Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 72)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ப்ரஸரணமில்லாமையாலே தோற்றாது.

அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார்.

கடந்த சூர்ணையில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(ப்ரஸரணமில்லாமையாலே தோன்றாது) என்று. அதாவது ஜ்ஞானம் ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயமேவ ப்ரகாசிப்பது, தான் விஷய க்ரஹண வேளையிலிறே. ஸுஷுப்த்யாதி அவஸ்தைகளில் தமோகுணத்யபிபவத்தாலே ஸங்குசிதமாய், திரோஹிதங்களான மணி ப்ரகாசாதிகளைப்போலே ப்ரஸரணமில்லாமையாலே ப்ரகாசியாதென்கை.

ஞானமானது இந்த்ரியங்களில் புகாமல் உள்ளதால் வெளிப்படுவதில்லை. அதாவது ஞானமானது ஆத்மாவிற்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளுதல் என்பது, தான் உலக விஷயங்களைக் குறித்து அறியும்போது அல்லவோ? ஆனால் உறக்கம் போன்ற நிலைகளில் தமோ குணத்தால் மூடப்பட்ட ஞானமானது, சுருக்கம் அடைந்து, மறைத்து வைக்கப்பட்ட இரத்தினங்கள் போன்று, இந்த்ரியங்களில் புகுதல் என்பது இல்லாமல் போகிறது. ஆகவே தன்னைத் தான் வெளிப்படுத்துவதில்லை.