத்மாக்களுக்கு அவித்யாதிகளுண்டாகைக்கு ஹேதுவையும் தந்நிவ்ருத்தி க்ரமத்தையும் த்ரிவிதாத்ம வர்க்கமும் தனித்தனியே அநந்தமா யிருக்கும்படியையும் சொல்லி; அந்த ஜீவாநந்த்ய ப்ரதிபடமான ஏகாத்ம வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரஸித்து, ஆத்மபேதத்தை ஸாதித்து; முன்பு விஸ்தரேண சொன்னபடியன்றிக்கே, ஸுக்ரஹமாக த்ரிவித ஆத்மாக்களுக்குமுணடான லக்ஷணத்தை தர்சிப்பித்து; அநந்தரம் ஜ்ஞாநத்துக்கும் ஸ்வரூபத்துக்குமுண்டான ஸாதர்ம்ய வைதர்ம்யங்களைச் சொல்லி; ஜ்ஞாந விபுத்வ ப்ரஸங்கத்திலே, த்ரிவித சேதநருடைய ஜ்ஞாநத்துக்குமுண்டான விசேஷத்தைச் சொல்லி; முன்பு ஜ்ஞாநத்துக்குச் சொன்ன நித்யத்வ த்ரவயத்வ அஜடத்வ ஆநந்தரூபத்வங்களை அடைவே உபபாதித்து; இப்படி சித் தத்வத்தினுடைய வேஷத்தை அருளிச்செய்து தலைக்கட்டினார்.

“மற்றையாநுகூலம்” என்று எதனைக் கூறுகிறார்? தான் முன்பு அருளிச்செய்த கருத்தான, “பகவானே அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளான்” என்பதன் மூலம், அனைத்து வஸ்த்துக்களுக்கு உள்ளதான “ஏற்புடையதான தன்மை” என்பது அல்லாமல், சந்தனம் மற்றும் மலர்கள் போன்றவற்றுக்கு உள்ளதான “ஏற்புடைய தன்மை” என்பதையே “மற்றையாநுகூலம்” என்கிறார். அவை, அந்தப் பொருள்களுக்கு இயல்பாகவே உள்ள தன்மை என்றால், அவற்றை அனுபவிக்கும் ஒருவனுக்கு, அவை ஒரு காலம் மற்றும் ஓர் இடத்தில் ஏற்புடையதாக இருந்தபடியும், அவனுக்கே வேறு ஒரு காலம் மற்றும் வேறு ஓர் இடத்தில் ஏற்கமுடியாததாக இருக்க இயலாது அல்லவோ? மேலும் ஒருவனுக்கு ஏற்புடையதாக உள்ள இடம் மற்றும் காலத்தில், வேறு ஒருவனுக்கு அதே இடம் மற்றும் காலத்தில் ஏற்கப்படாதவையாக இருக்க இயலாது அல்லவோ? ஆனால் இவ்விதமாக இந்தப் பொருள்கள் ஏற்கப்படாதவையாக உள்ளதை நான் காண்கிறோம். எனவே “அனைத்து வஸ்துக்களின் ஆத்மாவாக பகவான் உள்ளான்” என்பதன் விளைவாக, அனைத்துப் பொருள்களுக்கும் “ஏற்கப்படுவதாக உள்ள தன்மை” என்பதே இயல்பானது ஆகும்; மற்ற விதங்களில் வரும் இந்தத் தன்மையானது, இயல்பானது அல்ல என்று கருத்து. இதனைப் பராசரபகவான் ஸ்ரீவிபு. (2-6-46, 47) - தத் ஏவ ப்ரீதயே பூத்வா புநர் துக்காய ஜாயதே || தத் ஏவ கோபாய யத: ப்ரஸாதாய ச ஜாயதே | தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகாத்மகம் - ஒரு பொருளே, ஒரு நேரத்தில் இன்பமாகவும் மற்றொரு நேரத்தில் துக்கத்தை அளிப்பதாகவும் உள்ளது. எது கோபத்தைத் தூண்டியதோ அதுவே அமைதியை அளிப்பதாகவும் மாறுகிறது. ஆகவே இயல்பாகவே துக்கமானது என்றும், இன்பமானது என்றும் ஏதும் இல்லை – என்று அருளிச்செய்கிறார். இதன் மூலமாகக் கூறப்பட்டது