Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 73)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆநந்தரூபமாகையாவது ஜ்ஞாநம் ப்ரகாசிக்கும்போது அநுகூலமாயிருக்கை.
இனிமேல் இதினுடைய ஆநந்தரூபத்வத்தை உபபாதிக்கிறார் (ஆநந்த ரூபமாகையாவது) என்று தொடங்கி.
அடுத்து ஞானத்தின் ஆனந்தவடிவமாக உள்ள தன்மையை அருளிச் செய்கிறார்.
ஜ்ஞாநம் ப்ரகாசிக்கும்போதாவது ஸ்வாச்ரயத்துக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும்போது அப்போதிறே இதுதான் ப்ரகாசிப்பது அவ்வவஸ்தையில் அநுகூலமாயிருக்கையாவது அவ்வோ விஷயங்களெல்லாம் அநுகூலமாய்த் தோற்றுகையாலே அவற்றை விஷயீகரித்த இந்த ஜ்ஞாநம் ஸ்வாச்ரயத்துக்கு ஸுகரூபமாயிருக்கை.
“ஞானம் வெளிப்படுதல்” என்றால், தனது இருப்பிடமாக உள்ள ஆத்மாவிற்கு மற்ற விஷயங்களைக் குறித்து அறிய வைப்பதாகும். அப்போதுதான் அது வெளிப்படுகிறது. அந்த நிலையில் ஆத்மாவிற்கு ஏற்றபடியாக உள்ளது; அதாவது, அந்தந்த விஷயங்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு ஏற்றதாகவே தோன்றுவதால், அவற்றை உணரும்படியாகச் செய்த ஞானமானது, அதன் இருப்பிடமான ஆத்மாவிற்குச் சுகமாகவே உள்ளது என்று கருத்து.