என்ன? விஷம் மற்றும் ஆயுதம் போன்றவை ஏற்கப்படாத வஸ்துக்களாகவும், சந்தனம் மற்றும் மலர்கள் போன்றவை ஏற்கப்படும் தன்மை கொண்டவைகளாகவும் இருத்தல் என்ற நிலையானது, “சரீரமே ஆத்மா” என்ற மயக்கத்தால் ஆகும். ஈச்வரனை ஆத்மாவாகக் கொண்டுள்ளதால், அனைத்து வஸ்துக்களுக்கும் “ஏற்புடையதாக உள்ள தன்மை” என்பதே இயல்பாகும். ஆகவே இந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு காணும்போது, அனைத்து விஷயங்களையும் அறிகின்ற நிலையில் உள்ள ஞானமானது, ஆனந்த ரூபமாகவே உள்ளது என்று கருத்து. ஆகவே இதுவரை கூறப்பட்டது என்ன? சூர்ணை (93) – சித் என்கிறது ஆத்மாவை - என்பதன் மூலம் தொடக்கத்திலேயே “சித்” என்ற சொல்லால் கூறப்படும் வஸ்துவை உணர்த்தினார். அடுத்து, சூர்ணை (4) – தேஹாதி விலக்ஷணமாய் - என்று தொடங்கி, சூர்ணை (4) – சேஷமாயிருக்கும் – என்பது முடிய உள்ள சூர்ணையில், சித் வஸ்துவின் ஸ்வரூப லக்ஷணத்தை விரிவாக உரைத்தார். அடுத்து சூர்ணை (5) – தேஹாதி விலக்ஷணமானபடியென் என்னில் - என்று தொடங்கி, சூர்ணை (40) – சேஷமாகையாவது – என்பது முடிய உள்ள சூர்ணைகளில், முன்பு கூறப்பட்ட சித் வஸ்துவின் லக்ஷணத்தை ஆராய்ந்தார். அடுத்து, இப்படியாக உள்ள ஆத்ம ஸ்வரூபமானது, “பத்தர், முக்தர், நித்யர்” என மூன்றுவிதமாக உள்ளதைக் கூறினார்; பத்தராக உள்ள ஸம்ஸாரி ஆத்மாக்களுக்கு, அவித்யை போன்றவை ஏற்படும் காரணத்தை உரைத்தார்; அந்த அவித்யை முதலானவை விலகும் வரிசையைக் கூறினார்; மூன்று விதமாக உள்ள ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பல உள்ளன என்றார்; இவ்விதம் “ஜீவாத்மாக்கள் பலர் உள்ளனர்” என்ற ச்ருதி கருத்திற்கு விரோதமாக உள்ளதான “ஒரே ஒரு ஜீவாத்மா” என்ற வாதத்தை, தகுந்த யுக்தி சாஸ்த்ரங்களால் தள்ளினார்; இதன் மூலம் ஆத்ம வேறுபாட்டை உறுதியாக்கினார்; முன்பு விரிவாக உபதேசித்தது போன்று அல்லாமல், மூன்றுவிதமான ஆத்மாக்களுக்கும் உள்ள லக்ஷணத்தைச் சுருக்கமாக உபதேசித்தார்; அடுத்து ஞானத்திற்கும் ஆத்மஸ்வரூபத்திற்கும் இடையே உள்ளதான “ஒரே போன்று உள்ளது, ஒரே போன்று இல்லாதது” என்னும் தர்மங்களைக் கூறினார்; ஞானத்தின் “எங்கும் உள்ள தன்மை” என்பதைக் கூறியபோது, மூன்றுவிதமான சேதனங்களுக்கும் உள்ள ஞானத்திற்கு இருப்பதான சிறப்புகளை உரைத்தார்; முன்பு ஞானத்திற்குக் கூறப்பட்டதான “எப்போதும் உள்ள தன்மை, திரவியமாக உள்ள தன்மை, தானே தன்னை வெளிப்படுத்தும் தன்மை, ஆனந்தமே வடிவமாக உள்ள தன்மை” போன்ற பலவற்றையும் முற்றிலுமாக விளக்கினார். இப்படியாக சித் தத்வத்தின் தன்மையை அருளிச்செய்து நிறைவு செய்தார்.